இலங்கை அரசியலில் பெண்களும் அவர்கள் மீதான வெறுப்புப் பேச்சும் – கீர்த்திகா மகாலிங்கம்

This image has an empty alt attribute; its file name is keerthika-maha.png

இலங்கையில் பெண்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கு சட்ட ரீதியாக எந்தவித தடைகளும் இல்லாத போதிலும் அவர்கள் அரசியலுக்கு வரத் தடையாக விளங்குவது பெண்களின் அரசியல் பங்கேற்பு தொடர்பில் சமூகத்தில் நிலவும் தவறான கற்பிதங்களேயாகும். 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டில் இருந்ததை விடவும், உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவம் முன்பை விட அதிகமாக வழங்கப்பட்டாலும், பெண்களுக்கு குறிப்பாக அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கும் அரசியல் பேசும் பெண்களுக்குமான எதிர்ப்புகளும் சவால்களும் ஆண்களோடு ஒப்பீட்டளவில் அதிகமானதாகவே காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக வெறுப்பு பேச்சே அரசியலில் கால் பதிக்கும் பெண்களுக்கு மிகப்பெரிய தடையாகவும் சவாலாகவும் காணப்படுகின்றது.
உலகின் முதலாவது பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசியல் பிரவேசமானது இலங்கை பெண் அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய பாய்ச்சலாகும். ஆனாலும் அவர் பலத்த விமர்சனங்களுக்கு மத்தியில் எதிர்நீச்சலடித்தே தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். “அம்மாவின் கட்சி 1960ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றிருந்தாலும், ஒரு பெண் எப்படி ஒரு அரசியல் கட்சியை வழிநடத்த முடியும்? என வலதுசாரி கட்சிகள் பெண்களை வீழ்த்த சாத்தியமான பல்வேறு விஷயங்களையம் அவருக்கு சொல்லத் தொடங்கின. எனினும் அம்மா அவற்றை மிகவும் துணிச்சலோடு, சாந்தமான முறையில் எதிர்கொண்டார்” என சுனேத்ரா பண்டாரநாயக்க பி.பி.சி செய்திச்சேவைக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.( https://www.youtube.com/watch?v=XB6G2GATZVk )

உலகின் முதலாவது பெண் பிரதமரை கொண்ட நாடு என்று நாம் மார்தட்டிக்கொண்டாலும், அன்றிலிருந்து இன்றுவரை அரசியலில் ஈடுபடும் பெண்களின் உடை, நடத்தை, குடும்பப் பின்னணி, கல்வியறிவு, பலம் பலவீனம், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு குறித்து வெறுக்கத்தக்க வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றோம் என்பது கசப்பான உண்மையே.

வெறுப்புப்பேச்சை எதிர்கொண்ட பெண் அரசியல்வாதிகளின் அனுபவங்கள்

“இம்மாதம் 10 ஆம் திகதி காட்சிப்படுத்தப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கீதா குமாரசிங்கவுக்கும், எனக்கும் (ஹரிணி அமரசூர்யவிற்கும்) இடையிலான விவாதம் குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட கருத்துக்கள், எமது தோற்றம், கல்வித் தகுதிகள் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றைக் கொண்டு விமர்சிக்கப்படுவதைக் காணக் கிடைத்தது. இவை பெண் அரசியல்வாதிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள்” என கலாநிதி ஹரிணி அமரசூரிய அவரது முகநூல்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.(https://www.facebook.com/HariniNPP/posts/344478773561132 )

“நானொரு ஊடக பின்னணியிலிருந்து வந்தமையால் இவ்வாறான சவாலை இலகுவாக வெற்றிக்கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனாலும் நவீன ஊடகங்களினூடாக முன்னெடுக்கப்படும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் வெறுப்புப்பேச்சில் பாதிக்கப்பட்ட ஒருவராக நானும் இருக்கின்றேன். எனக்கு கொரோனா என்றும், என்னோடு பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும் என்றும் முகப்புத்தகத்தினூடாக போலிச் செய்திகளையும், என் மீதான அவதூறுகளையும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார காலங்களில் எதிர்த்தரப்பினர் பரப்பி வந்தனர். இது எனது அரசியல் செயற்பாடுகளை வெகுவாக பாதிப்பதாக இருந்தது” என எதிர்க்கட்சி தலைவரின் இணைப்புச் செயலாளர் உமா சந்திரபிரகாஷ் குறிப்பிட்டார்.

“சக அரசியல்வாதிகள் மறைமுகமாகவே அவர்களது வெறுப்புப்பேச்சை என் மீது வெளிப்படுத்துகின்றனர். எனது மொழி, உடை, நடை, வயதைப் பொறுத்து வெறுப்புப்பேச்சினை சமூகத்திலும், சமூக ஊடகங்களிலும் தூண்டுவதன் மூலமாக தாக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறு சமூக ஊடகங்களில் இந்த வெறுப்புப்பேச்சினை பகிர்பவர்கள் தனிப்பட்ட ரீதியில் எம்மைப்பற்றி அறிந்திராதவர்கள். பெண்கள் அரசியலில் பங்குபற்ற வேண்டுமாயின் அரசியல் பரம்பரையில் வந்தவராக அல்லது வயது முதிர்ந்த ஒரு பெண்ணாக அல்லது வேறு ஆண் அரசியல்வாதிகளின் தலைமைக்கு கீழ் செயல்பட வேண்டும் என்ற தவறான புரிந்துணர்வு பலரிடம் காணப்படுகின்றது. அது பெண் அரசியல்வாதிகள் தொடர்பான வெறுப்புப்பேச்சு பரவுவதற்கான மிக முக்கிய காரணமாகும்” என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் காயத்ரி விக்ரமசிங்க தெரிவித்தார்.

“போனஸ் ஆசன அடிப்படையிலேயே எனக்கு அங்கத்துவம் கிடைத்தது. நான் புத்தளம் நகரசபைக்கு தெரிவான முதலாவது முஸ்லிம் பெண் பிரதிநிதியாவேன். எனவே எனக்கு அங்கத்துவம் வழங்கிய கட்சி குறித்தும், வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பின் பொழுது தனித்துவமான எங்களது முடிவுகளை எடுக்கும்பொழுதும்  இனம், மதம் போன்ற காரணங்களை பெண் என்ற போர்வையில் சுட்டிக்காட்டி வெறுப்புப்பேச்சுகள் பல வெளியிடப்பட்டன” எனப் புத்தளம் நகரசபையின் உறுப்பினர் யமீனா தெரிவித்தார்.

“நான் தேர்தலில் போட்டியிடும் போது கருத்து ரீதியாக நான் முழுப் பலம் பெற்றிருந்தேன். ஆனால் எதிரணியினர் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை என்மீது சுமத்தினர். இதனால் ஆர்வமிருந்தும் கூட பிரசார நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிட்ட கால நேரத்துக்கு பின் பல பெண்களால் என்னுடன் இணைந்து பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் நான் எதற்குமே அச்சப்படாமல் பயணித்தேன்.  இதனை அவதானித்த எதிரணியினர், அவர்களது இறுதி முயற்சியாக என்னுடைய பெயரில் எனது கணவரின் பெயர் இணைக்கப்படவில்லை என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்” என அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

பொதுவாகவே தேர்தல் காலங்களில் பெண்களுக்கெதிரான வெறுப்புப்பேச்சு அதிகரிப்பதை அவதானிக்க முடிகின்றது. பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதியில் (ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 14 வரை)  தேர்தல் தொடர்பான வெறுப்புப்பேச்சு பதிவுகளை ஹேஷ்டெக் தலைமுறை நிறுவனத்தின் சமூக ஊடக கண்காணிப்பாளர்கள் அறிக்கையிட்டுள்ளனர். அதனடிப்படையில் சிங்களம், தமிழ் முஸ்லிம் ஆகிய இனங்கள் மீதான வெறுப்புப்பேச்சுக்கு அப்பால் 3 வீதமான பதிவுகள் பெண்களை இலக்காகக் கொண்ட வெறுப்புப்பேச்சாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ( https://drive.google.com/file/d/1qQKubeK1HtAtom3J5v2BKoQ5hToH9ma_/view  )

பெண் அரசியல்வாதிகள் மீதான வெறுப்புப் பேச்சு ஏன்?

“சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வெறுப்புப்பேச்சுக்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர்புபட்ட திட்டமிட்ட குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் வன்முறையைத்தூண்டும் வகையிலேயே அமைகின்றன. இவ்வாறான வெறுப்புப்பேச்சுக்களை கேட்கும் பொழுதும், சமூக ஊடகங்களில் அதனை படிப்பவர்கள் உண்மை என நம்புவதோடு அரசியல் ரீதியில் எம்மைப்பற்றிய பிழையான எண்ணம் உருவாக்கப்படுகின்றது. அதுவே இந்த வெறுப்புபேச்சினை வெளிப்படுத்துபவர்களதும், பரப்புபவர்களதும் குறிக்கோளாக காணப்படுகின்றது. இது தனிப்பட்ட ரீதியில் மனவருத்தத்தை தருகிறது.” என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

“அரசியல் பிரவேசத்தின் ஆரம்பத்தில் பெண்களுக்கு பெரும் சவாலாக அமைவது சமுதாயத்தில், சகமக்களிடமிருந்து வரும் வெறுப்புப்பேச்சுகள்தான். அவை பெருமளவில் பெண்களை இந்தத்துறையில் பிரவேசிப்பதையே தடுத்துவிடுகிறது.” என கொழும்பு மாநகரசபை உறுப்பினர் காயத்த்ரி விக்ரமசிங்க தெரிவித்தார்.

“வடக்கு கிழக்கில் ஆண், பெண் அரசியல்வாதிகள் என்பதைத்தாண்டி உரிமை சார்ந்து, தமிழ் தேசியம் சார்ந்த அரசியலுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தது. அத்தோடு அனுதாப அலைகள் மூலம் வந்த பெண் அரசியல்வாதிகள் அல்லது அரசியலில் களம்புகும் பெண்ணின் கணவர், தந்தை என அப்பெண் சார்ந்த ஆண் ஒருவரின் செயற்பாடு எவ்வாறிருக்கிறது என்பதை வைத்து மக்கள் பெரும்பாலும் எடைபோடுகிறார்கள். எனவே எந்தவிதமான அரசியல் பின்புலமும் இல்லாமல் ஒரு மத்தியதர குடும்பத்திலிருந்து தேசிய கட்சிகளோ அல்லது தமிழ் தேசிய கட்சிகளூடாகவே அரசியலில் ஒரு பெண் காலடி எடுத்து வைக்கும்பொழுது இவ்வாறான வெறுப்புப்பேச்சுகள் பெரும் தடையாக அமைகின்றது.” என எதிர்க்கட்சி தலைவரின் இணைப்புச் செயலாளர் உமா சந்திரபிரகாஷ் குறிப்பிட்டார்.

“மலையகப் பெண்கள் என அறியப்படுபவர்கள் 75% தோட்டத் தொழிலாளர்களாகவும் மிகுதியானவர்கள் வேறு தொழில் சார்ந்தவர்களாக தொழிலற்றவர்களாக பல மட்டத்தவர்களாக வாழந்து வருகிறார்கள். ஆனாலும் தொழிலாளர்கள் அவரவர்கள் சார்ந்த தொழிற்சங்கங்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக வாழ்வது போலவே ஏனைய பிரிவினரும் ஏதோ ஒரு வகையில் தொழிற்சங்கவாதிகளின் அனுசரணையில் வாழ வேண்டிய சமூகக்கட்டமைப்பே இங்கு நிலவுகிறது. போராட்ட குணாம்சம் மிக்கவர்களாக ஆளுமை நிறைந்தவர்களாக இருந்தும் கூட பெண்களால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் சமூக அங்கீகாரம் பெறும் நிலை இல்லை. இதனால் பெண்களும் தங்களை ஒரு மட்டத்துக்குள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய நிரந்தர பந்தத்திலேயே வாழ்ந்து வரும் நிலையில் இவர்களால் அரசியல் நோக்கி பயணிக்க முடியாத நிலை இதனையும் மீறி வெளியே வர துடிப்பவர்கள் மீது பலவீனமான அல்லது மானசீகமாக அவர்களை செயலிழக்க வைக்கும் கருத்துக்களும் ஏளனமான கணிப்பீடும் இதற்கு அப்பால் பெண்கள் முகம் கொடுக்கக் கூடிய பலகட்ட வன்முறைகளும் சுமத்தப்பட்டு அடுத்த அடி எடுக்க முடியாமல் முடக்கப்படுகிறார்கள்.” என சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

இலங்கை சனத்தொகையில் பெண்கள் பெரும்பான்மையினராக (52%) இருந்தபோதும் அரசியலில் இன்னும் சிறுபான்மையினராகவே காணப்படுகின்றனர். இலங்கை பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 5.38% மட்டுமே. 1931 இல் இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமகாலத்தில் உரிமை வழங்கப்பட்டது. வளர்ச்சியடைந்த பல நாடுகளில் கூட பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படாத நிலையில், ஆங்கிலேய காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில் முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு இலங்கை. இத்தனை பழமையான வரலாறு இருந்தும் கூட  தென்னாசியாவிலேயே குறைந்தளவு பெண்களின் பிரதிநிதித்துவம் கொண்ட நாடாக இன்றும் இலங்கை காணப்படுகின்றது. பெண்கள் அரசியலுக்கு வருவதற்கான மனநிலையை எப்போதோ தயார்படுத்திவிட்டார்கள். அவர்களின் திறமைகளுக்கும் துணிச்சலுக்கும் சமமாக நின்று அரசியல் செய்யவோ அல்லது அரசியல் பேசவோ தயாரான ஒரு சமூகத்தை தான் அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு உகந்தவொரு ஆரோக்கியமான அரசியல் சூழலை ஏற்படுத்துவதே எம் எல்லோரது கடமை. மாறாக பால் நிலை சார்ந்து தாக்கும் வகையிலான வெறுப்பை தூண்டுவதல்ல

Thanks .http://www.slpi.lk/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/?fbclid=IwAR01Aa1juW5WvX8sj6B3PVKaEYwXoGTtCF-a6HPxEnRSmlboZxeq0K8ZoQ0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *