எங்கேயோ
கேட்கும்
மழைக்கால
தவளைக்
குரல்களின்
பிசிறில்
மணலிலே
தன்னிச்சையாக
என் விரல்கள்
வரையத்துவங்குகிறது
வாழ்தலின்
படித்துறைகளில்
கால் நனைக்கும்
மரணம்
எனக்குள்ளே
சொட்டுச் சொட்டாக
இறங்குகிறது..
எதன் பொருட்டோ
அதை அனுமதிக்க
நிர்ப்பந்தித்து
ஆன்மா செர்ரித்
தோட்டகளை
குளிர்
மழையின்
துளிகளை
மலைப்
பச்சையின்
மூலிகை வாசங்களை
வாழ்தலை
எழுத ஆசைப்படுகிறது
நானோ காலம்
கைவிடப்பட்ட
நிழலும்
ஒளியுமாக தான்
நீளிரவு
வேப்பங்காற்று
வேண்டி நிற்கிறேன்
மௌனம்
தாயமுருட்ட
துவங்குகிறது
ஒரு
தேநீர்க்
கோப்பையின்
இருத்தலில்
மிகத்
துல்லியமாக
சுவையுணர்ந்து
உயிரேகிச்
சுழன்றிருந்தேன்
மிதக்கும்
இஞ்சித் துண்டுகளின்
உன்மத்தங்கள்
அடிநாக்கில் கொஞ்சம்
கசப்பை
தேக்கி வைத்திருந்தேன்
மலர்தலில்
உதிரும்
வாசங்களை களவாடும்
காற்றில்
ஒரு பேரமைதி
சிப்பி தேடும்
என் மாலைகளில்
ஆழ்ந்த இசையொன்றில்
உதிர்ந்தபடி
பருகத்தவிக்கிறது கடல்
விழிகள்
அலைய
பறந்து
கண்டல்களில்
இளைப்பாறும்
வலசைகளென
என்றோ கடந்து
போன பால்யங்கள்
அவை
மழை
கண்டதும்
முளைவிடும்
காளான்களின்
வெண்மையில்
பூரித்துக்கிடந்தாலும்
கனதியைக்
கசியவிடும்
ஞாபகப் பெருக்கு
அன்றி வேறென்ன..