குமிழி பற்றிய பார்வை..சுரேகா பரம்

இயற்கை மீதான மோகம் , சமூக நேசிப்பு , கூர்மையான ஆய்ந்தறியும் ஆற்றல் , கல்வி மேல் ஆர்வம் , இவை எல்லாவற்றையும் இயல்பாகவே கொண்டிருந்த ஓர் இளைஞன் , தன் இளமைக்காலத்து நம்பிக்கைகளின் மேல் விழுந்த ஒவ்வொரு அசைவுகளையும் தன் இறந்த காலத்தின் மேல் நின்றுகொண்டு , எதிர்காலச் சமூகத்திடம் பேசுகின்ற ஓர் இலக்கிய வடிவமாகவே நான் ரவியண்ணா எழுதியிருக்கும் இந்தக் “குமிழி ” நாவலைப்பார்க்கின்றேன். தந்தையின் இழப்பிற்குப் பின்னர் குடும்பத்தினதும் அக்காமாரினதும் எதிர்காலத் தூணாக / தாயின் நிகழ்காலச் சுமையைத் தணிக்கப்போகும் ஒரு வாரிசாக ,

தன் மீது சுமத்தப்பட்ட அத்தனை சுமைகளையும் கல்வி என்கின்ற ஓர் ஆயுதத்தினாலே தகர்த்துவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் மொரட்டுவப் பல்கலைக்கழக மாணவனாக பிரவேசிக்கின்றான் அந்த இளைஞன்.இனக்கலவரத்தின் கொடூர முகங்களையெல்லாம் அனுபவிக்கும் ஆரம்ப இடமாக மொரட்டுவ பல்கலைக்கழகம் அமைந்துவிடுகின்றது. ஒரு முறை சிங்கள விரிவுரையாளர் ,கட்டடக்கலைக் கலைஞனாகும் பெருவிருப்புடன் படைப்பாக்க விளக்க வரைபடங்களுடன் போராடிக்கொண்டிருந்த சக நண்பனைப் பார்த்து , “ஏன் நீயெல்லாம் ஒரு ஆக்கிரெக்ரா வர யோசித்தாய் ? பேசாமல் போய் குண்டு வைக்கிறதைப்பற்றி யோசி “எனக் கிண்டலடிக்கின்றார்.

பிறிதொருமுறை ,சிங்கள இனத்தைச் சேர்ந்த சக மாணவ நண்பன் இவர்கள் தமிழ் கதைத்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ” பேணியொன்றுக்குள் சில கற்களைப் போட்டு அட்டகாசமாகக் குலுக்கியபடி நானும் உங்களுடன் தமிழ் கதைக்கின்றேன் ” என்கிறான். இவையெல்லாம் சிறுக சிறுக இனவிடுதலைக்கான / இனத்தின் இருத்தலுக்கான சிறகுகளை அவனிடம் முளைக்கவைக்கின்றன. 1983 யூலைக் கடைசிப்பகுதி. இரண்டாம் வருடப்பரீட்சை நிறைவுற்ற கட்டத்தில் தான் வாழ்தலின் பொருட்டான புதுப் பரீட்சைகள் அவனை வெகுவாக உலுப்பிவிடுகின்றன.இலங்கையில் மீண்டும் தாண்டவமாடிய யூலைக்கலவரம்சிங்கள மாணவர்களைத் தப்பித்து வெளியேற்றவைக்கின்றன.

அதே நேரம் அநாதரவற்ற நிலையில் அவனையும், ஏனைய தமிழ் மாணவர்களையும் தன்னந்தனியன்களாகத் தவிக்கவிடுகின்றன. ரோகண விஜயவீராவைத் தலைவராகக்கொண்டியங்கிய ஜே.வி.பியினர் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து தப்பவைத்து இரத்மலானை விமானநிலையத்திற்கு அனுப்பிவிடுகின்றனர். பொறியியல் பீட கடைசிப்பரீட்சையையும் முடித்திருந்த அயல்கிராம நண்பன் மற்றும் அவனது சக நண்பர்கள் மூவரும் டெகிவல தேவாலயத்தில் கொல்லப்பட்ட துயரச்சம்பவமும் அந்த இழப்பும் , சொந்த நாட்டிலேயே அகதியாக அனுபவித்த இதர அவலங்களும் செஞ்சிலுவைச்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடைசிக்கப்பலுடன் அவனது கட்டடக்கலை மீதான கனவுகளையும் கற்பனைகளையும் கடலுடனேயே கரைத்துவிட புதிய சிறகொன்றுடன் ஊரை அடைகின்றான். “நீயும் இயக்கத்துக்குப் போறியாம் மோனை. எல்லாரும் கதைக்குதுகள். வீட்டிலை எவ்வளவு பொறுப்பு இருக்கடா.

எங்களை நடுத்தெருவிலை விட்டிட்டுப் போயிடாதை மோனை . உன்னை ஒரு தூண் போல நம்பித்தான் இந்தக் குடும்பம் இருக்குது….” ” நான் போகயில்லை .ஆர் சொன்னது ? சும்மா ஆக்களின்ரை கதையளைக் கேட்டு ஏன் அழுகிறாய் ? “”அப்பிடியெண்டு நீ எனக்கு மேலை சத்தியம் பண்ணு “”நீ பெத்த பிள்ளையில நம்பிக்கை இல்லையெண்டால் சொல்லு. நான் சத்தியம் பண்ணுறன் “தாயைச் சமாளித்தாலும் , நான்கு அக்காமார். மிக மோசமாக வேரூன்றிக்கிடந்த சீதனமுறைமை , கரை தாண்ட முடியாத கல்விக்கான போராட்டம் , மரண அச்சங்கள் என அப்போதிருந்த சங்கிலித்தொடரான அனைத்துச் சுமைகளிலிருந்தும் விடுபட தான் தேர்ந்தெடுத்த விடுதலைப் போராட்டப் பயணம் உதவும் என்பதே அவனின்அப்போதய இறுதி நம்பிக்கையாகத் திகழ்ந்தது. தமிழ்ச்சமூகத்தில் பரவிக்கிடந்த போராட்டத்தின் மீதான நம்பிக்கைகளும் , போராளிகளைத் தமிழ்த்தேசக்காவலர்களாகவும் மீட்பர்களாகவும் காட்டிக்கொண்ட பிரச்சார உத்திகளும் அவனைப் போராளியாகவே ஆக்கிப்போட்டிருந்தது.”

எனது குடும்பத்துள் மட்டும் புதைந்திருந்த வேர்களைப் புரட்டி இந்தச் சமூகத்துள் ஊன்றிவிட்டதான நினைப்பில் மனம் ஒருநிலையில் நிலைகொள்ளாமல் தவித்தது ” என்றவாறு அவனது நம்பிக்கை வெளிப்படுத்தப்படுகின்றது.சமூகத்திற்காகப் போராடப் போகின்றேன் என்றும் , சுதந்திர சோசலிச தமிழீழ நிழலில் இளைப்பாறுவோம் என்றும் அவன் கண்ட கனவு தமிழ்நாட்டுக் கரைக்கு அவனை கொண்டுவந்து விடுகின்றது . “எல்லாரும் உங்கடை சொந்தப்பெயரைச் சொல்ல வேண்டாம். உங்களுக்கு ஒரு கழகப்பெயரைச்சொல்லுங்கோ ” அன்றிலிருந்து அவன் , ரகுவாக தன்னை ஆக்கிக்கொள்கின்றான்.எப்படியேனும் தான்ஈழத்தின் கரையில் போராளியாகக் காலடி வைப்பேன். தமிழரின் விடுதலைக் கனவை நனவாக்க பங்களிப்பேன் , போராட்டத்தில் பங்காற்றுவேன். இழந்து போன அனைத்துக்குமான வெறியை தீர்த்துக்கொள்வேன் எனக் காத்திருக்கின்ற ரகுவின் போராளி மனசு , தொடர்ச்சியாக தன் இயக்கத்திற்குள் காண்கின்ற ஒவ்வொரு சம்பவங்களாலும் நொந்துகொள்கின்றது. “யாருடன் எதைப் பகிர்வது என்பது தொடக்கம் எவன் உளவாளி , எப்போது போட்டுக்கொடுப்பான் ” எனத் தெரியாது சொந்த இயக்கத்திற்குள்ளே நிகழும் ஒவ்வொரு சம்பவமும் உளப்போராட்டத்தை மலையளவில் வளர்த்துக்கொண்டே போகின்றது.”திடீரென சவுக்கம் காட்டுக்குள்ளிருந்து ஒரு அலறல் கேட்டது. மனதில் ஆழ இறங்குகின்ற அலறல். அது நரம்புகளை கைப்பிடியாய்ப் பிடித்து இழுத்து உலுக்கியது. மரணஒலி என்று கதைகளில் படித்ததை இப்போ ரகு அனுபவித்துக்காண்டிருந்தான்.

“”நீ புலியின்ர ஆள்தான்ரா …நாயே…”உனக்கெல்லாம் என்னடா கழகத்தின்ர பெனியன்…”எழும்படா துரோகி….. வன்மமான பேச்சுக்கள் மட்டுமின்றி போராட வந்தவனையே சிதைத்துப்போடுமளவிற்கு தனிமனிதப் பகை / விரோதங்கள் இரத்தமும் சதையுமாகப் பதியப்பட்டிருப்பதுடன் சவுக்கம் மரப்பச்சை இலைகளில் இயல்பாக ஏற்படும் இச்சைகளையெல்லாம் இழுத்து எங்கோ ஒரு வெளியில் இழுத்துப்போடுமளவிற்கு சவுக்கம் காடுகள் பயங்கர உணர்வை ஏற்படுத்தி , மனதிற்கு வெகுநேர மௌனங்களைப் பரிசளிக்கின்றது.நாவலில் வரும் கஸ்ரோ என்கின்ற பாத்திரம் அந்த அமைப்பிற்குள் ஓர் சிறு ஔிக்கீற்றென படர்கின்றதும் சமூகத்திற்கு எக்காலமும் பொருத்தமான விடயங்களைப் பேசுவதும் நின்று நிதானிக்கவைப்பவை. “அரசியல் அறிவூட்டப்படாத இராணுவம் ஒருபோதும் சோசலிச விடுதலையை பெற்றுத்தரப்போவதில்லை. வெறும் இராணுவ அதிகாரம் சொந்த மக்களுக்கு எதிராகவே தனது துப்பாக்கியை திருப்பக்கூடியது .அது விடுதலை அடைந்தால் கூட அதைச்செய்யும் ” கஸ்ரோவிற்கும் ரகுவிற்குமான உரையாடல் தவிர்க்கமுடியாது நோக்கப்பட வேண்டிய ஒன்று என்பதற்கு அப்பால் கஸ்ரோ யதார்த்தமாக பேசுவதை ரகு மனதினால் முழுவாரியாகச் சுவாசிக்கின்ற போதும் , தன் நிகழ்காலத்தின் மீது தானாகக் கட்டமைத்து வைத்திருக்கின்ற தனது இறுதி நம்பிக்கையை எந்தவொரு கருத்தியலோ / சக போராளியோ உடைத்துவிடக் கூடாதபடி தன்னம்பிக்கைகளால் தன்னை ஆள்கின்றான். கதையை நகர்த்தும் பாங்கில் ஒவ்வொரு இளைஞர்களுக்குமான உரையாடல்கள் மூலம் சம கால கருத்தியல்களைப்பதிவு செய்கின்றமை வியந்துபார்க்கக்கூடியதுடன் நாவலின் நகர்விற்கு இதமாக அமைந்திருந்தது.அந்த இயக்கத்திற்குள்ளே தம்மை முதன்மைப்படுத்தித் திரிகின்ற பொதுவிதிகளைப் பின்பற்றாது அடாவடித்தனமாக அலைகின்ற சில இளைஞர்களும் வந்துபோகின்றனர்.

மொட்டை மூர்த்தியும் அவனது அடியாட்களும் விசுக்கென்று குசினுக்குள் வந்தார்கள். போதுமான இறைச்சித்துண்டுகளை அண்டாவுக்குள் சுழியோடி எடுத்துக்கொடுத்தார்கள் , சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள்……. “……….”ஏன்ரா இவங்கள் லைனில நிண்டு சாப்பாடு வாங்கிச் சாப்பிடப் பழகயில்லையா ? இரகசியமாய்ப்பேசினான் ஆனந்தன்.”சந்ததியாரைப் போல ஆரும் சோசலிசம் பேசுற ஆக்களுக்குத்தான் அதெல்லாம் ..” மேலும் சமூகத்தில் கட்டவிழ்ந்து காணப்பட்ட சாதிய வேறுபாடுகள் , பால்நிலை அசமந்தப்போக்குகள் , கடவுள் , மதம் , காதல் ,வேட்கை , இளம்பருவத்து உணர்வுகள் இவை பற்றியும் நாவல் பேசுகின்றது. ரகுவின் ஆற்றலும் இயல்பான முனைப்பும் தன்னார்வமும் அவனைஜோனாக மாற்றுகின்றது. புதிய பெயருடன் தொலைத்தொடர்பு முகாமிற்கு வானொலி தொலைத்தொடர்புக்கருவிகளுடனான பயிற்சிக்கெனச் செல்கின்றான். அவனுக்கு இந்த இடம் வித்தியாசமான ரம்மியமான சூழலை ஏற்படுத்துகின்றது. இயற்கை மீதான அவன் ஈடுபாடுகளை யோகனின் “உனக்கு இந்த நிலாவிலை அதுவும் ஆற்றங்கரையில கவிதை வரோணுமே ” என்ற வார்த்தைகள் வெளிக்கொணர்கின்றன.அந்த முகாமின் அருகே பெண்களுக்கான முகாமும் இருக்கின்றது. பெண் தோழர்களுக்கு ஆங்கில வகுப்பு எடுக்கும் பொறுப்பும் ஜோனை வந்தடைகின்றது. அங்கு தான் இளமைதனது இன்னுமோர் சிறகைக் கொடுத்து அங்கேயே முறித்தும் போடுகின்றது. அங்கிருந்த மாலி என்கின்ற பெண்ணை மனதால் நேசிக்கின்றான்.

காதலைத் தெரியப்படுத்தினாலே எதுவும் நேரலாம் என்கிற பயம் , அதை விட மாலி தன்னை விரும்புகின்றாளா என்பதை அறிய எடுக்கும் மென்னுணர்வுப்போராட்டம். இதெல்லாம் மனதை வலிகளுடனும் கண்ணை ஈரத்துடனும் ஏனோ கடக்கவைக்கின்றன. “தனது இலட்சியவாத மூட்டையை மழையில் நனைத்து சுமக்கமுடியாமல் சுமந்துசென்றான் அந்த முட்டாள் ஜோன்..” இளமைக்காலத்து கனவுகள் எதுவுமே அவன் வசமாகியிருக்கவில்லை என்பதே நாவல் முழுவதும் துரத்திவருகின்ற துயர் .மீதியாக இருந்த துளி நம்பிக்கைளும் ஒன்றன் பின் ஒன்றாக மறைய மத்திய குழு / உட்கட்சி போராட்டம் என அனைத்தையும் அவன் அறிகின்றான். தலைமை மீதிருந்த நம்பிக்கையும் கண்முன் சரிகின்றது. உளவாளிகளைக் கூட ஊகிக்க முடியாமல் கையருகே வைத்துக்கொண்டு உண்மையான போராளிகளிடம் சந்தேகித்து துரோகியாக்குகின்ற தன்மைகள் எல்லாம் அவனை தொடர்ச்சியாக கேள்விக்குட்படுத்துகின்றன. இத்தகைய கொடூர சம்பவங்களைக் கண்ணுற்ற நேரங்களில் “சமூக விரோதி,துரோகி ” என இராணுவ முகாம் இருந்த பெரு வீதியால் நடந்து வந்தவனைக்கூட கார்ட்போர்ட் மட்டையில் சமூகவிரோதி என அடையாளப்படுத்தி மின்கம்பத்தில் தொங்க வைத்து நெற்றியில் சுடுகின்ற இயக்கமும் கண்முன் வந்துபோவதையும் ரகு நினைத்துப்பார்க்கின்றான். இனந்தெரியாத நபர் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் கொலைகளையெல்லாம் ஏனோ ஞாபகப்படுத்துகின்றான்.ஆக அவனுக்குத் தொலைதூரம் தெரிந்த குமிழிகள் ஒவ்வொன்றும் எட்டிப்பிடிக்க , எட்டிப்பிடிக்கவென கிட்ட நெருங்கித் தொட்டுப்பார்க்கையில் தான் வெற்றுக்குமிழிகளாகிஅவனது இளமைநாட்களையே நொறுங்க வைத்துவிடுகின்றமையை உணர்கின்றான்.

கடைசியில் ஈழக்கரைக்கு வந்தவன் தன் மறுகரை வாழ்வு ஏற்படுத்திய குமிழிகளுடன், இன்னமும் தமிழ் விடுதலைக்கனவுகள் நனவாகும் என்ற காத்திருப்புடன் இயங்கிக்கொண்டிருந்த மக்களையும் ,போராளிகளை மண்ணிற்கு ஈந்தளித்த பெருமையுடன் வாழ்நாட்களை எண்ணும் போராளிகளின் பெற்றோரையும் எண்ணி வெந்துபோகின்றான். “இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்தியபடி முழங்கையை தொடையில் ஊன்றியபடி தேம்பி அழ ஆரம்பித்தேன் ” ஓர் பெண் போராளியின் தாயருகே தன் அத்தனை கால மௌனவலிகளையும் போட்டுடைக்கின்ற போதே அவன் ஓர் புதிய பாதைக்குத் தனக்காக /தன் குடும்பத்திற்காக / தன் இளமைக்காக / தன் இருத்தலுக்காக /தன் வாழ்விற்காக தன்னை தயார்ப்படுத்திவிடுகின்றான். புலம்பெயர் தேசத்தில் மனைவி பிள்ளைகள் என தன் வாழ்நாட்களை அழகாக்கியபோதும் மனதில் மாறாதவடுக்களாய் இன்னமும் இளமைக்கால இழப்புகளும் ஏதோவொரு குற்றவுணர்வும் இயல்பான உறக்கத்தை நெருடியே செல்கின்றது என்பதுடன் நாவலை முற்றுப்பெறவைக்கின்றது.

ஆனாலும் “எங்கையடா அவன் …. குறுக்காலை போவானே… எங்கையடா கொண்டுபோய் விட்டனி …… என்ற சக போராளி ஒருவனின் தாயின் கதறலில் , ஈழப்போராட்டத்திற்கென தம் அரிய நாட்களை அர்ப்பணித்து இன்றும் கூட எதனையும் அனுபவிக்கமுடியாது இழந்த இழப்புக்களினை ஈடுசெய்யவியலாது அலைந்துலையும் முன்னாள் போராளிகளும் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதியும் ஏனோ மனதிற்குள் அகப்பட்டு கனதிகளைத் தந்துசெல்கின்றமை நாவல் முழுமைக்குமான வெற்றியாக நான் பார்க்கின்றேன். இந்த இடத்திலிருந்து நகர எனக்கு இன்னும் எடுக்கப்போகும் நாட்களே இதற்குச்சாட்சி .”இலக்கியவாதி என்பவர் எதிர்காலத்துடன் மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு நபர். அவன் உரையாடுவது உங்களிடம் அல்ல. உங்களின் அடுத்த தலைமுறையினரிடம் தான் ” (பக் _ 108 என்கதை _ கமலாதாஸ் )தன் இளவயது வாழ்க்கையின் இடறல்களை தன்கதை கூறலாக மாத்திரமன்றி மொழிநேர்த்தியுடன் வாசகர்களைக் கவரும் வகையில் கட்டமைத்திருக்கும் ரவியண்ணாவின் இந்தக்குமிழி நாவல் , எதிர்காலச் சந்ததியினருக்கான ஆவணமாக மட்டுமன்றி வரலாறு வழி வந்த வழிகாட்டியாகவும் அமையும் என நம்புகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *