நவல் எல் சாதவி எழுதிய இந்நூலில் குறிப்பிடப்படுவது ஒரு உண்மைச் சம்பவத்தை என்பது மிகுந்த வலியைத் தருவதை உணர்கிறேன்.ஒரு பெண் எப்படி பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறாள். அதற்கு காரணமாக இருப்பவர்கள் யார்? ஏன்? எதற்காக? என்ற கேள்விக் கணைகளின் வழி பிறக்கிறது இக்கதையின் பயணம். அவளின் பெயர் பிர்தவ்ஸ்.அவளைப் போலவே அழகாக இருந்தது. மனிதன் அறிந்த எந்த இடத்திலும் நான் இருக்கமாட்டேன்.இவ்வுலகில் வாழும் எவருமே அறிந்திராத ஓர் இடத்திற்கு பயணிக்கப்போவதை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன் இதுவே அவள் மரணத்திற்கு கொடுத்த சவுக்கடி. துளி பயமின்றி கவலையின்றி கம்பீரமாக சொல்லப்பட்ட இவ்வசனங்கள் வாழ்க்கை அவளுக்கு கற்றுக் கொடுத்த கடினமான பாடங்களில் இருந்து வெளிப்பட்டவை.
அவளது பால்யம் அவ்வளவு சுவையானதல்ல.ஒவ்வொரு இரவும் தாயை அடித்து துன்புறுத்தும் தந்தையை அவள் பெற்றிருந்தாள்.
பிள்ளைகளுக்காக தனது சுகத்தை தியாகம் பண்ணக்கூடியவரல்ல அவர். குளிர் காலங்களில் கணப்பான இடத்தையும் கதகதப்பைக் கூட்ட தன் தாயின் உடலையும் எடுத்துக் கொண்டு விடுபவராகவும் இரவு உணவு குறைவாக இருக்கும் நாட்களிலும் யாருக்கும் தராமல் உண்ணும் ஒரு கொடூரமானவராகவும் நினைவு கூருகிறாள்.
பெண் குழந்தைகள் இறந்தாலும் தனது உணவைத் தவற விடாத தந்தை ஆண் குழந்தைகள் இறந்தால் தாயை அடித்து விட்டு உணவருந்துவதாகக் குறிப்பிடுகிறாள். முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது பாலினப் பாகுபாட்டின் கொடுமைகள். மனைவிக்குப் பதில் வேறு பெண்ணை துணைக்கு அழைப்பது சாதாரணமாகப் பார்க்கப்பட்டது.பெண் பிள்ளைகள் வளர்ந்து விட்டால் ஆண்களுக்கான அனைத்து சேவகங்களையும் செய்யப் பணிக்கப்படுவதும் வீட்டு வேலைகளைச் செய்வதற்கு வயதெல்லை கிடையாது போன்றனவும் பெண்கள் மீதான அடக்கமுறையைக் காட்டுகின்றன.
தனது நண்பனுடன் தான் விளையாடிய ஒரு விளையாட்டை அவள் வெளிப்படையாக ஒத்துக் கொண்டது வியப்பை அளித்தாலும் அதன் போது தான் பெற்ற இன்பத்தை பின்னர் எப்போதும் பெறவில்லை அது காணாமல் போய் விட்டது எனக் கூறுகையில் வலியுடன் வேதனையையும் உணர்ந்தேன். தனது நண்பனை விட அதிகமாகவே சொந்த மாமாவினால் பாலியல் சேட்டைகளுக்கு உட்படுத்தப்பட்ட போதும் விருத்த சேதனம் செய்யப்பட்ட அவளால் சுக உணர்வை உணர முடியவில்லை என்பதைக் குறிப்பிடுகிறாள்.இவ்விடத்தில் நண்பனுடன் அவள் சுகித்திருந்த பொழுதுகள் எவ்வளவு முக்கியத்துவமுடையவை என எண்ணத் தோன்றியது. அறியாப் பருவத்தில் அவள் அறிந்து கொண்ட உணர்வை அவளது ஆயுள் வரை உணர முடியவில்லை என்பது பெண்களின் பாலியல் சுதந்திரப் பறிப்பின் வலியை எடுத்துரைத்தது. மாமாவுடன் அவள் புறப்பட்ட தருணம் எனது மனம் விரைவாக அடித்தக் கொண்டதை உணர்ந்தேன். ஆனால் சிறு சேட்டையுடன் ஒதுங்கிக் கொண்ட அவர் அவளை கல்வி கற்க அனுப்பியது ஆறுதலைத் தந்தது. முதன் முதலாக அவளின் நிலைக் கண்ணாடி அனுபவம் சுவாரசியமானது.தனது மாமாவின் வீட்டிற்குச் சென்றவுடன் பார்த்த வியக்கத்தக்க விடயமாக அதை அவள் குறிப்பிடுகிறாள். கண்ணாடியில் அவளது மூக்கினூடாக தந்தையையும் அவளது கண்களினூடாக தாயையும் அடையாளம் கண்டு வியக்கிறாள்.பாடசாலையும் விடுதி வாழ்க்கையும் அவளுக்கு பல விடயங்ளைப் புரிய வைத்தது. பல நூல்களைத் தேடிப் படித்து அறிவை வளர்த்துக் கொண்டாள். மேலும் மேலும் படிக்க வேண்டும் என்ற அவளது ஆசை நிராசையானது அவளது விதியோ அல்லது அவளுக்கு இழைக்கப்பட்ட சதியோ யார் அறிவார்?
தன் கண்ணீருக்கு துணையாக நிற்பவர் யாரோ? தன் ஆதங்கங்களின் வடிகாலாய் இருப்பவர் யாரோ? அவர்களை தமது உடமையாக தம்மில் உரிமையுடையவராக நேசிக்கும் மனது இயல்பானதே. அதில் பால்பேதமோ மத பேதமோ இன பேதமோ நுழைய வாய்ப்பே இல்லை என்பதை அவள் தனது ஆசிரியை இக்பால் மீது கொண்ட அதீத அன்பு காட்டி நின்றது. அது நட்போ காதலோ எதற்குள்ளும் அடங்காத பக்தி மார்க்கமோ?
இதே உணர்வை இப்ராகிமிடமும் உணர்கிறாள் அதே நேரம் இருவருடைய பிரிவுகளும் அவளைப் பாதித்த விதத்தில் நூலிடை வேறுபாடே இருந்ததாக நான் உணர்ந்தேன். அன்பு நம்பிக்கையைக் கொண்டு வரும். நம்பிக்கை இரகசியங்களை உடைக்கும். எப்போதும் ஆண்களின் அன்பில் சுயநலம் கொஞ்சம் அதிகம் தான். தமது நோக்கம் நிறைவேற எந்த எல்லையையும் தாண்ட தயாராகி விடுவர். இப்ராகிம் இதற்கு விதிவிலக்கல்ல. அவனுடைய அன்புக்காக தனது வாழ்க்கையை முழுதாகவே மாற்றி விடவும் துணிந்த அவளை எறிந்து விடும் அவன் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் உடல் சுகம் வேண்டி வந்து நின்ற போது எனக்கான பணத்தைக் கொடுத்து விட்டுச் செல் என்ற அவளின் வார்த்தைகள் ஒட்டுமொத்த ஆண் வர்க்கத்திற்கும் விழுந்த அடி என்பேன்.
அவளது மேல் படிப்பு தடைப்பட்டமைக்கு பெரிய காரணங்கள் இல்லை கற்பிக்கத் தேவையான பொருளாதார வசதியில்லை என்பதும் ஆண்களின் அருகில் இருந்து படிக்க வேண்டியிருக்கும் என்பதுமாகவே இருந்தாலும் அவளது பால்ய திருமணத்திற்கும் அதுவே காரணமாய் அமைந்ததை ஏற்க முடியவில்லை.
தனவந்தர் என்பதற்காக மட்டுமே வயோதிபரும் நோயாளியுமான ஒருவரைத் தேர்ந்தெடுத்து மணமுடித்துக் கொடுத்தமை கொடுமையிலும் கொடுமை. அதனிலும் கொடுமை அவளுக்கென்று ஒரு போக்கிடம் இன்மையும் பெண்ணுடல் மீதான சமூகத்தின் கொடூரமான பார்வையும் அப்படுகுழியில் அவளைத் தள்ளியது என்பதே.
அவளது கணவனுடனான வாழ்க்கை மிகவும் அருவருக்கத்தக்கது. அவளுடைய கணவன் அவளருகில் படுக்கும் போதெல்லாம் ஒரு செத்த நாயின் நெடி வீசுவதாகவும் அவனிடம் இருந்து விடுபடும் ஒவ்வொரு முறையும் தன்னைக் கழுவி சுத்தப்படுத்துவதாகவும் குறிப்பிடுகிறாள். அதையும் மீறி அவனது கருமித்தனம் தன் நிம்மதியைக் கெடுத்ததாகவும் கூறுகிறாள். இத்தனைக்கும் அவனது அடி உதைகளையும் தாங்கி வாழ முடியாமல் மாமா வீடு சென்றவளை அவர்களும் ஏற்பதாய் இல்லை. அதற்கு அவர்களின் பதில் எல்லாக் கணவன்மார்களும் மனைவியை அடிப்பர். கணவனைக் குறை கூறும் மனைவி கண்ணியமானவள் இல்லை என்பதாகவும் இருந்தன.
இக்கருதுகோள்களே பெண்களின் வாழ்வை நரகத்துள் தள்ளிக் கொண்டிருக்கின்றது என்பதை அறியாத உலகமே இவளின் கதையைக் கேளுங்கள்.தன் கணவனின் அடிக்குத் தப்பி அவள் செல்கிறாள். யாரையும் நம்பிப் புறப்படவில்லை கால்போன போக்கில் போகிறாள். அவளிடம் அவளின் வேதனை குறித்துக் கேட்கக் கூட ஆளின்றி இருந்தவளுக்கு அறிமுகமாகிறான் பயோமி.தம்மை நம்பி வந்த பெண்களை அதிலும் யாருமற்ற பெண்களை தங்களின் கை மீறி விடாமல் பார்த்துக் கொள்வதில் ஆண்கள் மிகக் கவனமாக இருப்பர். அப்படியே அவள் மீற நினைத்து விட்டால் அவளில் கொண்ட அன்பு பாசம் காதல் அனைத்தையும் மறந்து கொலை செய்யுமளவு கொடுமைப்படுத்த ஆரம்பிப்பர். இதன் தொடர்ச்சியே தற்காலத்தின் ஆசிட் வீச்சுக்களும் கொலைகளும். பயோமியின் அன்பில் அவள் உருகி விடுகிறாள். அவனை நம்பி அவனுடன் அவனது வீடு செல்கிறாள். இதுவே அவளது பாலியல் தொழில் வாழ்வின் முதல்படியாகிறது.
அவள் தன்னை விட்டுச் செல்ல முடிவெடுத்து விட்டாள் எனத் தெரிந்ததும் அவளை அடைத்து வைத்ததோடு மட்டுமல்லாது அவளது உடலை அவளின் அனுமதியின்றியே கையாளத் தொடங்கினான் அத்தோடு விட்டானில்லை அவனது நண்பர்களுக்கும் அவளின் உடலை பகிர்ந்தளித்தான். எத்தனை இலகுவாக ஒரு பெண்ணின் உடலை சொந்தம் கொண்டாடுகிறார்கள். அந்த அதிகாரத்தை அவர்களுக்கு யார் வழங்குகிறார்கள்? இன்றுவரை புரியாத புதிர் அதுவொன்றே. ஆண்களை நம்பக் கூடாது என முடிவெடுத்த அவளை ஒரு பெண் நட்புகிறாள். ஆண்களைத் தூற்றியபடி அவளிடம் இலகுவாக நட்புக் கொள்கிறாள். தான் வாழ்நாளில் கண்டிராத ஆடம்பர வாழ்வும் முதன் முதலாக தன் கையில் கிடைத்த பணமும் அவளின் பாதையை மாற்றிச் செல்கிறது. யாருமே உரிமை கொண்டாட முடியாத தன் சொந்த சம்பாத்தியமாக அப்பணத்தினைப் பார்த்து பூரிக்கிறாள். தான் இஸ்டப்பட்டதை வாங்கிச் சாப்பிட்டு தனக்குப் பிடித்தபடி வாழ முயல்கிறாள். ஒரு கட்டத்தில் இது கௌரவமான தொழில் அல்லவென முடிவெடுக்கும் போதும் தைரியமாக இருப்பதற்கு தான் ஒரு பாலியல் தொழிலாளி என்ற எண்ணத்தை துணைக்கு வைத்துக் கொள்வதை ஆச்சர்யமாகப் பார்க்கிறேன்.
ஒரு பாலியல் தொழிலாளி தன் வாழ்வை இழக்க அஞ்சுவதை விட ஒரு பெண் ஊழியர் தன் வேலையை இழக்க அதிகம் அஞ்சுகிறாள். அவள் தனது வாழ்வை தனது உடல்நலத்தை தனது உடலை தனது மனதை தனது இந்தக் கற்பனையான பயத்திற்கு விலையாகத் தருகிறாள் எனக் கூறும் பிர்தவ்ஸ்ஸின் வார்த்தைகள் எத்தனை யதார்த்தமானது.
இப்ராகிம்மை அவள் காதலித்தாள். அவனால் தனது வாழ்க்கைப் பாதை மாற்றம் அடையப் போவதாக நம்பினாள்.அவனுடன் இருந்த இரவுப் பொழுதில் எனது உடல் எனது ஆன்மா எனது மனம் மற்றும் என்னால் செய்ய முடிந்த அனைத்தையும் கொடுத்தேன். எனது ஆயுதங்களை எல்லாம் துறந்தேன் எனது தற்காப்புக்களை விலக்கினேன்; எனது நிர்வாணத்தோடு சேர்த்து என்னை நானே முழுமையாக ஒப்படைத்தேன் என்கிறாள். அதே வேளை தான் பாலியல் தொழிலாளியாக இருந்த பொழுதுகளில் எனது இதயத்தையும் ஆன்மாவையும் பாதுகாத்துக் கொண்டு செயலற்று விறைத்து உணர்வற்றுக் கிடக்க என் உடலைப் பழக்கியிருந்தேன்.இவ்விதம் உணர்வற்றுக் கிடப்பதன் மூலம் எதிர்க்கக் கற்றுக் கொண்டிருந்தேன். ஆனால் இப்ராகிமின் காதல் ஒன்றை மட்டுமே வேண்டிய அவள் வைராக்கியங்களை எல்லாம் விட்டு அவனை முழுதாக நம்பி ஏமாந்தாள்.
அதன் பின்னான அவளின் ஓர்மம் அவளின் கடைசித் துணுக்கு ஒழுக்கத்தையும் அவளின் இரத்தத்தில் கலந்திருந்த இறுதிச் சொட்டுப் புனிதத்தையும் உதறி விடத் துணிந்தது. ஆண்களால் பெண்கள் மீது மோசடிகள் ஏவப்படுகின்றன. தமது மோசடிகளிற்கு பலியானதற்காக அவர்களே பெண்களைத் தண்டிக்கவும் செய்கிறார்கள். திருமணம் எனும் பெயரில் பெண்களை இறுகக் கட்டி வைத்து அவ்வாழ்வை பெண்கள் காப்பாற்றிக் கொள்வதற்காக கடின ஊழியம் செய்ய வைப்பதோடு நிந்தனைகளையும் அடி உதைகளையும் தருகிறார்கள் எனத் தெளிவடைகிறாள். அனைத்துப் பெண்களையும் விட விபச்சாரிகளே குறைந்தளவு ஏமாற்றம் அடைபவர்கள் என்பதையும் ஒரு பெண் மிகக் கொடூரமாகத் துன்பப்படுவதற்கென உருவானதே திருமணச்சடங்கு என்பதையும் தான் உணர்ந்து கொண்டதாய் பெருமிதம் அடைகிறாள். முற்றுமுழுதான பாலியல் தொழிலாளியாக மாறி தனக்கான வாழ்வை அவளே வாழ முற்படுகிறாள். இறுதியில் தன்னைக் கட்டுப்படுத்த முற்படும் ஒரு ஆணுடன் கைக்கலப்பு ஏற்பட்டு அவனிடமிருந்து தன்னுயிரைக் காத்துக் கொள்ள அவனைக் கொலை செய்கிறாள்.
தற்காத்துக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட கொலையாக அது இருந்த போதும் அவளை சட்டம் காப்பாற்ற முன்வரவில்லை. காரணம் ஒட்டுமொத்த ஆண் வர்க்கத்தின் மீதும் பழி போட்டபின் தைரியமாக அவள் தலை நிமிர்ந்து நின்றது அவர்களை அச்சப்படுத்தியது. இருப்பினும் பிர்தவ்ஸ் என்ன நினைத்தாளோ மௌனியாய் இறந்துவிட அவள் விரும்பவில்லை. அவளது இறுதி வாக்குமூலம் நான் கொலை செய்தது கத்தியால் அல்ல உண்மையைக் கொண்டே செய்தேன். அதனால் தான் அவர்கள் என்னை விரைவாகக் கொல்லத் தவிக்கிறார்கள் என்பதாக இருந்தது. அவள் தூக்குமேடைக்குச் செல்கையில் கூட அவளது கண்ணில் துளிப்பயமோ குற்றவுணர்வோ இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் என்னைக் கண்டு அஞ்சுகிறார்கள். அவர்களுடைய முகமூடிகளைக் கிழித்து அசிங்கமான உண்மை முகத்தை உலகத்திற்குக் காட்டிய ஒரே பெண் நான் தான். நான் உயிருடன் இருப்பது அவர்களுக்கு ஆபத்து என நினைத்தே எனக்கு மரண தண்டனை வழங்கியிருக்கிறார்கள் என்று தைரியமாகக் கூறிய அவளை நினைக்கையிலே மயிர்க் கூச்செறிகிறது. அவளது பார்வையில் இவ்வுலகில் அனைத்துப் பெண்களுமே உடலை விற்கின்றனர். மனைவியின் உடலுக்குத் தான் மிக மிகக் குறைந்த விலை.
இவளது வாழ்க்கையின் பாதை எவ்விதம் திசை மாறியது என்பதை வாசித்து முடித்த போது விழியோரம் துளி நீர்க் கண்டேன். காதல் என்பது இனம் மதம் மொழி சாதி கடந்து மட்டும் அல்ல பால்நிலை கடந்தும் வரும் என்பதையும் பெண்ணுடலை ஆண்கள் எவ்விதம் நோக்குவர் என்பதையும் பிறப்புறுப்பின் சிதைப்பையும் இன்னும் பல அறியாத மர்மங்களையும் சொல்லி விட்டு மீண்டும் வராத தேசம் அவள் சென்று விட்டாள்.
.