குமிழி நாவலாசிரியர் ரவி தன்னுடைய இளவயது அலைக்கழிவை (அவருடைய மொழியில்) நாவலாக்கியிருக்கிறார். அவரின் “இளவயது அலைக்கலைவை” உரிமைக்காக போராட துணிந்து,அது போராட்ட தலைமைகளின் தகுதியற்ற போக்கினால் உடைந்து,நைந்து நுாலாகி-கனவாகி-திரும்ப பெறமுடியாதுபோன பல இளமை உயிர்களை வீணாகப் பறிகொடுத்த போர்க்கால பதிவு இலக்கியம் ஆகும். நடந்தவைகளை எழுதிவைத்திருந்தும்அது எரிந்துபோன துயரம் ஆற்றமுடியாதது.
ஆகவே ஆங்காங்கே நினைவுகளில் தொக்கி, உறைந்து போயிருக்கும் சம்பவங்களை உருட்டி சீர்படுத்தியிருப்பதாக நாவலாசிரியர் கூறுகிறார். வாழ்வின் சிறந்த பகுதியான இளமைப்பருவத்தில் நேர்ந்த உடல், உள ரீதியான பாதிப்புக்கள் வாழ்நாள்பூராக தொடர்வன. அவற்றை அனுபவித்தோருக்கே அந்த வேதனைகளை வெளிப்படுத்த முடியும்.
நிசவாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்கள் நினைவை விட்டு அகலாது மனதில் ஆணி அறைந்திருத்தல் போன்று நிலைத்திருக்கும். அந்த கருகிப்போன காலத்தை நாவலாசிரியர் குமிழியில் மீட்டிருக்கிறார்.
“உடலை வன்முறைக்குள்ளாக்குவது மூலம், மூளையுள் மாற்றத்தை கொண்டுவரமுடியும்” என்ற வழிமுறை போர், புரட்சி காலங்களில் கடைப்பிடிக்கப்படுவன-பட்டன. போரற்ற போதும் கடைப்பிடிக்கப் படுகின்றன
களத்துள் தானாகவே இறங்கி, அங்கு நடந்த இம்சைகளால், மனமுடைந்து, சிதைந்து, பின்னர் தானாகவே அங்கிருந்து தப்பியோடுதல் நிகழ்கிறது. வன்முறையின் கோரத்தை நாவலை வாசிக்கிறபோது அதிர்ச்சியும், வேதனயும் நம்மை அலைக்கழிக்கிறது. பயிற்சிமுகாம் தந்த வன்கொடுமைகளை குமிழி நிர்வாணமாக முன்வைத்திருக்கிறது. தன் சொந்த உறுப்பினர்களையே அடித்து, உடைத்து, நொறுக்கிய இயக்கம், மாற்றுக் கருத்துள்ளவனை எப்படியெல்லாம் ஓடஓட விரட்டியிருக்கும்? கொலை பண்ணியிருக்கும்? நாவலை வாசிக்கும்போது, இது மனசுள் கேள்வியாக முளைக்கிறது.
“சோசலிசத்தை படம்,, காட்டிக்கொண்டு ஒரு அமைப்பை வளர்த்தெடுக்க முடியாது” என்பதை உரத்து சொல்கிறது நாவல். தோற்றுப்போன அல்லது, இயக்கத்தின் வரலாறை இந் நூல் வெளிச்சமாக்கியிருக்கிறது.
சோசலிச புரட்சி தவறானது என்பதல்ல வாதம். அதை நடைமுறைப் படுத்துவதில் உள்ள சிக்கல் ரொம்பவும் சிக்குப் பிடித்தது. அதனை வரலாறும், இன்று வாழ்கிற அதிகார ஆட்சிகளும் மெய்ப்பிக்கின்றன.
//தாக்குதல் நுட்பங்களை விட, மிக கடுமையான பயிற்சியை அளிப்பது மட்டுமே பயிற்சியாளர்களுக்கு தெரிந்திருந்தது//
//சவுக்கம் காட்டிலிருந்து எழுந்த அலறல் நரம்புகளை கைப்பிடியாய் உலுக்கின. மரணஒலி கதைகளில் படித்திருந்தாலும், மனிதர்களின் வலி ஒலி இவ்வளவு குரூரமாயும்ஒலிக்கமுடியும்என்பதை அங்குதான் அறிந்தேன்//
//நாட்டுக்காக எல்லாத்தையும் விட்டிட்டு வந்திருக்கிறியள். பெருமையான விடயம். கொஞ்ச நாளைக்கு பொறுத்துக் கொள்ளத்தான் வேணும். விடுதலைக்கு போராடுறதெண்டால், நாம் சிலதுகளை இழந்துதான் ஆகணும். உறுதியாய் இருங்கள்//
உணர்ச்சிமயமான வசனங்கள் தலைமைத்துவங்களை காப்பாற்றத்தான் பயன்பட்டது. அறத்தை நேசித்த இளைஞருக்கோ தாம் தேடிய குறிக்கோளின் ஒரு சிறு துளியைக்கூட அடையமுடியாது போனது.
நெஞ்சை வலிக்கச் செய்யும் வன்முறைச்சம்பவங்களுக்கு சாட்சிகளாக ரகு, யோகன், ஜோன், பரமானந்தன, லியோ, ஈசன், அன்ரனி, காந்தன், இனியா, இதரா… என நீண்டுகொண்டே போகின்றனர். இவர்களின் “தமிமீழம்” அவர்களின் போர்ப் பயிற்சி காலத்திலேயே “குமிழி” யாய் தோன்றியிருந்தது. இது நாவலின் தலைப்பாக தேர்ந்தெடுத்திருப்பது சிறப்பாய் எனக்கு தெரிந்தது.
நாவலின் முகப்புப் படம் ஒருகலைப் படைப்பு. ரவியின் புதல்விகளின் கற்பனை சித்திரம். ஒரு நிழல்போல நாவலாசிரியர். தூரத்தே தெரியும் மலைக்குன்றின் தோற்றங்களுக்கு ஒப்பான கனமான நினைவுகள். அவைகள் தொலைவில். ஆனால் ஆழமாக மனதில் உறைந்திருக்கும் வேதனைப் புண்கள். கருமுகில் நிறத்தில். நிறைவேறாமல் போன விடுதலை என்கிற நுண்ணிய மொழி பேசப்பட்டிருக்கிறது.
கவிஞரின் கவிதை மொழி நாவல்பூரா பேசுகிறது. கவிஞர் இயற்கை அழகில் துய்க்கிறார். கிண்டலும், கேலியுமாய் நாவல் தொடர்கிறது. யாழ்ப்பாண மொழியுடன் கலந்த நகைச்சுவை. எல்லாவற்றையும் இழந்த கையறு நிலையிலும் எள்ளல் தெறிக்கிறது. இயக்கத்துக்காகவே தம்மை அர்ப்பணித்த பல இளஞர்களின்-இளைஞிகளின் வரலாறே குமிழி.
ஆடு மேய்ப்பாளராக இருந்த ஒரு கிழவி இயக்கபோராளிகளுக்கு கடுமையான வெயிலில் பயிற்சியாளர் தரும் கொடுமையான பயிற்சியை கவனித்தாள்.
“நாசமாய் போவானை.இந்தப் புள்ளைங்கள இப்புடி வதைக்கிறியே” என்றபடி மண்ணை வாரிக் கொட்டி பயிற்சியாளரை திட்டினாள்.
யாரோ ஒரு பிள்ளைக்காக, யாரோ ஒரு தாயின் பாசம் ஓங்கி ஒலிக்கிறது .தாய்ப் பாசத்துக்கு முன்னால் கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்கள் உடைந்து சிதறுண்டு போகின்றன. தாய் அன்பு இயக்கத்துக்காக சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போன பிள்ளைகள் வெறும் கையோடு திரும்பி வந்தபோதும் மன்னித்து அணைத்து காப்பாற்றியது.
அந்த அன்னையர்தான் இன்றுவரையிலும் காணாமல் ஆக்கப்பட்ட, கொலை செய்யப்பட்ட தன் பிள்ளைகளுக்காக ஓயாத போராட்டம் செய்து கொண்டிருக்கின்றனர்.
பெண்விடுதலை, சாதியம் என பல தளங்களிலிருந்தும் பேசும் குமிழி ஒரு இயக்ககால, விடுதலைப்போராட்ட வரலாறை வெளிக்கு கொண்டு வந்து, அந்த அரசியலை விமர்சிக்கிறது. விவாதிக்கப்பட வேண்டிய பல விடயங்களை முன்மொழிந்திருக்கிறது.