பங்கர் எங்கட கதைகள் தொகுப்பாசிரியர் வெற்றிச்செல்வி
வெளியீடு
எங்கட புத்தகங்கள்
முதற் பதிப்பு ஒக்டோபர் 2020
இழந்த தேசத்திற்கான அவலக் குரல் தான் பங்கர். மனதில் பல வலிகளையும் கேள்விகளையும் கண்ணீரையும் பங்கர் எம் முன் வைத்திருக்கின்றன. சும்மாவே திரைப்படம் பார்த்தால் அழும் நான் இதில் என்னைத் துலைத்தேன் உயிர் பிழைத்தால் போதும் என்ற மனப்பயத்தில் பங்கருக்குள் நுழையும் ஒரு தாயின் கதறல.; மரணத்துள் வாழ்ந்த ஈழத்து மக்களின் அவலத்தை மனச்சிதைவுகளை கூடவே துளிர் விட்ட நம்பிக்கைகளை உண்மைகளை சொல்லும் தொகுப்புத்தான் பங்கர். போரே வாழ்க்கையான பிறகு எஞ்சுவது எதாகவிருக்கப் போகிறது? வாழ்வு தொலையும். உறவுகள் தொலையும். இருப்பிடம் தொலையும்
ஈழத் தமிழர்களின் வாழ்வையும் போராட்டத்தையும் வலிகளோடு கூறும் போது இந்த பங்கருக்கும் பெரும் பங்குண்டு. பதுங்குகுழி என்ற இந்த பங்கர் எமது தேசத்தில் ஒலிக்காதவர்களே இல்லை என்றே சொல்லலாம். மக்களின் இருப்புகளுக்கான அந்தரங்களும் போரே வாழ்க்கையாகி ஈழப்போராட்டத்தில் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பங்கர் (பதுங்குகுழிகள்) அவசியமான ஒன்றாக இருந்திருக்கிறது
இந்தக் பங்கருக்குள் போன என் மகள் இறந்து விட்டாள். கத்துகிறாள் கதறுகிறாள் ஒரு தாய் இக்கதறல் யாரின் காதுகளிலும் விழவில்லை அந்த பங்கருக்கே கேட்கவில்லை. பங்கருக்குள் பிறந்த குழந்தை’என பல கதைகள் இவ் பங்கர்களுக்கு உரித்தானது.
நான் இருந்த காலத்தில் இந்தியன் இராணுவம் இலங்கை வந்தபோது தான் ஒரு சில பங்கர்கள் வெட்டப்பட்டன. பின்னர் இலங்கை இராணுவம் என பல பங்கர்கள் உருவாக்கப்பட்டன. ஹெலிகாப்டர் மேலே சுற்றினால் பங்கரின் வாசலை ஓலையால் தகரத்தால் கிடுகால் மூடவேண்டும். பங்கரை மூடிவிட்டால் உள்ளே கும்மிருட்டு அதுவே வயிற்றைக்கலக்கும் பயம் குண்டு போடும்போது பங்கருக்குள் போக ஒருவித பயம் இருந்தாலும் பாம்பு பூரான் சிலந்தி எல்லாம் உள்ளே இருக்கும் என்றாலும் இரணுவத்தினர் இரவுகளில் குண்டு போடுவார்கள் அந்த நேரம் எல்லா வீட்டுக்காராரும் அலறிப் பதைத்துக்கொண்டு இரவோடி இரவாக பங்கருக்குள் ஓடுவார்கள.; உள்ள எல்லா கடவுள்களையும் வேண்டிக்கொண்டு பங்கருக்குள் கழித்த நாட்களை வாழ்க்கையை ஓவியங்களுடன் தந்திருக்கிறது பங்கர் தொகுப்பு
இந்தத் தொகுப்பில் உள்ள பதிவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சூழ்நிலையை பதிவு செய்திருக்கிறது.ஆனால் அனைத்தும் ‘பங்கர்’என்ற ஒரு விடயத்தை மையமாகக் கொண்டே எழுதப்பட்டிருக்கின்றன. சொந்த அனுபவங்களை தாம் அனுபவித்த வேதனைகளை கண்முன்னே பார்த்த இழப்புக்களை எந்த புனைவும் இன்றி உண்மைச் சம்பவங்களை பேசி நிற்கின்றன.
இவ் பங்கருக்குள் இருந்த கானநிலா போன்ற பிள்ளைகளும் இன்று இந்த பங்கர்களை நினைவுறுத்திக் கொள்கிறார்கள் என்றால் அது மிகையல்ல..
வாழ்விடங்களின் நிரம்பிய முட்புதர்களில் அகோர உயிர்கொல்லி அமில குண்டுகளுடனும் இவ் பங்கர் என்ற எங்கட கதைகள் நிதர்சனமானவை 26 பேர் தங்கள் அனுபவங்களை பதிவு செய்துள்ளார்கள் .ஒவ்வொருரினதும் அனுபவங்கள் வித்தியாசமானவைகள். இவ் நினைவுகளை மீட்டெடுக்க பங்கர் போன்ற கதைகளும் போராட்ட வாழ்வியலுமே எம்மிடம் மிஞ்சியுள்ளன என்பதற்கு சாட்சியாக “பங்கர் எங்கட கதைகள்” எம்முன்.