தண்ணீர்க்குடம் உடையும் போது காலை பத்து மணி. அவள் முழித்திருந்தாலும் கண்கள் திறக்காமல் சரிந்து படுத்திருந்தாள். வெது வெதுப்பான சுடு தண்ணீர் போல ஒரு திரவம் கால்களை நனைத்து மெலிதாக கோடு போட்டபடி வழிந்தது. முதலில் சிறுநீர் தான் என்று நினைத்தாலும் என்னவாயிற்று திடீரென்று என்பதான ஒரு சந்தேகத்தில் எழும்பி குளியலறைக்குள் நுழைந்தாள். படித்திருந்த விஞ்ஞான அறிவு இது தண்ணீர்க்குடம் என்று சொல்லியது. ஒரு விதமான வலியும் தோன்றவில்லை. வலி எப்படி இருக்கும் என்றும் தெரியாது, ஏனெனில் இது தான் முதல் பிள்ளை. இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது என்றபோதும் சற்றே முன்னே பின்னே ஆகும் என்றதும் அவளுக்கு தெரியாமல் இல்லை. குழந்தைப்பேறு விடுமுறை காலம் அன்று தான் தொடங்கியிருந்தது. முதல் நாள் கூட வேலைக்கு போய் விட்டு வந்து இன்னும் இரண்டு நாள் கொஞ்சம் ஓய்வாய் இருக்கலாம் என்று இருந்த போது இப்படி தொடங்கியது கொஞ்சம் ஏமாற்றமாய் இருந்தது. ஆனாலும் ஏதோ ஒருவித நிம்மதி நெஞ்சில் பரவாமல் இல்லை.
ஷவரை இயக்கி சூடு உணரக்கூடிய மாதிரி தண்ணீரில் தலையை நனைத்தபடி யோசித்தாள். இனி ஹாஸ்பிடல் போக வேணும். அதுக்கான பையை நேற்றிரவு தான் கணவனோடு சேர்ந்து அடுக்கி முடித்திருந்தாள். நேற்று பின்னேரமாய் நடை பயிற்சி முடிந்து வரும்போது ஏதோ ஒரு மாற்றம் உணரப்பட்டதுதான். தோலில் ஒரு சின்ன கீறல் விழுந்தால் வரும் வலி போல கண நேரத்துக்கும் குறைவான பொழுது உணரப்படட மெல்லிய வலி அது. என்னவோ உள் மனம் சொல்ல இரவே எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டாள். ஷவரில் இருந்து வெளியில் வந்து தலை துவட்டிய படியே கணவனை அழைத்து விபரம் சொல்லிக் கொண்டாள். அவன் எழுபது நிமிடங்கள் அளவு காரில் வந்தால் எடுக்கும் தூரத்தில் வேலையில் இருந்தான். அவன் வந்து ஹாஸ்பிடல் போகும் அளவுக்கு காத்திருப்பதில் எந்த சிக்கலும் வந்துவிடப் போவதில்லை என்று தோன்றியது. அனால் அவனது மனத்திருப்திக்காக ஒரு டாக்ஸியை பிடித்து போய்விடுவதாய் சொல்லி விட்டு போனை வைத்துவிடடாள். மாடிப் படிகள் இறங்கி வந்தால் குழந்தையின் கார்சீட்டின் நினைவு வந்தது. அதில்லாமல் குழந்தையை வீடு கொண்டுவர முடியாது. உடைக்காமல் அப்படியே இருந்த அந்தப் பெட்டியுடன் போராடி ஒரு மாதிரி அதை வெளியில் எடுத்துக் கொண்டு டாக்ஸியில் ஏறும் போது மணி பதினொன்றரை ஆகிவிட்டிருந்தது. தண்ணீர்க்குட நீர் மாதவிடாயின் முதல் முதல் நாள் அளவுக்கு வெளியேறிக்கொண்டிருந்தது. பெரிதாக ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.
ஹொஸ்பிடலில் ஒன்றும் சொல்லாமல் சேர்த்துக் கொண்டார்கள். குழந்தை பிறக்க இன்னும் ஒரு நாளாவது ஆகும் என்று சொன்ன போது சோர்வாக இருந்தது. எப்படி எப்படியெல்லாமோ மனதை தயார் செய்திருந்தாலும் காத்திருத்தல் எப்போதும் இலகுவாய் இருப்பதில்லை தானே. எதற்குதான் காத்திருக்க யார்தான் தயாராகவிருக்கிறார்கள். ஏன் இந்தக் குழந்தை தங்கக்கூட அவள் காத்திருக்கவில்லை. அவளுக்கு எப்பவும் எல்லாமே உடனே உடனே நடக்க வேண்டும். நினைத்ததை சாதித்த பழக்கம் அவளை இம்சைப் படுத்தியது. தாதி வந்து சும்மாயிருக்க வேண்டாம் என்று நடக்க சொன்னபோது எரிச்சல் வந்தது. இனியில்லை என்ற ஒரு சந்தர்ப்பத்தில் தான் சிசேரியன் செய்து குழந்தையை வெளியில் எடுப்பார்கள் என்பதை அறிந்தே இருந்தாள். இன்னும் ஒரு நாள் இந்த தாதிமார்களை, ஹாஸ்பிடல் அறையை சகித்துக் கொண்டிருக்க இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, நடந்தால் கொஞ்சம் சீக்கிரமாக குழந்தை பிறந்து விடும் என்ற ஆசையும் சேர வெறி பிடித்தவள் மாதிரி நடக்க தொடங்கினாள்.
கணவன் பாவம், வேறு வழியில்லாமல் அவள் கையைப் பிடித்தவாறும் அவளது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாவிடில் பின்னேயாய் திரிந்து கொண்டிருந்தான். குழந்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இறங்கி வரும் போது இரவு பத்தரை ஆகிவிட்டிருந்தது. அதுக்குள் தண்ணீர்க்குட நீர் முழுவதும் வெளியேறி முடிந்து விட்டிருந்தது. அவள் தாதியிடம் சொல்லிக் கொண்டு திரும்பவும் குளித்துவிட்டு வந்து அமர்ந்து கொண்டாள். இனி நடக்க முடியும் என்று தோன்றவில்லை. வலியும் தொடங்கவில்லை. இப்போது அவளுக்கு உண்மையாகவே கோபம் வந்தது. ஆனால் யாரைத்தான் கோபித்து கொள்வது என்று தெரியவில்லை.
எல்லா வசதிகளுடனும் கூடிய அறை அது. அவள் அறைக்கு எதிராக நர்சிங் ஸ்டேஷன் இருந்தது. இவளது கட்டிலிலிருந்து அவர்களை நன்றாகவே பார்க்க முடிந்தது. அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டிருந்தாலும் இவளது பார்வை படும்போது யாரும் புன்னகைக்க மறக்கவில்லை. “இண்டைக்கு என்ன ராசியோ தெரியவில்லை. ஒரு குழந்தைகளும் வர மாட்டினம் எண்டு அடம்பிடிக்கினம்” சிரித்துக் கொண்டே ஆங்கிலத்தில் சொன்ன அந்தப் பெண் மருத்துவருக்கு கோபமே வராது போலத் தோன்றியது. “எத்தனை குழந்தைகள் இண்டைக்கு பிறப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” இவளுக்கு தன் மகனோடு இந்தப் பூமிக்கு வரப் போகும் ஆண் பெண் தேவதைகளை, போராளிகளை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் மிகுந்தது. “நீ நம்ப மாடடாய். இன்னும் மூன்று பேர் உன்னைப் போல இருக்கினம். தண்ணீர்க் குடம் உடைந்து, இன்னும் வலி வராமலும், செயற்கை வலி மருந்து ஏற்றியபடியும். அவர்களுக்கு குழந்தை கூட இறங்கி இருக்கிறது. ஆனால் இன்னும் எப்படியும் நான்கு ஐந்து மணித்தியாலங்கள் ஆகும். ஆனால் உனக்கு நாளை தான் பிரசவம் நடக்கும். யோசிக்காதே. வலி தானாகவே தோன்றினால் நல்லது. அதற்குத்தான் காத்திருக்கிறோம். நீ கொஞ்சம் ஓய்வாக அமர்ந்திரு.” டாக்டர் போய்விட்டார். இவள் பேசாமல் போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள். கணவனுக்கு இவளைப் பார்க்க பார்க்க விசர் பிடித்திருக்க வேண்டும், சாப்பிட ஏதும் வாங்கி வருகிறேன் என்று கீழிறங்கி போய்விட்டான்.
இரவு பத்தரை போல டாக்டர் வந்து வலி வருவதற்காண மருந்து ஏற்றுவதுதான் அடுத்த நிலை என்னும் போது எதையாவது செய்து தொலையுங்கள் என்ற நிலைக்கு அவள் வந்துவிட்டிருந்தாள். வலிக்குரிய மருந்து ஏற்றப்பட்டு கொழுவி விட்டிருந்தார்கள். வலியை மறக்கும் மருந்தை எடுப்பதை அவள் விரும்பவில்லை. இந்த பிரசவவலி பற்றி எல்லோரும் கதை கதையாய் சொல்லியிருந்தார்கள். அதை உணர்ந்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. அதோடு அந்த மருந்தை முள்ளந்தண்டில் ஏற்றுவார்கள், அதனால் ஏற்படும் பக்கவிளைவு நெடுங்காலம் இருக்கும் என்றதை அறிந்திருந்தாலும், வலியை அனுபவிப்பதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை என்பதாலும் அவள் பேசாமல் இருந்தாள். கணவன் அறைக்குள் இருந்த சோபா படுக்கையில் தூங்கிவிட்டிருந்தான்.
அவளைவிட அவன்தான் உணர்ச்சிப் பெருக்கில் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவள் மனது ஒருவித அமைதியில் இருந்தது. கல்யாணம் முடிந்து, ஒரு வருடம் ஒருவரை ஒருவர் அறிந்து, உலகம் சுற்றி பின் திடடமிட்டு குழந்தை என்னும் அடுத்த நிலைக்கு போய்விட்டிருந்தவர்கள் அவர்கள். எப்படியோ குழந்தை பிறந்துவிடத்தான் போகிறது. முயற்சி செய்து சுகப்பிரசவமாய் இருக்கப் பார்ப்பார்கள். இல்லை என்றால், வெட்டிக் கிழித்து எடுப்பார்கள். இதில் எதை நினைத்து பயப்பட வேண்டும் என்று அவளுக்கு தெரியவில்லை. அவனுக்கோ அவளது அமைதி வியப்பாய் இருந்தது, அதிலேயே அவனுக்கு டென்ஷன் ஏறி விட்டிருந்தது. இது போதாதென்று தொடந்து அழைத்த சொந்தங்கள் அவனை இன்னும் குழப்பி விட்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவரது போனையும் அவளே பதில் சொல்லி வைக்க வேண்டியதாயிற்று. அவளுக்கு அதிலொரு கஷ்டமும் இல்லை. வலி வந்து போகும் இடைவெளி குறைய ஆரம்பித்தது. ஆனால் குழந்தை தான் கர்ப்பப்பையில் இறங்க மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது.
அவள் இந்தக் குழந்தையை மகிழ்வாகவே ஏற்றிருந்தாள். ரொம்பக் காலமாய் காத்திருக்க வைக்காமல், நினைத்த உடன் கருவில் தோன்றியதாலோ என்னவோ குழந்தை அமையாமல் போய் ஒவ்வொரு மாதங்களையும் கண்ணீரில் கரைக்கும் பெண்களின் வலி அவளுக்கு ஏட்டளவிலேயே தெரிந்திருந்தது. குழந்தையை சுமக்கும் காலங்களையும் அவள் வெகு இயல்பாகவே கடந்திருந்தாள். வழமையாக இருக்கும் கர்ப்ப கால அவஸ்தைகளையும் சாதாரணமாகவே கடந்தாள். பிடித்ததை தின்றாள். வழமை போல் வேலைக்குப் போய் வந்தாள். வீட்டு வேலைகளிலும் குறை வைக்கவில்லை. “உனக்கு அறிவிருக்கா, நீ என்ன நினைச்சுக் கொண்டு திரியிறாய்” என்று கணவன் கத்திப் பார்த்து களைத்தான். அவள் இயல்பாய், வெகு இயல்பாய் கடந்தாள். கிட்டத்தட்ட நூறுக்கும் கூடவாய் புத்தகங்கள் வாசித்து முடித்திருப்பாள். அது போதாதென்று சிறியவர் பெரியவர் பார்க்கும் படங்கள் என்ற பேதமில்லாமல் எல்லாப் படங்களும் பார்த்து தீர்த்தாள். பார்ப்பது மட்டுமில்லாமல் குழந்தைக்கும் விளங்கப் படுத்தினாள்.
அவளுக்கு யாரைப் பற்றியும் ஒரு கவலையும் இருக்கவில்லை. தனக்குப் பிடித்த விளையாட்டுப் போட்டிகள், நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் படித்த நாவல்களைக் கூட திருப்பி வாசித்து தீர்த்தாள். போதாக்குறைக்கு தனக்குப் பிடித்த கணக்கு, கெமிஸ்ட்ரி புத்தகங்களையும் எடுத்து வைத்துக் கொண்டு கணக்குப் போட்டுக் கொண்டிருந்த அவளை கணவன் விசித்திரமாகப் பார்த்தான். தன் குழந்தைக்கு எல்லாவற்றையும் கடத்தி விடவேண்டும் என்ற தீவிரம் அவளை அனைத்தையும் செய்ய வைத்தது. குழந்தை பிறந்ததும் தனக்கென்ற ஒரு உலகை நெய்து விடுமென்பதில் அவளுக்கு எந்தவிதமான சந்தேகங்களும் இல்லை. அவளும் அதையே விரும்பினாள். சுயமாய் இயங்கும் தன் மூலமாய் இந்த உலகுக்கு வருகை தரப்போகும் உயிரை கொண்டாட விரும்பினாள். பிறந்து வளரும் போது எந்தவிதக் கடடாயங்களையும் அந்தக் குழந்தை மேல் திணிக்கும் எண்ணம் அவளுக்கு தூண்டற இல்லை. கருவில் இருக்கும் போது மட்டுமே தன்னுடலின் ஒரு அங்கமாய் இருக்கும் அந்த உயிருக்கு சில விஷயங்களை சொல்லிவிட வேண்டுமென்ற எண்ணம் அவளை அலைக்கழித்தது. தன மனம் திருப்திபடும் அளவுக்கு அவள் கர்ப்ப காலத்தைக் கொண்டாடியிருந்தாள்.
அடுத்த நாள் விடிந்து காலை பத்தரை ஆகிவிட்ட போதும், குழந்தை இன்னும் இறங்க இடமிருப்பதாக காத்திருக்க நேர்ந்தது. ஒரு வைத்தியரே சேவையில் இருந்ததாலும் இன்னும் மூன்று கர்ப்பிணிகள் பிரசவிக்கப் போராடிக் கொண்டிருந்ததாலும் விடிகாலை ஐந்தரை போல இவளுக்கு ஏற்றப்பட்டுக்கொண்டிருந்த வலி கூட்டுவதற்கான ஹோர்மோனை நிறுத்தி விட்டிருந்தார்கள். வயிற்றின் வெளிப்பகுதியில் பொருத்தியிருந்த கருவியில் குழந்தையின் இதயத்துடிப்பும் ஒக்ஸிசன் அளவும் ஓடிக் கொண்டிருந்தது. இவள் அங்கேயிங்கே நகர்ந்தாள் என்றால் அது நர்சை கூப்பிட்டது. அவர்களில் ஒருவர் வந்து, மீண்டும் அந்தக் கருவியை சரியாய் வைத்து சிரித்து விட்டுப் போனார்கள். குழந்தை எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் இருந்ததாலும் இவளும் வலியைத் தாங்க மாட்டாதவள் போல இல்லாததாலும் நர்ஸ்மாரும் பேசாதிருந்தனர். இயற்கையாய் குழந்தை பிறந்துவிடும் என்பதில் மட்டும் நம்பிக்கை வைத்திருந்தவர்களாய் அவர்கள் இருந்தனர். தண்ணீர் எல்லாம் வடிந்து போனபோதும், முப்பது மணித்தியாலங்கள் கடந்த போதும் குழந்தையின் இதயத்துடிப்பில் எந்த வித மாற்றங்களும் இல்லை. இவளிடமும் தான். அடிக்கடி வந்த டாக்டர் பார்த்துவிட்டு,
“உன் குழந்தை தெரியாமல் தண்ணீர்க்குடத்தை உடைத்துவிட்டது, இப்போது வரப்பிடிக்காமல் உள்ளேயே இருக்க பார்க்கிறது” என்று சொல்லி சிரித்தபோது அவளுக்கும் அது உண்மையாக விருக்குமோ என்று தோன்றியது. நர்ஸ்மார் பெரிய பந்தொன்றைக் கொண்டுவந்து அவளை அதன் மீது சரிந்து படுக்குமாறு கேட்டுக் கொண்டனர். இன்னும் கொஞ்சம் இறங்க வேண்டும், இன்னும் கொஞ்சம் திரும்ப வேண்டும் என்னும் மந்திரங்களையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தனர். இவளுக்கு வலி தாங்க முடியாமல் மயக்கம் வருமாய்ப் போல இருந்தது. ஆனாலும் அவர்கள் சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு இனியும் காத்திருக்க முடியுமென்று தோன்றவில்லை.
பதினொன்றரை போல வலி உயிர் போவது போல வந்து வந்து போனது. இவள் நிலத்தில் கால் விரல்களை அழுத்தியும், கட்டில் சட்டங்களை இறுக்கப் பிடித்தும் வலியை கட்டுக்குள் வைத்திருக்கப் போராடினாள். “வலியை தாங்குவதற்கே உன் சக்தி முழுக்க செலவழிக்கிறாய். இதைவிட குழந்தை நன்கு இறங்கி வந்ததும் அதை வெளியே தள்ளுவதற்கும் உனக்கு சக்தி வேண்டும். இப்பவே ஒரு நாள் தாண்டிவிடடாய். அவசரமாய் சிசேரியன் செய்யும் தேவை நேர்ந்தாலும் நீ எபிடூரல் (வலி மறக்கும் ஊசி, முள்ளந்தண்டில் ஏற்றுவது) போடுவது நல்லது.” வரும் போகும் நர்ஸமாரும் டாக்டரும் திரும்ப திரும்ப வற்புறுத்தினர். அவளுக்கும் அவர்கள் சொல்லும் நியாயம் விளங்குமாய் பட்டது. அவளால் இனி என்ன நடக்கவிருக்கிறது என்று சொல்ல முடியாமல் இருந்தது. “Go with the flow” மனநிலைக்கு அவள் வந்து விட்டிருந்தாள். ஊசி ஏற்றி முடிக்கும் போது மதியம் பன்னிரண்டு ஆகிவிட்டிருந்தது. அவள் அதோடு படுத்து எழும்பியபோது பின்னேரம் நான்கு மணி.
ஐந்து மணிக்கு அறைக்குள் வந்த டாக்ட்டருக்கும் தாதிமாருக்கும் ஒருவித தவிப்பும் பரிதாப உணர்வும் நிரம்பியிருந்தது போல இவளுக்குப் பட்டது. இடுப்புக்கு கீழ் எந்தவித உணர்வும் இருக்கவில்லை. கலக்கமூட்டும் எந்தவித சமிக்ஞகளையும் குழந்தை தரவும் இல்லை. இவள் அவர்களது முகத்தையே களைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இரவு எட்டுமணியளவில் குழந்தை இரங்கி இறங்கி வந்த போதும் இன்னும் கொஞ்சம் திரும்பினால் இலகுவாக இருக்கும் என்ற நர்ஸை அடக்கி, “இல்லை, இனியும் வைத்திருக்க முடியாது. நீங்கள் உங்களால் இயன்றவரை தள்ள முயற்சியுங்கள்” என்று முடித்துக் கொண்டார் டாகடர். இடுப்புக்கு கீழ் வலி துப்புரவாக தெரியாத காரணத்தால் வயிற்றில் பொருத்தப் பட்டிருக்கும் கருவியில் வலி வரும்போது தெரியும் சமிக்ஞகளை வைத்து நர்ஸ்மார் சொல்லும் போது பெருமூச்செடுத்து குழந்தையை கீழே தள்ளவேண்டும். இவளும் தாதிமாரும், கணவரும் சேர்ந்து தள்ளியும் குழந்தை ஒரு அளவுக்கு கீழ் வரவே இல்லை. பத்து மணியளவில் எல்லாரும் சோர்ந்த போன பின்பு இவளுக்கு கொஞ்சமாய் பயம் வந்தது. குழந்தை ஏதோ இடத்தில் சிக்கிக் கொண்டது போல விரித்த கால்களை சேர்க்க முடியாத அவஸ்தையாய் உணர்ந்தாள். “
இப்ப ரெண்டு வழியிருக்கு. பிப்டி பிப்டி சான்ஸ். ஒண்டு போசெப்ஸ் ஆயுதம் பாவித்து குழந்தையின் தலையைப் பிடித்து இழுப்பது இல்லையோ சிசேரியன் செய்து எடுப்பது. இவ்வ்ளவு கஷ்டப்பட்டுவிட்டு சிசேரியன் போவதத்திற்கு முன் போசெப்ஸ் பாவித்து எடுக்க முயற்சிக்கலாம்” டாக்டர் சொல்ல இவளுக்கு விசர் ஏறியது. இதை முதலிலே சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. கணவனோ இவளை ஆறுதல் படுத்தும் நோக்கில், “இவளவத்துக்கு பொறுத்திட்டாய், இதையும் செய்து பார்ப்பம். இல்லாட்டி பட்டதெல்லாம் வீண். என்ட செல்லம் எல்லே” என்றதோடு நிறுத்திக் கொண்டான். இவள் என்னவெண்டாலும் செய்யுங்கோ என்றவாறு பேசாமலே இருந்தாள். குழந்தையை போசெப்ஸ் வைத்து இழுத்தபோது அது அவளைக் கிழித்தபடி வழியெங்கும் காயம் பண்ணிக் கொண்டு சிவனே என்று வந்து சேர்ந்தது. குழந்தையைத் தூக்கி டாக்டர் காட்டியபோது செஞ்சாந்து நிறத்தில் இரத்தம் வழிந்தபடியிருந்தது. இவள் தொடையெல்லாம் இரத்தம் பாய்ந்தோடி நனைத்தது. இவள் குழந்தையையும் உணர்வு மரத்த கால்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
முப்பத்தாறு மணி நேரம் காத்திருக்க வைத்து வந்து சேர்ந்த மகனின் தொப்புள் கொடி வெட்டி, முகம் பார்த்து சற்றே மயங்கி அமர்ந்த கணவன், எந்தவித உணர்வுகளும் முகத்தில் காடடாது பேசாது இருந்த அவளைப் பார்த்து இவளெல்லாம் என்ன பிறவி என்று நினைத்திருந்தால் கூட ஆச்சரியப் பட்டிருக்க மாடடாள். குழந்தை கூட அழாமல் இருந்தது அவளுக்கு மட்டுமல்ல அங்கிருந்த எல்லோருக்கும் பேச்சாய் இருந்தது. “இவன் உண்மையிலேயே பைட்டர் தான்” டாக்டர் சந்தோஷமாகவே குழந்தையைத் தூக்கி அவளுக்கு காட்டினார். அவளுக்குள் அமைதி நிறைந்து விட்டிருந்தது. தன் குழந்தை என்று அறிமுகமாகும் அந்த உயிரை புன்னகையுடன் பார்த்தாள். அவள் அழவில்லை. தான் சரியாகத் தான் குழந்தையை வரவேற்கிறேனா என்று அவளுக்கே சந்தேகமாய் இருந்தது. படங்களிலெல்லாம் கண்ணீர் வழிய வழியப் பார்க்கும் மனைவிமார் நினைவுக்கு வந்தனர். குழந்தையை நர்ஸ்மார் சுத்தப்படுத்த டாக்டர் அவளுக்கு தையல் போடவாரம்பித்தார். “நீங்கள் ஏன் தையல் போடவேண்டும். நீங்கள் வெட்டினீர்களா” இவளுக்கு மூளை வேலை செய்யத் தொடங்கியது. குழந்தை பிறக்கும் போது வழி ஏற்படுத்திக் கொடுக்க சிறிது தூரத்துக்கு வெட்டுவது சாதாரணம் என்பதை இவள் அறியாமல் இல்லை.
