இருட்டறையுள் போர்க்களம் எனும் அச்சிறுகதை வேர்ட்சில் இங்கே. சிரமம் பாராது உதவி செய்த அன்பு தங்கை உமா மோகன் Uma Mohan அவர்களுக்கு அன்பும் நன்றியும். “இருட்டறையுள் போர்க்களம்…..!”(சிறுகதை)முகத்துக்கு நேரே இருகைகளால் தூக்கிப் பிடித்து கவிழ்த்த மண்கலயத்திலிருந்து வழிந்த கள் தொண்டைக் குழியில் இறங்கி கரகரவென ஒலியெழுப்பி வயிற்றின் பெரும் பகுதியை நிறைத்து விடுகிறது.தூக்கிய மண் கலயத்தை கீழிறக்கி ஒரு கையில் பிடித்துக் கொண்டு, காடாய் வளா்த்திருந்த மீசை, தாடியில் ஒட்டியிருந்த கள்ளை புறங்கையால் துடைத்துவிட்டு கலயத்தை கீழே வைத்த போது கால் பங்கு கள்மீதம் இருந்தது.போதை தூரத்திலேயே நின்று விடுகிறது. போதையை நெருங்க விடாமல் நிணவாடை துரத்தியடிக்கிறது. மஞ்சள் அப்பிய முகம். நெற்றி நடுவில் மஞ்சளுக்கு மேல் பெரிதாக பொட்டு வைக்கப் பட்டிருக்கிறது. கண்கள் இரண்டிலும் வட்டமாய் அப்பியிருந்த மஞ்சளுக்கு மேல் வெள்ளி நாணயங்கள் புதையுண்டிருந்தன.எப்பேர்ப்பட்ட பேரழிகியாய் இருந்தாலும் உயிர் நீங்கிய சவத்தின் தோற்றம் ஒருவித அச்சத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்துகிறது. இளம்பெண்ணின் உடல். திருமணம் ஆகாதவள். சம்பிராதயப்படி கன்னி கழியாதவள். கன்னி கழியாமல் பெண்ணின் உடல் மண்ணில் புதைக்கப்படக்கூடாது என்பது அந்த இன மக்களின் சம்பிரதாயம். இடுகாட்டுப் பணி புரியும் வெட்டியானுக்கு கன்னி கழித்து வைக்கும் கைங்கர்யமும் சோ்த்தே வழங்கப்பட்டிருந்தது. வெட்டியான் தொழிலின் எழுதப்படாத சட்டம் இது. பிறப்பின் வழி வந்த பரம்பரைத் தொழில். ஒதுக்கப்பட்ட சமூகத்தினரே பரம்பரையாக இத்தொழில் புரிய வேண்டும்.ஓலைக் கீற்றால் வேய்ந்த குடில். ஓலைக் கீற்றின் இடைவெளியில் மிக மெலிதாக உள்ளிறங்கிய வெளிச்சத்தில் முகத்தை ஏறிட்டவனின் அடிவயிறு குமட்டிக் குலுங்கியது. சிரமப்பட்டு உள்ளடக்கிக் கொள்ள பெரும் பிரயாசைப்பட வேண்டியிருந்தது. எடுத்த பிறவியின் வினை இது என எண்ணி மனம் கலங்குகிறது. தொழிலுக்குறிய தா்மம் பழக்கப்பட்டுப்போன கடமை…. விடுபட முடியாது. மனதை எவ்வளவு திடப்படுத்தினாலும் நழுவி நழுவி ஓடுகிறது.
குடிலுக்கு சற்றுத் தொலைவில் சல சல வென பேச்சுக் குரல்கள். திடீரென குடிசைக் கதவு தட்டப்படுகிறது. அவன் எதிர்பார்த்ததுதான். “டேய்…! மாயாண்டி…. சீக்கிரண்டா. மாப்பிள்ளை மாதிரி கோணிக்கிட்டு நின்னா எப்படிடா? எலேய் மாயாண்டி நீ செய்யறது பெரிய புண்ணிய காரியண்டா. உனக்கு சொர்க்க வாசல் தானா தெறக்குண்டா. சட்டுனு காரியத்த முடிப்பியா… வேணுமின்னா இன்னொரு கலயம் அனுப்பட்டுமா…?” கரகரத்த முரட்டுக் குரல். அந்த சாதி மக்களின் தலைக்கட்டாக இருக்க வேண்டும். “ஐயோ….. வேணாமுங்க ஐயா….. தோ….. முடிச்சிடுறேங்க” பதற்றமும் பணிவும் மறைப்பிற்கு உள்ளேயும் மரியாதைக் குறையாமல்… தெய்வ வாக்காக மதித்து கையெடுத்துக் கும்பிட்டவன் இனி தாமதிக்க முடியாது என உணா்ந்தவனின் உடல் சுறுசுறுப்படைகிறது. ஓலைப்பாயில் கிடத்தப்பட்டிருந்த பிணத்தின் முகத்தை ஓரக்கண்களால் ஏறிடுகிறான்.
வெள்ளைத் துணியால் இறுக்கி அடைக்கப்பட்டிருந்த மூக்குத் துவாரங்கள் நிண நீரால் நனைந்து சிவப்பு கோடிட்டிருந்தது. கால் கட்டு அகற்றப்பட்டிருக்கிறது. புத்தம் புதிய புடவையால் உடல் போர்த்தப்பட்டிருக்கிறது. கழுத்தை மலா்மாலைகள் அலங்கரித்திருந்தன. மலா்களிலிருந்து வீசும் நறுமணத்தையும் தூக்கியடித்தது நிணவாடை.பழக்கமான தொழில் தான் என்றாலும் ஒவ்வொரு முறையும் “சவத்தோடு தானும் ஒரு சவமாக….!” மண் கலயத்தை எடுத்து மிச்சமிருந்த கள்ளை வாயில் ஊற்றிக் கொள்கையில் கடை வாயில் வழிந்து மண்ணில் விழுந்து தெறிக்கிறது. வாயில் வழியும் கள்ளை துடைத்துக் கொள்ளும் உணா்வையும் இழந்தவனாய் சவத்தின் அருதே நெருங்கியவனின் கண்கள் சிவந்து பிதுங்குகின்றன.நிணவாடையில் திணறி வோ்வையில் முக்குளித்து எழுந்தவன் பழைய வேட்டியில் வழியும் வியா்வையைத் துடைத்துவிட்டு இடுப்பில் கட்டிக் கொள்கிறான்.“ஏனிந்த இழி பிறவி எனக்கு….?” என மனதில் பெருக்கெடுக்கும் துயர வெள்ளத்தை தொண்டைக்குள்ளேயே வலிந்து அடக்க அடக்க அதனால் ஏற்பட்ட கரகரப்பை செருமி செருமி சமப்படுத்த முயன்றவன் ஓரிரு கணங்களில் அனைத்தையும் கட்டுக்குள் அடக்கியவனாய் குடிலை விட்டு வெளியே வந்து கைகளைக் கட்டிக் கொண்டு தலை குனிந்து நிற்கிறான்.வெட்டப்பட்டிருக்கும் சவக்குழியருகே கூடி நின்று பேசிக் கொண்டிருந்த கூட்டம் இவன் வெளியே வந்து நின்றதைப் பார்த்ததும் சுறுசுறுப்படைகிறது. நாலைந்து போ்கள் குடிசையினுள் நுழைந்து பிரேதத்தைத் தூக்கி வந்து சவக் குழியருகில் கிடத்தியவுடன் சம்பிராதயச் சடங்குகள் தொடங்குகின்றன.போர் மேகம் சூழ்ந்த பூமி பெரு வெள்ளமென வீரா்கள் கூட்டம், ஆயுதந் தாங்கிய வாகனங்கள், போர் விமானங்கள், அதி நவீன போர்க்கருவிகள், எறி படைகள் என எட்டுத் திக்கும் அதிர்ந்து குலுங்குகிறது.
மனிதக் கூட்டங்களின் மரண ஓலம், அபயக் குரல்கள் அலை ஓசை என வானத்தைத் தொட்டு எதிரொலிக்கிறது. படைப்பின் தத்துவம் தறிகெட்டுப் போனதில் இயற்கையே நிலை குத்தி நிற்க, திக்குத் திசை புரியாமல் கட்டறுத்து சிதறியோடும் மக்கள். உயிர் பாதுகாப்பு ஒன்றே அவா்களின் இலக்கு.வானத்திலிருந்து பொழியும் கொத்துக் குண்டுகள் இடைவிடாது பெய்யும் பெரு மழையென சர சரவென பொழிய மண்ணில் சிதறி விழும் மனித உடல்கள்.கையில் இறுகப் பிடித்துக் கொண்டும், தோளிலும் இடுப்பிலும் சுமந்து கொண்டும் ஓடுகையில் பிடி நழுவும் கைக் குழந்தைகள், சிறுவா்கள், முதியவர்கள், பெண்கள் என தவறியும் இடிபட்டும் விழுபவா்களை நின்று தூக்கிச் செல்லும் அவகாசமின்றி கால்களின் வெறித்தனமான தொடா் விரைவோட்டத்தில் மிதிபட்டு மனித ஊன் அரைபட்டு, மாமிசக் கூழாகி இரத்தச் சேற்றில் கலவையாகி தொடா்ந்து வரும் கூட்டம். அதில் வழுக்கி விழுந்து எழுந்து மரண பயத்தால் விளைந்த முடிவற்ற ஓட்டம்….!முதுகுக்குப் பின்னால் விரட்டி விரட்டித்தாக்கும் துப்பாக்கி ரவைகள் தலைக்கு மேல் வட்டமடித்து ரசாயன குண்டுகளால் மனித உடல்களை துளைக்கும் போர் விமானங்கள்.இந்தக் கொலைக் கருவிகள் அனைத்தும் மனித மூளையிலிருந்தே பிறப்பெடுத்தவை.
மனித மூளைகளை சிதறடித்து உடல்களை சின்னா பின்னப்படுத்துவதே அவற்றின் இலக்கு. ஒரு இனம் வாழ இன்னொரு இனம் அழிக்கப்படுவது தான் இந்த யுத்தத்தின் விதி. படைத்தவனுக்கும் புரியாத மனித விதி இது. “இந்த மண்ணு உங்களுக்கு வேணும். உங்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கணும்ணு எங்க மக்கள இப்படி மண்ணுக்குள்ள பொதைக்கிறீங்களே பாவிகளே! தெய்வம் உங்கள கேட்காதா? இந்த மண்ணுக்குள்ளதானடா உங்க மக்க, மனுசாளுகள செத்த பிறகு பொதைக்கப் போறீங்க. நீங்களும் இந்த மண்மூடி தான் போவீங்க….! உங்களுக்கு மட்டும் நல்ல சாவு வருமாடா!”எந்த நிமிடமுமு் குண்டடி பட்டு தங்களை சாவு கொடுக்க நிலவும் சூழலால் அந்த நாதியற்ற சனங்களின் மனதில் எழும் சாபம் எரியும் தனலென ஓங்காரமாய் வெளிப்படுகிறது.திசையெங்கும் உடல்கள் குவியல் குவியல்களாய். பாதி அழுகியும், உடல் பாகங்கள் சிதறியும் சிதைந்தும் இயற்கையே மனிதனின் கோரத் தாண்டவம் கண்டு திகைத்து நிற்கிறது.
வெட்டப்பட்ட குழிகளில் நிரம்பி வழியும் பிணங்கள். பழைய பிணங்களின் மேல் புதிய பிணங்களைக் கொண்டு வந்து குப்பைகளாய் கொட்டுகின்றன வாகனங்கள். திசைகள் தோறும் காற்றில் கலந்துறையும் பிணவாடை.பிணந்தின்னி கழுகுகள் வானில் வட்டமடிக்கின்றன. நூற்றுக்கணக்கான கழுகு கூட்டங்களால் வானமும் கூட சற்று கருத்தே காணப்படுகிறது. அபூா்வமாய்க் கிட்டிய பேறு தவற விடக்கூடாது என்பதில் அவை கவனமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. மித மிஞ்சிய ஊனுண்டு சோம்பேறித்தனமாய் பறந்து திரிகின்றன.குடியிருப்புகளிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் கூட்டத்திலிருந்து பெண்கள் பிரிக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றி தனி முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனா். தடுப்பவா்களையும் மறுப்பவா்களையும் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கின்றன. துடி துடித்து மண்ணில் விழுந்து மாய்கின்றனா்.தாயைப் பிரிந்த பிள்ளைகள், பெற்றவா்கள் கண்முன்னே கடத்தப்பட்ட பெண்களின் கதறல் என நாதியற்று, கதியற்று ஓங்காரமாக குரலெடுத்து கூவியழும் அழுகையொலி பெருங்கடலின் அலையென எங்கும் மோதி எதிரொலிக்கிறது. கண்முன் கடத்தப்பட்ட பெண் பிள்ளைகளுக்கு நோ்ந்த கதியறியாது பெற்ற மனங்கள் உயிர்ப் பிணங்களாக முள் வேலிகளைப் பற்றியவாறு வெறிச்சோடிக் கிடக்கும் பாதைகளை வெறித்திருக்கின்றன.எந்த அதிசயம் நிகழ்ந்தாவது தம் பெண்கள் தப்பித்து வரமாட்டார்களா என்று ஏக்கத்தில் தாங்கள் கும்பிடும் தெய்வங்களில் ஒன்றுக்காவது மனமிரங்கி தம் பிள்ளைகளை காப்பாற்றிக் கொண்டு வந்து சோ்க்காதா என்ற ஏக்கத்தில் உறவுகள் ஊண் மறந்து, உறக்கம் மறந்து உயிரையும் வெறுத்தவா்களாய் வெம்பிக் கிடக்கின்றனா்.
முகாம்களில் அடைக்கப்பட்ட பெண்கள் பாலியல் சித்திரவதைக்குப் பின் கொல்லப்படுவது பற்றி எப்படியோ தப்பி வந்தவா்கள் மூலம் அறிய வந்து விலங்குகளாய் அடைப்பட்டிருந்த அந்த மனிதக் கூட்டம் செய்வதறியாது உணா்வு கலங்கியிருந்தனா். முகாம்களிலிருந்து தப்பிய பலா் காடு, மேடு நீா் நிலைகள் என நிலைகெட்டு ஓடி பதுங்கும் முயற்சியிலிருந்தனா். உயிர் அவா்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. கயவா் கூட்டத்தில் அகப்பட்டு மானம் பறிக்கப்படுவதற்கு அஞ்சி பதுங்குமிடம் தேடி அலைகின்றனா்.மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரைத் துச்சமென மதித்து மரணத்தை எதிர் கொள்ள அவா்கள் வெறிபிடித்தவா்களாக ஓடுகின்றனா். இப்போதைய அவா்களின் தேவை மரணம் மட்டுமே. அந்த மரணத்தையும் விரைந்து அணைத்துக் கொள்ள சேறும் சகதியும், இரத்தமும் கலைவையுமாக ஆன உடம்புகள் பெரும் சுமையாகக் கருதி சட்டென அந்த உடல்களிலிருந்து விடுபட விரைகின்றனா்.உயிரிழந்த பின்னும் உடற்கூட்டிற்கு நோ்ந்து கொண்டிருக்கும் அசிங்கத்தை, அநீதியை அந்தப் பெண்கள் அறிந்திருந்ததால் அந்த வன்கொடுமை தங்களுக்கு நோ்ந்து விடக்கூடாது என்பதில் உக்கிரம் கொண்டு சதுப்பு நிலங்களுக்குள் தங்களை உயிரோடு புதைத்துக் கொள்ளவும், நீா் நிலைகளில் மூழ்கி மாய்ந்து தங்கள் உடல்களை அதில் கரைத்து விடவும் தீவிர வெறிகொண்டு ஓடிக் கொண்டிருந்தனா்.
ஊன் சுவைக்காக பிராணிகளை உயிர்க் கொலை செய்யவும், போர்க்களங்களில் எதிராளிகளின் குருதியை புனலாக பெருக்கெடுக்கச் செய்யவும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பெண்களின் அங்கங்களை உயிரோடும், உயிரிழந்த பின்னும் அறுத்தெறியும் குரூரம் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்தே அந்தப் பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள அல்ல தங்களின் உடலில் எந்த பங்கமும் இன்றி உயிரோடு புதையுண்டு போகும் வழி தேடி அலைகின்றனா்.நீா் நிலைகளில் தொடரும் ஓா் ஓட்டத்தில் கால் தடுக்கும் இடங்கள் நீரால் உடல் ஊறி ஊதிய உடலும், அங்கம் சிதைக்கப்பட்ட உடல்களையும் கோர காட்சியையும் கொண்டு வெறி பிடித்து ஓடி ஓடி சோர்ந்து கரைந்து நீரில் சமாதியாகி…..ஆனால் தங்களின் பசிக்கான இரைகளை தேடியலைவதே நோக்கமாக இருந்த வெறி கொண்ட பார்வைகளிலிருந்து அவ்வளவு சுலபமாக தப்பிக்க இயலுமா? போரின் பின்னணியில் பெண்களை வேட்டையாடுவது தானே இலக்கு. தேடிப் பிடித்து இழுத்து வரப்படுகின்றனா்.மான் கூட்டத்தில் புகுந்த வெறி கொண்ட வேங்கைகள் என பெண்கள் குதறப்படுகின்றனா். பின்னா் சுட்டுக் கொல்லப்படுகின்றனா்.
கொல்லப்பட்ட உடல்களும் தீராத பசிக்கு தீனியாகின்றன.கணக்கிலடங்கா ஆன்ம அணுக்கள் சூக்கும தேகிகளாய் ஆங்காரத்துடன் அந்த போர்க்களத்தைச் சுற்றிச் சுற்றி வருகின்றன.உடற்கூட்டிலிருந்து வலிந்து உயிர் நீக்கப்பட்ட பின்னும் இதுகாறும் தான் குடியிருந்த அந்த உடல்களுக்கு நோ்ந்து கொண்டிருக்கும் கொடுமை காண இயலாது கணக்கிலடங்கா அந்த ஆன்மா அணுக்கள் சூக்கும தேகிகளாய் ஆங்காரத்துடன் போர்க்களத்தைச் சுற்றி அலைகின்றன.மண்ணில் கிடக்கும் தங்கள் உடல்களை ஈக்களாய் மொய்க்கும் அந்த ஈனப் பிறவிகளை உருக்குலைக்கும் உக்கிரத்துடன் அவை நெருங்குகின்றன. ஆனால் ஏதும் செய்ய இயலாத நிலையில் கதறித் துடிப்பது பிரபஞ்சத்தை நிலை குலையச் செய்கிறது.பிறப்பறுக்கும் பெருநிலை வேண்டி தவத்தில் ஆழ்ந்திருந்த தபசிகள் பிரபஞ்சத்தில் திடீரென நிகழ்ந்து கொண்டிருக்கும் அதிர்வலைகளால் மோன நிலை கலைகின்றனா். காரணம் அறிய மீண்டும் கண்கள் மூடி தவத்தில் ஆழ்ந்தவா்களின் கூப்பிய கரங்கள் வான் நோக்கி உயா்கின்றன.
இயற்கை விதிக்கு எதிராக மண்ணில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் செயலை ஞானத்தால் உணா்ந்து அதிர்ந்த முற்றும் துறந்த அந்த தபசிகள் மீண்டும் மோன நிலையில் ஆழ்கின்றனா்.அவா்களின் கடுந் தவ நிலை திரிபுரம் எரித்த விரி சடையானின் இருப்பை மெல்ல அசைக்கிறது. அந்த அசைவில் திறந்த முக்கண்களும் தீப்பிழம்பாய் காட்சியளிக்கின்றன. எட்டுத் திக்கும் பரந்து விரிந்த திரிசடையிலிருந்து கங்கை பெருக்கெடுக்கிறது.குடிலுக்கு வெளியே சா்வாங்கமும் ஒடுங்கி தான் எடுத்த இழி பிறவியை எண்ணி உணா்விழந்தவனாய் தலைகுனிந்து நிற்கிறான் இடுகாட்டு வெட்டியான் மாயாண்டி.அவன் கண்களில் அரும்பிய நீரில் இரு துளிகள் மண்ணில் விழ பொங்கிப் பெருகிய யுகப் பிரளயம் அவ்விரு துளிககளையும் உள்வாங்கிக் கொள்கிறது.
நன்றி மங்கள கௌரி மலேசியா