நாம் வெற்றி அடைய முடியாது என்று பெண்கள் யோசித்தால் அது வெற்றியே அல்ல நாம் செய்கின்ற சமரசத்துக்குக் கிடைக்கின்ற விலை.

This image has an empty alt attribute; its file name is barathy-454x1024.jpg

இலங்கை தொலைக்காட்சிகளில் இந்தியச் சின்னதிரை தொடர்கள் ஒளிபரப்பாகத் தொடங்கிய காலங்களிலிருந்தே அத் தொடர்கள் மீது எனக்கு ஒரு வித வெறுப்பும் சலிப்பும் இருந்து வந்திருக்கிறது.இந்த தொடர்கள் மீது இருக்கின்ற வெறுப்பினால் இத் தொடர்களைக் குந்தியிருந்து பார்ப்பவர்களையும் ஆச்சரியமாகவே பார்த்திருக்கிறேன். இவர்களால் எப்படி இது முடிகிறது? இத்தனை பொறுமை அல்லது சகிப்புத்தன்மை எப்படி எங்கிருந்து வருகிறது?. இது என்ன வகையான மன நிலை? – என்று யோசிப்பதுண்டு.

இக் காரணங்களினாலோ என்னவோ இத்தொடர்களை மிக ஆர்வமாகவும் வாரம் தவறாமலும் பார்ப்பவர்களை ஏதோ மனநிலை சரி இல்லாதவர்களால்தான் இது முடியுமோ என்று கூட எண்ணியதும் உண்டு.எனது தந்தை சிங்கள மொழி நாடக தொடர்களை விரும்பி பார்ப்பார். அவருக்கு தொடராக பாரக்க வேண்டும் என்பது அவசியமல்ல. அவருக்கு கதைகளை விட காட்சி அமைப்பு அந்த மனிதர்கள் பேச்சு நடை, உடை, பிரதேங்களின் மண் வாசனை அவர்கள் கொண்டிருக்கும் மாறு பட்ட நகைச்சுவை உணர்வு எல்லா வற்றையும் அழகாக கண்களால் சிரித்துக் கொண்டு அரசித்துக் கொண்டிருப்பார். அவரிடம் ஏற்படும் மாற்றத்தை கொண்டே எனக்கான ஆர்வம் அதிகரிக்கும். (அவரது மடியில் சாய்ந்து கொண்டு என்ன பேசுகிறார்கள் என்பதை காட்சிக்கு காட்சி கேட்டு பாதி நாடகத்தை அரை பார்க்காமல் ஆக்கி விடுவேன்.

ஏன் என்றால் எனக்கு சிங்கள மொழி புரியாது என் ஆர்வத்தையும் எனக்கு கட்டுப்படுத்த முடியாது ) அதே போல் ஆரம்பக் காலங்களில் ஒளிபரப்பான சில இந்திய தொடர்களை அவதானித்த என் தந்தை சொன்னது எனக்கு இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. ‘இந்த நாடகங்கள் எல்லாம் ஒரு ஆணுக்காக 4 பெண்கள் சண்டை பிடிப்பதைத் தவிர வேறு என்ன சொல்ல வருகின்றன’? என்று கேட்டார்.பெண்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் எத்தகைய தரம் தாழ்ந்த சிந்தனைக்குள்ளே வைத்திருக்க இத் தொடர்கள் முனைகின்றன. அந்த வக்கிரத்தில் பணம் பார்க்க விளைகின்றன என்பதும்தான். யாரும் ஆசைப்பட்டுக் கேட்டால் அவரும் கொஞ்சம் அதிகமாகவே நாக்கை தொங்கப்போடுகிறார் என்றால் தூக்கிக் கொடுத்துப் போட்டு வேலையைப் பார்க்க வேண்டியதுதானே. போயும் போய் ஒரு ஆணுக்காக விவஸ்தை கெட்டு நான்கு பெண்கள் நாய் பேய் போல் கடி படுதுகளே- என்று நினைத்து சிரிக்கலாம்..

இயற்கையிலும் யதார்த்தத்திலும் ஆண்கள்தான் பெண்களிடம் படம் காட்டுவார்கள். சாகசம் புரிவார்கள். அறிவாளி வல்லவராக பாடம் எடுப்பார்கள். தங்களிடம் பெண்கள் விழுந்து விழுந்து பழகுவதாகக் காட்டப் பலவிதமான கை கரியங்களைச் செய்வார்கள். ஆனால் பல புத்தியுள்ள பெண்கள் சொறி நாய்க்கும் அவர்களை கண்டு கொள்வதில்லை என்பது எமக்கும் புரிந்த யதார்த்தம்.எல்லாம் அப்படியிருக்க – இத் தொடர்களைப் பெண்கள் மட்டும்தான் பார்ப்பதாகவும். பெண்களுக்கு அரசியல் அறிவு விடயங்களில் ஈடு பாடு இல்லை. இப்படியாக அடுத்தவன் புருசனுக்குச் சண்டை பிடிப்பதில்தான் பெண்களுக்கு நாட்டம் அதிகம். என்று தொடர்கள் எடுப்பதும், அதை பார்ப்பதும் பெண்கள் மட்டும்தான் என கலாய்க்கும், நையாண்டி செய்யும், மட்டம் தட்டும் நிகழ்ச்சிகளும் போஸ்டர்களும் ஏன் படங்களும் கூட ஆண்களால் மேற்கொள்ளப்படுவதும் அபத்தம்.

ஆனால் அதில் நடிக்கும் பெண்களையும் பார்க்கும் பெண்களையும் நகைக்கும் ஆண்கள்- அதைச் செய்விக்கும் இடங்களில் ஆண்களும் அவர்களில் கேவலமான மன நிலையும் பணம் பார்க்கும் தனத்தையும் கேள்வி கேட்பதில்லை என்பது ஆச்சரியம் ஒன்றுமில்லை.என்னைப் பொருத்த மட்டில் இவ்வகையான தொடர்களை பார்ப்பவர்களுக்கே மனநோய் பிரச்சனைபோல் யோசிக்கிறேன் என்றால்- இத்தொடர்களை இயக்குபவர்கள் கதை வசனம் எழுதுபவர்கள் நடிப்பவர்கள் எத்தகையை மன நிலை பெற்றவர்கள் என்று ஆச்சரியப்படாமலா இருக்க முடியுமா என்ன? என்ன வகையாக கற்பனை எண்ணம் இருந்தால் இத்தகைய வசங்களை எழுதவும் பேச வைக்கவும் முடிகிறது?

இன்று இத் தொடர்கள் பலரின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடையதாகி விட்டது. ஆனால் இதைத் தொழில் முறை சார்ந்த பிரச்சனையாக மட்டும் பார்த்து விடலாமா. அங்காடிகளில் பொருட்களை அடுக்குவது போன்றோ விற்பது போன்றதான வேலை மட்டும்தானா அது. சிந்தனை அறிவு உளவியல் சமூகம் என்று பல பரிமாணங்கள் கொண்டதாகவும் உள்ளது. அவை சமூகத்தில் நேரடியாகவும் மறை முகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. எமது விவசாயிகளின் கையில் இயற்கை விவசாயத்தை அழித்து நச்சை உற்பத்தி செய்யக் கொடுத்திருக்கும் நாச நிறுவனங்களின் வேலை போல் சமூகம் நஞ்சாக மாற இத் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்யும் அசிங்கங்கள் இத் தொடர்கள்.இத் துறைகளில் கமறா வெளிச்சம் படும் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வெளிச்சம் ஆணுக்கு ஒரு மாதிரியும் பெண்ணுக்கு இன்னும் ஒரு மாதிரியும் விழுகிறது. ஏன் என்றால் பெரும் பான்மையான கமராக்கள் ஆண்களின் கைகளில் இருக்கின்றன. அந்த கைகளை இயக்குகின்ற ஆண் மனம் ஆணை ஆளுமையாகவும் பெண்ணை கவர்ச்சி பண்டமாகவும் பார்க்கிறது விற்கிறது.

This image has an empty alt attribute; its file name is pennkalsanthippu-19953-1.jpg

பெண்களின் அறிவுக்கும் ஆளுமைக்கும் இடமில்லாத தளங்களில் எந்த விதமான சமூக அரசியல், சிந்தனை, பகுத்தறிவு அற்று வெறும் போட்டியும் வெற்றியுமே பெண்களின் இருத்தலைத் தீர்மானிக்க அடிப்படையாக உள்ளது.இத்துறைகளில் பெரிசா வளரவேண்டும், எல்லோரும் சொல்லுகிற மாதிரி பெரிசா நிற்கனும், அது மட்டும்தான் வேண்டும். எல்லாமும் அதுதான்.. என்பதற்குள் இருப்பது வெறும் பணமும் புகழ் பற்றிய எண்ணங்களே. இதை ஒரு ஆண் அடைவதற்கும் அல்லது தோற்பதற்கும் சமூகம் கொடுக்கின்ற இடம் வேறு பெண்ணுக்கு வேறு. அதனால் அத்துறைகளுக்கு வரும் பெண்கள் தன் நிலை சார்ந்த சமூக புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்னை சுற்றியுள்ள சமூகம் தனக்குத் தருகின்ற வலிகளை அவமானங்களை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் நிலையை மட்டுமே கொடுக்கிறது. இது இயல்பல்ல! அது அயோக்கியத் தனம்! சமூகம் தன்னை ஒரு சக மனிதனுக்குக் கொடுக்கின்ற எல்லாவற்றையும் தனக்குக் கொடுக்காமல் செய்கின்ற அறங்கெட்ட நிலை! – என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். (இது சாதிய சமூகத்துக்கும் பொருந்தும்) இதை இயல்பாக ஏற்றுக் கடக்கக் கூடாது கோபம் கொண்டு உடைக்க பெண்கள் கற்றுக் கொள்ளத் தன்னை பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும்.இதைச் செய்வதால் தனக்கான இடம் பறிபோய் விடும், நாம் வெற்றி அடைய முடியாது என்று பெண்கள் யோசித்தால் அது வெற்றியே அல்ல நாம் செய்கின்ற சமரசத்துக்குக் கிடைக்கின்ற விலை. நாளை அது முடியாத போது தற்கொலை தீர்வை நோக்கி நகர்த்தும். அது மட்டுமல்ல நம்மைப் போன்ற இன்னும் ஒரு பெண் இந்த சமரசங்களுக்கு முடியாமல் பலியாகலாம்.

இது தொடரும். மாற்றம் இல்லை. இயல்பை உடைப்பதே நமக்கில்லா விட்டாலும் நம் போன்ற மற்ற பெண்களுக்குச் செய்யும் நன்மை. அதுவே சமூக நோக்கு.இந்த இடத்தில்தான் பெண்களுக்குப் பெரியார் ஏன் முக்கியம் என்பதை நாம் உணர வேண்டும். எந்த தலைவரும் செய்யாத ஒன்றைப் பெரியார் பெண்களுக்குக் கொடுத்தார். சுடு சொரணை கோபப்படு கேள்வி கேள் உடைத்து எறி. என்றார்.(நடிகை சித்ராவின் மரணத்துக்காக மட்டுல்ல வெளிச்சம் படும் பெண்கள் தம்மை எது சார்ந்தும் எளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதும்தான்) https://www.facebook.com/barathy.siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *