சட்டென அதிர்ந்து ஒளிரும் பல ஒற்றை வரிகளாலான மு. சத்யாவின் கவிதைகள் மொழிகளைக் கொண்டு தன் இருப்பின் பரிச்சயம் விழையும் போது அவை சமவெளிக்கு வர முயற்சிக்கின்றன.
தனிமையின் கதவை படீரென்று அதிரத் திறக்கும் யாரேனும் அல்லது யாரென்று அறியாத ஒருவர் சாளரத்தின் வழி வீசியெறியும் சொல்லென்று வரிமாலையில் பட்டு சொல்லின் கூர்மையில் கண்ணி அறுந்து,சிதறி ஓடும் சொற்கள் ஓடிக்கோண்டேயிருக்கின்றன மூலைகளுக்கும், எங்கேனும் வேகம் குறைந்து நடுங்கிக் கொண்டிருக்கும் என் சொற்களை மீளவும் நடுங்கும் நாய்க்குட்டிகளென ஆதரவாய் அணைத்து வீடு சேர்க்கும் முயற்சியில், என் தனிமைப் பயணம் நிகழ்கிறது என்கிறார் சத்யா .அவரின் கவிதை ஒன்று
நீலமாகும் உடல்
அந்த உலகத்தில் சிறுமிகள்
குவிந்து கிடந்தனர்
கடல் போல் பரந்து விரிந்த அதன்
தொடுவான எல்லையில் நிற்க மட்டும்
எல்லாச் சிறுமிகளுக்கும் பயம்
தொடுதல் என்ற சொல்லே பயம்
ஒவ்வொரு சிறுமிக்குள்ளும்
விரியும் ஒரு பாதாள உலகம்
கோர முகத்துடன் ஒருவன் வருகிறான்
அந்தரங்களை நோக்கியபடி
கல்லாய் சமைந்து விடுகின்றன உறுப்புகள்
பிறழும் மனதில் பயத்தின் குருதி
ஞாபகக்குகை திறந்து கொள்கிறது
பின்னாளின் மெல்லிய சந்தர்ப்பங்களில்
எரிபுகையைக் கக்கியபடி
அவள் முன்னே மட்டும்
படமெடுக்கும் நாகம்
விலகி விலகி ஓடச்சொல்லி
சிறுபிராயக் கசந்த நினைவுகளைக் கிளறி
நீலமாகும் உடல்
மீண்டும் உற்றுநோக்குகிறேன்
அச்சிறுமிகளுக்கு மத்தியில்
நின்றுகொண்டிருப்பது
நானா…
அல்லது என் பேத்தியா?