சட்டம், சமூகம், மனிதர் -தேவா,ஜேர்மனி,05.01.2021


பகைவர்-காலத்துக்கு நேர்எதிர்,, தலைப்பை  கொண்ட பர்டினான்ட் போன் ஷீராக்கின் சமூக விவாதத்துக்குரிய நாடகக்கதை ,திரைப்படமாக வெளியிடப்பட்டு வலைத்தளங்களில், தொலைக்காட்சிகளில் வெளியாகி சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.. இவர் நீதியியல் படித்தவரும், அதில் அனுபவமுள்ளவரும், இன்னும்ஒன்பது நாவல்களையும், பலநாடகங்ளை யும்  வெளியிட்ட  பிரபல ஜேர்மன் எழுத்தாளரும், உளவியலாளரும் ஆவார். இவரின் நாவல்கள்,நாடகங்கள் பலவும் திரைப்படங்களாக்க பட்டுள்ளன.அந்தவரிசையில் “பகைவர்கள்” நாடகமும் திரைப்படமாகி அண்மையில் பெரும் பேசுபொருளாய் இருக்கிறது.

ஜனநாயகஅரசு, நீதி,மனிதஉரிமை ஆகியவைகளை விவாதத்துக்குரிய விடயமாக முன்மொழிந்திருக்கிறது. அடுக்கடுக்கானகேள்விகளை அரசின் நிர்வாக அலகில் ஒன்றான காவல்துறைக்கு நேரே தொடுத்திருக்கிறது.

உண்மை சம்பவம்:

2002ம் ஆண்டிலே ஒரு சிறுமி கடத்தப்படுகிறாள்.அவள் பெற்றோர் செல்வந்தர்.லட்சக்கணக்கில் பணம் தந்தால் மகளை விடுதலை செய்வேன்என மிரட்டுகின்றான் கடத்தல்காரன். பெற்றோர் பணம் தருகின்றனர்.சிறுமி உயிருடன் மீட்கப்படவில்லை.பல மாதங்களின் பின் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். காவல்துறை கடத்தல்காரர்களை  நீதிமன்றத்துக்கு கொண்டுவந்தது.வழக்கிலே காவல்துறை குற்றவாளி களை சித்திரவதைகளுக்குள்ளாக்கிய விடயம் வெளிப்பட்டது. ஆனாலும் அந்தவிடயம் பின்னுக்கு தள்ளப்பட்டு, குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை தீர்ப்பாகியது.

பர்டினான்ட் போன் ஷீராக்கின் திரைப்படக்கதை:

தொழில்அதிபர் ஒருவரின் இளம்மகள் காலை 7:00மணிபோல கடத்தப்படுகிறாள்.பக்கெட்உணவு,குடிநீர், கழிவறை,கணப்புஅடுப்பு வசதி யோடு,பாழ்தொழிற்சாலைஅறையொன்றில் பூட்டி வைக்கப்படுகின்றாள். கணப்புஅடுப்பு எப்படி தொடர்ந்து இயக்கப்படவேண்டும்எனவும் அவளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அவள் பெற்றோர் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்கின்றனர். இன்ஸ்பெக்டர் பிள்ளையை கண்டுபிடிக்க முழூமூச்சுடன் செயல்பட்டு,தடயங்களை வைத்து கடத்தல்காரனை கண்டுபிடிக்கிறான்.  .ரிமாண்டில் வைக்கப்படும்  அவன் வாக்குமூலம் தர மறுக்கிறான். சிறுமியை எப்படியாவது மீட்டுவிடவேண்டிய கடமை,இன்ஸ்பெக்டரை ஆவேசப்படுத்துகிறது.அவருக்கும் அதே வயதுடைய மகள் இருக்கிறாள்.நேரம் ஆக ஆக இன்ஸ்பெக்டருக்கு கடத்தல்காரன்மேல் ஆத்திரம் ஏறுகிறது.கடைசிஆயுதமாக வன்முறையை அவன்மேல் பிரயோகித்து,சிறுமியை காப்பாற்ற துடிக்கிறார். வன்முறைக்கான விண்ணப்பம் மேலதிகாரியால் மறுக்கப்படுகிறது.காரணம்: மனிதஉரிமை காப்பாற்றப்படவேண்டிய கடமை சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் சிறுமியை காப்பாற்றும் உத்வேகத்துடன் இரகசியமான முறையில்,சட்டத்துக்கு புறம்பாக வன்முறைசெய்து கடத்தல்கார னிடமிருந்து  உண்மையை பெறுகின்றார்.சிறுமி கடத்தப்பட்ட அதேநாளில் மீட்கப்படும்போது,அவள் உயிருடன் இல்லை.

வழக்குவிசாரணையில் சிறுமி கணப்புஅடுப்புவிபத்தால் இறந்திருக்கலாம் என நிரூபணமாகிறது.சித்திரவதையின் பின்னான வாக்குமூலத்தை கடத்தல்காரனின் வழக்கறிஞர் வெளிக்கொணர்கிறார். ஒரு உயிரை காப்பாற்ற வன்முறை மேற்கொள்வது தவறில்லைஎன இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் உறுதியாக பதில் சொல்கிறார்.அங்கு பார்வையாளரின் கைதட்டலும் பாராட்டாக அவனுக்கு கிடைக்கிறது.மனிதஉரிமை பாதுகாக்கப்படவில்லை என்ற சட்டகாரணத்தினாலும், வன்முறைமூலம் வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதால்,அது செல்லுபடியாகாது என தீர்ப்பாகி குற்றம்சாட்டப்பட்டவன் விடுதலையாக்கப்படுகின்றான்.

ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக ,இன்னொருவருக்கு மேல் வன்முறை மேற்கொள்வது சரியானதுதான் அல்லது சரியானது இல்லைஎன்ற வாதங்களை இந்தகதையில்பர்டினான்ட்போன் ஷீராக்கருவாக்கியுள்ளார். ஜனநாயகத்துக்கும், அரசுகளுக்கும், அரசஇயந்திரங்களுக்கும்ஒரு சவாலை விடுத்திருப்பதுதான் இங்கே உற்றுகவனிக்கவேண்டிய விடயமாக தெரிகிறது.(ஜனநாயக-ஜனநாயகமற்ற எல்லா அரசுகளின் அரச ஆயுதங்களாகவும், போர்க்காலங்களிலும், கலககாலங்களிலும்காவல்துறை இயங்குவது வெளிப்படையானதே.) ஆனால் ஒரு அமைதியான காலத்திலும்  வன்முறை எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு முன்னால் ஒரு உயிரை காப்பாற்றவேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இருக்கிறது என்ற விடையையும் புரிந்துகொள்ளமுடியும்.

சிறுமி உயிர் காப்பாற்றப்படவேண்டும்.கடத்தல்காரன் சிறுமியை கடத்திச்சென்றதும் வன்முறை. மோசமான கிரிமினல்குற்றம் செய்த ஒரு கெட்டவனுக்கு நீதியை கையாளவேண்டிய சட்டத்தால் விடுதலையா. குற்றத்திலிருந்து விடுதலை சரியான நீதியா? ஒரு தாயாய்,தந்தையாய் தன் பிள்ளையை இழப்பதென்பது கொடூரம்.குற்றம்புரிந்தவனுக்கு கட்டாயம் தண்டனை தரப்பட்டிருக்கவேண்டும்என்பது நியாயமானது.

சந்தேகங்கள்:

வன்முறைக்குள்ளாகும் ஒருவர் ,வதையிலிருந்து விடுபடுவதற்காக ,செய்யாத குற்றத்தையும் ஒப்புக்கொண்ட நிரபராதிகள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.குற்றம்புரிந்தவர் தண்டனை பெறுவது நியாயமானது.ஆனால் நீதிமன்றத்துக்கு முன்னால் குற்றம்சாட்டப்பட்டவர் நிறுத்தப்படுமுன் ,காவல்துறை அவரை சித்திரவதைக்குள்ளாக்குவது எந்த விதத்தில் நியாயம்? மற்றது நேர்மையான விசாரணை, தடயங்கள், அத்தாட்சி,சாட்சிகளை நீதிமன்றத்துக்கு முன் வைப்பது காவல்துறையின் பொறுப்பும்,கடமையும் ஆகும்.

ஒரு மனிதனுக்கு உடல்ரீதியாக துன்புறுத்துவதற்கு இன்னொரு மனிதருக்கு உரிமை இல்லை.சகமனிதரை கீழ்மைபடுத்துவது. தனி மனிதருக்கே இல்லாத இந்த உரிமை அரச இயந்திரங்களாக செயல்படும் காவல்துறைக்குவழங்கப்பட்டிருக்கிறதா. 

சட்டங்கள் சமூகத்தை காப்பாற்றுவதற்காகவே இயற்றப்பட்டுள்ளன. சட்டங்களை குலைப்பதால் சமூகஒழுங்கு குலையும்.அராஜகம் தலையெடுக்கும். நீதி தலைகீழாக புரளும். ஒரு அராஜக அரசு தோன்றும்.

மனிதரை,சாதியின்,இனத்தின்,மதத்தின்,தோலின்நிறத்தின்பேரால் சிதைப்பதானது அதிகாரங்களை தம் கையில் கொண்டுள்ள அரசுகளால் நடாத்தப்படுகின்றன.குடியரசு வெறும்பெயரளவில் தொங்குகிறது.

சட்டத்தை தம் கையிலெடுத்து,தமக்கு சாதகமாக அதை மாற்றியமைக்க எம் தாயகத்தில் நடைபெறும் அரசியல்நிகழ்வுகளும்,நீதிமன்ற தீர்ப்புகளும் ஹிட்லர்காலத்தை நினைவுபடுத்துகிறது.

கிரிமினல் குற்றமொன்றை மையமாக வைத்து, சட்டம், சமூகம்,நீதி ஆகியவைகளை ஆழமாக இத்திரைப்படம் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *