மணிதர்சா,
|
இந்தக் காதல் உணர்வையே எங்களுடைய தமிழ்ச் சினிமா எங்களுக்கு எப்படிக் காட்டுகிறது. காதல் வன்முறையாக, வக்கிரம் நிறைந்ததாக,விட்டுக் கொடுப்பில்லாததாக, இன்னொருத்தனுடைய காதலியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியாவது அடைந்து விடும் துக்கிரித்தனமானதாக, |
இயற்கையுடன் ஒன்றிப் போதல் என்பது எல்லோராலும் முடியாத ஒன்று. இயற்கை அழகியலை புரிந்து கொண்டு படைப்பில் ஈடுபடுவது என்பது ஒரு கலையே. அழகியல் என்பது ஓர் உயிர் இயல்பு. அதனுள் புகுந்து அதனைச் சரிவரப் புரிந்து கொள்பவர்களினால் மட்டுமே ஆக்கபூர்வமான, யதார்த்தத்துடன் கூடிய ஒரு படைப்பை மற்றவர்கள் முன், வைக்க முடிகிறது.
இயற்கையையையும், அதனுடன் ஒன்றிய மனிதஉணர்வுகளையும் தங்களுடைய திரைப்படங்களில் கொண்டு வருவதில் கொரிய இயக்குனர்கள் முன் மாதிரியாக உள்ளார்கள். அனேகமான கொரியத் திரைப்படங்களில் இதனைக் காண முடிகிறது. அவர்கள் ஏதோ ஒருவிதத்தில் அழகியலை மையமாக வைத்து மனித உணர்வுகளைப் பின்னிச் செல்வதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். அந்தவகையில் முக்கோண காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படமே The Classic . ஒரு படைப்பின் வடிவத்தில் மட்டுமல்லாது உள்ளடக்கத்திலும் அழகியலுக்கும, உயிரியலுக்கும், அரசியலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தான் சொல்ல வந்ததைத் தெளிவாகவும், காத்திரமாகவும் சொல்லிச் செல்கிறார் கொரிய இயக்குனர் க்வக் ஜே யங் (Kwak Jae-yong) தனது The Classic திரைப்படத்தினூடாக.
பல்கலைக்கழக மாணவியாகிய ஜி ஹே தனது வீட்டைச் சுத்தம் செய்யும் பொழுது தனது தாயினுடைய இளம்பருவ காதல் கடிதங்கள், நாட்குறிப்புகள் அடங்கிய பெட்டி ஒன்றைக் கண்டெடுக்கிறாள். அது முழுவதும் அவளுடைய தாயினால் அவளுடைய இளம் பருவத்துக் காதலனுக்கு எழுதப்பட்ட கடிதங்களாக இருக்கின்றன. ஆர்வமேலீட்டால் அந்தக் கடிதங்களையும், நாட்குறிப்பையும் அவள் படிக்கும், இந்தக் காட்சியுடன் கதை ஜி ஹேயின் தாயினுடைய இறந்த காலத்திற்குள் நுழைகிறது.
இதேவேளை ஜி ஹேயிற்கு சங் மின் என்னும் இளைஞன் மேல் காதல் ஏற்படுகிறது. ஆனால் அவளுக்கு அதனைத் தெரிவிக்க முடியவில்லை. அவளுடைய பலவீனத்தை சங் மின் மேல் காதல் வயப்பட்டுப் போயிருக்கும் அவளுடைய நண்பி பயன்படுத்திக் கொள்கிறாள். தாயினுடைய வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் போலவே அனேக சம்பவங்கள் தன்னுடைய வாழ்க்கையிலும் ஏற்படுவதை அசைபோடும் ஜி ஹேயிற்கு ஆச்சரியம் ஏற்படுகிறது.
