ரவியின் குமிழியை இன்றுதான் படித்துமுடித்தேன். மனத்தை வெகுவாகப் பாதித்தது. இயக்கத்தின் முரண்கள், வன்முறை, அழித்தொழிப்பு இவற்றோடு அல்லாமல் இளம் வயதினரின் லட்சிய வெறியும் அதே சமயம் இயக்கத்தைக் குறித்த அவர்கள் ஐயங்கள், அந்த வயதுக்கு உரிய ஏக்கங்கள், முளைவிடும் காதல்கள், எதுவுமே இல்லாமல் வெறும் சவுக்குக் கொம்புகளுடன் அவர்கள் பெற்ற “ராணுவப்” பயிற்சி, அதன் கொடுமைகள் இவற்றுடன் அவர்கள் விட்டுச் செல்லும் அம்மாக்கள் மற்றும் அக்கா தங்கைகளின் சோகமும் அவர்கள் அழுகையும் மனத்தில் பெரிய கனத்தை ஏற்றி வைத்தது. நக்ஸல் இயக்கம் பற்றிச் சொல்லும்போது அதை romanticize செய்து வரும் கதைகள்தான் அதிகமாகக் கூறப்படும். ஆனால் கொண்டப்பள்ளி கோடேஸ்வரம்மா (கொண்டப்பள்ளி சீதாராமய்யாவின் மனைவி) எழுதிய சுயவரலாறு இயக்கத்தினுள் இருந்த பல ஓட்டைகளையும் அழித்தொழிப்பையும் சுட்டிக்காட்டியது. பானி பாஸு என்ற எழுத்தாளர் எழுதிய The Enemy Within என்ற நாவலும் அந்தத் தீவிர இயக்கத்தின் தோல்விகளைச் சுட்டிக்காட்டியது. ரவியின் புத்தகம் எழுதும்போது அவர் கண்ணீர் வடித்தாரா என்று தெரியவில்லை. கண்ணீர் உலர்ந்துபோயிருக்கலாம். ஆனால் நான் பல இடங்களில் கண்ணீரைத் துடைத்தவாறுதான் படித்தேன் மானசீகமாக ரவியின் தலையைத் தடவியபடி
குமிழி- நாவல் மீதான வாசிப்புகளும் விமர்சனக் குறிப்புக்களும் இந்த இணையத்தில் பார்வையிடலாம்.