(நமது தமிழ் சமூகத்தில் பெண்பிள்ளைகள் குறித்த வயது வந்தவுடன் திருமணம் என்கின்ற பந்தத்தில் நுழைந்து, இல்லத்தரசி என்றாகி, காதலின் பேரால் கட்டிப்போட்டு வீட்டுவேலைகளை சுமப்பதும், மதிப்பிழந்து இருப்பதும் கேள்விக்குட்படுத்த வேண்டிய அவசியம் கருதி Silvia Federici இன் கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் – சந்திரா நல்லையா
‘வீட்டுவேலைக்களுக்கு சம்பளம் வேண்டும்’ என்ற கோரிக்கையானது பல சந்தர்ப்பங்களில் புரிந்து கொள்ள கடினமானதாகவும், தெளிவற்றதாகவும் காணப்படுகிறது. அதனை அரசியலாக பார்க்காமல் வெறும் பணம் பற்றியதாக குறுக்கியே பார்க்கப்பட்டது. இவ்வாறு குறுக்கிப் பார்ப்பதானது பெண்களது கலகத்தைக் குறைத்து மதிப்பிடுகிறது .
வீட்டுவேலைக்கான ஊதியம் என்பதை வெறும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக குறுக்கிப் பார்த்தால் பெண்களுக்கு மேலதிகமாக பணம் கிடைப்பதினால் என்ன வித்தியாசம் ஏற்படப்போகிறது? என்ற கேள்வி எழுகிறது. வீட்டு வேலையும், திருமணமும் என்பதைத் தவிர வேறு தேர்வு இல்லை என்று இருக்கும் பெண்களுக்கு இது குறிப்பிடத்தக்க மாற்றமாக இருக்கும். ஆனால் வேறு தேர்வுகளை கொண்டிருக்கும் உயர் பதவிகளில் இருப்பவர்கள், பரஸ்பரம் புரிதலுடைய துணைவரை உடையவர்கள், ஒத்தபாலினசேர்க்கையில் இருப்பவர்கள் போன்றோருக்கு இந்த ஏற்பாடானது எந்த வித்தியாசமும் கொடுத்துவிட முடியாது.
பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இருக்கும் பெண்களுக்கு தமது சுயத்தை நிலைநாட்டிக்கொள்ள வேறு வழிமுறைகள் உண்டு. ஆனால் திருமணம் எனும் ஒப்பந்தம் ஒன்றை ஏற்றுக்கொண்டு இல்லத்தரசி என அடையாளப்படுத்தலானது மரணத்தைவிட மோசமானதாகும். இந்த நிலைப்பாட்டில் உள்ள சிக்கல் என்னவென்றால் இந்த திருமண வாழ்க்கையில் கொஞ்சம் பணத்தை சேர்த்து விட்டு so what ? அதனால் என்ன எனக் கேட்பதாகும்.
வீட்டு வேலைக்கு ஊதியம் கேட்கும் போராட்டமானது சமூக உறவுகளையும், குடும்ப அமைப்பையும் மாற்றி மீள் கட்டமைப்பு செய்வதற்கான கோரிக்கையாகும். அதனை விடுத்து வெறுமனே பணம் கொடுத்தால் சரியாகிவிடும் என குறுக்கிப் பார்ப்பது தவறான கண்ணோட்டமாகவே அமையும். மாறாக, வீட்டுவேலைகளுக்கு ஊதியம் கேட்பதை அரசியல் கண்ணோட்டமாக பார்த்தால், எமது போராட்டமானது பெண்களை ஒரு சமூக சக்தியாக ஒழுங்கமைப்பதையும், அவர்களது வாழ்க்கையில் புரட்சிகர மாற்றங்களுக்கான வழி அமைப்பதையும் குறிக்கும். எனவே வீட்டுவேலைக்கான ஊதியம் என்ற கோரிக்கையானது, புரட்சிகரமான செயற்பாடு மட்டுமன்றி, பெண்ணிய செயற்பாடாகவும் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர கண்ணோட்டமாகவும் உள்ளது.
A labour of love (அன்பிற்கான வேலை)
வீட்டு வேலையானது ஏனைய வேலைகளைப் போலன்றி, முதலாளித்துவமானது மிகவும் நுட்பமான வழிமுறைகளினூடாக, பரந்துபட்ட கையாளல்களாலினூடாக நிகழ்த்தப்படும் வன்முறையாகவே, பெண்கள் மீது திணித்துள்ளது என்பதை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் மோசமானமுறையில் சுரண்டப் படுகிறார்கள் என்பது உண்மையேயாயினும், இந்த பரிவர்த்தனையில் ஒருவித “சமத்துவம்” இருக்கிறது. இதன்படி “சுதந்திரமாக” செய்யும் ஒப்பந்தத்தின் அடிப்படையில், தொழிலாளியின் உழைப்புச் சக்தியின் சந்தைப் பெருமதியை முதலாளி வழங்குகின்றார். உண்மையில் முதலாளி தரும் கூலிக்கு பதிலாக உபரியான உழைப்புச் சக்தியை பெற்றுக்கொள்கிறார் என்பதும், அதுவே அவரது இலாபத்தின் ஊற்றுமூலம் என்பதும் நாம் அறிந்ததேயாகும். ஊதியம் பெறுவது என்பது உங்களை ஒரு தொழிலாளியாக அங்கீகரிப்பதுடன், அந்த ஊதியம் குறித்து நீங்கள் பேரம் பேசக் கூடியதாகவும் இருக்கும். அதனால் ஊதியம் பெறுவது ஒரு சமூக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருப்பதுடன், நீங்கள் விரும்புவதால்தான் அந்த வேலையை செய்வதாகவோ, அல்லது இயற்கையாகவே அந்த பண்பு உங்களிடம் உள்ளது என்றோ அர்த்தப்படாது. மாறாக, ஒரு நிர்ப்பந்தமான சூழ்நிலையில் நீங்கள் வாழ்வதற்காக ஒரு தொழிலை செய்வதாக அர்த்தப்படுகிறது. இன்று தபால்காரராயும், நாளை சாரதியாகவும் வேலை செய்வீர்கள் என்றால் அங்கு எவ்வளவு வேலை எவ்வளவு ஊதியம் என்பதே முக்கிய விடயம் ஆகும்.
வீட்டு வேலைகள் விடயத்தில் நிலைமை வேறுபட்டுக் காணப்படுகிறது. இங்கு வீட்டுவேலைகள் என்பவை பெண்களது சுயமான தெரிவாக அல்லாமல், அவர்கள்மீது திணிக்கப்படுகிறது. பெண்களது உடலமைப்பு, ஆளுமை, உள்ளார்ந்த உந்தல்கள் போன்றவை மூலமாக பெண்கள் வீட்டு வேலைகளை செய்வதற்கான பண்புகளை இயற்கையாகவே கொண்டவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். பெண்களது வீட்டுவேலைகள் என்பவை சமூக ஒப்பந்தத்தின் பாற்பட்டவையாக இல்லாமல் அவர்களது இயற்கையான பண்பாக அடையாளப் படுத்தப்படுகிறது. முதலாளித்துவமானது ஆரம்பத்திலிருந்தே வீட்டு வேலைகளை மதிப்பிழக்கச் செய்வதுடன், ஊதியமற்ற உழைப்பாக வைத்திருக்கின்றது. இதன் தவிர்க்க முடியாத விளைவாக, வீட்டு வேலைகள் என்பவை பெண்களது , இயல்பாக நிறைவேற்றும் செயற்பாடாக எம்மை நம்பவைத்துள்ளது. இந்த கற்பிதமானது ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக பெண்களையும், சமூகத்தையும் கட்டிப்போட்டுள்ளது. இதனால் வீட்டு வேலைகள் தொடர்பான பெண்களது போராட்டத்தை வெறும் தனிப்பட்ட சமையலறை, படுக்கையறை சண்டைகளாக குறைத்து மதிப்பிடுவதுடன், போராடும் பெண்களை வெறுமனே நச்சரிப்பவர்களாயும் பரிகாசமும் செய்கிறது.
பெண்கள் இயற்கையாகவே வீட்டுவேலைகளுக்கு உரியவர்கள் என்ற கருத்தியலை ஆராய்ந்தால், எமது சமூகத்தில் ஒவ்வொரு குடும்ப அமைப்பினுள்ளும் பெண்கள் குறைந்தது இருபது வருடங்களாவது ஊதியம் வழங்கப்படாத தாயாரால் ஒவ்வொரு நாளும் பயிற்றுவிக்கப் படுகிறார்கள். இந்த சமூக இசைவாக்கமானது (பயிற்றுதல்) பெண்களை கணவனும் குழந்தையுமே வாழ்க்கையின் சிறந்த தெரிவு என்ற கற்பித்த்தை வலியுறுத்துகிறது. இருப்பினும் இந்த கற்பிதமானது வெற்றி பெறுவதில்லை. ஏனெனில் பெண்கள் திருமணத்திற்கு பின்னர் தாம் ஏமாற்றப்பட்டதை உணருகிறார்கள். பெரும்பாலும் பெண்கள் தாம் அன்பிற்காகவே திருமணம் செய்வதாக ஒரு மயக்க உணர்வில் இருப்பதே உண்மை. எனினும் அவர்கள் பாதுகாப்பிற்கும், பணத்திற்குமே திருமணம் செய்வதை உணரவே செய்கிறார்கள். காலத்தால் காதலும், பணமும் சிறிதளவே சம்பந்தபடுவதும் பெருமளவில் வீட்டுவேலைகளை சுமக்க வேண்டியுள்ளதையும் இந்நேரத்தில் தெளிவுபடுத்தலாம். இதனாலேயே வீட்டிலுள்ள வயதான பெண்கள் “ உனக்கு என்ன விருப்பமோ அதை இப்போதே சுதந்திரமாக அனுபவி” என இளம் பெண்களைப் பார்த்து கூறுவார்கள். ஆனால் அது முடியாமலே போய்விடுகிறது. ஏனெனில் இளமையாய் இருக்கும்போதே வாழ்க்கையில் கீழ்பட்டவராகவும், அடிபணிபவராகவும், தங்கியிருப்பவராகவும் பயிற்சி அளிக்கப்படுவதுடன, இந்த அர்ப்பணிப்புக்கள் ஊடாகவே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என வலியுறுத்தப்படுகிறது. இவை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் பெண்களாகிய நீங்கள் பிரச்சனைக்கு உரியவராயும், தோல்வி உற்றவராயும் அசாதாரணமானவராயும் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவீர்கள் எனவும் கூறப்படுகிறது.