இறந்தகாலம் ஜி ஹேயின் தாய் ஜோ ஹீ யினுடைய காதலன் ஜோன் ஹா அவனுடைய நண்பன் ரீ சூ ஆகியோருக்கிடையில் ஓடும் முக்கோணக் காதலைச் சொல்கிறது. ஜோ ஹீக்கும், ரீ சூவிற்கும் அவர்களின் பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்படுகிறது. ஆனால் ஜோ ஹீக்கு ஜோன் காவின் மேல் காதல் ஏற்படுகிறது. ஜோ ஹீயின் மீது ரீ சூவும் மிகுந்த அன்பு வைத்திருக்கிறான். அது ஜோன் ஹாவுக்குத் தெரிய வரும் போது தனது நண்பனை ஏமாற்றக் கூடாதென எண்ணி தன்னுடைய காதலைச் சொல்லி விடுகிறான். ஆனால் அவர்களுடைய காதல் ரீ சூவுக்கு முன்னமேயே தெரிந்திருந்தது. தான் அன்பளிப்பாக ஜோ ஹீக்குக் கொடுத்த நெக்லஸ் தன்னுடைய நண்பனின் கழுத்தில் இருப்பதை அவதானிக்கும் அவன் அவர்களுக்கிடையிலான காதலையும் புரிந்து கொள்கிறான். நட்புடன் அவர்களின் காதலை ஏற்றுக் கொள்ளும் ரீ சூ தனது நண்பனின் காதலுக்கு உதவி செய்கிறான். தன்னுடைய பெயரில் தனது நண்பனின் காதல் கடிதங்களை ஜோ ஹீயிடம் சேர்ப்பிக்கிறான். இதனைக் கண்டு பிடிக்கும் ஜோ ஹீயினுடைய பெற்றோர் ரீ சூவின் தந்தையிடம் முறையிட தந்தையால் அவன் தண்டனைக்குள்ளாகிறான். அந்த அவமானம் தாங்காமல் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் அவனை ஜோன் ஹா காப்பாற்றுகிறான். நண்பன் மேல் அளவு கடந்த பிரியம் வைத்திருக்கும் ஜோன் ஹா தன்னால்தானே தன்னுடைய நண்பன் தண்டனை பெற்றான் என்ற குற்றவுணர்வு மேலிட தன்னுடைய காதலியைப் பிரிந்து இராணுவத்தில் சேர்ந்து வியட்னாம் செல்கிறான்.
அங்கு யுத்தத்தில் தவறவிட்ட தன் காதலியின் நெக்லஸை எடுக்கப் போகும் ஜோன் ஹா கண்ணிவெடியில் அகப்பட்டு பார்வையை இழக்கிறான். யுத்தம் முடிந்து கொரியா திருப்பிய அவன் தன்னுடைய காதலி ஜோ ஹீ யைச் சந்திக்க வருகிறான். அவள் ஏன் இன்னமும் திருமணம் செய்யவில்லை என வினவும் அவன் தனக்குத் திருமணமாகிவிட்டதாகவும் கூறுகிறான். அவர்களுடைய சந்திப்பு நட்புடன் முடிவடைகிறது.
இதன் பின் ஜோ ஹீ, ரீசூவைத் திருமணம் செய்கிறாள். தனது மூன்று வயது மகளுடன் கிராமத்திற்கு வரும் அவள் ஜோன் ஹா இறந்து விட்டதைக் கேள்விப்படுகிறாள். அவனின் விருப்பப்படி அவனுடைய அஸ்தி அவர்கள் சந்தித்த அந்த ஆற்றிலே கரைக்கப்படுகிறது. இதன் பின் அவளுடைய திருமணத்தின் பின்தான் ஜோன் ஹா திருமணம் செய்து கொண்டதையும் அவனுக்கு ஒரு மகன் இருப்பதையும் நட்புக்காக அவன் செய்த தியாகத்தினையும் அவன் விட்டுச் சென்ற நாட்குறிப்பின் மூலம் அவள் அறிந்து கொள்கிறாள்.
பின் நிகழ் காலத்துள் வரும் இயக்குனர், ஜி ஹேயின் காதலன் சங் மின் அவளுடைய தாயின் காதலன் ஜோன் ஹாவின் மகன் என்பதைத் தெரிவித்து, ஜி ஹேயையும் அவளின் காதலனையும் அவர்களுடைய பெற்றோர்களின் இளம் பருவ காதல் ஏற்பட்ட அதே கிராமத்தினுள் அழைத்து வந்து, அழகிய இருள் நிறைந்த ஆற்றங்கரையில் நட்சத்திரங்களாய் உலவும் மின்மினிப் பூச்சிகளின் மத்தியில் அவர்களைச் சேர்த்து வைக்கும் ரம்மியக் காட்சியுடன் நமது மனங்களை நிறைவு செய்கிறார்.
மனித உணர்வுகளை மட்டுமல்லாது ஒவ்வொரு காட்சிப் படிமங்களிலும் இயற்கையின் அழகையும் வெகு சிறப்பாக மிளிரச் செய்து எம்முள் சிலிர்ப்பை ஏற்படுத்தும் இயக்குனர், மலைகள், ஏரிகள், ஆறுகள் என்று எழில் கொஞ்சும் தென்கொரியாவின் எல்லாப் பாகத்தையும் எமக்கு அழகுணர்ச்சியுடன் கையளிப்பதிலும் கைதேர்ந்தவராக இருக்கின்றார்.
சாதாரண ஒரு காதல் உணர்வு விட்டுக் கொடுப்பு, பரிதவிப்புகளுடன் கூடிய நட்பின் ஆழத்தினையும் சேர்த்து அழகிய காவியமாகக்கப்பட்டிருப்பது இன்னும் மனிதர்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாக ஒட்டியிருக்கும் மனிதாபிமானத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.
இந்தக் காதல் உணர்வையே எங்களுடைய தமிழ்ச் சினிமா எங்களுக்கு எப்படிக் காட்டுகிறது. காதல் வன்முறையாக, வக்கிரம் நிறைந்ததாக, விட்டுக் கொடுப்பில்லாததாக, இன்னொருத்தனுடைய காதலியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியாவது அடைந்து விடும் துக்கிரித்தனமானதாக, விரும்பாத பெண்ணை கட்டாயப்படுத்தியாவது விரும்ப வைப்பதாக தமிழ்ச் சினிமாவில் காட்டப்படும்போது நமக்கு முகச் சுளிப்பை ஏற்படுத்தி விடுகிறது. காதல் மட்டுமே வாழ்க்கை என்று நினைக்க வைத்து, காதல் காதல் என்று சாகுமளவிற்கு நமது இளைஞர் யுவதிகளிடம் ஒரு போதையை ஊட்டுவதனூடாக தங்களது பணப்பையை நிரப்பிக் கொள்ளும் தமிழ்ச் சினிமா இயக்குனர்கள், மென்மையான, அழகுணர்வுடனான காதலை எமக்குத் தருவதற்குப் பதிலாக வன்முறைக் கலாசாரத்தையல்லவா எமது மூளைகளில் புகுத்துகிறார்கள். இளைஞர்களிடம் வக்கிரமான காதல், காம உணர்வுகளைத் தூண்டிவிடுவதில் தமிழ்ச் சினிமா ஆற்றும் பங்கு குறித்து நாங்கள் வெட்கப்பட வேண்டுமல்லவா?
ஆனால் அதே காதல் உணர்வுகளை வேற்று மொழியில் உள்ள பல படங்கள் மிக யதார்த்தபூர்வமாக மிக எளிமையாக எம் முன்னே வைக்கும் பொழுது அவை எம்மை சொக்கித்தான் போகச் செய்கிறது.
கிளாசிக் படம் காதல், நட்பு, விட்டுக் கொடுப்பு, அதனால் ஏற்படும் வலிகள், புரிந்துணர்வு என்னும் மனித இயல்புகளை ஒவ்வொரு கதாபாத்திரத்தினூடாகவும் தத்ரூபமாகக் கொண்டு செல்கிறது. விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு என்பவை மருகிக் கொண்டு போகும் இந்தக் காலகட்டத்தில் அவை மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஆதாரசுருதி போன்றது என்பதையும் இந்தப் படம் வலியுறுத்துகிறது என்றே சொல்ல வேண்டும். இறந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் பின்னி தாயினதும், மகளதும் காதலை மையமாக ஊடறுத்துச் செல்கிறது இத்திரைப்படம். கதை நேரடியாகச் சொல்லப்படாமல் சுற்றி வளைத்து, தாவிக் குதித்து ஒரு நதியைப் போல் ஓடுகிறது.
சாதாரண ஒரு கல்லை சிற்பி ஒருவன் அழகுணர்வுடனும், புத்திசாதுரியத்துடனும் செதுக்கும்போதே அது உயிர்பெறுகிறது. தேவையில்லாத பாகங்களை அகற்றி தேவையானவற்றை சேர்த்துக் கொள்ளும் போது சிற்பம் அழகுற மிளிர்வதை நாம் காண முடிகிறது. காதல் என்பதும் அழகியலுடன் கூடிய உணர்வே.
நன்றி:- மணிதர்சா, தாயகம் – இலங்கை