போர்க்கால இலக்கியங்கள் தேவைக்கதிகமாக மலிந்தே காணப்படுகின்றன என்பதிலிருந்து ஒவ்வொரு கதைகளும் போரையும் போருக்குப் பின்னரான வாழ்வையும் எடுத்தியம்பி வாசகர்களின் மனங்களில் பதிந்தே உள்ளன. போருக்கான காரணங்கள் அதை முன்னெடுத்தவர்களின் நோக்கம் என்பவற்றைத் தாண்டி அதற்காக தங்களது வாழ்வையும் எதிர்காலத்தையும் பணயம் வைத்த இளைஞர யுவதிகளைப் பற்றி சிந்திக்க இங்க யாரும் இல்லை. அவர்களை வைத்து அரசியல் இலாபம் தேடும் சுயநலவாதிகளே அதிகம்.
அவர்களின் எதிர்பார்ப்புகளும் அதற்காக அவர்கள் கொடுத்த அவர்களின் வாழ்வும் விலைமதிப்பற்றவை. ஒரு காலத்தில் ஆயுதம் தூக்குவது கௌரவமாகவும் பெருமையாகவும் நினைத்து இயக்கத்தில் சேர்ந்தவர்கள் கூட ஒரு கட்டத்தில் இயக்கத்தை விட்டு வெளியேறத் துடித்து காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதையும் தைரியமாகப் பதிவு செய்கிறது இந்நாவல். சுவிஸில் வாழும் ரவிந்திரன் அவர்களால் அவரது அனுபவக் குறிப்புகளின் துணையுடன் எழுதப்பட்ட இந்நாவல் அவர் சிக்கிய குமிழி பற்றியதாகத் தென்பட்டாலும் ஆயுதப் போராட்டத்திற்காக தமது கடமைகளையும், பொறுப்புக்களையும் ,உறவுகளையும் கைவிட்டு இயக்கங்கள் என்ற பெயரில் மாயா ஞாலம் காட்டிய பல குமிழிகளில் சிக்கி அலைக்கழிந்த பல இலட்சக்கணக்கான இளைஞர் யுவதிகளின் வாழ்க்கை என்றும் பார்க்கலாம் போர்ச் சூழலில் வாழ்ந்தவர்களும் ,போரில் களம் கண்டவர்களும், போருக்குப் பின்னர் வாழ்ந்தவர்களும் என்று பலரும் தம் அனுபவங்களை கவிதைகளாகவும்,கதைகளாகவும், நாவல்களாகவும் பதிவு செய்திருந்த போதிலும் ரவி அவர்களின் நாவல் அந்த வரிசையில் நின்று வேறுபடுவதை உணரக் கூடியதாக இருந்தது. 1976 இல் தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முதல் இலங்கையின் இளைஞர்கள் யுவதிகளின் குருதிகளில் எல்லாம் தமிழீழம் ஊற ஆரம்பித்தது. அதற்காக தமிழ் இனம் பிளவு பட்டு குழுக்களாகப் பிரிந்து யார் முதலில் தமிழீழத்தைப் பெற்றுக் கொடுப்பது என்ற போட்டியில் தம் தோழர்களையும் தம் இனத்தவர்களையும் அழித்த கொடூரம் பற்றியும் இந்நாவல் பேசுகிறது.
இவ்வாறாக 1970 இல் தொடங்கிய ஆயுதப் போராட்டம் 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது வரை சொந்த இனங்களாலும் எதிரிகளாலும் எத்தனை எத்தனை இழப்புக்கள். புலத்தில் கிடைத்த ஆதரவால் இயக்கங்கள் புற்றீசல்கள் போலே உருவாகிய அதே வேளை இறுதியில் இயக்க அச்சுறுத்தலில் இருந்த இயக்க உறுப்பினர்களுக்கும் புலமே அடைக்கலம் கொடுத்து காத்து வருகின்றது என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும். ரவிந்திரன் அவர்களின் எழுத்துக்களில் அங்கங்கே சுவாரசியங்கள் நிறைந்திருந்து இரசனை மிகுந்த ஒருவராக அவரை எனக்கு இனங்காட்டியது. கவித்துவமான சொல்லாடல்களால் சில இடங்களில் மெய் சிலிர்க்க வைத்தார். முகங்களை வாசித்தல் மிகவும் அற்புதமான வாசிப்பு. அது பலருக்கும் வாய்ப்பதில்லை என்பேன்.அதைப் பற்றி அடிக்கடி பயன்படுத்தியிருந்தார். அதே வேளை ஒரு இடத்தில் “பார்த்திராத கால இடைவெளியை இறுக அணைத்து உதிர்த்துக் கொட்டினர்”என்று குறிப்பிட்டிருப்பார். எத்தகைய ஒரு படிமம் அது. இன்னுமொரு சந்தர்ப்பத்தில் தாய் பேசாமல் இருந்த பொழுதினை பேசினாள் என்று எழுதியிருப்பார்.
எப்படியெனில், “மௌனத்தை ஒரு மொழி போல் பேசியபடி நடமாடுவதை அவதானித்தேன்” என்பதாக அதை முடித்திருப்பார். மேலும், தனது மகன் போய் விடுவானோ என்ற பயத்திலும் அது குறித்து கேள்வியெழுப்பினால் உண்மையில் அவசரமாக கிளம்பிவிடக் கூடும் என்ற பயத்திலும் அந்தத்தாய் வெறும் பார்வையை மட்டும் அவன் பக்கம் அடிக்கடி வீசிக் கொண்டிருந்தாள் என்பதை,”பலமற்ற இழைகளால் மேலும் மேலும் தன் பார்வையை பின்னத் தொடங்கியிருந்தாள்” என்பார். உண்மையில் இந்நாவலில் இவ்வாறான பல சொற்றொடர்கள் என்னைக் கவர்ந்திருந்தன. தந்தையை இழந்த ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளைகளுடன் ஒரே ஒரு ஆண் பிள்ளையை பெற்ற ஒரு தாயின் எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கக் கூடும்? அதைத் தெரிந்திருந்து ஒரு குடும்பம் மட்டும் நம்மதியாக இருப்பதில் என்ன திருப்தி? எல்லாக் குடும்பங்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற ஒரு நப்பாசையிலும் அதற்கு தம்மைப் போன்ற இளைஞர்களின் வீரம் தான் தேவை எனவும் நம்பி இயக்கத்தை நாடிய இளைஞன் தன் நம்பிக்கை எனும் கண்ணாடியில் விழுந்த சம்மட்டி அடியால் நொருங்கிப் போய் பிற தேசத்தில் தஞ்சம் புகுதல் என்பது எவ்வளவு வேதனை தரக் கூடியது. எத்தனையோ வருடங்களாக தன் ஆழ்மனதில் போட்டு வெதும்பிக் கொண்டிருந்த இக்கதையை நாவலாக எழுதிக் கடக்க முயற்சித்திருக்கிறார் ரவிந்திரன் அவர்கள். இயக்கத்திற்கு தான் சென்று விட்ட போது தன் வீட்டு வேம்பும் கண்ணீர் விட்டிருக்கும் என்ற கற்பனை கூட மனதைப் பிசந்தே சென்றது.
நம்பிச் சென்ற இயக்கத்தில் தன் சொந்தப் பெயரையும் இழந்து தன் சுயத்தையும்இழந்து இருந்த பொழுதுகளையும் அதன் பின் அதிலிருந்து மீண்டு சென்று ஒருவாறாக உயிர் தப்பி நாவல் முடிவுறும் தருணத்தில் ஒரு கெட்ட கனவில் இருந்து விழித்துக் கொண்டதாக என்னை உணரச் செய்தார். கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிப்பவர்கள் அதில் இருந்து தம்மை விலத்தி வைத்துக் கொள்வதால் எழும் அதிருப்தியும் கூட ஒரு வித தோல்விகளுக்கு காரணமாக அமைகிறது. இக்கழகத்தில் தலைமைப் பொறுப்பாளர்களின் நடவடிக்கைகளும் சக தோழர்களிடம் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும் அதிகாரத் தோரணைகளும் அக்கழகத்தின் கொள்கைகளுக்கு துளியளவிலும் பொருந்தவில்லை. இது குறித்தான கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களும் வதைகளுமே மிச்சம்.ஒரு சித்திரவதைக் கூடமாக விசாரணை அறை இருந்தது என்பதை வாசித்த போது ஒருவித பயம் என்னை ஆட்கொண்டது.இவ்விடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற இந்திரனுடன் நானும் ஓடிக் கொண்டிருந்தேன். இறுதியில் அவன் மாட்டிக் கொள்ளவும் கோவென அழ வேண்டும் போல் இருந்தது. பயிற்சியின் போது உடலில் ஏற்படும் உணர்வுகளையும் மனதில் ஏற்படும் உணர்வுகளையும் கட்டுப்படுத்தவென அவர்கள் ஒவ்வொருவரும் பட்ட சொல்லொனாத் துயரங்களை வாசித்தறிய முடிந்தது. இவர்கள் பலியாடுகளாகவே வளர்க்கப்பட்டவர்கள். சுதாகரித்துக் கொண்டு தப்பியவர்கள் மண்ணுக்காகப் போராடப் போய் சொந்த மண்ணில் வாழும் தகுதி மறுக்கப்பட்டு புலத்தில் வாழ்கிறார்கள்.ஏனையவர்கள் மண்ணுக்காக மண்ணுக்கு இரையானார்கள். கற்க வேண்டிய கல்வி,வாழ வேண்டிய வாழ்க்கை, செய்ய வேண்டிய கடமைகள் ஏற்க வேண்டிய பொறுப்புக்கள் என எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு காலங்கள் ஓடி விட்டிருக்கின்றன. பெருமிதமாக நினைத்ததெல்லாம் அச்சத்தை விழைவிக்க, சொந்த இனத்திடம் இருந்து தப்ப முயன்ற பொழுதுகள் கொடுமையானவை. தவறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்குவதும் வீதியில் சுட்டு வீழ்த்தி விட்டு பிற இயக்கங்கள் மேல் பழி போடுவதும் என உட்பூசல்களால் நிறைந்த எந்தவொரு குழுவும் வெற்றி பெற வாய்ப்புகள் குறைவு தான் என்பதை இந்நாவல் அரசல் புரசலாகச் சொல்லிச் செல்கிறது. இனந்தெரியாதோர் என்பவர்கள் ஏதோ வேற்றுக்கிரக வாசிகள் போல என நக்கலாகச் சொன்னது சிரிப்பை வரவழைத்தது. என்னதான் தோழர்கள் என விழித்தாலும் பெண்களுக்கு என அங்கு கட்டுப்பாடுகள் இருந்ததையும் குறிப்பிடத் தவறவில்லை. எது எப்படியோ ரகு என்றும் ஜோன் என்றும் பெயர்களை மாற்றிக் கொண்டு வலம் வந்தாலும் அங்கு ரவி ரவியாக மட்டுமே வாழ்ந்ததால் பிறந்த நாவல் இது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.