நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் என்ற ஐம்பூதங்களால் ஆனது நமது உடல். நாம் வாழும் இந்தப்பிரபஞ்சமும் ஐம்பூதங்களினால் ஆனது. பூமியில் உள்ள கனிமங்களில் பல நம் உடலுக்கு எவ்வளவு அத்தியாவசியம் ஆகிறதோ அதேயளவிற்கு நம் உடலை பலமாக வைத்திருக்க போதுமான அளவு சூரிய வெளிச்சமும் நம் உடலுக்கு அவசியமாகிறது. ஒரு மரம் அதன் பூர்வீக நிலத்தில் செழித்தது வளர்வது இயற்கையான ஒன்று, இருப்பினும் அது அந்த நிலத்தோடும் காலநிலையோடும் பல்வேறு போராட்டங்களின் மூலமே பரிணாம வளர்ச்சி கண்டிருக்கும் என்பதும் நாம் மனதில் கொள்ள வேண்டிய இன்னொரு விடயமாகும்
அதே மரத்தை இன்னொரு முறை வேரோடு பெயர்த்து அதற்கு ஒவ்வாத மற்றும் அது இதுவரை பழக்கப்படாத தட்ப வெப்ப சூழலில் வளர்ப்பது என்பது பெரிதும் சவாலான ஒரு விடயம். மனிதர்களுக்கும் இது பொருந்தும். இன்று இயற்கை அனர்த்தங்கள், உள்நாட்டுப்போர் போன்ற விடயங்களால் சூழ்நிலையின் கைதிகளாகப்பட்டிருக்கும் பல்லாயிரம் மக்கள் வெப்ப வலைய நாடுகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமான கடும் பனி குளிர் காலநிலை கொண்ட மேற்குலகம் புலம் பெயர்ந்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக விளிம்புநிலை பொருளாதார சூழலில் இருந்து வந்த பெண்கள் புலம் பெயர் நாடுகளில் படும் இன்னல்களைப்பார்த்தால் இவர்கள் கதைகள் கொதிக்கிற எண்ணையில் இருந்து நெருப்பில் விழுந்த கதையாக இருக்கிறது. சொந்த ஊர்களில் கல்வி உரிமை மறுக்கப்பட்டு கூட்டு குடும்பங்களிலும் ஆணாதிக்க சமூக அமைப்புகளில் பிரத்தியேகமாக ஆண்களுக்காக கட்டமைக்கப்பட்ட அரசியல் பொருளாதார சமூக சூழலில் ஒரு ஓரமாக வாழ்ந்த பெண்கள்சொந்த ஊரை விட்டு வெளிநாடு வரும்போத சுதந்திர சொர்க்கம் தமக்கு சீமையில் காத்திருக்கிறது என்ற நினைப்பில் வருகிறார்கள், பல சமயங்களில் இங்கு யதார்த்தம் இதற்கு புறம்பாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. செயற்கையாக சூடாக்கப்பட்ட வீடுகளில் சதா வீட்டையும் வீட்டு வேலைகளை மற்றும இந்திய தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் சார்ந்த வாழ்வு தான் உண்மையில் புதிதாக திருமணமாகி அல்லது குழந்தைகளோடு இங்கு வரும் பெண்களுக்கு காத்திருக்கிறது.
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஆபிரிக்க ஆசிய நாடுகளில் இருந்து இங்கு வரும் பெண்கள் ஐம்பது வயதிற்கு உள்ளாகவே உடலில் வலிமை இழந்து அழகு இழந்து வயது முதிர்ந்தவர்கள் போல் தெரிகிறார்கள், என்னவென்று விசாரித்தால் கண்ணீர் தான் அநேகமாக பதிலாக கிடைக்கும், மொழி வேறு இவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இன்னும் எதாவது துருவி விசாரித்தால், ஒரு பத்து பதினைந்து மருந்து பெட்டிகளை காட்டுவார்கள், இன்னும் கொஞ்சம் விசாரித்தால் பிழிய பிழிய அழுவார்கள், உடல் உபாதைகளோடு மன உளைச்சல்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருக் கிறார்கள் இவர்கள்.
ஆக்க பூர்வமாக சிந்திக்கவோ, படிக்கவோ வாழவோ என்றும் அவர்கள் சமூகம் இந்த பெண்களை அனுமதித்ததே இல்லை, இவர்களை திருமணம் செய்த அநேக கணவர்களுக்கு இங்கு இரட்டிப்பு பொருளாத சுமை இருக்கிறது. ஒன்று இங்கு தங்கள் குடும்பத்தை பார்த்து கொள்ள வேண்டும், அடுத்தது அவர்கள் நாடுகளில் உள்ள சொந்த பந்தங்களுக்காகவும் இந்த ஆண்கள் உழைக்க வேண்டும். மேலும் ஆணாதிக்க சமூகங்களின் உற்பத்திகள். பெண்கள் கடும் குளிர் நாட்டில் செக்கு மாடு போல வீட்டையே சுற்றி வந்தால் அவர்களின் உடல் மற்றும் மனநிலை பாதிக்கப்படும் என்ற அறிவு அற்றவர்கள், ஏனெனில் இந்த ஆண்கள் என்றும் அப்படி ஒரு வாழ்வில் சிறை பிடிக்கப்பட்டவர்கள் இல்லை. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு தனக்கு வந்தால் தானே தெரியும்.
“ நான் உழைக்கிறேன் பொம்பிளை போல இருந்து வீட்டை பார்த்து கொள்வதில் என்ன சிரமம்” என்ற அளவில் தான் அவர்கள் அறிவு இருக்கிறது. அது அவ்வாறு இருக்க இங்குள்ள மருத்துவர்கள் இந்த பெண்களின் சமூக பொருளாதார மாற்றத்தால் ஏற்பட்ட வியாதிகளை வெறும் வலி நிவாரணிகள் மூலமும் இதர மருந்துகள் மூலமும் சரி செய்ய பார்க்கிறார்கள். இயல்பில் நல்ல சரீர மற்றும் மனோபலம் பொருந்திய ஆப்பிரிக்க பெண்களும் ஆசிய பெண்களும் இங்கு வந்து சில காலங்களில் இடுப்பு வலி, மூட்டு வலி, தலை வலி இரத்த சோகை மனஉளைச்சல், வாழ்வில் பற்று அற்ற நிலை என்று ஏன் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
அவர்கள் ஊர்களில் அவர்கள் காலாற வெளியில் வெயிலில் ஒரு எட்டு நடந்து சென்று பக்கத்துக்கு வீடுகளில் நின்று நாலூர் கதைகள் பேசி விட்டு வந்தாலே அவர்கள் உடலில் வெயிலில் இருந்து வரும் வைட்டமின் டி மற்றும் வெறும் காலில் நடக்கும் போது மண்ணில் இருந்து கிடைக்கிற செலினியம் போன்ற தாதுக்கள் உடலில் உறிஞ்ச ப்படுகிறது, மற்றும் சக மனிதர்களோடு பேசுவதும் சிரிப்பதும் மனதை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது, இது ஏதும் இல்லாமல் இந்த நாட்டில் நாலு சுவர்களுக்குள் சிறை பிடிக்கப்படுகிறார்கள். மன உளைச்சல், உபாதை என்று வைத்தியர்களிடம் போனால் மேலும் மேலும் உடலையும் மனதையும் பாதிக்கும் உடனடியாகவலி போக்கும் வலி நிவாரணிகளை வைத்தியர்கள் வாரி வழங்குகிறார்கள்.
மனிதன் ஒரு சமூக விலங்கு என்று நாம் சொல்கிறபோதே ஆண் ஒரு சமூக விலங்கு என்று தான் அர்த்ப்படுத்திக்கொள்ளத்தோன்றுகிறது. ஆகவே பெண்கள் வீட்டு வேலைக்காக நியமிக்கப்பட்டவர்களாகவும் ஆண்களை வெளி வேலைக்கு உகந்தவர்களாகவும் பொதுவாக சமூகம் கருதி வருகிறது நம் கண்கூடாகத்தெரியும் ஒன்று. பெருநகரங்களின் உருவாக்கத்திற்கு பின்னர் பொருளாதார மாற்றம் காரணமாக பெருநகரங்களில் வாழ நிர்பந்திக்கப்பட்ட பெண்களின் வாழ்வு நான்கு சுவர்களுக்குள் அடைபடும்போது அவர்களுக்கு வரும் நோய்களின் மூலகாரணம் போதிய சூரிய ஒளி அற்ற வாழ்வு சூழல், சமூக ஊடாட்டம் அற்ற வாழ்வு , தனிமை மற்றும் அதன் நிமித்தம் ஏற்படும் மனவுளைச்சல், கவனிக்கப்படாத மனவுளைச்சல் நாளடைவில் fibromyalgia்போன்ற உடல் வலியாக பரிமாணம் கொள்ளுதல்ஆகும்.
இங்கு பல மருத்துவர்கள் நோய்க்கானா மூல காரணிகளை கண்டு பிடிப்பதை விட்டு விட்டு நோயின் அறி குறிகளை தற்காலிகமாக குறைக்கும் மருந்துகளை கொடுக்கிறார்கள். இது இவர்களை மேலும் பலவீனமாக்குகிறது.
Evolving Ourselves, how unnatural selection is Changing life on earth – Juan Enriquez and Steve Gullans
என்கிற புத்தகத்தில் அதை எழுதிய மருத்துவ விஞ்ஞானிகள் பின்வருமாறு எழுதுகிறார்கள்.
நாற்பத்தைந்து வயதில் இருந்து அறுபத்திநாலு வயதுவரை இருக்கக்கூடிய ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வெள்ளை அமெரிக்கர்களோடு ஒப்பிடுகையில் இரண்டரை மடங்கு அதிகமாக இருதய நோய் வருகிறது என்று ஆய்வுகள் மூலம் கவனித்திருக்கிறார்கள். இவர்கள் ஆய்வுகளில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாழ்வாதாரம், உணவுப்பழக்கவழக்கங்கள் என்பனவும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதோடு , ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உடலில் PCPT என்கிற புரதம் அதிகம் காணப்பட்டதால் பொதுவாக எல்லா இன மக்களுக்குமாகப்பாவிக்கும் ரத்தத்தை உறைய செய்யும் statins என்ற மருந்தால் பெரிய அளவில் இவர்கள் பலனடையவில்லை என்றும் கண்டறிந்தனர்.
பல்வேறு நாடுகளில் இருந்து வாழ்ந்து பழக்கப்பட்ட மக்களின் உடலில் அவர்கள் சூழலுக்கேற்றாற்போல மரபணு மாற்றம் நிகழ்தப்படுகிறது உதாரணத்திற்கு sleeping sickness என்ற நுளம்புக்கடி நோயிலிருந்து பாதுகாக்க அவர்கள் உடல் APOLI gene variant நிகழ்ந்துள்ளதை கண்டறிந்தனர். மேற்படி தகவல்களாக அவர்கள் கூறுவதாவது NitroMed என்ற நிறுவனத்தினால் கறுப்பினத்தவர்களின் மேல் செய்யப்பட்ட மருத்துவப்பரிசோதனை ஆய்வின் அடிப்படையில் அவர்கள் இன்னொரு விடயத்தையும் கண்டறிந்தனர்.
அவர்கள் BIdil என்ற மருந்தை பாவனைக்குட்படுத்திய மக்கள் கூட்டத்தில் அவர்கள் மருந்தினால் மிகவும் பயனடைந்தவர்களாக அமெரிக்க ஆப்பிரிக்கர்கள் இருந்ததை அவதானித்தனர்.
ஆனால் ஒவ்வொரு இனத்திற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்று வேறு வேறு மருந்துகளை கண்டுபிடித்து தருவது அனுகூலமான வியடமாக இருந்தாலும் அது மனித இனத்தை பாகுபடுத்க்கூடியது மற்றும் Eugenics என்ற இன ரீதியான பாகுபாட்டை விஞ்ஞான மருத்துவத்தில் திரும்பவும் சமூகத்தில் கொண்டுவர முனைவதாக அமையும் என்ற அர்தத்தத்தில் இப்படியான முயற்சிகளுக்கும் ஆய்வுகளுக்கும் ஏதுவாக இல்லாமல் விஞ்ஞான மருத்துவத்தை அடக்கி வைத்துள்ளதாக கருத்து தெரிவிக்கிறாரகள். இதிலிருந்து என்ன தெரிகிறது எனில் மருத்துவ பீடங்கள் மற்றும் அதை நிர்வாகம் செய்யும் அரசுகள் பிரத்தியேகமாக இன மற்றும் பாலின மரபணு ரீதியான ஆய்வுகள் மூலம் நோய்க்கூறுகளையும் அதன் மூலங்களையும் கண்டறிவதை செய்வதில்லை, அதை செய்ய முனையும் ஆய்வாளர்களை அனுமதிப்பதும் இல்லை.
மாறாக மருத்துவத்தில் சமத்துவம் என்ற தாரக மந்திர அடிப்படையில் மனிதர்களில் தேவைக்கேற்ப மருத்துவ சேவையை வழங்காமல் இருக்கிறது இது சமூகத்தில் பின் தங்கிய மக்களின் தேவைகளையும் சமூகத்தில் அடிமைப்படுத்ப்பட்ட பெண்களுக்கு சிறப்பான சேவையை வழங்க முனைப்புக்கள் எதையும் முன்னெடுக்க தடையாகவிருக்கிறது. மேலும் சமீபத்தில் “Mrs Bibi syndrome , the medical stereotype undermining elderly Asian women” ( ) என்ற கட்டுரையை வாசித்தேன். இந்தக்கட்டுரையை தெற்காசிய பிண்ணணியைக்கொண்ட பிரித்தானியாவின் இரண்டாம் தலைமுறை சேர்ந்த Dr Harun Khan என்பவர் ஒரு மருத்துவ பத்திரிகையில் எழுதியிருந்தார்.
அதில் அவர் குறிப்பிடுவதாவது NHS என்கிற பிரித்தானிய சுகாதார சேவையில் வேலை பார்க்க கூடிய அதிகளவு மருத்துவர்கள் ஆசிய இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் தங்களை ஒரு பிரத்தியேகமான படித்த சமூக வர்க்கமாக (“ super – hero breed “ ) நினைக்கிறார்கள். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் அதிகமான ஆசிய இனத்தவர்கள் குறிப்பாக வயதான பெண்கள் மருத்துவ சேவையை நாடி வரும் பொழுது ஆசிய மருத்துவர்களிடம் ஓர் அலட்சிய போக்கை அவதானிக்கலாம் என்கிறார். அவர்கள் தங்களுக்குள் “Mrs Bibi Syndrome “ என்ற ஒன்றை சொல்லி ஆசியப்பெண்களின் நோய்பற்றிய புகார்களை புறம் தள்ளி தங்களுக்குள் எள்ளி நகையாடும் ஒரு கலாச்சாரம் உள்ளதென்கிறார். ஏனெனில் ஆசியப்பெண்கள் பொதுவாக தங்களுக்கு இருக்கும் நோய்களை மிகைப்படுத்தி செல்பவர்களாக இருக்கின்றார்கள் என்பது பிரித்தானிய பொது சுகாதார சேவையில் வேலை பார்க்கும் மருத்துவர்களின் கருத்து என்றும் மற்றும் Mrs Bibi என்பது பொதுவாக பெரும்பான்மை ஆசியப்பெண்களின் குடும்ப பெயராக இருப்பதனால் இப்படி ஒரு நகைச்சுவை குறியீடு மருவி வந்திருக்கிறது என்கிறார்.
ஆகவே வைத்தியத்தில் இனத்திற்கு ஓர் மருந்து என்று கண்டு பிடித்து அதைப்பாவனைக்கு உட்படுத்தினால் அது மனிதர்களை சமனாக நடத்துவதற்கு
முரணாக அமையும் என்பதனால் மருத்துவமும் இனமும் என்ற விடயத்தில் ஆய்வுகளை மேற்குலகம் கவனத்தில் எடுப்பதில்லை. ஆகவே புலம் பெயர்ந்த பெண்கள் இங்கு வரும் போது அவர்கள் வித்தியாசமான காலநிலைகளைக்கொண்ட இடங்களில் இருந்து வருவதனால் அவர்களுக்கு ரத்த சோகை மற்றும் விட்டமின் டி குறைபாட்டால் வரகூடிய நோய்களை தடுத்தாட்கொள்ளும் விதத்தில் குடும்ப வைத்தியர்கள் செயற்படுகிறார்களா என்பதை கண்டறிய சம்பந்தப்பட்ட அனைவரும் முனைப்போடு செயல்படுவது முக்கியம்