English Pastoral : An Inheritance
James Rebanks
புத்தக வாசிப்பு அனுபவ பகிர்வு
James Rebanks என்பவர் வட இங்கிலாந்தில் உள்ள Lake District, Cumbria என்ற இடத்தில் வாழும் ஒரு விவசாயி , இவர் The shepherds life ( மேய்பனின் வாழ்க்கை) என்ற நாவலை சில வருடங்களுக்கு முன்பு எழுதியவர். Rebanks வாசிப்பு பழக்கமும் தேடலும் உள்ள ஒரு விவசாயி மற்றும் எழுத்தாளர் ஆக இருக்கிறார் , ஒரு விவசாயியாக தன் வாழ்வோடு கலந்த தொழில் அனுபவங்களை மட்டுமன்றி தான் விவசாயம் பற்றி அறியத் தேடும் போது மேலும் விவசாயம் பற்றி கற்றறிந்து கொண்ட பல விடயங்களையும் சேர்த்து இந்த புத்தகத்தை தகவல் செறிந்த ஒரு நாவல் வடிவில் எழுதியிருக்கிறார்.
இந்த நாவல் விவசாயம் என்ற தொழிலின் பண்டைய காலகட்டம், உலகப்போருக்குப்பின்னரான காலம் மற்றும் விவசாயத்தின் எதிர்காலம் என்பதை எழுத்தாளரின் அனுபவங்களுனூடாக நேரடியாக வாசகர்களோடு பேசுகிறது. அப்படிப்பேச உகந்த வகையில் இந்த புத்தகத்தை பின்வருமாறு மூன்று பாகங்களாக பிரித்துள்ளார்
Nostalgia – இனிமையான நினைவுகள்
Progress- முன்னேற்றம்
Utopia – சொர்க்கம் /புதியதோர் உலகம்
இனிய நினைவுகள் ( nostalgia) என்ற முதல்ப்பகுதியில் சிறுவயதில் தன் பாட்டனாருடன் தங்கள் விவசாய நிலங்களில் சேர்ந்து வேலை பார்த்த அனுபவத்தை பல்வேறு நினைவுகளினூடாக விவரிக்கிறார். இந்தப்புத்தகத்தை முதல் பகுதியை வாசிப்பவர்களுக்கு குழப்பமாக இருப்பது “fells“ என்ற சொல். Fields என்று அழைப்பதற்கு பதிலாக விவசாய நிலத்தை fells என்று Lake District ல் வாழும் மக்கள் அழைப்பது வழமையாக இருக்கின்றது.
மலைசார்ந்த பிரதேசத்தில் இருக்கும் புதர்கள் மண்டிய , கற்கள் அதிகள் உள்ள , உழுவதற்கும் பதப்படுத்துவற்கும் கடும் சவாலான இருக்கும் தங்கள் விவசாய நிலத்தை உழவு இயந்திரம் கொண்டு உழுது நேர்த்தியான பாத்திகளை அமைத்து அதில் பார்லி விதைகளை விதைக்கும் போது அங்கு சுருள் மூக்குள்ள curlew என்றழைக்கப்படும் பறவை அடைகாத்த கூழாங்கற்கள் வடிவில் உள்ள முட்டைகள் உழுத நிலமெங்கும் சிதறிக்கிடப்பதைப்பார்த்து அவற்றை பத்திரமாக பொறுக்கி எடுத்து தன் பாட்டானார் வயலின் ஒரு மூலையில் வைக்கிறார் , சற்று நேரத்திற்கு பின்னர் அந்தக்குருவி எதுவுமே நேராரது போல அதன் மேல் வந்து அடைகாக்க தொடங்குகிறது.
நிலத்தில் வீட்டுக்குத்தேவையான பல்வேறு வகை கிழங்குகள்்தானியங்கள் மற்றும் மரக்கறிகளைப்பயிரிடுவதோடு தான் வளர்க்கும் ஆடுகளுக்கான செடி கொடிகளையும் வளர்க்கிறார், ஆடு மாடுகள் மேச்சல் நிலங்களில் சுதந்திரமாக மேய்கின்றன. கடும் குளிர் காலங்களில் மட்டும் வீட்டோடு இருக்கும் மாட்டுத்தொழுவத்தில் இருந்து காலநிலைக்கு ஏற்றாற்போல் வெறும் வைக்கோலை தீனியாக்கி கொள்கின்றன. கற்களும் அழிக்க கடினமான திசில் போன்ற பூண்டுகளும் செறிந்த வளரும் நிலத்தை கஷ்ரபட்டு உழுது விதைத்த பின் பார்லி பயிரகள் வளர்ந்து துளிர் விட்டதும் அதை புதர்களுக்குள் வாழும் முயல்கள் வந்து தின்று விட்டு போகின்றன. பாட்டனார் அவற்றை வளர்ப்பு மரநாய்களை வைத்து அச்சுறுத்தி விரட்டுகிறார்.
Mastitis என்றழைக்கப்படும் முலையழற்சி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஆட்டின் கண்களை வயல் நிலத்தை அண்டிய பகுதியில் வாழும் காகங்கள் கொத்தி குதறும் போது அந்த ஆடு வலியின் உச்சத்தை உணர்கிறது. அந்த ஆடு பிழைப்பதற்கு வாய்ப்பேதும் இல்லையெனும் தருணத்தில் பாட்டானார் ஆட்டின் கழுத்தை சத்தக கத்தி கொண்டு மிகவும் வேகமாக கீறி வெட்டி கொன்று அதன் தீர்க்க முடியாத வலியில் இருந்து மீட்பதை ஒரு சிறுவனாக இருந்து பார்த்ததை எழுத்தாளாராக விவரிக்கிறார். விளைநிலத்தை செழிப்போடும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் nitrogen ஐ அப்ப்போது வானைப்பிளந்து கொண்டு வரும் மின்னல் வழங்கியது என்றாலும் இதற்காக வானம் பார்த்த பூமியாக இல்லாது ஆடு மாடு களின் சாணம் மற்றும் இதர விலங்குகளின் எருக்கள் உதவியது மட்டுமல்லாது சுழற்சி முறை விவசாயம் மூலம் மண்ணை வளப்படுத்தும் பயிர்களை நட்டு பயனுற கற்றுக்கொண்ட தலைமுறை தன்னுடைய பாட்டனாரது என்கிறார்.
அவ்வப்போது தன் தாத்தா காலத்தில் அறுவடை செய்யும் காலங்களில் பயிர்கள் காலம் தவறி வந்த மழையால் அழிந்து போவதையும் கூறுகிறார், அந்தக்காலத்தில் இல்லாமையாலும் நஷ்ரத்தாலும் பாதிக்கப்படுவதோடு சரி , யாரும் இவர் தாத்தாவிடம் கடன் வசூலிக்க வந்ததை இவர் கண்டதில்லை.
விவசாயம் செய்யக்கற்றுக்கொண்ட காலத்தில் இருந்து விவசாயிகள் இயற்கையோடு எப்படியெல்லாம் போராட வேண்டி இருந்தது என்பதை தான் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் விவசாயம் பற்றி Virgil என்றழைக்கப்படும் றோமேனியர் ஒருவர் எழுதிய புத்தகமான “ The Georgics” என்ற புத்தகத்தில் “ ஒரு விவசாயி இயற்கை மீது போர் தொடுத்து விவசாயத்தில் வெற்றி பெற இயற்கையில் இருந்தே கருவிகளை கண்டெடுத்து அவற்றால் இயற்கையை வென்று விவசாயத்தில் வெற்றி பெற வேண்டும், இல்லையேல் பட்டிணியால் அழிய நேரிடும் என்கிறார், அந்த வகையிலேயே தன்னுடைய பாட்டனாரின் விவாசயம் சார்ந்த வாழ்க்கை இருந்தது என்றும் கூறுகிறார். அதை வெறும் போராட்டமான வாழ்க்கையாக மட்டும் பார்க்காமல் அதில் ஒரு முழுமை இருந்ததாக அவர் தாத்தா உணர்ந்தார் என்கிறார்.
பாகம் 2
Progress / முன்னேற்றம்
இங்கிலாந்தில் 1950 களின் பின் விவசாயத்தின் அடுத்த காலகட்டம் பொற்காலமாக வெளியில் தோற்றம் அளித்தாலும் அது இருண்ட காலத்திற்கு சொற்ப வருடங்களில் விவசாயிகளை இட்டுச்சென்றது என்கிறார்.
தன் குழந்தைப்பருவத்தில் தன் தாத்தா ஒரு விவசாயியாக இயற்கையோடு மட்டும் தான் போராடினார் என்றும் ஆனால் தனது தந்தையோ ஊரோடு ஒத்தோடுவதற்காக பூச்சி கொல்லி மருந்து வாங்கவும் அதிகம் பால் தரும் மரபணு மாற்றப்பட்ட கால்நடைகளை கொள்வனவு செய்யவும் நாட்டில் உள்ள சக விவசாயிகள் அனைவரும் ஆரத்தழுவிய விவசாய புரட்சியை உண்டு பண்ணக் கூடிய தொழில்நுட்பங்களோடு கூடிய விதைவிதைக்கும் இயந்திரங்களையும் அறுவடை செய்யும் இயந்திரங்களையும் வேண்டாவெறுப்பாக வங்கிகள் வலிந்து கொண்டு வந்து கொடுத்த பணத்தில் வாங்கி தன் தொழிலை புணருத்தாரணம் செய்தார் என்றும் இத்தனை செய்தும் அவருக்கு வெளியில் உள்ள சந்தையோடு தான் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை என்கிறார்.
சந்தை பொருளாதாரமாக இருக்கும் முதலாளித்துவ பொருளாதாரம் எப்படி இந்த காலகட்டத்தில் விவசாயிகளின் வாழ்வை பந்தாட தொடங்கியது என்பது தான் progress என்று தலைப்பிட்ட இரண்டாம் பாகத்தின் எழுத்து சொல்கிறது.
ஐரோப்பாவில்
போற்கால சூழலில் வெறுமனே சாவை அறுவடை செய்வதற்காக தோற்றுவிக்கப்பட்ட
அணுகுண்டு தயாரிக்கும் இரசாயனத்தொழிற்சாலைகள் போர் முடிந்த கையோடு
உலகெங்கும் உள்ள மக்களின் பசி பட்டிணியைப்போக்கும் விவசாயத்தின் விளைச்சலை
அதிகரிக்க செயற்கை உரங்களையும் பூச்சிகொல்லிகளையும் தயாரிக்க உறுதுணையாக
விளங்கியது.
இராசயன உரங்களை நிலத்தில்Top dressing என்று மேலோட்டமாக
அவ்வப்போது பயிர்கள் வளரும் பொழுதுகளில் சத்தை வழங்கி விளைச்சலை
அதிகரித்தன. விளைச்சல் பெருகியது. உறபத்தியின் விலை சரிந்தது.
முன்னர் போல் அல்லாமல் மக்கள் தங்கள் உழைப்பின் ஊதியத்தில் ஒரு சிறு துளியை உணவை வாங்க செலவழித்தார்கள். விவசாயிகள் சந்தையில் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்று லாபம் ஈட்ட முடியாதபடி சந்தை அவர்கள் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தது, அவர்கள் பசுக்கள் பண்ணைகளில் முடங்கி கிடந்தன , பாலை அதிகம் சுரந்தன அதனால் பால் விலை தண்ணியின் விலையை விட குறைந்தது , பெற்ற கடனை திருப்பித்தர முடியாமல் தடுமாறினார் கதைசொல்லியின் தாயார் தான் ஒரு ஏழை விவசாயின் மனைவியாக இருப்பது தனக்கு மனவருத்தம் அளிக்கிறது சமூகத்தில் அவமானமாக இருக்கிறது என்று அழுது தீர்த்தார். இரசாயன உரம் பாவித்த நிலம் காலப்போக்கில் ஆரோக்கியம் இழந்து மலட்டுத்தன்மை அடைந்தது. புல்வெளிகளில் மேயாமல் செயற்கை தீவனம் உண்ட கால்நடைகளின் உரம் மண்ணை வளப்படுத்த தவறி மண்ணில் அமிலத்தன்மையு கூட்டியது.
இந்த காலகட்டத்தில் தான் கதை சொல்லியின் கண்ணில் Rachel Carson என்ற America வை சேர்ந்த Marine biologists எழுதிய “ Silent Spring “ படுகிறது.
அந்தப்புத்தகத்தில் இரசாயன உரம் மற்றும் DDT போன்ற பூச்சி கொல்லிகள் எப்படி பயிர்களை சிதைக்கும் பூச்சிகளை மட்டுமன்றி இயற்கையில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்கின்றது என்று கற்றுக்கொள்கிறார்கள்.
வாசித்த கையோடு தன் வயலை சுற்றும் முற்றும் பார்க்கிறார். வசந்த காலம் சுறுசுறுப்பான விலக்குகள் மற்றும் பறவைகள் சத்தம் ஏதுமின்றி வழமைக்கு மாறாக உறங்கித்தான் கிடந்தது.
Rachel Carson DDT 1964 ஐ தடை செய்யும் போராட்டத்தில் வெற்றியும் பெறுகிறார் என்று ஒரு குறிப்பையும் இந்தப்புத்தகத்தில் பதிவிடுகிறார்.
கதைசொல்லி தன் மண்ணில் தனக்கு இனி வாழ்வாதாரமே இல்லையென்று வெறுப்படைந்து நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்ரேலியாவிற்கு சென்று விவசாய நிலங்களில் வேலை பார்க்கிறார், அங்கு இலகுவாக கையகப்படுத்தக்கூடிய நிலங்களும் புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புக்கள் இருப்பினும் , அவர் மனம் அங்கு நிலைகொள்ளவில்லை, தன் நிலத்தின் மேல் இருந்த பிரியம் அவரை மீண்டும் கண்ணுக்கு குளிச்சியான ஆனால் வறுமையும் எதிர்காலம் கேள்விக்குறியாகவிருக்கும் Lake District ற்கு திரும்ப வைக்கிறது. வெறுமனே விலங்குகளை வேட்டையாடிக்கொண்டிருந்த மனிதன் இற்றைக்கு எண்பத்தியிரண்டாயிரம் வருடங்களுக்கு முன் விவசாயம் செய்யக்கற்றுக்கொள்ளாமல் போயிருந்தால் இன்று உலகில் மிகவும் சக்திவாய்ந்த வெற்றிகரமான முன்னணி உயிரினமாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்க வாய்ப்பில்லை என்பது வரலாற்றாசிரியர்களின் மற்றும் மானுடவியலாளர்கள் கருத்தாகும்.
இருப்பினும்
விவசாயிகளும் விவசாயமும் தோற்றம் பெற்ற அன்றைய காலகட்டத்திலும்
பழமைவாதிகள் மத்தியில் விவசாயத்திற்கும் பலத்த எதிர்ப்பு நிலவியது என்பதை
மறக்க முடியாது. விவசாயம் பூமியின் ஆரோக்கியத்தை கெடுக்கவல்லது என்றும் அது
காட்டின் சமநிலையையும் இயற்கையின் சமநிலையையும் கெடுக்கும் என்று அவர்கள்
அஞ்சினார்கள்.
இந்தப்புத்தகத்தில் வரும் தகவல்கள் சிலவற்றை இங்கு பகிர்தல் முறை என்று நினைக்கிறேன்.
“ஒவ்வொரு மாதமும் ஐந்து மில்லியன் மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள் இதுவே உலகத்தின் மிகப்பெரிய இடம்பெயர்வுமாகவும் இருக்கின்றது என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. ஐ நா வின் இன்னொரு கணக்கெடுப்பின்படி உலகில் உள்ள 80 வீதமான மக்களுக்கு வேண்டிய உணவை உலகத்தில் இருக்கும் இரண்டு மில்லியன் சிறு விவசாயிகளே தற்போது உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள், இவரகளிடம் அதி நவீன உழவு இயந்திரங்களோ இல்லை.
Utopia – சொர்க்கம்
“Our land is like a poem”
எங்கள் நிலம் கவிதை போல என்று கூறும் அதேநேரம் “ அழகு பில்களை கட்ட உதவாது என்கிறார் ஆனாலும் Rachel Carson எழுதிய “ மௌனித்த வசந்த காலம் “ என்ற விடயத்தை மாற்றும் முகமாக இரசாயன உரங்களில் இருந்தும் செயற்கை பூச்சி கொல்லிளில் இருந்தும் விலகுகிறார். Monoculture எனப்படும் ஒரு வகைப்பயிர்களை பயிரிடுதல் என்ற முறைகளில் இருந்து விலகி பலதையும் பத்தையும் பயிரிடுகிறார். மரபணு மாற்றப்படாத மாடுகளை வாங்கி புல்வெளிகளில் மேய விடுகிறார், அவற்றின் உரங்களை பாவித்து வயலை மண்ணை மீண்டும் வளப்படுத்துகிறார்.
நதியொன்றை வழிமறித்து சதுப்பு நிலங்களை உருவாக்குகிறார்.
பன்னிரண்டாயிரம் மரங்களை நடுகிறார், அதில் மீண்டும் பறவைகள் மற்றும் விலங்குகள் சத்தமிடுகின்றன. மீண்டும் மௌனித்த வசந்த காலங்கள் கவிதை போன்ற நிலத்தில் இசையெழுப்ப ஆரம்பிக்கின்றது.
இதற்கு அவர் ஒரு விவசாயியாக கொடுத்த விலையாகச்சொல்வது குறைந்த லாபம். லாபத்திற்கு பதிலாக இயற்கை முறை விவசாயத்தில் வெற்றி பெற்று சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மனநிறைவு கொள்ளல். அந்த மனநிறைவு இழக்கும் லாபத்தை ஈடு செய்கிறது என்கிறார். அதற்காக தன்னைப்போல் எல்லா விவசாயிகளையும் மாற வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. அரசுகள் இயற்கை முறை வேளான்மையில் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கிறார்.