“இல்லை, உன் குழந்தை கிழித்துக் கொண்டுதான் வந்தான். நான் என்ன செய்ய” டாக்டர் தையல் போடுவதை நிறுத்தாமல் பதில் சொன்னார். எப்பிடுறலின் வலு குறைந்து போனது போல தோன்றியது. ஒவ்வொரு தையலும் அவளுக்கு வலித்தது. அதை டாக்டருக்கு சொன்னபோது, “குழந்தையைப் பார். உனக்கு வலியெல்லாம் தெரியாது” அவர் தையல் போடுவதிலேயே கண்ணாயிருந்தார். இவளுக்கு விசர் ஏறியது. “குழந்தையைப் பார்த்தால் வலி தெரியாது என்று யார் உங்களுக்கு சொல்லியது. நீங்கள் என்ன குழந்தைக்கா தையல் போடுறீங்கள்” இவள் குரல் உயர்ந்தது. இவளுக்கு விளங்கவில்லை. குழந்தை பிறந்துவிட்டது. குழந்தை எப்படியோ பிறக்கும் என்று இவளுக்கும் தெரியும். ஆனால் குழந்தையின் முகத்தைப் பார்த்தால் இவளுக்கு எப்படி வலி தெரியாமல் போகும். நர்ஸ் இவளைப் பார்த்து புன்னகைத்தாள். “இவர் இதை எல்லாப் பெண்களுக்கும் சொல்வார். இந்தக் கேள்வியை ஒருவரும் இவரைக் கேட்கவில்லை. தாங்க் கோட். நீ கேட்டுவிட்டாய்” என்றாள்.
“இவ்வளவு தையலை நான் எதிர் பார்க்கவில்லைதான்” என்ற டாகடரைப் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. குழந்தையைப் பத்திரமாய் வெளியே எடுக்க அவர் பட்டபாடு நினைவுக்கு வந்தது. இவள் வலியைத் தாங்கிக் கொள்வது என்று தீர்மானித்துக் கொண்டாள். டாக்டருடன் கத்தி கணவனைக் கலவரப்படுத்த இவள் விரும்பவில்லை. கடைசியில் குழந்தையை அவள் மார்பின் மேல், குழந்தையின் தலை அவளது கழுத்துக்கு கீழ் இருக்குமாறு குப்புறப் போட்டிருந்தார்கள். குழந்தையின் மென் சூடு அவளுக்கு இதமாக இருந்தது. லேசாக எழும்பி பதியும் முதுகைப் பார்த்தவாறு அவளும் தூங்கிப் போனாள்.
இரு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்த பிறகும் அவளால் எழும்பி நடக்க கொள்ள சிரமமாய் இருந்தது. சிறுநீர் கழிக்கப் போனால் உறுப்பெல்லாம் அனலாய் எரிந்தது. இது போதாதென்று மிக முக்கியமாய் அவளுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை. என்னவெல்லாமோ சொன்னார்கள். எல்லார் சொன்னதையும் செய்து பார்த்தும், தின்று பார்த்தும் சொட்டாய் கூட சுரக்க காணவில்லை. ஹொஸ்பிடலில் குழந்தைக்கு கொடுத்த பால்மா வகைப் பாலை வாங்கி குழந்தைக்குப் பருக்கினாள். குழந்தைக்கு வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. அது தருவதைக் குடித்துவிட்டு நிம்மதியாகத் தூங்கியது. கட்டிலில் கிடத்திவிட்டு அங்கு இங்கு நகர்ந்தாள் என்றால் நொடியில் எழும்பி அழுதது. “நானெல்லாம் உனக்கு ஐந்து வயது வரை பால் தந்தனான், தெரியுமோ? ” அம்மா புலம்பித் தள்ளினாள். இவளுக்கு மனது என்னவோ செய்தது. தாய்ப்பால் கொடுக்கும் எண்ணம் இருந்ததால் தான் குழந்தைக்கு கொடுக்கும் பால்புட்டி கூட வாங்கி வைக்கவில்லை என்பதை ஏனோ சொல்ல மனம் வரவில்லை.
அவள் குழந்தையை வரவேற்பதற்கான எல்லா வகைதொகையையும் குறையின்றி செய்துவிட்டிருந்தாள். குழந்தையின் அறையில் அலுமாரிகள் முழுக்க தேவையான உடுப்புகள், போர்வைகள் துவாய்கள் என்று நிரம்பிக் கிடந்தன. சுவரில் குழந்தையின் பெயர் அழகாய்த் தொங்கியது. குழந்தை பிறக்க முதலே தனது மனதுக்குப் பிடித்த பெயரை அர்த்தத்துடன் தெரிவு செய்திருந்தாள். கீழே முன்னறையில் நடுவே ஏணை தொங்கியது. இந்த கனடா நாட்டில் ஏணை கட்ட அவள் நிரம்பவே சிரமப்பட்டாள். கடைசியில் முண்ணூறு டொலர்கள் செலவழித்து போட்ட ஹூக்கில் தனது சாறியையும் கட்டி வைத்திருந்தாள். எதுவும் செய்யவில்லை என்று தன் மனம் சொல்லிவிடாத அளவுக்கு எல்லாவற்றையும் செய்துவிட்டிருந்தாள். இப்போது ஏணை குழந்தையின்றி தானே கிடந்து ஆடியது. குழந்தையை கீழே கிடத்தினாள் எங்கே தன்னைவிட்டு நகர்ந்து விடுமோ என்ற தீவிரம் அவளின் மூளை முடுக்கெல்லாம் பரவித் தின்றது.
“பிள்ளைக்கு தாய்ப் பால் கொடுத்தால் தான் பிள்ளைக்கு உன்னில பாசம் வரும். பாலைக் கரைச்சு யாரெண்டாலும் குடுக்கலாம் தானே,” பிள்ளையைப் பார்க்க வாறவர் போறவர் என்று எல்லார் வாயும் இதையே முணுமுணுத்தது. அவள் ஒரு கிழமை தாண்டி இரண்டாவது கிழமையாகியும் பால் சுரக்கவில்லை என்றதும் ஒருவிதமாய் தவித்துப் போனாள். அவள் அழுகையில் குழந்தை திடுக்கிட்டது. கணவனும் கரைந்தான். ஒரு கட்டத்தில் கணவன் அழைத்து சொல்லி வீட்டுக்கு கவுன்சிலிங் செய்ய வந்த தாதியும் கண் கலங்கினாள். “இயற்கையாய் வலி வரவில்லை தானே. வலி வாறதுக்கு உடம்பில் சுரக்கும் ஹோர்மோன் தான் பால் சுரப்புக்கு உதவி செய்யும். உங்கள் உடம்பில் இன்னும் அந்த ஹார்மோனின் தாக்கம் போதாததாக இருக்கலாம். நீங்கள் இன்னும் கொஞ்ச நாள் பொறுங்கள்” என்றுவிட்டு, மார்பு வலியெடுக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு தாதி போன பின்னும் இவளுக்கு மனது ஆறவில்லை. குழந்தையை மார்பில் போட்டுக் கொண்டு இல்லாத எல்லாத் தெய்வங்களையும் கூப்பிட்டு கூப்பிட்டு அரற்றி அரற்றி அழத் தொடங்கிய அவளை கணவன் அந்நியளாகப் பார்த்தான். அவன் பார்த்திருக்க அவள் யாரோவாகிப் போனது போலிருந்தது அவனுக்கு.
குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்கவேண்டும் என்ற கற்பிதம் இவளுக்குள் எப்படி ஊறிப்போனது என்று அவளுக்கு விளங்கவேயில்லை. ஒருவேளை தான் ஐந்து வயதுவரை தாய்ப்பால் குடித்ததாலும் வாழ்நாளில் ஒரு போதும் பால் புட்டியை வீட்டில் கண்டதில்லை என்பதாலும் இருக்கலாம். இல்லையென்றால் படித்த விஞ்ஞான அறிவு மட்டுமில்லாமல் போகவும் வரவும் பார்த்த டாக்டரில் இருந்து கதைத்த எல்லா மனிதர்களும் தாய்ப்பால் குறித்து எடுத்த வகுப்பால் இருக்கலாம். எல்லா இருக்கலாம்களும் தாண்டி இவளுக்கும் பால் கொடுப்பதில் எந்தவித சிக்கல்களும் இருக்கவில்லை. தான் என்ன பாவம் செய்தேன், ஏன் இப்டியாச்சு என்ற கேள்வி அவளை சித்திரவதைப் படுத்தியது. பால் குடிக்காட்டி குழந்தை தன்னைவிட்டு தூரப் போய்விடும் என்ற எண்ணமே அவள் மனதை கூர் கூறாய் வெட்டி தெருவெங்கும் சிதறி எறிந்தது. “குழந்தை பிறக்க முதலே அது வளர்ந்து தண்ட விருப்பத்துக்கு என்னவும் செய்யலாம்; நான் கேட்க மாட்டேன் எண்டு வாய் கூசாம சொல்லிக் கொண்டிருந்தா இப்படித்தான் நடக்கும். அது தான் பிள்ளை இப்பவே பழகிறான்.” போற போக்கிலே அவர்கள் ஆயிரம் சொன்னார்கள். “பிள்ளைக்கு நாள் நட்சத்திரம் பார்த்துப் பெயர் வைக்கவேணும். இந்த நிமியிராலஜி பார்க்கிறவனெல்லாம் லூசனோ, அதிஷ்டமில்லாத பெயரை வைச்சா வேற என்ன நடக்கும்” எல்லார் வாய்களும் கதைத்தன. இவளதைத் தவிர. குழந்தையை மார்பில் போட்டவாறு அவள் தூங்கிப்போனாள். கன்னத்தடி எல்லாம் கண்ணீர் காய்ந்து கிடந்தது.
கனவில் குழந்தையைக் காணவில்லை. இவள் கனதூரம் நடந்து காட்டுக்குள் வந்துவிட்டிருந்தாள். நல்ல வேளை குழந்தையைக் கொண்டுவரவில்லை என்று நினைத்துக் கொண்டாள். ஏன் நடக்க வெளிக்கிட்டாள் என்று அவளுக்கே தெரியவில்லை. பதினேழு தையல்கள் போட்டிருந்த நினைவு. ஒரு சுகப்பிரசவம் இவ்வளவு தையல்களில் முடிந்தது குறித்து அவளுக்கு எந்தவித குறைகளும் இல்லை. இரத்தமும் வலியுமாய் கால்கள் பின்னடித்தன. ஆனாலும் அவளால் நடப்பதை நிறுத்த முடியவில்லை. நிறுத்தவும் தோன்றவில்லை. ஏதோ ஒன்றிலிருந்து தூர ஓடும் தீவிரத்துடன் அவள் போய்க் கொண்டேயிருந்தாள். அவளின் மனமெல்லாம் மரங்களும் செடிகளும் இடமில்லாது அடைத்துப் பிடித்தபடி வளர்ந்திருந்தன. கொடிகளும் விழுதுகளும் சிக்கிக் கொண்டு பின்னல் வலையாய் அங்கங்கே எறிபட்டிருந்தன. இருட்டு உள்ளேயும் வெளியும் கவிந்திருந்தது. பொட்டு வெளிச்சம் கூட இல்லாத அந்தக் காட்டின் பசுமையும் குளிர்மையும் அச்சத்தைத் தந்தன. நீரோடும் இடமாய்ப் பார்த்து குதித்து காலை கழுவ வேண்டுமென்ற தீவிரம் வலுப்பட்டது. அவளுக்கு அந்த இருட்டிலும் கண் தெரிந்தது. அவளுக்கு மூச்சு முட்டி பிரக்கேறியது.
தூரத்தில் மெலிதாய் ஓடிக்கொண்டிருந்த நீரோடையில் இறங்கிக் கொண்டாள். அவளது இடுப்புக்கும் கொஞ்சம் கீழாய் தான் ஆழம் இருந்தது. ஹாஸ்பிடல் கவுன் நனைந்து அவள் இறங்கிய இடமெல்லாம் சிவப்பாய் கலைந்தது. அவளைச் சுற்றி வளையம் வளையமாய் தண்ணீர் சுற்றி ஓடிற்று. கலைந்த உடம்பும் வெக்கைப் பிசுபிசுப்பும் சரியாகிவிடும் என்ற நினைப்பில் அப்படியே நின்றாள். எதையோ கரைத்துத் தீர்த்துவிடும் வேகம்; இப்படியே கரைந்து கரைந்து பிள்ளை பிறக்க முதல் நாளுக்குள் போகும் வேகம். ஆனால் நீருக்கு அதே வேகம் இருப்பதாய் தெரியவில்லை. அது தன்பாட்டுக்கு கடனே என்று ஓடிக்கொண்டிருந்தது. அப்படியே நடந்தவள் நீருக்குள் முக்கால் பங்கு தெரிந்து கொண்டிருந்த கல்லொன்றின் அடியில் அமர்ந்து கொண்டாள்.
“இஞ்ச, நான் என்ன செய்தனான் எண்டு இப்படியாய் பண்ணிட்டாய். உனக்கு விரதம் இருக்கிறன் எண்டு சொல்லி ஏமாத்தினானா, இல்லை ஏதும் நேர்த்தி செய்றன் எண்டு சொல்லி பொய் சொன்னனா?” அவள் தன் போக்கில் கதைத்துக் கொண்டிருந்தாள். கல் பேசாமல் இருந்தது. இப்போது இரத்தத்தின் அளவு குறைந்தது போலத் தோன்றியது. தண்ணீர் வரத்து அப்படியே தான் இருந்தது. அவளுக்கு அப்படியே இருந்துவிடலாம் போல தோன்றியது.
“ஏய், இஞ்ச என்ன கனவு காண்கிறீரே, பிள்ளை இவ்வளவு நேரமாய் கத்திக் கொண்டிருக்கிறான். கேட்கலையா? எழும்பும், ஏய்” அவள் கண் விழித்த போது கணவன் கத்திக் கொண்டிருந்தான். கூடவே குழந்தையும். அவள் பதற்றத்துடன் குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டாள்.
“பாலைக் கரைச்சு கொடுக்கிறது தானே” இவளுக்கு சினம் மூண்டது. èஎல்லாரும் தானே பால் கரைச்சுக் குடுக்கலாம்èè அவளுக்கு நினைவு வெறியூட்டியது.
“அதெல்லாம் கொடுத்தாச்சு, அதுக்குப் பிறகும் கத்தி அழுதா நான் என்ன செய்ய” கணவனுக்கும் குழந்தையைப் பார்க்க கவலையாய் இருந்தது. “என்னத்தை ஆர் கொடுத்தாலும் அது நீர் தூக்கின பிறகுதானே அமைதியாகுது. நீர் தானே அம்மா”
அவள் கொஞ்சமாய் விசித்துக் கொள்ள தொடங்கியிருந்த குழந்தையை மார்பில் போட்டுக் கொண்டாள். குழந்தை கண் மடல்களை சிமிட்டிக் கொண்டு தூங்க ஆரம்பித்தது. அவள் சிரிக்க ஆரம்பித்தாள். காடு கரையெல்லாம் அதிர அதிர சிரித்தாள். அவள் சிரிப்பில் ஆறு சலசலத்தது. அடித்துப் பிடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தது. செடி கொடியெல்லாம் ஆடி அலைந்தன. காய்ந்த சருகுகள் எழுந்து மேலெல்லாம் பறந்தன. குழந்தை ஏனோ எழும்பவில்லை. அதுபாட்டுக்கு தூங்கிக் கொண்டிருந்தது.