பெண்களது வேலைகளை மறைப்பதில் மூலதனம் வெற்றியடைந்துள்ளது என்பதை நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். இதனை பெண்களின் மிக உயர்ந்த படைப்பாற்றலின் இழப்பாகவே கொள்ள வேண்டும். வீட்டுவேலைக்கான கூலியை மறுத்து அதை அன்பின் செயற்பாடாக காட்டுவதானது, ஒரு கல்லால் பல பறவைகளை கொல்வதைப் போன்றதாகும். இவ்வாறு செய்வதன் மூலமாக பல தரப்பட்ட சேவைகளை இலவசமாக பெற்றுக்கொள்வதுடன், பெண்கள் அதனை எதிர்த்து போராடுவதை தவிர்த்து, அதுவே வாழ்க்கையின் சிறப்பு எனவும் உறுதிப்படுத்துகிறது. இதனை சாதிப்பதற்காக சில மயக்கும் வார்த்தைகளான அன்பு, தாய்மை, குடும்ப குத்துவிளக்கு போன்ற பல போலியான சொல்லாடல்களை பயன்படுத்துகிறது. அத்துடன் இந்த மூலதனமானது ஆண் தொழிலாளிகளை எஜமானர்களாயும் அவரது ஊதியத்தில் தங்கியிருக்கும் பெண் என்பவள், அந்த ஆண் எஜமான் வேலை முடிந்து வீடு திரும்பும்போது ஒரு சேவகனாக செயற்படும் வகையிலும் கட்டமைத்துள்ளது. உண்மையில் பெண்களாகிய எமக்கு விதிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் ஆண் வர்க்கத்திற்கு அன்பான, ஊதியமற்ற சேவகர்களாக இருப்பதுடன், அவ்வாறு வாழ்வதே பெரும் பாக்கியமாக கருதும் மனநிலையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்பவர்களாக இருப்பதே எனலாம். ஆதாமுக்கு இன்பம் கொடுப்பதற்காகவே கடவுள் ஏவாளை படைத்தது போல, ஆண் தொழிலாளிற்கு உடல், உணர்ச்சி, பாலியல் ரீதியான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு “இல்லத்தரசிகளை” மூலதனமானது உருவாக்கி கொடுக்கிறது. அத்துடன் அவர்களது வாரிசுகளை பெற்றுக்கொடுக்கும் இயந்திரமாகவும் பெண்களை உருவாக்கியுள்ளது. வேலைத்தளத்தில் நிகழும் சுரண்டல், அந்நியமாதல், முரண்பாடுகள் போன்றவற்றால் உடலளவிலும், மனதளவிலும் நொந்து வீடு திரும்பும் ஆண்களை ஆசுவாசப் படுத்துவதற்கும், அவர்களது கிழிந்த உடைகளை தைத்துக் கொடுப்பதற்கும் ஏற்றவாறு சமூக உறவுகளை ஒழுங்கமைப்பதில் மூலதனம் பங்களிக்கிறது. உடல், உணர்ச்சி, பாலியல் சேவைகளின் ஒருங்கிணைந்த வேலைக்காரிக்கான குறிப்பான தன்மைகள் கொண்டவராக இல்லத்தரசி (housewives ) பாத்திரமானது மூலதனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டு வேலைகளானது பெண்களுக்கு பெரும் சுமையாக இருப்பதுடன், கண்ணுக்கு புலப்படாமலும் உள்ளது.
அநேகமான ஆண்கள் வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்வதென்பது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. ஆண்கள் வேலையில் ஒரு நாளைக் கழித்துவிட்டு வீடு திரும்பும்போது அவர்களைக் கவனிப்பதற்காக வீட்டில் ஒருவர் இருப்பது, அவர்களது தேவையாக உள்ளது. ஆண்மைய சமூகத்தினால் எதிர்பார்க்கப்படும் பெண்ணாக இருக்கும்போதே அவரது திருமணமானது வெற்றி தரும் என்பதை ஒவ்வொரு பெண்ணாலும் அறிய முடிகிறது. இந்த விடயத்தில் ஏழ்மைக் குடும்பப்பெண் அதிக அடிமைத்தனத்திற்கு ஆளாகிறார். இது பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல. மூலதனமானது நடுத்தர வர்க்கத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் என இரட்டைக் கொள்கையைக் கொண்டுள்ளது. தொழிலாள வர்க்க ஆண்கள் எவ்வளவு மனக்கஸ்டங்களை தொழிற்சாலையில் பெறுகிறார்களோ, அந்த கஸ்டங்களை வீட்டினுள் வன்முறையாக (கோபித்தல்,அடித்தல்,ஏசுதல்) என வெளிப்படுத்தினாலும் பெண்கள் அதனை தாங்கிக்கொள்ளுவதற்கும், அவரை மீட்டெடுத்து பழையநிலைக்கு திரும்பவும் கொண்டுவருவதற்கும் ஏற்றவாறு கற்பிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாது படுக்கையறையில் அந்த ஆண் காதல் செய்யும் மனநிலையில் இருந்தால் அல்லது களைப்பாக இருந்தால் அவற்றிற்கு ஏற்றவகையில் பெண் இசைந்து, பொறுமையுடன் இருப்பதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஆணைப் பொருத்தவரையில் தனது அதிகாரம் நிலவும், தான் பாதுகாப்பாக உணரும் ஒரு கோட்டையாகவே அவரது வீடு இருக்கிறது.பெண்கள் தம்மீது திணிக்கப்பட்டுள்ள “இல்லத்தரசி” பாத்திரத்தை எதிர்த்து போராடவே செய்கிறார்கள். ஆனால் அந்தப் போராட்டமானது தனிப்பட்ட குடும்ப பிரச்சனையாக புறக்கணிப்படுகிறது.
பெண்கள் தமது படுக்கையறை, சமையலறையில் இருந்து இப்போராட்டத்தை எவ்வாறு பொது வெளியில், பொதுவான ‘பெண்கள் பிரச்சனை’ யாக கொண்டுவருவது? என யோசிக்கவும் செய்கிறார்கள். திருமணமும் அன்பும் என்ற பெயரில் நிகழ்த்தும் பொய்ப்பித்தலாட்டம் பெண்களை பாதிக்கவே செய்கிறது. திருமணம் செய்யாவிட்டாலும் கூட வீட்டுவேலைகள் என்பவை பெண்களுக்கு இயல்பாக வருவதாகவும், பால்மயப்பட்டதாகவும் உள்ள நிலைமையானது, பெண்கள் குடும்ப உறவு தவிர்ந்த நிலைமைகளில் கூட இப்படிப்பட்ட வேலைகளைப் பெண்களே செய்தாக வேண்டும் என்ற நிலைமையைத் தோற்றவித்துவிடுகிறது. வேலைத்தளம், பொதுச் செயற்பாடுகள் போன்ற சந்தர்ப்பங்களில்கூட சில வேலைகள் – தேனீர் ஊற்றவது, குறிப்பெடுப்பது, வரவேற்பு அளிப்பது போன்ற வேலைகள் – பெண்களுக்கு உரியனவாகவே வரையறுக்கப்பட்டுள்ளதுடன், பெண்களால் செய்யப்படுவதாலேயே அத்தகைய பணிகள் மதிப்பிழக்கவும் செய்யப்படுகின்றன. பெண் என்பவள் எந்த ஆணுக்கும் சேவை செய்யாவிட்டாலும் கூட அவள் ஆண் உலகிற்கு சேவகம் செய்யும் உறவிலேயே ( வேலைக்காரி உறவில்) கவனத்தில் கொள்ளப்படுகிறாள். இதனால் பெண்கள் கீழ்நிலைப்படுத்தப்பட்டு, இழிவாக மதிக்கப் படுகிறார்கள். பெண்களை smile, honey என அழைத்து ‘சிரிச்சண்டு இருங்களன்.. என்ன பிரச்சினை உங்களுக்கு?’ என எல்லா ஆண்களாலும் கேட்க முடிகிறது. அவ்வாறு கேட்கும் ஆண்கள் அவளுடைய கணவரோ அல்லது முதலாளியோ அல்லது ரெயிலில் பற்றுச்சீட்டு வழங்குபவர் ஆகவோ கூட இருக்கலாம்.
The Revolutionary perspectives ( புரட்சிகர கண்ணோட்டம் )
இந்த கண்ணோட்டத்தில் இருந்து தொடங்குவோமாயின், வீட்டுவேலைக்கான ஊதியம் கேட்பதன் புரட்சிகரமான தார்ப்பரியத்தை புரிந்துகொள்ளலாம். பெண்களின் வீட்டுவேலைக்கு ஊதியம் என்பதன் அர்த்தம், அவை பெண்களிடம் காணப்படும் இயல்பான பண்புகளின் வெளிப்பாடு என்ற கருத்தை மறுப்பதுடன் மட்டுமல்ல அவற்றை செய்யவே பெண்கள் மறுப்பதுமாகவே கொள்ளப்படும். அதாவது மூலதனத்தால் வடிவமைக்கப்பட்ட இல்லத்தரசி (housewives) என்ற பாத்திரத்தையே முற்றாக நிராகரிப்பதாகும்.
வீட்டுவேலைகளுக்கு ஊதியம் கேட்பதானது, சமூகம் எம்மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை குறைக்கச் செய்கின்றது. எனினும் இந்த நிலமையானது சமூக இசைவாக்கத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. இதனாலேயே வீட்டிலுள்ள அனைத்து வேலைகளுக்கும் ஊதியமற்ற நிலையினை உருவாக்குகிறது. ஆண் தொழிலாளிகள் தொழிற்சாலையில் ஊதியத்தை அதிகரித்து கேட்பதுடன், பெண்களது வீட்டுவேலைக்கு ஊதியம் கேட்பதை ஒப்புநோக்க முடியாது. ஏனெனில் தொழிலாளி கேட்கும் ஊதிய அதிகரிப்பு போராட்டமானது, அவன் ஏற்கவே சமூக ஒப்பந்தத்தில் இருந்துகொண்டே அதை நிலைநாட்டும் வகையிலேயே கேட்கிறான். ஆனால் பெண், வீட்டுவேலைக்கு ஊதியம் கேட்டு போராடுவதானது வெளிப்படையான ஒரு சமுதாய ஒப்பந்தத்தை கோருவதற்காகும். அதே சமயம் தொழிலாளி கூலி கேட்டு போராடுவதும், அடிமை ஒருவர் அடிமைத்தனத்தை எதிர்த்து கூலி கேட்டு போராடுவதும் வேறுபட்டதாகும். பெண்களது போராட்டமானது முதலாளித்துவ உறவிற்குள் செல்வதற்கானதல்ல என்பதில் தெளிவாக உள்ளார்கள். ஏனெனில் அவர்கள் ஏற்கனவே முதலாளித்துவத்துடன் ஒரு குறிப்பிட்ட விதத்திலான உறவிலேயே உள்ளார்கள்.பெண்கள் போராட்டத்தின் ஊடாக முற்றுப்புள்ளி வைக்க முனைவது பெண்களுக்கென மூலதனத்தினால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ‘பெண் பாத்திரத்தை’ என்றால் மிகையாகாது. அதுவே தொழிலாள வர்க்கத்னரிடையே ( ஆண் – பெண் ) பிளவுகளை ஏற்படுத்துகிற முக்கிய தருணமாகும். இதன்மூலமே மூலதனம் தனது சக்தியை தக்கவைக்கிறது எனலாம்.
வீட்டுவேலைக்கான ஊதியங்கள் ஒரு புரட்சிகர கோரிக்கையாகும். ஏனெனில் அது தனியவும் மூலதனத்தை அழித்துவிட மாட்டாது, மாறாக சமூக உறவுகளை மறுசீரமைக்குமாறு இந்த போராட்டமானது மூலதனத்தை கட்டாயப்படுத்துகிறது. இச்செயல் எமக்கு சாதகமாகவும், இதன் மூலமாக வரக்கத்தின் ஒற்றுமைக்கு சாதகமாகவும் அமைகின்றது. உண்மையில் வீட்டுவேலைக்கு ஊதியம் கோருவதானது, எங்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டால் அதை தொடர்ந்து செய்வோம் என்ற அர்த்தம் இல்லை. மாறாக அதற்கு எதிரானதாகும். வீட்டுவேலைகளுக்கு பணம் வேண்டும் என்ற பெண்களது கோரிக்கையானது அதை செய்ய மறுப்பதற்கான முதற்படியாகும். ஏனெனில் ஊதியத்திற்கான கோரிக்கை பெண்களது வேலைகளை வெளியில் தெரியப்படுத்துகிறது. இதுவே அதற்கு எதிராக போராடத் தொடங்குவதற்கு முன்நிபந்தனையாக உள்ளது.
எமது போராட்டத்தை “பொருளாதாரவாதம்” என்று விமர்சிப்பவர்களுக்கு நாம் நினைவூட்ட விரும்புவது என்னவென்றால் பணம் என்பது மூலதனம் என்பதாகும்: இந்த வகையில் பணமானது உழைப்பின்மீது ஆதிக்கம் செலுத்தும் ஆற்றலுடையதாகும். இப்போது இருக்கும் மூலதனமும்கூட எமது மூதாய்கள், தாயார், பாட்டிமார் ஆகியோரது உழைப்பே ஆகும். இந்த மூலதனத்தின் சக்தியே பெண்களது கட்டாய உழைப்பிற்கு நிர்ப்பந்தம் செய்கிறது. பெண்கள் ஊதியம் கேட்பதானது அவர்களது “பெண்மை” என்னும் கற்பிதத்தை உடைத்து, கண்ணுக்கு புலப்படாத எமது உழைப்பை வெளியே தெரியும்படி செய்கிறது. அதாவது வீட்டுவேலைகளும் உழைப்பே என்பதை அம்பலப்படுத்துவதாகவே இது அர்த்தப்படும். பெண்களது மனம், உடல், உணர்ச்சிகள் போன்றவை ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டை செய்வதற்கு ஏற்ற வகையில் சிதைக்கப்படுகிறது. பின்னர் இந்தச் சிதைக்கப்பட்ட வடிவமே எமக்கான முன்மாதிரியாக எம்முன் நிறுத்தப்படுகிறது. இந்த துயரமான, ஒடுக்கப்பட்ட பெண்களது கீழ்பட்ட நிலையை மாற்றியமைத்து அவர்களை சமூகத்தில் மதிப்பும் அந்தஸ்தும் உள்ள பெண்களாக உயர்த்துவதே வீட்டு வேலைகளுக்கான ஊதியத்தை கேட்கும் போராட்டத்தின் நோக்கமாகும்.
வீட்டுவேலைக்கான ஊதியத்திற்கான கோரிக்கையின் நோக்கம், இந்த ஊதியத்தை ஏற்கனவே மூலதனமானது பணமாக உள்வாங்கியுள்ளது என்பதை அம்பலப்படுத்துவதாகும். அதாவது மூலதனமானது பெண்களது வீட்டுவேலைகளில் உள்ளடங்கும் சமையல், புன்னகை, புணர்ச்சி போன்றவற்றிற்கான பணத்தை சம்பாதித்துள்ளது, இன்றும் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறது. பெண்களால் இவ் வீட்டுவேலைகள் தொடர்ந்தும் செய்துகொண்டு இருப்பது, இவை மற்றவர்களை விட பெண்களுக்கு இலகுவாக கைவரப்பெறுகிறது என்பதனால் அல்ல: மாறாக பெண்களுக்கு இதனைத் தவிர வேறு தேர்வு கிடையாது என்பதனாலாகும். மிகையாக சிரித்து, மிகையாக அன்பு செலுத்தி, மிகையாக பாலியல்மயப்படுத்தி எமது முகம், உணர்ச்சிகள், பாலியல் போன்ற அனைத்துமே சிதைந்து போயுள்ளது.
வீட்டுவேலைக்கான ஊதியம் என்பது ஒரு ஆரம்பம் மட்டுமேயாகும். ஆனால் அதன் செய்தி தெளிவாக உள்ளது. இனிமேல் அவர்கள் பெண்களது உழைப்பிற்கு ஊதியம் செலுத்தியே தீரவேண்டும். ஏனெனில் பெண்கள் இனி எதற்கும் உத்தரவாதம் அளிக்க மாட்டார்கள். வேலை என்றால் அதனை உழைப்பாகவே பார்க்க வேண்டும். இதன் மூலமாக நாம் உண்மையான அன்பு என்றால் என்ன? பாலியல் என்பது எது? என்பவற்றை புதிதாகக் கண்டடைய வேண்டியுள்ளது. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதால் நாங்கள் ( சமைத்தல், தோய்த்தல், பிள்ளைவளர்ப்பு, பாலியல் ) ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஊதியம் கேட்கலாம். பெண்களாகிய நாங்கள் வேலைக்காரியாகவும், விபச்சாரியாகவும், குழந்தையைப் பார்க்கும் செவிலியர்களாகவும், மனநல ஆலோசகராகவும் இருக்கிறோம். இந்த சுரண்டலை மறைத்து அதனை எங்கள் வீரமாக ‘அன்னையர் தினம்’ எனக் கொண்டாடப்படுவதைக் கண்டிக்கிறோம். இது எங்களது சுரண்டலை கொண்டாடுவதாகவே அர்த்தப்படும். இப்போதிலிருந்து இந்த ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் நாம் ஊதியத்தை எதிர்பார்க்கிறோம்; இதனால் நாம் சிலவற்றை நிராகரிக்க முடியும்; இறுதியில் இது இந்த செயற்பாடுகள் அனைத்தையுமே நிராகரிப்பது சாத்தியப்படும். இந்த அர்த்தத்தில் எமது பெண்மைப் பண்பிற்கு ஒரு பண மதிப்பு இருக்கிறது எனக்காட்டுவதே தாக்கமுள்ள செயற்பாடாக அமையும். இதுவரை காலமும் இந்த மதிப்பானது எம்மை தோற்கடித்து, மூலதனத்தைப் பெருக்குவதற்கே பயன்பட்டு வந்துள்ளது. இப்போதிருந்து நாம் எந்தளவிற்கு எமது ஆற்றல்களை ஒழுங்கமைத்துக் கொள்கிறோமோ, அந்தளவிற்கு அது மூலதனத்திற்கு எதிரானதாகவும், எமக்கு சாதகமானதாகவும் அமையும்.
The Struggle for Social Services ( சமூக சேவைகளுக்கான போராட்டம் )
சம ஊதியம், குழந்தை பராமரிப்பு, இலவச சலவை வசதிகள் போன்ற பல விடயங்கள் தொடர்பாக நாம் கோரிக்கைகளை முன்வைக்க முடியும் என்றாலுங்கூட, கட்டமைக்கப்பட்டுள்ள பெண்மை என்ற பாத்திரத்தை தகர்க்காமல் நாம் ஒருபோதும் உண்மையான மாற்றத்தை அடைய முடியாது. எமது வேலைகளானவை உண்மையான உழைப்பேயாகும் என்பதை நிலைநாட்டாதவரையில், சமூக சேவைகளுக்கான எமது போராட்டமானது, விரக்தியையே விளைவாகத் தரும். நாங்கள் இந்த ஒழுங்கமைப்பினை ஒட்டு மொத்தமாக எதிர்த்துப் போராடாத வரையில், பகுதி வெற்றிகள்கூட சாத்தியமற்றவை ஆகும். இந்த முடிவில்லாத வேலைகளை பெண்கள் விரும்பவில்லை என்பதைப் போராட்டத்தின் மூலமே நாம் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அவ்வாறு எதிர்த்து போரிடாமல் இருப்பதானது எங்களது உடலையும், பாலியலையும், சமூக உறவுகளையும் முடக்கி விடவே செய்யும். அன்பைப் பரிமாறிக்கொள்வதற்கான தேவையை எம்மீது கடமையாக சுமத்திவிடும் இந்த ஏற்பாட்டிலிருந்து நாம் முதலில் வெளியேறியாக வேண்டும். இல்லாதபோது இந்த வேலைகளின் சுமையானது எங்கள் கணவர் குழந்தைகள் மீது மனக்கசப்பை ஏற்படுத்துவதுடன், இந்த கசப்புணர்வு கொண்டமை தொடர்பாக எமக்குள் குற்றவுணர்வையும் உருவாக்கி விடுகிறது. இந்த நிலையில் நாம் இரண்டாவது வேலையினை பெற்றுக்கொள்வது என்பது பெண்களது நிலைமையை மாற்றிவிடாது . மாறாக அதீதமான சுரண்டலையே ஏற்படுத்துகிறது. அதாவது பெண் பாத்திரத்தை வேறு வடிவத்திற்கு மாற்றி விடுகிறது. வேலை செய்யும் இடத்தில் செய்கிற வேலைகள், வீட்டில் செய்ய வேண்டியது என பெண்களது சுமையானது இரட்டிப்பாகிறது. நாம் வெளியில் செய்யும் வேலைகளை பரிசீலித்தால், அது ஒருவகையில் நாம் வீட்டில் செய்யும் வேலைகளின் தொடர்ச்சி போலவும் அமைந்துவிடுவதைக் காணலாம்.ஆசிரியராகவும், தாதியாகவும், காரியதரசி ஆகவும் வருவதற்கு வீடுகளில் பெற்ற பயிற்சிகள் எம்மை நன்கு தயார்படுத்தியுள்ளன. இதனால் எமது வேலைகள் எப்போ தொடங்குகிறது எப்போ முடிகிறது என்பதையோ, எவை வேலைகள். எவை எமது விருப்பத்தின் தேர்வுகள் என்பதையோ வேறுபடுத்த முடியாமல் இருக்கிறது.
அத்துடன் அலுவலகத்தில் அதிகாரிக்கு தேனீர் ஊற்றிக் கொடுப்பது, குடும்பப் பிரச்சனைகள் தொடர்பான அவரது புலம்பல்களை கேட்பது போன்றவை எமது வேலையின் ஒரு பகுதியா அல்லது தனிப்பட நாம் அவர்களுக்கு செய்யும் உதவியா? என்பதையும் வேறுபடுத்த முடியாமல் இருக்கிறது. வேலைக்குச் செல்கிறபோது எமது தோற்றத்தை பற்றிய கவனமானது வேலைக்கான வேலையின் நிபந்தனையா அல்லது எமது அழகுணர்ச்சியின் வெளிப்பாடா என்பதுகூட வேறுபடுத்தப்பட முடியாதனவாக உள்ளன. (அண்மைக்காலம்வரை அமெரிக்காவில் விமானப் பணிப்பெண்கள் உணவை குறைத்து தமது எடை குறித்த கரிசனையுடன் இருந்தமை, “அழகு கெட்டால்” தாம் வேலைநீக்கம் செய்யப்படலாம் என்ற பயத்தினால் ஆகும்.) உழைப்பாளர் சந்தையில் தேவை ஏற்படும்போது, பெண்கள் தமது “பெண்மையை” இழக்காமலேயே எந்த வேலையையும் செய்யலாம் என்று கூறப்படுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், என்ன வேலையை அவர் செய்தாலுங்கூட அவர் வெறும் பெண்ணாகவே அடையாளம் காணப்படுகிறார் என்பதாகும்.
வீட்டுவேலைகளைச் சமூகமயப்படுத்தல், அல்லது கூட்டாக செய்யலாம் என்ற முன்மொழிவுகள் பொருத்தவரையில் இரண்டு உதாரணங்கள் மூலமாக எமது கண்ணோட்டத்திற்கும், அவர்களது நிலைப்பாட்டிற்கும் இடையிலான வேறுபாடுகளை நாம் கண்டுகொள்ள முடியும். குழந்தை பராமரிப்பிற்கான செலவை அரசு பொறுப்பெடுப்பது என்பது எமது குழந்தை பராமரிப்பு வேலையை ஒரு பொதுவான நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு நாம் அந்த சுமைகளில் இருந்த விடுபடுவதா, அல்லது எங்கள் பிள்ளைகளை கட்டுப்படுத்துவது, ஒழுங்குபடுத்துவது, தேச பக்தியை வளர்ப்பது போன்ற முக்கியமான பணிகளை அரசிடம் ஒப்படைத்துவிடுவதா என்று நாம் சிந்தித்தாக வேண்டியுள்ளது அல்லவா? பொதுவான சிற்றுண்டிச்சாலை என்பது பெண்களை சமையல் பணிகளில் இருந்து விடுவிப்பதா, அல்லது நாம் எதனை, எவ்வாறு உண்பது போன்றவற்றை அரசே தீர்மானிக்கும் நிலைமையை உருவாக்குவதா என்று பரிசீலித்தாக வேண்டும் அல்லவா?
The Struggle for Against Housework ( வீட்டு வேலைக்கு எதிரான போராட்டம். )
வீட்டுவேலைக்கான ஊதியம் எவ்வாறு எங்களது கணவர்களின் மனப்பான்மையை மாற்றும்? என சில பெண்கள் கேட்கலாம் . எங்கள் வீட்டு வேலைகளுக்காக ஊதியம் கொடுக்கப்படுவதால் மேலும் அதிக எதிர்பார்ப்புகளை எம்மீது அவர்கள் கொண்டிருக்க மாட்டார்களா ? இங்கு பிரச்சனை என்னவென்றால், எமது வேலைகள் இலவசமாக கிடைப்பதனாலேயெ ஆண்கள் எம்மிடம் எதிர்பார்க்கிறார்கள் என்பதை பெண்கள் உணர்ந்து கொள்வதில்லை. பெண்களது வேலைகள் கடினமற்றது எனவும், அவர்கள் கணவர் மீது வைத்துள்ள அன்பினால் இந்த சேவைகளை செய்வதால் மகிழ்ச்சி அடைகிறார்கள் எனவும், இவ்வேலைகள் பெண்களுக்கு எளிதானதாக உள்ளதாகவும் ஆண்கள் கருதுகிறார்கள். அத்துடன் பெண்களைத் திருமணம் செய்வதாலும் அல்லது பெண்களுடன் சேர்ந்து வாழ்வதாலும் தமக்கு சேவை செய்யும் வாய்ப்பைப் பெண்களுக்கு வழங்குவதாகவும் (“நீ அதிஸ்டசாலி என்னைப்போல் ஒரு கணவன் உனக்கு கிடைப்பதற்கு“ எனவும்) கருதுகிறார்கள். எங்கள் வேலை மற்றும் அன்பு என்பவை உண்மையிலேயே உழைப்பு எனவும், அவற்றை நாம் தொடர்ந்தும் இலவசமான வழங்கத் தயாராக இல்லை என்பதையும் ஆண்கள் உணரும்போதே, தமது மனோபாவத்தை மாற்றுவார்கள். பெண்கள் ஆயிரக்கணக்கில் வீதிகளில் இறங்கி முடிவேயில்லாத தமது துப்பரவு செய்யும் வேலை குறித்தும், ஆண்களது உணர்ச்சிகளைத் தணிப்பதற்கு சதா தயாராக இருப்பது குறித்தும், தமது வேலை பறிபோகுமோ என்கிற பயத்தில் கேட்கிற நேரம் அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டியிருப்பது தொடர்பிலும் தமது கசப்பினை, அதிருப்தியை வெளிப்படுத்தி, இதன் மூலமாக தமது வாழ்க்கையே அர்த்தமற்று போவதையும் சுட்டிக்காட்டி, பகிரங்கமாக எப்போது கலகம் செய்கிறார்களோ, அப்போதுதான ஆண்கள், பயத்துடன் பெண்களது நிலையை உணர்ந்து கொள்வார்கள்.
மூலதனம் எவ்வாறு நம்மை (ஆண்களையும் – பெண்களையும்) பிரித்து வைத்திருக்கிறது என்பதை நாம் அம்பலப்படுத்த முடிகிறது என்பது ஆண்களுடைய கண்ணோட்டத்தில் நிகழும் சிறப்பான விடயமாகும். மூலதனமானது பெண்களுக்கூடாக ஆண்களையும், ஆண்களுக்கூடாக, பெண்களையும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலமாக ஆண்களையும் பெண்களையும் ஒருவருடன் ஒருவர் முட்டி மோதும்படி செய்துள்ளது. நாங்கள் அவர்களது ஊன்றுகோலாயும், அடிமைகளாயும், அவர்களை பிணைத்துப்போடும் சங்கிலிகளாயும் இருப்பது முடிவுக்கு வருவதனால் ஆண்களது விடுதலைக்கும் எமது போராட்டமானது வழிவகுத்து கொடுக்கிறது. வீட்டு வேலைக்கு ஊதியம் கேட்பதானது, எங்களது வேலையும் அவர்களது வேலையைப் போன்றதே எனவும், எம்மாலும் அவர்கள் செய்யும் வேலைகளை செய்ய முடியும் என்பதையும் நிரூபிப்பதை என்பதை விட, ஆண்களுக்கு மிகவும் அவசியமான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்பதே இங்கு முக்கியமானதாகிறது.
உயர் பதவியை வகிக்கும் பெண்கள் வீட்டு வேலைகளின் சுமைகளில் இருந்து தப்பித்துக் கொள்வது என்பது போராட்டத்தின் விளைவுகளால் கிடையாது. மாறாக அவர்கள் வகிக்கும் பதவியானது அவர்களுக்கு சில அதிகாரங்களை, தனிச்சலுகை (privileged) பெற்ற நிலைமையை கொடுக்கிறது. இந்த தனிச்சலுகை பெற்ற நிலைமை காரணமாக இவர்கள் தமது வீட்டு வேலைச் சுமையை, வேறு பெண்களின் மீது சுமத்திவிடுவதனால் இது சாத்தியப்படுகிறது. அதாவது ஏனைய வறுமைப்பட்ட பெண்களை ஒடுக்குவதன் மூலமாக தமது விடுதலையை பெற முனைவதில் இது போய் முடிகிறது. தொழிற்சாலை அல்லது அலுவலக பணிகளை நாம் பெறுவதில் உள்ள தடைகளை உடைப்பது சாத்தியமானதே. ஆனால் இந்த வேலைகள் எமக்கு பெரிதாக எந்த ஆற்றலையும் தந்துவிடப் போவதில்லை. எமக்கு முன்பாக இப்படியான இரட்டைச் சுமைகளைச் சுமந்த பெண்களது அனுபவம் கூறுவது என்னவென்றால், இந்த இரட்டை வேலை முறையானது எமது ஆற்றல்கள் முழுவதையும் உறிஞ்சி வெறும் சக்கையாகவே எம்மை மாற்றிவிடுவதனால், நாம் இப்போது நடத்தும் போராட்டத்தை நடத்துவதற்குக்கூட ஆற்றல் அற்றவர்களாக எம்மை மாற்றிவிடும் என்பதுதான். நாங்கள் நிரூபிக்க வேண்டியது என்னவென்றால், நாம் எவ்வாறு உழைப்பில் ஈடுபடுகிறோம், மூலதனம் எவ்வாறு எங்களை சுரண்டுகிறது என்பவற்றை அம்பலப்படுத்தி, மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தில் எமது ஆற்றல்களை வெளிப்படுத்துவதன் மூலமாக சமூக மாற்றத்திற்கான உண்மையான போராளிகளாக எம்மை நிலைநாட்டுவதாகும்.
தூரதிஷ்டமாக தனித்து வாழும் பெண்கள், வீட்டுவேலைக்கு ஊதியம் கேட்பதை இட்டு பயங்கொள்கிறார்கள். அவ்வாறு கோருவதானது தம்மையும் இல்லத்தரசி என அடையாளப்படுத்திவிடும் என்று பயப்படுகிறார்கள். இல்லத்தரசி என்ற நிலைமையானது சமுதாயத்தில் மிகவும் தாழ்வான நிலையில் இருப்பதை இவர்கள் அறிந்திருப்பதனால், அவர்கள் தம்மையும் இல்லத்தரசிகளாக இனம் காணப்படுவதையிட்டு அச்சம் கொள்கிறார்கள். இது அவர்களது பலவீனமான நிலைமையாகும். தமக்கான சுயமான அடையாளத்தை இவர்கள் உருவாக்கிக்கொள்ளத் தவறுவதன் காரணமாக இந்த பலவீனமானது உருவாக்கப்பட்டு, தொடர்ந்து பேணப்பட்டு வருகிறது.
இங்கே, நாங்கள் அனைவருமே இல்லத்தரசிகள்; நாங்கள் அனைவருமே விபச்சாரிகள்; நாங்கள் அனைவருமே ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதை அழுத்திச் சொல்லத் தயங்கக்கூடாது. எமது அடிமைத்தனத்தை நாம் இனம்காணாதவரையில் நாம் அந்த அடிமைத்தனத்திற்கு எதிராக போராட முடியாது. இப்படிப்பட்ட பெண்கள், தம்மை இல்லத்தரசிகளை விட உயர்வானவர்களாகத் தம்மை கருதிக்கொள்கிறார்கள். இதன் மூலமாக நாம் எஜமானின் தர்க்கத்தை ஏற்றக்கொள்வதாக அர்த்தப்படும்: எம்மை பிளவுபடுத்தும் இந்த தர்க்கமானது, அடிமைத்தனத்தின் தர்க்கமாகும். நாங்கள் எல்லோரும் இல்லத்தரசிகளேயாவோம் ஏனெனில் எப்போதும் எங்களிடம் இருந்து அதிகமான வேலைகள் எதிர்பார்க்கப்படுகிறது. எங்கள் கோரிக்கையை முன்வைக்க பயப்படுகிறோம்: பணம் குறித்து குறைந்த அழுத்தத்தையே நாம் அவர்கள்மீது பிரயோகிக்கின்றோம்: “எதிர்காலத்தில் எம்மை யார் கவனித்துக்கொள்வார்கள்?” என்பதில் எமது கவனம் திசை திரும்புகிறது.
வீட்டுவேலைகளில் இருந்து நாம் தப்பிக்கொள்ளலாம் என்று எம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். வெளியில் வேலை செய்யும் எத்தனை பெண்களால் இதிலிருந்து உண்மையில் விடுபட முடிந்தது? ஒரு ஆணுடன் வாழ்வதை இலகுவாக புறக்கணித்து விடலாமா? நாங்கள் வேலைகளை இழந்தால் என்ன செய்வது? நாங்கள் முதுமை அடையும்போது, எங்கள் இளமையும், அழகும் தருகின்ற குறைந்தபட்ச ஆற்றலையும் நாம் இழக்க நேர்கையில் எம்மை யார் பாதுகாப்பது? குழந்தைகளைப் பற்றிய நிலைப்பாடு என்ன? குழந்தைப் பேற்றை நாம் இப்போது தவிர்த்துவிட்டால் அதற்காகப் பிற்காலத்தில் வருத்தப்பட நேராதா? ஓரினச்சேர்க்கை உறவை வைத்திருக்க முடியுமா? ஆண்களது உறவுகளில் இருந்து நாங்கள் தனித்தோ விலகியோ இருப்பது சாத்தியமா ?
இங்கே கேள்வி என்னவெனில், ஏன் இவையே எமது ஒரே மாற்று வழிகளாக இருக்கின்றன? எத்தகைய போராட்டம் இவற்றைக் தாண்டி எங்களை நகர்த்தவல்லது?
மூலம்: “Wages Against Housework”
தமிழாக்கம்: Chandra Nalliah