நெடு நீண்ட பாதை நடுவே
மெது மெதுவாய் நீல நாகம்…
வெளியை புகை கக்க
உள்ளே விழுங்கிக்கொண்ட
பட்டுப்புழுக்களின் கருந்தலைகள்
கொஞ்சம் கொஞ்சமாக
வழிநெடுகும் வெளி நீட்ட
எத்தனிக்கும்…
கண்டாடி மென் செதில்கள்
மெல்ல வழிவிட்டுயர
பரந்த வெளிகளை
பருகும் தலைகளெல்லாம்
கடகட சத்தத்தோடு
காற்றினை கட்டியணைக்கும்…
வா வாவென்றழைக்கும்
ஓரத்து கதவுகள் கண் சிமிட்ட
அடடா என தாவிச்சென்றும்
காற்றின் கனதிகள்
மெல்லத் தயக்கம் தரும்..
நாழிகள் ஆனாலென்ன
மலைகள் வயல்கள் கண்டு
வளைந்தூரும் நன் நாகத்தூடு
நிகழ்கணத்தில் நகர்தலென
புதுமொழி நன்றன்றோ…..