தமிழ்ச்சமூகத்தின் பெண்ணடிமைத் தனத்திற்கு முதன்மை அடையாளமாக இருக்கக்கூடிய தாலியை மையப்படுத்தி தனது தெளிவான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் “தாலி ஒரு மாயை” நூலாசிரியர். அவருடைய வார்த்தைகளில் சொல்வதென்றால் தாலி இங்கு ஒவ்வொரு ஜாதிக்கும் என்னென்ன வடிவங்களில் உள்ளது என்பது பற்றிய கலாச்சார பண்பாட்டு ஆய்வோ அல்லது தாலி தோன்றிய வரலாறு குறித்த குறித்தோ பேசவில்லை. இன்றும் தாலியெனும் ஒரு அடையாளம் பெண்ணை எப்படி ஒரு அடிமை நிலையில் வைத்திருப்பது என்பது பற்றியே இந்நூலின் ஆசிரியர் பேசுகிறார். அவரது சிந்தனையும் எழுத்தும் அது குறித்துத் தெளிவாக விரிவாக விமர்சிக்கிறது. திருமணத்தின் அடையாளமாக ஏதோ ஒரு அணிகலன் எல்லாச் சமூகங்களிலும் எல்லா மதங்களிலும் இன்றளவும் இருந்து வருகிறது. ஆனால் இங்கு மட்டுமே திருமண அடையாளமான தாலியைப் போல் வேறெதுவும் வேறு எந்த மதத்திலும் சமூகத்திலும் கொண்டாடப்படவில்லை.