மறைக்கப்பட்ட நேசங்களும் மாறுபட்ட மனிதர்களும் – நிலாந்தி

This image has an empty alt attribute; its file name is lak.jpg


சமூகக் கட்டமைப்பில் பலதரப்பட்ட கற்பிதங்களும் மதம்,இனம்,மொழி, கலாச்சாரம் சார்ந்த கட்டுப்பாடுகளும் மனிதத்தை பலவிதங்களிலும் ஆட்டிப்படைக்கின்றன. அதே வேளை அவற்றினால் ஏற்படும் இடர்ப்பாடுகள் சட்டதிட்டங்கள் மனிதத்தையும் குழி தோண்டிப் புதைக்கும் நிலைக்கு வரும் போதே கட்டுடைப்புக்களும், முரண்பாடுகளும்,புரட்சிகளும் ஏற்படுகின்றன. பெண் விடுதலை குறித்தும், மூடநம்பிக்கைகளைச் சாடியும் மக்களின் விழிப்புணர்வைத் தூண்டும் விதமாக பெரியார் போன்றவர்கள் வந்திருந்த போதும் எந்தவித மனமாற்றங்களும் இன்றித் திரியும் மனிதர்கள் இன்னும் இவ்வுலகில் இருக்கத்தானே செய்கின்றனர். 

பால்பேதங்களுக்கும், வயது வித்தியாசங்களுக்கும், இனம், மொழி, மதம் கடந்தும் ஏற்படுகின்ற நேசங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதித்து அவற்றை கொச்சைப்படுத்தும் போது அவை தானாகவே அருவருக்கத்தக்கதொன்றாக பார்க்கப்படுகின்றன. நேசங்களும் சமூகத்துக்குப் பயந்து வெளிப்படுமெனில் அவற்றின் அர்த்தப்பாடுகளும்  நமத்துப் போய் விடுகின்றன. பெண்களுக்கென்றும் ஆண்களுக்கென்றும் ஒவ்வொரு வித கலாச்சார விதிகளை விதித்தபடி, யார் என்ன தவறுகள் செய்கின்றனர் என்றும், எவரை எதில் குற்றம் பிடிக்கலாம் என்றும் அலைகின்ற சில கலாச்சாரக் காவலர்களும், பிற்போக்கத்தனங்களை விதைத்துக் கொண்டும் நேசங்களுக்கு புதுப்புது அர்த்தங்களை கற்பித்துக் கொண்டு திரியும் ஆணாதிக்க சமூகமும் இருக்கும் வரையில் மனிதம் என்பது வெறும் வார்த்தையளவிலேயே இருக்கும் என்பது யாரும் மறுக்க முடியாததொன்று.

ஆணுக்கும் பெண்ணுக்குமான நேசங்களில் மறைக்கப்பட்ட , மறுக்கப்பட்ட பக்கங்களும் உண்டு அவை இனம்,மதம்,மொழி,பால் பேதம் கடந்தவை. அதனை புரிந்து கொள்ளவும்,உணர்ந்து கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் சம்பந்தப்பட்ட இருவரை அன்றி இச்சமூகத்தில் யாரும் இல்லை என்பதே வேதனையானது. சமூகத்திற்குப் பயந்து இயற்கையாக உருவாகும் நேசங்களை மறைத்து வைக்க முற்படுகையில் ஏற்படும் சந்தேகங்கள், அசௌகரியங்கள், சஞ்சலங்கள், வேதனைகள் ,கவலைகள் அனைத்தையும்  ஒவ்வொரு மனிதர்களும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்தும் உணர்ந்தும் இருப்பர் என்பதை யாரும் மறுக்க முடியாது.


அந்திம காலத்தின் இறுதி நேசம்” என்ற சிறுகதைத் தொகுப்பு 2021 இல் வெளிவந்த தொகுப்புகளில் மிகவும் உண்மைத்தன்மையான உணர்வுகளின் வெளிப்பாடு என்றால் அது மிகையல்ல.

சகோதர மொழி எழுத்தாளரான தக்ஷிலா ஸ்வர்ணமாலியினால் சிங்கள மொழியில் எழுதப்பட்டு எம்.ரிஷான் ஷெரிப் தமிழில் மொழிபெயர்த்து ஆதிரையின் வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுப்பு பல எதிர்பார்ப்புக்களை கொண்டிருந்தது.அதற்கு எவ்வித குறையும் இன்றி வேறுபட்ட கோணங்களில் நேசங்களை பிரித்துப்பிரித்து சிறுகதைகளாக எழுதியிருப்பது ஆர்ச்சர்யமளித்த அதேவேளை யாரும் கூற விரும்பாத அல்லது கூற தடை செய்யப்பட்ட நேசங்களை எவ்வித உறுத்தலுமின்றி வெளிப்படு தன்மையோடும் சங்கடங்களின்றி வாசிக்கக் கூடிய விதத்திலும் எந்த நேசங்களையும் கொச்சைப்படுத்தாமல் கூறிய விதங்களும் அதியற்புதம் எனலாம்.

ஒரு பெண்ணால் இவ்விதமாக எழுத முடியுமா? அல்லது இவ்விதம் எழுதும் பெண்களை கதையின் கதாபாத்திரங்களோடு ஒப்பு நோக்கும் சமூக கட்டமைப்புகள் என எதையும் பொருட்படுத்தாத தக்ஷிலாவின் தைரியமும் இந்நூல் பேசப்பட்ட தொனியும் மறைக்கப்பட்ட நேசங்களின் வெற்றியாகும். 

இத்தொகுப்பில் உள்ள பத்து சிறுகதைகளும் பல்வேறுபட்ட மாந்தரிடையே மலர்ந்த பலதரப்பட்ட நேசங்களைப் பேசிச் செல்கின்றன.

உண்மையில் எச்சமூகத்தவராலும் குறிப்பாக தமிழ் சமூகத்தால் ஏற்க முடியாத நேசங்களாக இவை இருப்பதே இந்நூலின் பிரதானம். இந்நூலில் கூறப்படும் நேசங்களை கலாச்சார சீரழிவுகள் என்று பேசவும், அவ்வாறான நேசங்களை குழி தோண்டிப் புதைக்கவும் கலாச்சாரக் காவலர்கள்  உள்ள போதும் மறுக்க முடியாத இந்நேசங்கள் எமது சமூகத்தில் தினம் தினம் மலர்ந்த வண்ணமே உள்ளன. இனியும் மலரும்.

கதைகளின் களங்களாக சிங்கள கிராமப்பகுதிகளும்  சூழலும் வாசிக்கும் போதே கிராமிய மண்வாசத்தை கொண்டுவருகிறது. கதைக்களத்திற்கே வாசகரை அழைத்துச் செல்லும் யுக்தி ஒரு சில கதை சொல்லிகளுக்கே வாய்க்கும். அது தக்ஷிலாவிற்கு வாய்த்திருக்கிறது. தமிழ் எழுத்தாளராக அதிலும் பெண்ணாகவும் இக்கதைகளை ஒருவர் எழுதியிருந்தால் இவ்வாண்டின் மிகவும் சர்ச்சைக்குரிய நூலாக இதுவே திகழ்ந்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தக்ஷிலாவின் எழுத்துக்களில் உள்ள நளினத்தையும் எதிர்பார்ப்பையும் எவ்விதத்திலும் எள்ளளவும் குறைத்து விடக் கூடாதென்ற நோக்கத்தில் ரிஷான் ஷெரிப் மிக நுணுக்கமாகவும் நேர்மையாகவும் ஒவ்வொரு கதையையும் மொழிபெயர்த்திருந்தார்.

முதல் கதை “தெரு வழியே…” 

பாலியல் தொழிலாளி என்றால் ஒரு பெண் என்பதான எண்ணப்பாட்டை முதலிலேயே தூக்கியெறியும் கதை. ஆம் அவன் ஒரு பாலியல் தொழிலாளி. அவனிடம் சென்ற ஒரு பெண். அவனை மீண்டும் சந்திக்கவும், அவனை தன்னுடன் வைத்துக் கொள்ளவும், அவனை தன் துணைவனாக்கவுமென அவன் மீது ஏற்பட்ட இனம்புரியாத நேசத்தால் அவனை தேடி தெருவில் தனது மகிழூர்ந்தில் அலைகிறாள் என்பது தான் கதை. இக்கதையை ஆணாதிக்க சமூகத்தால் கிஞ்சித்தும் சீரணிக்க முடியாது. ஆனால் இது நிச்சயமாக கற்பனையல்ல என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஒரு ஆண்;பாலியல் தொழிலாளியைத் தேடிச் செல்ல என்ன காரணமோ அதே காரணத்தைத் தான் அந்தப் பெண்ணும் வைத்திருக்கிறாள் என்பது எத்தனை பேரால் ஏற்கவோ, புரிந்து கொள்ளவோ முடியும்.

” எனக்கு சரியெனப்பட்டதை நான் செய்கிறேன் இதற்குப் பழி சொல்ல எவராலும் முடியாது ஏனெனில், ஜீவிதம் எனது” என்பது அப்பெண்ணின் எண்ணப்பாடு.

அதேவேளை,” மானிட உறவுகள் தனிப்பட்ட நபர்களுக்கிடையிலான செயற்பாடுகள் அல்லாமல் சமூக வெளியீடுகளாக ஆனது ஏன்? “என்ற அவளது கேள்வியில் உள்ள நியாயம் அவரவருக்கான சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் வரும் வரை புரியப் போவதில்லை.

“மாங்காய்ப் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது”  என்ற கதை நட்புக்கும் காதலுக்கும் இடையிலான நூலளவிலான நேசத்தைச் சொல்கிறது. கணவன்,மகன் என குடும்பம் இருந்தும் அமர்ந்து பேசவும் தன்னை நலன் விசாரிக்கவும் என ஒரு நட்பைத் தேடி வரும் ஒரு பெண்ணைப் பற்றியது. இதை சமூகம் எப்படிப் பார்க்கும் என்பதை அருண் மூலமாக சொல்ல வைத்தார் கதாசிரியர். அதாவது, அவர்களுக்குள் உள்ள உறவுக்கு அவன் பெயர் தேடுகிறான் ஒரு கட்டத்தில்  “உனக்கு புருஷன் இருக்கிறான் அப்படியென்றால் நான் கள்ளப் புருஷனா?”  எனக் கேட்கிறான்.  ஆனால் அந்தப் பெண்ணோ எந்தப் பெயரும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பதை யாரும் ஏற்பதில்லை. அவர்களாகவே பெயர் சூட்டி, அவள் எதற்காக அங்கு செல்ல வேண்டும் எனக் கேள்வியும் எழுப்பி, இதற்காகத்தான் இருக்கும் என்று பதிலும் கண்டு பிடித்து விடுவார்கள்.

உண்மையில் அவளுக்குத் தேவை இன்னுமொரு ஆண் உடல் அல்ல ஆத்மார்த்தமான நேசம் என்பதை உணர்த்திய கதை.

“இது ஒழுக்கம் கெட்ட தொடர்புன்னா, ஒழுக்கமான தொடர்புன்றது என்னது? கல்யாணப் பதிவுக் காகிதமா?” என்ற நியாயமான கேள்வியை இக்கதையில் கேட்கிறார்.

நேசங்கள் வருவதற்கும் இல்லாது போவதற்கும் கூட காரணங்கள் இருக்கும் என்பதை ” அன்றைக்குப் பிறகு அவன்,அவளருகே வரவேயில்லை” என்ற கதையில் காணலாம். எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகும் போது நேசங்களும் இறக்கக் கூடும் என்பதை இக்கதையின் மூலம் தெளிவு படுத்த விழைகிறார்.

தன்னுடன் வேலை செய்த பெண் மேல் ஏற்பட்ட நேசம் அவளின் வீட்டைத் தேடிச் செல்ல வைக்கிறது. அவ்வாறு செல்லும் போது அவளது வீட்டை அடையும் வரையான பேரூந்துப் பயணத்தில் அவனது எதிர்பார்ப்புக்கள் எல்லாம் கற்பனையாய் விரிகிறது. அவ்வெதிர்பார்ப்புகளின் முதல் துருப்பு உடைந்த அந்த நொடியில் இருந்து அவனுக்குள் கட்டமைக்கப்பட்ட நேசத்தின் ஒவ்வொரு கற்களும் உதிர ஆரம்பிக்கின்றன. இறுதியாக அவளது தாய்க்கு சித்தப்பாதான் ஆதரவு என்றும் அந்த சித்தப்பா மூலம் தாய்க்கு ஒரு குழந்தை உண்டு என்றும் அறிந்த அந்த வினாடி அவன் அவளுக்காகவே வந்தான் என்பதை மறைப்பான். காரணம் சமூகம் ஏற்றுக் கொள்ளாத ஒரு உறவு முறைக்குள் அவளின் தாய் இருக்கிறாள் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.

தொகுப்பின் தலைப்புக் கதை மிகவும் உணர்வு ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியது.

“அந்திம காலத்தின் இறுதி நேசம்” என்ற இக்கதையில் வயது முதிர்ந்த ஒருவருக்கு இரத்த சொந்தம் இல்லாத ஒரு பெண்ணின் மேல் ஏற்பட்ட நேசம் பற்றியது.  அந்திம காலத்தில் வயதானவர்களுக்கு தேவைப்படும் அந்த நேசம் பிள்ளைகளிடம் இருந்தோ அல்லது வேற யாரோ ஒரு அந்நியரிடம் இருந்தோ வந்தால் போது அதுவே அவர்களின் நிம்மதியாக இருக்கும். அதேவேளை அதைக் கூட வேறு விதமாக நோக்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவளது பாதையில் காணும் ஒரு வயது முதிர்ந்தவர். அவருக்கு இன்பம் ஊட்டுவதாக நினைத்து தனக்கு அண்ணா மட்டுமே உள்ளார் என்பதும்,கணவனின் சந்தேகப் புத்தி தெரிந்து அங்கு போவதை மறைக்க நினைப்பதும் என இவை எதற்கும் அர்த்தம் கண்டு பிடிக்க முடியாது. அவளைப் பற்றியே அனுதினமும் நினைத்துக் கொண்டிருக்கும் அவர் ஒரு கட்டத்தில் தங்களுக்கு மகள் இல்லாக் குறையை அவள் மூலம் நிவர்த்திக்க நினைப்பது உருக்கமானது. அதே போல் அவருடன் பேசும் அந்தப் பொழுதுகளில் ஏற்படும் இலகுத்தன்மைக்காகவே அவள் அவரை நாடினாள் என்பது அவரின் இறப்பின் போது கூட அவள் அவரில்லாத அந்த வீட்டிற்குள் செல்லாது சென்றதிலிருந்து உணரக் கூடியதாக இருந்தது.

ஒரு மனைவி கணவனின் ஒரு பாதியாக அவனது ஒவ்வொரு செயலிலும் பக்கத்துணையாக இருப்பவள் தான் ஆனால் அவள் அடிமையல்ல இணை என்பதை தனது மனைவி  நோயாளியான பொழுதுகளில் உணரும் ஒரு கணவனின் ஆத்ம பாஷையாக “எப்போதும் மேரி நினைவில் வருகிறாள்” என்ற சிறுகதை அமைந்திருந்தது. ஒரு இடது சாரிப் பெண் இல்லறத்தில் இருந்தாலும் இயக்கத்தையும் தோழர்களையும் குடும்பமாகவே கொள்வார். அதேவேளை சுயநலமற்ற தியாகங்கள் நிறைந்த வாழ்க்கையையே தேர்ந்தெடுப்பார் என்பதற்கு மேரி ஒரு உதாரணம். இருப்பினும் சமூகம் அவ்வாறானவர்களுக்கு அதிலும் பெண்களுக்கு என்ன செய்து விடுகிறது என்பதை அவளது திருமணமாகாத மகள், வறுமையான வாழ்வு, வசதிகள் அற்ற மருத்துவம், இறந்தபின் வந்த ஒட்சிசன் சிலிண்டர் என பலதும் பேசுகிறது. 

“நந்தியாவட்டைப் பூக்கள்” ஒரு பெண் தனது சந்தோசம்,சுதந்திரம், இயல்பான வாழ்க்கை என்பவற்றை இன்னொருவரின் இன்பத்திற்காக, அவரது சந்தேகங்களுக்காக இழந்து நிற்கும் அவலத்தைக் கூறுகிறது. ஆனால் கதையை ஒரு குழந்தையின் பார்வையில் நகர்த்திச் சென்றாலும் ஒரு சில இடங்களில் குழந்தை கூட இவ்விதம் சிந்திக்குமா என எண்ணத் தோன்றியது. இருப்பினும் அங்கே இருந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான நேசம், கணவனுக்கு மனைவியின் அக்கா மேல் இருந்த நேசம், அக்காக்கு தங்கையின் கணவன் மேல் இருந்த நேசம், தங்கையின் மகள் மேல் அக்காக்கு இருந்த நேசம் என  அத்தனை நேசங்களும் சமூகத்தின் பார்வையில் அசிங்கப்பட்டுவிடக் கூடாது என ஒரு பெண் தனது நேசங்களை பலியிட்டாள்  நந்தியாவட்டைப் பூக்கள் குப்பையாகியதைப் போல..

“பொட்டு” ஒரு வித்தியாசமான நேசம். தமிழ் இளைஞன் சிங்களப் பெண்ணின் வீட்டில் வாடகைக்கு இருக்கிறான். அவன் மீது கணவனை இழந்த அந்தப் பெண்ணுக்கு ஏற்படும் நேசம் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே வளர்கிறது. பொட்டு என்பது தமிழ்ப் பெண்ணுக்கு ஒரு அடையாளம் ஆனால் கணவனை இழந்த பின்  கனவு.  அவள் சிங்களப் பெண் என்பதால் அவன் பொட்டு வைக்கச் சொல்வதும் அதை அவள் இன அடையாளங்களுடன் மட்டும் ஒப்பு நோக்குவதும் சிறப்பு. கணவனை இழத்தல் பொட்டு அழித்தலுடன் தொடர்பு படுத்த வேண்டிய ஒன்றல்ல என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இக்கதை. பார்த்துப் பார்த்து வளர்த்த நேசம் அவன் கைதான போது வெடித்து அழுகையாக, கண்ணீராக வெளிப்படுகையில் அதை ஏற்றுக்கொள்ள சமூகம் முன்வரவில்லை என்பதை “மாகரட் அக்கா கூட அன்று எனக்காக ஒரு அடி கூட முன்னே எடுத்து வைக்கத் துணியவில்லை” என்ற வரிகளின் மூலம் காட்டுகிறார். பெண் என்றால், அவளுக்கான விதிகளும் சட்டதிட்டங்களும் இனம்,மதம்,மொழி வேறுபட்டாலும் மாறுபடாதது போலும்.

விவாகரத்தான ஒரு கணவனும் மனைவியும் சந்தித்துக் கொள்கின்றனர். அவர்களின் வாழ்வியல் மாற்றங்களையும் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கான நியாயங்களையும் அவர் அவர் பக்கம் நின்று பேசுகிறார்கள். விட்டுக் கொடுப்புகள்,எதிர்பார்ப்புகள், விதண்டாவாதங்கள் இவற்றைத் தாண்டி அவர்களுக்குள் உள்ள பிரிக்க முடியாத ஏதோ ஒருவித நேசம் இருவரையும் சந்திக்க வைக்கிறது. தமது அந்தரங்கங்கள் தெரிந்தவர் என்ற வகையிலோ அல்லது எங்கோ ஒரு மூலையில் பதுங்கிக் கொண்டு அப்பப்போ எட்டிப் பார்க்கும் காதலோ அவர்களை சந்திக்கத் தூண்டியிருக்கலாம். அவ்வாறான சந்திப்புகளில் காமம் இருக்காது காதல் அல்லது அக்கறை மட்டுமே விரவிக் கிடக்கும்.விவாகரத்து என்பது ஒட்டுமொத்தமாக வழித்துத் துடைத்தெறியும் ஒன்றல்ல அவ்வாறான கற்பிதங்கள் தவறு என்பதை உரத்துச் சொல்லும் கதை ” இப்போதும் இருவரும் இடைக்கிடையே சந்தித்துக் கொள்கிறோம்”

“ஒரே திடல்” என்ற கதை அதிகபடியான புனைவு எனத் தோன்றியது. காரணம் நாம் காணும் ,கேள்விப்படும் யதார்த்தத்துடன் ஒட்ட மறுத்து தள்ளி நின்றதாகத் தோன்றியது. இக்கதையும் ஒரு குழந்தையின் பார்வையிலேயே எழுதப்பட்டிருந்தது. ஒரு பெண்ணை எவ்வளவு சுலபமாக மடை மாற்றி விடுகிறார்கள். அவளுக்கான உணர்வுகள் என்ன என்பதை கொஞ்சம் கூட சிந்திக்காமல் அவளது விருப்பங்களை கேட்காமல் சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளை போல பெண்ணைப் பார்க்கவே எல்லோரும் விரும்புகின்றார்கள். இரண்டாவது திருமணம் செய்த ஒருவர் முதல் கணவரின் தனிமையைப் போக்க மனைவியை அவரிடம் கொண்டு விடுவது என்பது பொருளைக் கொண்டு கொடுப்பதைப் போல சாதாரணமாக நடைபெறுவதைத் தான் ஏற்க முடியவில்லை.

இறுதிக்கதை ஒரு இடதுசாரிப் பெண் காணாமலாக்கப்பட்டாள். அவளைத் தேடும் அண்ணன். அவளுடனான தனது பால்யத்தையும் அதன் போது தான் தவறவிட்ட பொழுதுகளையும் நிராகரித்த அவளது நேசங்களையும் நினைந்து நினைந்து மருங்கும் ஒரு கதை. நேசங்கள் எப்போதும் காத்திருப்பதில்லை காணாமல் ஆக்கப்படுவதுமில்லை. மறைக்கப்படுவதும் மறுக்கப்படுவதும் மட்டுமே.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இச்சிறுகதைத் தொகுப்பு சமூகத்தின் வக்கிர புத்தியால் சீரழிந்த நேசங்களை சமூகத்தின் பார்வைக்கு கொண்டு சேர்த்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *