எமது உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்..!

This image has an empty alt attribute; its file name is angel2-817x1024.jpg


சமூகச் செயற்பாட்டாளரும் Jaffna Transgender Network இன் நிறுவுனருமான ஏஞ்சல் குயின்ரஸ் உடனான நேர்காணல்

நேர்கண்டவர்

‘மங்கையானவள் திருநங்கையானவள்

நிழலின் இருளில் சிரிப்பவள்

அன்பின் ஊற்றாய்ப் பிறந்தவள்.

வலியின் வலியாய் பிறந்தவள் திறமைகளை தீர்க்கமாய் பெற்றவள்

ஆணாகி பெண்ணாகி யாதுமானவள்’-

– ஆயிஷா பாருக்

ஏஞ்சல் குயின்ரஸ் Jaffna Transgender Network இன் நிறுவுனர் ஆக இருக்கிறார். இவர் LGBTIQ சமூகத்தின் செயற்பாட்டாளராக இலங்கையின் வடபகுதியில் வாழும் Transgender நபர்களின் சமத்துவத்திற்காகவும் அவர்களுக்குச் சுய வேலைவாய்ப்புக்களை அமைத்துக் கொடுப்பதற்காகவும் ஆர்வமுடன் செயற்படுபவர்.

* ஓர் திருநங்கையாக எப்போது நீங்கள் உங்களளவில் மாற்றங்களை உணர்ந்தீர்கள்?

எனது 8ஆவது வயதில் நான் முதன் முதலில் என்னுள் ஏற்பட்ட மாற்றம் குறித்து உணர்ந்தேன்.பெண்களுக்குரிய உணர்வுகளை நான் கொண்டிருந்த போதிலும் பெண்களுக்குரிய இயல்பைக் கொண்டவளாக நான் மாற்றமடைகிறேன் என்ற சரியான புரிதல் எனக்கு அப்போது ஏற்படவில்லை.இருப்பினும் பெண்களைப் போல பேசுவது, நடப்பது பெண்களைப் போல செயல்கள் புரிவது போன்ற உணர்வுகள் மனதளவில் துளிர்விட ஆரம்பித்தன. ஆணாகப் பிறந்திருந்தாலும் அப்போதே முதலில் நான் என்னை ஒரு பெண்ணாக உணர்ந்தேன். அந்தத் தருணம் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணமாக இருந்தது.நான் மிகவும் மகிழ்ச்சியடைந்த தருணம் அது. சாதாரண பெண்களைப் போன்றே நான் என்னை உணர்ந்தேன்.

* உங்களில் உணர்ந்த மாற்றத்தை யாரிடமாவது வெளிப்படுத்தினீர்களா?

ஆரம்பத்தில் இவ்வுணர்வு குறித்து நான் வெளிப்படையாகப் பேசத் தயங்கினேன். 8 வயதென்பது ஒரு சிறிய வயதாக இருந்ததால் என்னைப் பற்றிய உணர்வுகளை நான் பிறரிடம் வெளிப்படுத்தினால் அவர்களால் நான் ஒதுக்கப்பட்டு விடுவேனோ என்ற பயம் எனக்குள் இருந்தது. எனவே, என்னுடைய உணர்வுகளை நான் கட்டுப்படுத்தி வைத்திருந்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய உணர்வுகளை யாரிடமாவது வெளிப்படுத்த வேண்டுமென தோன்றியது. எனவே,என்னைப் போன்ற உணர்வைக் கொண்டவர்களை நான் எனது சமூகத்திலேயே அடையாளம் கண்டேன். அவர்களிடம் தான் நான் என்னுள் உணர்ந்த மாற்றங்கள் குறித்து வெளிப்படுத்தினேன். எனது தனிப்பட்ட விடயங்கள் குறித்து நான் எனது நண்பர்களிடம் தான் அதிகமாகப் பகிர்ந்து கொள்வேன். அவர்களும் தம்மைக் குறித்து என்னோடு கலந்துரையாடுவார்கள்.

* நீங்கள் ஒரு திருநங்கை என்பதை அறிந்த பின் உங்களுக்கு நெருக்கமானவர்களின் புரிதல் எவ்வாறு அமைந்தது?

நான் திருநங்கைக்குரிய இயல்பைக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்த என்னுடைய பெற்றோரால் அதை ஏற்கமுடியவில்லை. அதற்காக நான் அவர்களைக் குற்றம் கூறவில்லை. ஆனால், குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளை அரவணைக்க வேண்டியது பெற்றோரது கடமை. ஆயினும், அந்த அரவணைப்பு ஆரம்பத்தில் எனது குடும்பத்திலிருந்து எனக்குக் கிடைக்கவில்லை.

நீ ஏன் பெண்களைப் போல நடக்கின்றாய்? என என் தாய் என்னிடம் பல முறை கேட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் நான் பெண்ணுக்குரிய இயல்பைக் கொண்டிருப்பதை என் தந்தையிடம் கூட வெளிப்படுத்தாமல் மறைத்திருக்கிறார். ஏனென்றால், எமது குடும்பம் ஒரு பாரம்பரிய குடும்பமாகக் காணப்பட்டதோடு அவர்கள் சமூகக்கட்டுப்பாட்டுக்குப் பயந்தவர்களாகவும் காணப்பட்டனர். நான் திருநங்கைக்குரிய இயல்பைக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்தால் சமூகத்தவர்களால், அயலவர்களால் ஒதுக்கப்பட்டு விடுவோம் என அவர்கள் அச்சம் கொண்டனர். சமூகக் கட்டுப்பாட்டுக்குப் பயந்து நான் குடும்பத்தவர்களால் தனிமைப்படுத்தப்பட்டேன். இருப்பினும் எனது அக்கா,பாட்டி மற்றும் நண்பர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

* மூன்றாம் பாலினத்தவர் என்று திருநர்களைக் குறிப்பிடுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். உங்களால் அப் பதத்தை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதா?

ஆண் பெண் என்ற பாலினத்தை உருவாக்கிய மனிதர்கள், ஏன் ஆண்களை முதலாம் பாலினம் என்றோ பெண்களை இரண்டாம் பாலினம் என்றோ குறிப்பிடாமல் எம்மை மட்டும் மூன்றாம் பாலினம் எனக் கூறுகிறார்கள்? பாலினத்தில் முதலாம் பாலினம், இரண்டாம் பாலினம் என்று இல்லாத போது நாங்கள் ஏன் மூன்றாம் பாலினம் என சித்திரிக்கப்பட வேண்டும்? எனவே மூன்றாம் பாலினம் என குறிப்பிடப்படுவதை நான் விரும்புவதில்லை. சமூகமானது ஆண், பெண் என்ற இருமைக் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கப் பழகியதால் தான் எம்மைத் தம்மிலிருந்து வேறுபடுத்தி மூன்றாம் பாலினம் என குறிப்பிடுகின்றனர். எனவே பாலினவர்க்கத்தின் அடிப்படையில் வகைப்படுத்துவதில் நான் உடன்பாடு கொள்ளவில்லை.

* திருநங்கையாக சமூகம் எவ்வாறான கண்ணோட்டத்தில் உங்களை நோக்குகிறது?

பலவிதமான குணாதிசியங்களைக் கொண்ட மனிதர்களை உள்ளடக்கிய கட்டமைப்புத்தான் சமூகம். அவ்வாறான சமூகத்தில் உள்ளவர்களுடன் எவ்வித தொடர்புமில்லாமல் எம்மால் வாழ முடியாது. இதனடிப்படையில் நான் ஒரு திருநங்கையாக இருப்பதை சமூகத்தில் ஒரு சிலரால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ள போதிலும் பலரால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஏனெனில், சமூகத்தில் திருநர்கள் குறித்த சரியான புரிதல் இருக்கவில்லை என்றே கூற வேண்டும். அத்தோடு நான் வாழ்ந்த சமூகம் நெருக்கமான சமுதாயமாகவும் காணப்பட்டது. இதனால் நான் பால்நிலை ரீதியிலான கேலி கிண்டலுக்கும் உட்படுத்தப்பட்டேன்.

* தற்கால சமுகத்தில் நீங்கள் எவ்வாறான சவால்களை எதிர்கொள்கிறீர்கள்?

தற்காலத்தில் என்பதை விட ஆரம்பத்திலிருந்தே திருநங்கைகள் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள்கின்றனர். வார்த்தைப் பிரயோகங்கள் ஊடாகக் கேலியாக அழைக்கப்படுவது, சமுகத்தில் தமது அடையாளத்தை ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வெளிப்படுத்த முடியாமலும் சுயமாக வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமில்லாமல் தனிப்பட்ட சமுதாயமாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டமை, வீட்டு வன்முறை, பாலியல் ரீதியிலான சுரண்டல்கள், கல்வி, வேலை வாய்ப்புக்கள் இல்லாமல் போதல்,திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதற்கான சரியான தளம் கிடைக்காமை போன்ற பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது.

மேலும் சமூகத்தவர்கள் மத்தியில் திருநர்கள் குறித்த சரியான புரிதல் இல்லாமையாலும் சமூகப் பிரச்சினைகளாலும் தங்களை வெளிப்படுத்த முடியாமல் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே வாழப் பழகுகின்றமையும் திருநர்களுக்குப் பாரிய சவாலாகும்.

* நீங்கள் எப்போதாவது தனிமையை உணர்ந்திருக்கிறீர்களா?

ஆம், உணர்ந்திருக்கிறேன். எனது குடும்பத்தில் உணர்ந்திருக்கிறேன்.அதைவிட அதிகமாக எனது பாடசாலையில் கற்கும் காலத்தில் நண்பர்களால் ஒதுக்கப்பட்டபோது தனிமையை உணர்ந்திருக்கிறேன்.இவ்வாறு தனிமைப்படுத்தப்படும்போது அதுவாகவே பழக்கப்பட்டு தனிமையை இனிமையாக உணரத் தொடங்கினேன்.சொல்லப் போனால் தனிமை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

* திருநங்கைகள் தமது பிரச்சினைகள் தேவைகள் குறித்துப் பேச அமைப்புக்கள் ஏதேனும் உள்ளதா?

ஆம் இருக்கிறது.

Jaffna Transgender Network யாழ்ப்பாணச் சங்கம், பெண்கள் அமைப்புக்கள் போன்ற பல அமைப்புக்கள் உள்ளன. மாதாந்தம் இங்கு கூட்டங்கள் இடம்பெறும். கிட்டத்தட்ட 30 உறுப்பினர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொள்வர். இங்கு திருநர்கள் மட்டுமல்லாமல் LGBT சமூத்தைச் சார்ந்தோரும் கலந்து கொள்வர். இதனூடாக எமக்கான உதவிகள், சுய தொழில் வேலைவாய்ப்புக்கள், உள ரீதியிலான ஆற்றுப்படுத்தல் என்பன மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் எம்மில் பலர் வெவ்வேறு அமைப்புக்களின் ஊடாகத் தலைமைத்துவப் பயிற்சிக்காகவும் அனுப்பப்படுகிறார்கள்.

* இவ்வாறான அமைப்புக்கள் இயங்குவதையும் திருநர்கள் தொடர்பான பிரச்சினையையும் நீங்கள் ஊடகங்களில் எவ்வாறு வெளிக்கொணர்ந்து வருகிறீர்கள்?

ஊடகங்களில் எமது பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து வருகிறோம். ஆனால் சில ஊடகங்கள் எம்மை சித்திரித்த விதம் மோசமானதாக இருந்ததால் ஊடகங்கள் மீது நம்பிக்கை போய்விட்டது. ஊடகங்களைப் பொறுத்தவரையில் திருநர்கள் என்பது ஒரு செய்தி மட்டும் தானே. பெரும்பாலான ஊடகங்களில் எமக்கான தளமோ அங்கீகாரமோ வழங்கப்படுதில்லை.என்னைப் பொறுத்தவரையில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் திருநர்கள் பற்றிய புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தவில்லையென்றே கூற வேண்டும்.

* நீங்கள் அவ்வாறு குறிப்பிடுவதற்கான காரணம்? ஏனென்றால் இன்றைய சூழலில் சில ஊடகங்களால் மக்கள் மத்தியில் திருநர்கள் குறித்த சரியான புரிதல் ஏற்படுத்தப்பட்டு வருகிறதே?

ஆம்..நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் அனைத்து ஊடகங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லையே. ஏன் சாதாரண மனிதர்களாகிய நமக்கே ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதுபோல் தான் ஊடகங்களும். ஓரு ஊடகம் திருநர்கள் குறித்த நேர் எண்ணங்களை ஏற்படுத்தினால் மற்றோர் ஊடகம் எதிர்மறையான எண்ணங்களையே தோற்றுவித்துக்கொண்டிருக்கிறது. இந்த யுகத்தில் வாழும் மக்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு ஊடகமாக முகநூல் காணப்படுகிறது. முகநூலில் என்னால் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்கள் அதிகமான நண்பர்களால் பகிரப்படுகிறது. அதற்கான பின்னூட்டங்களும் கிடைக்கின்றன.

ஏனைய நாடுகளோடு ஒப்பிடும்போது இலங்கையை பொறுத்தவரையில் திருநர்கள் குறித்து அவ்வளவாகப் பேசப்படுவதில்லை என்றே கூற வேண்டும். சமூக ஊடகங்கள் வாயிலாகவும் சில ஆவணப்படங்கள் ஊடாகவும் திருநர்கள் குறித்த புரிதல்கள் ஏற்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. மற்றபடி வானொலிகளில் எல்லாம் எம்மைக் குறித்துப் பேசுவதென்பது குறைவு. அவர்களுக்கு நாம் ஒரு செய்தி மட்டும்தான்.

* திரைப்படங்களில் திருநர்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுவதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

எங்களுடைய நாட்டைப் பொறுத்தவரையில் திரைப்படங்களினூடாக திருநர்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்பது மிகக் குறைவு. இந்தியத் திரைப்படங்களினூடாகவே மக்கள் அதிகமாகக் கவரப்படுகின்றனர். இந்தியத் திரைப்படங்கள் ஏற்படுத்திய பிம்பத்தின் அடிப்படையில் திருநர்களுக்கான அங்கீகாரம் வேறாகவும் அவர்கள் பார்க்கப்படும் கண்ணோட்டம் வேறாகவும் உள்ளது. எனவே, இந்தியத் திரைப்படங்கள் மூலம் கவரப்பட்ட எம் நாட்டவர்களும் இந்திய சமூகத்தின் பார்வையின் அடிப்படை யிலேயே எம் நாட்டிலுள்ள திருநர்களையும் பார்க்கிறார்கள். ஆனால், எமக்கும் அவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அந்தவகையில் இந்தியாவில் உள்ளதுபோல பரவலாக திருநர்கள் இலங்கையில் இல்லை.

ஆனால் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை திரைப்படங்களினூடாக ஏற்படுத்தப்பட்ட கருத்தியலின் அடிப்படையில் திருநர்கள் இழிவாகத்தான் காண்பிக்கப்படுகிறார்கள். குறிப்பாக பருத்தி வீரன், ஜில்லுன்னு ஒரு காதல் போன்ற திரைப்படங்களைப் பார்த்திருந்தால் அங்கு திருநர்கள் என்போரை உணர்வுகளற்ற ஒரு பொருளாகவும், பாலியல் இச்சைகள் கொண்டவர்களாகவுமே காண்பித்திருந்தனர். ஆனால் இன்று சில இயக்குநர்கள் அந்த வெளியிலிருந்து விலகி ஒரு புதிய கோணத்தில் மாற்றுக்கருத்துக்களுடன் சரியான ஒரு பார்வையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர். இம் முயற்சியானது வரவேற்கத்தக்க ஒன்றாக காணப்படுகிறது. அந்தவகையில் அருவி, காஞ்சனா, தர்மதுரை போன்ற திரைப்படங்கள் திருநர்கள் குறித்த மாற்றுப்பார்வையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன.

* ஊடகங்களில் உங்களுக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுகிறதா?

ஆம் வழங்கப்படுகிறது.எனினும், ஆண் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படுவது போல் இல்லை.

* ஊடகங்களில் திருநர்கள் எவ்வாறு வெளிபடுத்தப்பட வேண்டுமென விரும்புகிறீர்கள்?

ஊடகங்களில் திருநர்கள் குறித்து வெளிபடுத்தும்போது இன்னொரு பிரதிநிதி ஊடாக அப்பாத்திரத்தை வெளிபடுத்தாமல் திருநர்களுக்கே அந்த வாய்ப்பு வழங்கப்படும் போதுதான் உணர்வு ரீதியான புரிதல் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும். அவ்வாறு இல்லாமல் மாற்றுப் பிரதிநிதி ஒருவர் திருநர்கள் ஒடுக்கப்படுகிறார்கள், இழிவாக்கப்படுகிறார்கள் என்று என்னதான் கூறினாலும் அது முழுமைபெறாத ஒன்றாக காணப்படுவதோடு உண்மைதன்மையற்றதாகவும் காணப்படும். எடுத்துக்காட்டாக அண்மையில் விஜய்சேதுபதி நடித்த சுப்பர் டிலக்ஸ் திரைப்படத்தில் அவர் ஒரு திருநங்கையாக நடித்திருந்தார். அங்கு அவர் நடிப்புதிறனை வெளிப்படுத்துவதற்காக திருநர் குறித்து ஆராய்ந்து அவருடைய நடிப்புத் திறனைவெளிப்படுத்தியிருந்தார். எனினும், திருநர்கள் குறித்து வெவ்வேறான உணர்வு ரீதியிலான இயல்பையும் பிரச்சினையையும் அவரால் வெளிப்படுத்தியிருக்க முடியாது என்பதே உண்மை. ஊடகங்களுக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், ஊடகங்கள் தான் மக்கள் மத்தியில் இன்றளவில் அதிகமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன.ஏனென்றால், ஒரு விடயம் தொடர்பாக நல்லெண்ணங்களையும் தீயஎண்ணங்களையும் ஏற்படுத்த ஊடகங்களால்தான் முடியும்.

ஒரு விடயம் தொடர்பான புரிதலை மக்கள் மத்தியில் விரைவாக எடுத்துச் செல்லக்கூடிய ஒரு வழியாக ஊடகம் காணப்படுகிறது.எனவே, ஊடகங்கள் திருநர்கள் குறித்த நேர் எண்ணங்களை ஏற்படுத்தினால் அது மக்கள் மத்தியில் வெகுவாக எடுத்துச் செல்லப்படும். ஆரம்பத்தில் திருநர்கள் குறித்து ஒரு இழிவான பார்வைதான் ஏற்படுத்தப்பட்டது. அதனை மாற்றுவதென்பது அவ்வளவு சுலபமானதல்ல. ஏனென்றால் வளர்ப்புப் பெற்றோரிடம் வளரும் குழந்தையிடம் திடீரென ஒரு நாள் வந்து இவர்கள்தான் உன்னுடைய உண்மையான பெற்றோர்கள் என காண்பித்தால் அக்குழந்தையால் அவர்களை உடனடியாக ஏற்க முடியாது. அவர்களுக்கு அதைப் புரிந்து கொள்ள சிலகாலம் தேவைப்படும். அது போல தான் ஊடகங்களும் இவ்வளவு காலமும் திருநர்கள் என்றாலே ஒதுக்கப்பட்டவர்கள், இழிவானவர்கள் என்ற பார்வையை, பிம்பத்தை ஏற்படுத்திவிட்டன.

அதனை அழிப்பதென்பது அவ்வளவு எளிதானதல்ல. என்றாலும் சமீபகாலமாக ஊடகங்களால் திருநர்கள் குறித்த நல்லெண்ணங்கள் விதைக்கப்பட்டு வருகின்றன. இம்முயற்சியானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அது திருநர்களும் சாதாரணமான மனிதர்கள்தான் என்ற ஒரு மனநிலையை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும். பொய்யான செய்திகளை ஊடகங்கள் வெளிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அண்மையில் கூட ஊடகங்களால் திருநர்கள் ஆட்சேர்ப்புச் செய்கிறார்கள் என்ற ஒரு செய்தி வெளிப்படுத்தப்பட்டது. அதில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை. நான் ஊடகங்களிடம் கேட்பதும் அதைத்தான். ஊடகங்களில் திருநர்கள் குறித்து வெளிப்படுத்தும்போது எப்போதும் உண்மைத்தன்மை வாய்ந்த செய்திகளை வெளிப்படுத்துங்கள். யாரைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தப்படுத்த விரும்புகிறீர்களோ அவர்களின் அனுமதியைப் பெற்ற பின்னரே அவர்களைக் குறித்து வெளிப்படுத்துங்கள். உங்களுடைய மனதில் தோன்றுவதை அவர்கள் பார்வையாக ஒரு போதும் வெளிப்படுத்தாதீர்கள். திருநர்கள் மூலமாக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய செய்திகளைத் துல்லியமாக எடுத்துக் கூறுங்கள். எம்மை வெறும் செய்திப்பொருளாக மட்டும் பார்த்து இழிவுபடுத்தாதீர்கள்.

இதுவரையில் ஊடகங்களால் திருநர்கள் குறித்து ஏற்படுத்தப்பட்ட தவறான பிம்பத்தை நீங்களும் தொடராமல் மனித சமுதாயத்தில் திருநர்களுக்கான புதிய அத்தியாயத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள். எமது உணர்விற்கும் மதிப்பளியுங்கள். இதுவரையில் ஊடகங்களால் திருநர்கள் குறித்து ஏற்படுத்தப்பட்ட தவறான பிம்பத்தை நீங்களும் தொடராமல் மனித சமுதாயத்தில் திருநர்களுக்கான புதிய அத்தியாயத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள். எமது உணர்விற்கும் மதிப்பளியுங்கள். உங்களுக்கான பாதையை நீங்கள் தெரிவு செய்வது போல எமக்கான பாதையையும் உருவாக்கித் தாருங்கள். எமது பாதையில் தடைகளை ஏற்படுத்தாதீர்கள்.

Thanks :-http://epaper.thinakaran.lk/Home/ShareArticle?OrgId=b9845b0a&imageview=0&fbclid=IwAR3jOWF2Gikjt2o1saypMcwX6F47vefSuu_nYqsY9nlfIsc-iiUy3PYnHow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *