பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சுகாதார பாதுகாப்பு துவாய்க்கும் வரிகளை அதிகரித்து பெண்களை நெருக்கடிக்குள் தள்ள அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக சபையில் ஆளும் – எதிர்க்கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி போர்க்கொடி தூக்கினர்.
நாடாளுமன்றத்தில் இன்று (24) இது குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் டயானா கமகே கூறுகையில், இந்த நாட்டில் 52 சத வீதமானவர்கள் பெண்கள். இவர்களின் சுகாதார மற்றும் மனிதாபிமான பிரச்சினையாக ஒரு விடயம் மாறியுள்ளது. அதாவது பெண்கள் பயன்படுத்தும் சுகாதார பாதுகாப்பு துவாய்க்கு 15 வீத வற்வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது பெண்களின் அத்தியாவசிய தேவை, அதுமட்டும் அல்ல இந்த நெருக்கடியான நிலையில் நாட்டில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகளில் 50 வீதமானவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதில்லை. எனவே, இது சுகாதார ரீதியில் பாரிய பிரச்சினை. எனவே இதனை அத்தியாவசிய தேவையாக கருதி இதற்கான வரியை நீக்க வேண்டும் என ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நாட்டின் சகல பெண்களின் சார்பிலும் தாழ்மையுடன் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன் என்றார்.
விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹினி குமாரி விஜயரத்ன கூறுகையில், 1848 ஆம் ஆண்டு டொரிங்டன் ஆளுநர், நாய்களுக்கு வரி விதித்ததை போல இந்த அரசாங்கம் மாதவிடாய்க்கு வரி அறவிடும் நிலைமை உருவாகியுள்ளது. பாடசாலைக்கு செல்லும் பெண் பிள்ளைகளில் பலர் தமது மாதவிடாய் காலங்களில் மருத்துவ துவாய்களை பெற்றுக்கொள்ள முடியாது வீடுகளில் உள்ளனர் என்றார்.
ஆளும் கட்சி உறுப்பினர் கீதா குமாரசிங்க கூறுகையில், இந்த நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும், அதனை இந்த அரசாங்கம் செய்யும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அரசங்கம் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தியாக வேண்டும் என்றார்.
Thanks
http://metronews.lk/article/120273?fbclid=IwAR1S5RL3u99HQ2z8ljxCW2PO8uExxU3YbW8zRr38YRhjdIPIfUU0h7yP6Zo