நேற்று
முன்தினம்
கடலொன்றின் கரையில்
தனித்து
நின்றிருந்தேன்.
கடல் ஓரு பிரமிப்பு
நீலதிரவகம் ஓடிக்கொண்டிருக்கும்
அகன்ற பிரபஞ்ச வெளியின்
எரிமலை
பூமியின் ஓளிக்கிரகணங்களை தன்
உடல்மீது பூசிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும்
சதுப்பு மணல் நிலம்
என் அருகே வராதே
தள்ளி நில் என்று தன் அசுர அலைகள் எழுப்பி
கடல் என்னைப் பார்த்து ஓலமிட்டது்
நீ ஓரு அற்ப பதர்
எனக்குள்ளே நீ அமிழ்ந்து காணாமல் போய்விடுவாய்
இப்போதே சென்றுவிடு என்று சொல்லி
ஆரவாரித்தது
வெள்ளிப் பளிங்கு போர்வை போர்த்திய அந்தக் ராஜகுமாரன்
இக்கணம் வாழ்வின் மீது விரக்தி கொண்ட
ஓரு அசுரனாகத் மாறிப் போனது போல
சில நேரங்களுக்கு பின்பு கடல்
வாஞ்சையுடன் என்னை நோக்கி வந்தது
அழைத்தது
தவழ்ந்து என்மேலே ஏறி வா என்றது
நான் போகவில்லை
கடலின் முன்பு
நான் தீர்மானம் எடுக்க முடியாதவளாய்
எத்தனையோ நாட்கள் நின்றிருக்கிறேன்
நிராகரிக்க முடியாமலும் தீர்மானமும் எடுக்க முடியாதவர்களும்தான்
இந்த பூமியில் அதிகம்
சபிக்கப்பட்டவர்கள்.
தன் அலைகளை தூது அடுப்பி
கடல் நித்தமும் என்னை அழைக்கும்
கடலைப் பார்த்திருந்துவிட்டு
மாலை வந்ததும் வீடு செல்வேன்
கடலலைகள் என்னை நோக்கி வரும் பொதெல்லாம்
நான் பின்னோக்கி போகிறேன்
கடல் பின்னோக்கி செல்லும் போதெல்லாம்
அதை நோக்கி நானே ஓடினேன்
இரவு நேரங்களில்
வானத்தின் எல்லைகளை
தொட்டு விட்டு மறுபடியும்
தன் பருத்த உடலை அசைத்தபடி
ஒரு மலைப்பாம்பு போன்று
கடல் என்னைத் தேடி கரைக்கு
வந்து கொண்டே இருந்தது
மறுபடியும் என்னை
அது அழைக்கும் சத்தம்
காற்றில் ஒலிக்கின்றது.
வானம் இருள்கின்ற
மழைக் காலங்களில்
கருநீல நிறமாக மாறி
அதிகமாய் என்னை
பயம் கொள்ளச் செய்தது
சூரியனையே
ஓருநாள் விழுங்கிவிடுமோ
என்று என்னை நினைக்கவைத்தது
எச்சரிக்கை உணர்வுடன்
மீண்டும் சில அடிகள் பின்னோக்கி
நின்று கடலைப் பார்க்கத தொடங்கினேன்
அந்த ஒருநாள்
கடல் பின்னோக்கி வேகமாக ஒடியது
வானத்தின் தோள்களை தொட்டது
பாறைகள் மேல் ஏறிக்குதித்தது
மணலை அள்ளி தன் மேலே பூசிக்கொண்டது.
விண்ணை நோக்கி எழுந்துநின்று
கூத்தாடியது.
மேகங்களை தனக்குள் புதைத்து
மண்ணுக்குள்
இழுத்து வந்தது
காற்றின் மீது
மேகத்தை கரைத்தது.
வெப்ப மண்டலத்தில்
மிதந்து கொண்டிருந்த
காற்றோடு தலையை
மோதி எக்காளமிட்டது
நான் கடல்
நான் கடல் என்றது
அன்று நான் விரைந்துவீடு
நோக்கி ஓடினேன்
பலத்த முழக்கங்களோடு
உருண்டையான
சின்னச் சின்னநீர்
முட்டைகளை
என்மேலே எறிந்தது
என்னை ஈரமாக்கியது.
நடக்கின்ற பாதையெல்லாம்
வெள்ளத்தை வழியவிட்டு
என் பாதங்களை புதைத்தது
நலிந்த மரங்களின்
வேர்களை அசைத்து
சுழற்றி தெருவெல்லாம் வீசியது
நான் நிற்காது
ஒடிக்கொண்டே
இருந்தேன்.
உச்சியில் இருந்து
பாதம்வரை
நனைந்தபடி
பின் இரவு வந்ததும்
வானம் முழுமையாக
இருண்ட பின்
மழை வடிந்து போனது
பூமி களைத்து
போய் உறங்கியது
நான் உறங்கவில்லை
விழித்திருந்தேன
அந்நள்ளிரவில்
எழுந்து
கடலை
நோக்கி நடந்தேன்
ஓர் ஆபூர்வமான
இனிய இசை
கடலில்
இருந்து கேட்டு
கொண்டிருந்தது.
அங்கு
சாம்பல்
நிற டொல்பின்களுடன்
தகிக்கும் நிலவொளியில்
கடல் நடனமாடிக்
கொண்டிருந்தது
நான் கடலைப்
பார்த்து கொண்டு
அங்கேயே
நின்றேன்
அது என்னை
திரும்பி பார்த்து
சிரித்தது
என்னுட ன்
வா என்றது