ஊடறுவின் தளர்வற்ற உழைப்பு தேவா- கால்ஸ்ருக- (ஜேர்மனி)

This image has an empty alt attribute; its file name is theva.jpg

பெண்ணடிமை,பெண்நீதி பெண்வாழ்வின் வறுமை,பாலியல்வன்முறை  சம்மற்ற வாழ்வும்- ஊதியமும், குடும்பபெண்ணே சிறப்பானவள் என்கிற கொள்கைமறுப்பு, பெண்தியாகம், லட்சியப்பெண்கள்,சாதி இழி நிலை,தமிழ்சமூகத்திலே கறுப்புதோல் பெண் இழிவு நிலை,சீதனம், சிறுவருக்கு மேலான வன்முறை,அரசுகளி்ன் அநீதிக்கு எதிரான போராட்டங்கள்-ஊர்வலங்கள் என்று பிரசுரிக்கப்படுபவைகள் ஊடறுவின் கொள்கையை உரத்து சொல்கிறது. சிறுபத்திரிகைகள் பலகாலமாக  அச்சுவடிவில் எழுத்தாக்கங்களுக்கு பெருவெளியொன்றை விரித்திருந்தன,  ஒரு குறிப்பிட்ட சாராரின் குழுசார்பு கருத்துக்களை மட்டுமல்ல எதிர்கருத்துக்களை வெளியிடவும்,இவைகளால் முடிந்தன என்பதை மறுக்கமுடியாது. அந்தக்காலங்களில் அச்சுவெளியீட்டு செலவுகளும், கணணியில் பதிப்பதற்கு சிரமங்களும் இருந்தன.தொழிலில் களைத்து,உடைந்து வீடு சேர்ந்தாலும் பத்திரிகைக்கு எழுதும்,ஆர்வமும்,பத்திரிகை வெளியிடும் ஆர்வமும் பொதுவெளியில் அதனை பரப்ப செய்த முயற்சிகளும் பெரும் சக்திகளாக இயங்கின.   

சிறுபத்திரிகைகள் ஆரம்பித்தபோது ஒரு பாய்ச்சல் இருந்ததும் பின்னர் அவை தளர்ந்து உட்கார்ந்துவிடுவதும்இ சிலசமயங்களில் நீண்ட நித்திரையிலிருந்து மீண்டெழும்பி வருவதும் நிகழ்ந்தது.இன்றைய கணணியுகத்தில் தம் ஆக்கங்களை தாமே வெளியிடக்கூடிய வசதிகள் இருந்தும், வெளியாக்கப்படுபவை எத்தனை பேரால் ஆர்வ த்தோடு வாசிக்கப்படுகிறது?அவை சிந்தனைக்குரிய-விவாதத்துக்குரிய வினாக்களை முன்வைக்கிறதா? இந்த நோக்கோடு இணையத்தில் புகுந்து தேடும் முயற்சி ,கடலுக்குள் சிப்பிமுத்து,எனலாம்.

தம்முடையவைகளை மட்டுமன்றி, ஒருமைபடுத்தப்பட்டவைகளை மட்டுமே வெளியிடுவது, .பரப்புவது மிக இலகுவான சங்கதி இல்லையா.

ஆனால் பல சிந்தனைக்கு விவாதத்துக்குரிய ஆக்கங்களையும் ஒரு பொதுத்தளத்தில் கவனிக்கும்போது அது பல சிந்தனகளை-பன்முகப்பார்வையை  சாத்தியமாக்குகிறது. சிறப்பாக இயங்கிய பல இணையத்தளங்களும் இன்னும் தரிப்பிடத்திலேயே.தமக்கு விருப்பமான எழுத்தாளர்களை ஆதரிப்பது   பிரபலமானவர்களின் ஆக்கங்களை மட்டுமே பிரசுரிப்பது நாம் வெளியிடுவதே தகுதியாவை இஎனும்  தலைக்கனம் கொண்ட இணையங்களும் உள்ளன.அதேசமயம் பெண் ஊக்குவிப்பை, லட்சியமாக கொண்டுள்ள ஊடறுவின் பல வருட உழைப்பு மதிப்புக்குரியது. அது விடாமுயற்சியோடு, தளர்ந்து, இடை நிறுத்தப்படாமல் தன் லட்சியத்தை நோக்கிச் செல்லுகிறது.,பெண்ணியத்துக்கான ஒரு இயங்குதளமாக செயலாற்றுகிறது என்பதுதான்  இங்கு கவனத்துள்ளாகும் விடயம். கட்டுரை, கவிதை, சிறுகதை,ஓவியம்இபெண்ணியலாளர்கள் பேட்டி, சினிமா விமர்சனம்,ஆவண-குறும்படங்கள்,சிறுகதைதொகுப்புக்கள், வெளியீடுகள் என்று அதன் தளம்விரிவடைந்துள்ளது.,மேலும் பெண் நிலைச்சந்திப்புக்களை தமிழ் வாழும் நாடுகளில் ஒழுங்குபடுத்தியும்,அந்த நாடுகளில் வதியும் பெண்ணியலாளர்கள் மாநாடுகளில் பங்கு பெற்று,அவர்களுக்கு உற்சாகமூட்டவும், ஊக்குவிக்கவும் உதவுகிறது.தாயகத்து மக்களுக்கு உரிய தருணத்தில் கைகொடுத்து, அவர்களுக்கான உதவிகளை செய்வதிலும் ஊடறு சிறப்பாக செயல்படுகிறது என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டாகவேண்டும்.ஊடறு பதினைந்து ஆண்டுகளாக தொடரும் செயற்திறமை அயர்ந்துவிடாது வளர வாழ்த்துவோம்.

உரையாடல் வாசலை திறந்து வைத்து பங்காற்றும் – ஊடறு மாலதி மைத்ரி – (இந்தியா)

This image has an empty alt attribute; its file name is malathy20.jpg

ஊடறுவின் இலக்கியப் பயணம் பதினாறாம்  ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இப்பயணத்தைத் தொடர்ந்து தொய்வில்லாமல் முன்னெடுக்கும் அன்பின் – ரஞ்சிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். பெண்களின் படைப்பிலக்கிய செயல்பாட்டுத் தளமாக குரலாக புலம்பெயர் நாட்டிலிருந்து தனது முத்திரையை பதித்து வருகிறது ஊடறு. தமிழிலக்கிய உலகில் ஊடறு இணைய இதழும்  ஊடறு பெண்நிலைச்  சந்திப்பும் சமகாலத்தில் பெண்களுக்கான  உரையாடல் வாசலை திறந்து வைத்து பங்காற்றி வருவது போற்றத்தக்க செயல். ஈழப் பெண் போராளிகளின் கவிதைகளை அரிய முயற்சியில் தேடிக் கண்டுபிடித்து  “பெயரிடாத நட்சத்திங்கள்“ தொகுப்பாக்கி வரலாற்று சிறப்புமிக்க ஆவணமாக்கி தந்திருக்கிறது  ஊடறு. ஆண்மைய இலக்கிய உலகில்  ஊடறுத்து  பெண்ணுக்கான பாதை அமைக்க தொடங்கிய  ஊடறு  அதன்  இலக்கை அடைய  இனி வரும் காலங்களில் குறைந்தபட்ச பெண்ணிய அரசியல் விடுதலையரசியல் கொள்கை செயல்த்திட்டங்களை வரையறுத்து தனது பயணத்தைத் தொடர்வது காலத்தின் அவசியமென உணர்கிறேன்.  ஊடறு தன் சீரிய கடமையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

ஊடறுவுடன் எனது பயணம் – கல்பனா – (இந்தியா)

சமூகப் பணியில் செயல்பட்டு வரும் எனக்கு ஊடறு பெண்கள் சந்திப்பு ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டியது. பல தளங்களில் இயங்கிவரும் பெண்கள் தங்கள் படைப்புகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதும், பெண்ணீய கருத்துக்களை அரசியல் தளத்தில் வெளிப்படுத்துவதுமான செயல்பாடுகள் மிகுந்த ஊக்கத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. பிற சமூக இயக்கங்களுக்கும், ஊடறுவுக்குமான மிக முக்கியமான வேறுபாடு அல்லது தனித்தன்மை என்னவென்றால், இங்கு அறிவு சார்ந்த படைப்புகள், விவாதங்களைவிட கள அனுபவங்களூக்கும், பெண்களின் மீதான வன்முறை, உரிமை மீறல்களுக்கு அதிக முக்கியத்துவமும், அதற்கான ஆளுமைகளை அணிதிரட்டுவதும் தான். இங்கு ஊடறு ஒரு வெற்றுக் காகிதமாக இல்லாமல், கடல் கடந்து பயணிக்கும் தோணியாக செயல்படுவதைக் காண்கிறேன். எனக்கு ஊடறு பற்றிய அறிமுகம் தோழி மாலதி மூலம் 2016ல் மலேசிய சந்திப்பில் கிட்டியது.  ஊடறுவின் தலைமை ரஞ்சி, ஊடறுவின் மூலம் எனக்கு அதிகம் உறவாடக் கிடைத்த தோழிகள் யாழினி, யோகி, புதியமாதவி, சுரேகா, அவ்வை, சந்திரலேகா, விஜியலட்சுமி ஆகியோரிடம் உரையாடிய/உரையாடிக் கொண்டிருக்கும் தருணங்கள் வாழ்வில் மறக்க முடியாதவை. 

தமிழகத்தில் நிலவும், சாதி, மத, சித்தாந்த அரசியல் சூழல் பெண்களை ஒருங்கிணையவிடாமல் துரத்திவரும் சூழலில், உலகளாவிய அளவில் தமிழ்ப் பெண்களை ஒருங்கிணைக்கும் ஊடறுவை மிகப் பெரும் ஆற்றலாகப் பார்க்கிறேன். பெண்களுக்கெதிரான பாலியல் வேற்றுமைகள், வன்முறைகள், வன் கொடுமைகளை எதிர்த்து களமாடவும், பொருளாதார சுரண்டல்கள், பாகுபாடுகள் என அனைத்து பிரச்சனைகளிலும் ஊடறு தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கிடையே நிலவும் வர்க்க, சாதி, மத அரசியல் பிரிவினைகள், அதிகாரப் போட்டிகள், அங்கீகாரத் தேவைகள் என அனைத்து வகையான பிரச்சனைகளையும் உணர்வு பூர்வமாக கையாள்வதோடு, இறுதியில் அடித்தட்டளவில், ஒடுக்கப்படும் பெண்களின் சார்பாக நிற்பதே ஊடறுவின் பண்பு.  பெண்களுக்கான அங்கீகாரம், பகிர்வு, பிரதிநிதிதுவம் ஆகிய மூன்றிலும் சமத்துவத்தை கோரும் ஊடறு தொடர்ந்து பயணித்து தனது வேர்களைப் பரப்ப ஒரு உந்து சக்தியாக செயல்படுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

பெண்களுக்கான குரலாக தொடர்ந்து ஒலிக்கும் ஊடறு  – யாழினி – யோகேஸ்வரன் – (இலங்கை)

This image has an empty alt attribute; its file name is yali-2020.jpg

கடந்த பதினைந்து ஆண் டுகளாக அதிகார வெளியினை ஊடறுக்கும் பெண் குரலாக ஊடறு இணையத்தளம் செயற்பட்டு வருகின்றது.ஊடறு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண் ஆளுமைகளை இணைத்து  வருடங்கள் தோறும் மாநாடுகள்,பெண்ணிய கலந்துரையாடல்கள்,நூல் வெளியீடுகள் மற்றும் அறிமுகங்கள் போன்ற பல சமூகஞ்சார் செயற்பாடுகளை ஆக்கபூர்வமாக முன்னெடுத்து வருகின்றது. இதன்மூலம் பெண்கள் தம்சார்ந்த பிரச்சினைகளைப் பேசிக்கொள்ளவும் அது சார்ந்த தீர்வுகளை நோக்கி முன்நகர்பவர்களாகவும் எழுத்து சார்ந்த துறைகளில் தம்மை நிலைப்படுத்திக் கொள்பவர்களாகவும் உருவாகி வருகின்றார்கள்.

ஊடறு தனது இணையத்தளத்தின் மூலம் பல இளைய பெண் படைப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது.தற்போதும் அறிமுகப்படுத்தி வருகின்றது.இந்த வரிசையில் எனது எழுத்துக்களையும் பிரசுரம் செய்து வைத்த பெரும் பங்கு ஊடறுவுக்குண்டு.தனியே பெண் எழுத்தாளர்களுக்கான இணையத்தளமாக  இயங்கி வருகின்ற ஊடறு கடந்து பதினைந்து வருடங்களாக நிலைத்து நின்று செயற்பட்டு வருவது மகிழ்விற்குரியதே.  த்தகையதொரு தொடர் செயற்பாடுகளால் நிலைத்துநிற்கும் ஊடறு இணையத்தளம் மேலும் தமது செயற்பாடுகளை விரிவுபடுத்தி பெண்களுக்கான குரலாக தொடர்ந்தும் ஒலிக்க வேண்டும் என்கின்ற வேண்டுதலோடு ஊடறு இயக்குனர் றஞ்சி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்.

அ. மங்கை -ஊடறு -15 –( சென்னை, இந்தியா) 04. 05. 2020  

 

This image has an empty alt attribute; its file name is mankai4-576x1024.jpg

15 ஆண்டுகள் ஒரு இதழின், அமைப்பின், வலைத்தளத்தின்  வரலாற்றில் முதிர்ச்சியைக் குறிப்பது.  புலம் பெயர்ச் சூழலில் தொடர்ந்து நடந்த இலக்கிய, பெண்கள் ஒன்றுகூடல்கள் ஊடறுவிற்கு வித்திட்டன.  இலங்கை, தமிழ் நாடு, புலம் வாழ் பெண்கள், பெண் படைப்பாளிகள், செயல்பாட்டாளர்கள் ஒண்றிணையவும் கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளவும் ஊடறு களம் அமைத்துத் தந்தது.  வலைப்பதிவுகள் சில நூலாக்கமும் பெற்றுள்ளன. ஊடறுவில் வெளிவந்த செவ்விகள் காத்திரம் மிக்கவை.   அதேபோல், கவிதைகள், அரங்கவியல் எனப் பல்துறைசார் பொருண்மைகள் ஊடறுவை மதிப்பு மிக்கதாக ஆக்குகின்றன. 

பயணங்கள் சாத்தியமற்ற ஊரடங்கு இயல்பு வாழ்வாகியுள்ள இக்காலத்தில், இணையம் மூலமாக இத்தனை ஆண்டுகள் நம்மில் பலரை இணைத்து வந்துள்ள ஊடறுவின் பணி கூடுதல் கனதியானதாகப் படுகிறது.  ஊடறுவின் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

ஊடறு இதழ்  தலைப்பே எம்மை  கவர்ந்தது. -கமலாதேவி அரவிந்தன் – சிங்கப்பூர்

This image has an empty alt attribute; its file name is kamalamdevi.jpg

முதன் முதலாக ஊடறு இதழ் அறிமுகமான போது அதன் தலைப்பே எம்மை அப்படி கவர்ந்தது.அப்பொழுது சிங்கை வானொலி, தொலைக்காட்சியில் ,பொறி பறக்க நான் எழுதிக் கொண்டிருந்த நேரம்.. அதே நேரம் சிங்கை தமிழ் முரசிலும் எனது முக்கியமான தொடர்கதை ஒன்றுபிரசுரமாகிக் கொண்டிருந்தது….. ஊடறு இதழில் வெளிவந்த நேர்காணல்கள், பெண்களின் வலி, சாதனைகள் என வாசிக்கத் தொடங்கியபோது ஏனோ மிகவும் கவர்ந்தது.

 சட்டென்று  ஊடறு’ வுக்கு கதைகள் அனுப்பினேன்.

சிங்கையிலிருந்து நான் மட்டுமல்ல. ஜெயந்தி சங்கரின் கதைகளும் ஊடறுவில் பிரசுரமாகத் தொடங்கியது.அப்பொழுது இணையத்தில் வெளி வந்த இணைய இதழ்களில் இந்த பெண்களின் இதழும் மிக முக்கியத்துவம் பெற்றதாகவே பலரின் கவனத்தியும் ஈர்த்தது.

என்றாலும் இவ்விதழை நடத்தி வரும் ஆசிரியர் குழுவின் முக்கியமான பெண் ரஞ்சனியை அணமியில்தான் சிங்கப்பூரில் ஒரு குழுவாக சந்திக்கும் மகிழ்வேற்பட்டது. அனைவருக்கும் எனது மனமுவந்த வாழ்த்துக்கள்.

பல கரைகளை கடந்து நாங்கள் இணையும் இடம் – ஊடறு – விஜி – இலங்கை (இலங்கை)

This image has an empty alt attribute; its file name is viji-sekar-789x1024.jpg

‘மனித உடலின் அசைவுகளுக்கு ஏற்றாற்போல் எழுத்துக்கள் இருக்கும். எனினும் உணர்வுகளின் அசைவுகள், பாசைகள், அனைத்திற்கும் எழுத்து வடிவங்கள் இல்லை. வுடிவங்களுக்குள் புலப்படாத பலப் பல விடயங்களை ஊடறுத்து செல்வதற்கு ஒரு வெளி பெண்களுக்குத் தேவை. எழுத்து வடிவங்களுடன் நின்றுவிடாது பெண்களின் வாழ்வுடன் இணைந்து செல்லும் வெளியாய் அமையும் ‘ஊடறு’, ‘பெண்கள் சந்திப்பு’. 
பல கரைகளை கடந்து நாங்கள் இணையும் இடம் அது. கரைகள் மாறுகின்றன. எனினும் அலை என அனைவரும் இணையும் அக் கடலில் நனையும் கால்கள் காலங்கள் தோறும் கூடுகின்றன. கவலைகளை, சுமைகளை, இனம் புரியா வலிகளை இணைந்து இறக்கி வைக்குமிடம்… உணர்வுகள் புள்ளிகள் போட எழுத்துக்கள் கோலமாகும் அங்கு.

பழயன, மூச்சாய்; நிழலாய் இருத்தலும், புதியன, தளிராய் துணிவாய் வளர்தலும் ‘ஊடறு’ வின் கோட்பாடாகும். சமூகக் கட்டுக்கள் கால்கள் சுழல்கையில்  எங்கோ ஓர் வெளி எமக்காய், எனக்காய் தொங்கிக் கொண்டிருக்கும் ஆறுதல் அது. 


அன்புள்ள ஊடறுவுக்கு என் அன்பும் -16-வது வயது வாழ்த்துகளும். -யோகி (மலேசியா)

This image has an empty alt attribute; its file name is yogi_8978-1024x1022.jpg

2015 ஆம் ஆண்டு முதல் முறையாக ஊடறு பெண்கள் சந்திப்புக்கு அழைக்கப்பட்டபோது, எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. காரணம், முன்னணி பெண் எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அனைத்துப் பெண்களுக்கான தளமாக இருந்த ஊடறுவை நான் கவனித்து வந்தது பெரிதில்லை. பெண் சுதந்திரம் பேசும் எந்தப் பெண்ணுக்கும் ஊடறுவை தெரியாமல் இருக்காது

ஆனால், பல பெண்களின் குரலாக ஒலிக்கும் ஊடறு கவனிக்ககூடியவளாக நான் இருந்தது என் நகர்வுகளின் மீது எனக்கே நம்பிக்கை கொடுத்தது என்று தாராளமாக சொல்லலாம். ஊடறுவிடனான எனது தொடக்கமும் அப்போது தான் தொடங்கியது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக ஊடறுவோடும் அதன் இயக்குனர் (அம்மா) றஞ்சியோடும் இணைந்து செயலாற்றக்கூடிய சந்தர்ப்பங்களில் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக, பெண் மொழியும் பெண் எழுத்தும் வெறும் வாசிப்பால் மற்றும் வந்துவிடுவதில்லை. அது ஒரு சிந்தனை திறப்பு. அதன் திறவியானது செயற்பாடுகளில்தான் உண்டு என எனக்கு தோன்றுகிறது. அவ்வாறான பெண்களுடனான சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் அதைவிடவும் அவர்களோடு இணைந்திருக்கும் சில நாட்களில் உண்மையில் அவர்கள் யார் என்ற அடையாளப்படுத்துதலும் என்னை பலவாறாக கலைத்துப் போட்டு சிந்திக்க வைத்திருக்கின்றன. இன்று என்னுடைய பெண்கள் சுதந்திரம் தொடர்பான புரிதலுக்கு ஊடறுவின் பங்கு கணிசமாக உள்ளது என்பது மறுப்பதற்கு இல்லை.

பெண்களின் செயற்பாடுகள், பெண் மொழி, பெண் எழுத்துக்கள் உள்ளிட்ட விடயங்களுக்கு பெண்களிடத்தில் ஆதரவு எப்படி இருக்கிறது என்று என்னிடம் கேட்டால், அதற்கான பதில் எனக்கு குழப்பமாக இருக்கிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். தமிழ்ப்பெண்கள் அதாவது தமிழ்நாட்டுப் பெண்கள் மீது புனிதம் கட்டமைத்தும், மலாயா பெண்களுக்கு ஏன் அந்தப் புனிதம் வசப்படவில்லை என்பது மாதிரியான ஒருவரின் கேள்வி மற்றும் அதற்கான பதில் குறித்தும் எழுதியிருந்தேன். அதில் வந்து எழுதிய அத்தனை பேரும் ஆண்கள்தான். சில மணி நேரத்திற்கு அந்தப் பதிவில் ஒருப்பெண்கள்கூட விருப்பக் குறியும் இடவில்லை. பின் ஆதரவாக சில விருப்பக்குறிகள் விட்டிருந்தனர். (8பேர்)

பதிவின் இறுதியில் நான் எழுதியது இதுதான்.

தமிழ்ப்பெண்கள் என அவர்கள்மீது புனிதத்தை கட்டமைப்பதும் அவர்களை ஒடுக்குவதற்கு சமமானது என்பது என் கருத்து. தயவு செய்து அது யாராக இருந்தாலும் நிறுத்திக்கொள்ளுங்கள். தமிழ்நாடோ எந்நாடோ எங்களுக்கு எப்படி வாழ்வதென்பது தெரியும்.

நான் தவறாக எழுதியிருக்கேனா அல்லது அதில் ஆணாதிக்க சிந்தனை ஏதும் இருக்கிறதா என்று என் எழுத்தில் நானே தேடிப்பார்கிறேன். ஒரு வேளை பெண்களின் புனிதத்தை எழுதியிருந்தால் பெண்கள் ஆதரித்திருப்பார்களோ என்று தோன்றுகிறது. என் பெண்ணிய சிந்தனை மீது கல்லெரியப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

16 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஊடறு, பெண்களுக்கான தளம் என்ற நம்பிக்கையை எங்களுக்கு கொடுத்திருக்கிறது. கொடுத்தும் வருகிறது. பேதம், வர்கம், இனம், மொழி, அந்தஸ்து என்று அனைத்தையும் ஊடறுத்து பெண் என்ற ரீதியில் அனைவரும் சமமே என்று செயலில் காட்டுவதற்கு ஊடறுவினால்தான் முடிகிறது. தனக்கான தனித்துவத்தை அது அமைத்துக்கொள்ளவில்லை. சுயம் அதற்கு இன்னொரு பெயர்தான் ஊடறு — . மலேசியா ஜூன் 2020

எந்த வகையான சமரசமும் செய்து கொள்ளாதததான். – .. ஊடறு- எம்.ஏ சுசீலா (இந்தியா)

பெண்களின் குரலாக மட்டுமன்றிப் பல்வேறு தளங்களில் ..படிநிலைகளில்  ஒடுக்கப்பட்டிருக்கும் அனைத்துத் தரப்பினர்களின் உணர்வு வெளிப்பாட்டுக்கான இணைய வெளியாகத் தடம் பதித்திருப்பது ஊடறு. கலையையும் கைநழுவ விட்டு விடாமல் சமூகச்சிந்தனையோடு கைகோர்த்துச் செல்லும் படைப்புக்கள் ஊடறுவின் பலம். எந்தச்சார்பு நிலைப்பாடும் இன்றிப் பெண்மொழியின் வேறுபட்ட போக்குகள் பலவற்றையும்,மாறுபட்ட பார்வைகளையும் வாசகப்பார்வைக்கு முன் வைத்தபடி முடிவுக்கு வந்து சேரும் பொறுப்பை அவர்கள் வசம் விட்டுவிடுவது ஊடறுவின் தனித்தன்மை. தரத்தில் எந்த வகையான சமரசமும் செய்து கொள்ளாததும் கூடத்தான். ..

7,8 ஆண்டுக்காலமாகத் தொடர்ந்து ஊடறுவோடு என்னையும் இணைத்துக் கொண்டிருக்கும் தோழியருக்கு நன்றி. பதினாறாம் ஆண்டில் கால் பதிக்கும் ஊடறு..,இலக்கிய சமூக நோக்கில் இன்னும் பல சிறப்பான இலக்குகளை எட்ட வேண்டும் , எட்டும் என்று வாழ்த்துகிறேன்.

எதிர்வரும் சந்ததியினரிடம் கையளித்துப் பயணிக்கட்டும் – . “ஊடறு – ஓவியர், V.P. வாசுகன் – (பிரான்ஸ்)

This image has an empty alt attribute; its file name is vasukan-2.jpg

பெண்களின் படைப்புலகத்தை  முதன்மைப்படுத்தும் இணையமாக நீண்ட பயணத்தை தனதாக்கிக்கொள்ளும் “ஊடறு”. www.oodaru.com இணைய ஊடகத்தின் செயற்பாடு தனித்துவமானது. சமூகக் கரிசனைப்பெண்களால் பெண்நிலைசார் வெளிப்படுத்துகையாகக் கொண்டது. இவ்வூடகத்தின் இடைவிடாத தொடர் பயணங்களும், சலிப்பற்ற செயற்பாடுகளும் மிகுந்த கவனத்திற்குரியன.
எனது ஓவியக் காண்பியல் நிகழ்வின் தகவல்களை 2005 ஆண்டிலும் அதன் பின் நடந்தவையையும் இவர்களது தளத்தில் தன்னியல்பாகப் பதிவாகியதை நன்றியுடன் நினைவில் கொள்கிறேன். மேற்கு ஐரோப்பிய மண்ணில் ஒரு புதியவனாயிருந்த எனது ஓவியக் காண்பியல் நிகழ்வு தொடர்பாக இவர்கள் காட்டிய அக்கறை புலம்பெயர் தமிழ்ப்பரப்பில் என்னைப் பெரிதும் ஈர்த்தது. மூன்றாம் உலக யுத்தம் போன்று உலகமே ‘கொரோனா முடக்கத்தில்’ அடங்கியுள்ள காலத்தில் இதிலிருந்து மீட்சியுறும் மனித மனங்களின் ஒரு பிரதிபலிப்பாக கடந்த மாதம் 10.05.2020 எனது “நேரலை கண்காட்சி” முகநூல் (Facebook – On Live) வழியாக இடம்பெற்றது.  இது கண்காட்சி வகைமையில் ஒரு புதிய முயற்சியும் கூட..

ஊடறுவில் புலம்பெயர் வாழ் – கலை தொடர்பான செய்திகள் தொடர்ந்து வாசிக்கக்கூடியதாயிற்று. ஒரு தாயின் அரவணைப்பை போன்று, அரவணைத்துக்கொண்ட பல இலங்கை தமிழ் பெண் ஓவியர்களை, ஊடறு மூலமாக நானும் அறிந்து கொண்டேன். எம்மவரொடு ஐரோப்பா என்ற ஒரு வட்டத்துக்குள் நின்று விடாமல், சர்வதேச அளவில் சென்னை, இலங்கை, மும்பை, மலேசியா சிங்கப்பூர் போன்ற பெரு நகரங்களில்  பெண்ணியம் சார்ந்த இவர்களது தொடர் சந்திப்புக்களும், செயற்பாடுகளும் ஆரோக்கியமானது. பலகட்டுப்பாடுகளை உடைத்து நிற்கும்,  ஊடறுவின் பயணங்கள், பலருக்கும் ஊக்கமளித்தவாறு எதிர்வரும் சந்ததியினரிடம் கையளித்துப் பயணிக்கட்டும். மேன்மேலும் வியாபித்து படரட்டும்!

ஒரு தசாப்தத்திற்கும்  மேலாக கடந்து நிற்கும் ஊடறுவிற்கு – வாழ்த்துக்கள். www.vasuhan.com – 08.05.2020

ஊடறு  பெரும்பயணம். – அஸ்வினி – (சிங்கப்பூர்)

This image has an empty alt attribute; its file name is DSC_5759s-1024x850.jpg

ஊடறு’ என்பது பிறருக்கு ஒரு நிகழ்வாக இருந்திருக்கலாம், என்னைப் பொருத்தமட்டில் அது ஒரு பெரும்பயணம். பெண்களாக மட்டுமே தனித்து நின்று தலைமைத்துவத்துடன் செயல்பட முடியும் என்பதை எனக்கு நிரூபனப்படுத்திய ஒரு முக்கியமான தளம். ஊடறுவை பெண்ணியம் சார்ந்து மட்டுமே செயல்படும் ஓர் அமைப்பாக என்னால் தனித்துப்பார்க்க இயலவில்லை. இன்னும் பல இடங்களில் பழம்பெருமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் தமிழர்களிடையே தற்கால அரசியலையும் சமூகவியலையும் நமது தாய்மொழியிலேயே விவாதிப்பதன் மூலமாக, மொழியையும், மொழி சார்ந்த அறிவையும் நாம் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

ஊடறு கடக்க வேண்டிய தூரங்களும்  எட்டிப்பிடிக்க வேண்டிய சிகரங்களும் இன்னும் பல உள்ளன என்பது மறுப்பதற்கில்லை. அடுத்த இளைய தலைமுறையினர் அமைப்பிற்கு உதவியும், அதற்கு பக்கபலமாக நின்றும், மூத்த தலைமுறையினரிடமிருந்து அனுபவ அறிவைப் பெற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதே 16வது ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் ஊடறுவிற்கு நான் விடுக்கும் வேண்டுகோளாகும்.

ஊடறு இதுவரை நீண்ட பயணத்தை செய்துள்ளது. – பாமதி (அவுஸ்திரேலியா)

ஊடறு இதுவரை நீண்ட பயணத்தை செய்துள்ளது.

This image has an empty alt attribute; its file name is bamathy.jpg

பல தமிழ் பெண்களை உள் இணைத்து அவர் சிந்தனைகளைப் படைப்புகள் மூலம் வெளிக் கொண்டுவந்ததுடன் சர்வதேச அரங்கில் ஒரு தளத்தை ஏற்படுத்தியுள்ளது. என்றும் என் ஆதரவும் வாழ்த்துகளும்

ஒடுக்குமுறைக்கும் எதிராகக் குரல் கொடுக்கும் ஊடறு  – அன்னா பொன்னம்பலம்  – (நியுசிலாந்து) ஊடறு 2019  – பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் – ஒரு பார்வை

ஊடறு இணையத்தளத்தை பெண்ணியம் பற்றிய எழுத்துக்கள் தமிழில் என்ன இருக்கிறது எனத் தேடுகையில் 2007 – 2008 களில் தெரிய வந்தது. தொடக்கத்தில் அதில் வந்த பல கட்டுரைகள் வாசித்துள்ளேன். இம்முறை சந்திப்பிற்கு வாறியா என றஞ்சி அக்கா கேட்ட போது முயற்சி செய்கிறேன் என்றே சொல்லியிருந்தேன். பின்  நான் போகலாம் எனத் தெரிந்தததும் மிகத் தாமதமாகவே தெரியப்படுத்தினேன். சூழ்நிலை அப்படியாக இருந்தது. நான் ஏதும் கதைக்க வேண்டும் என்றில்லை, பங்கேற்றாலே போதும் என்று சொன்னேன். நான் போய் பல வேறு வேறு துறைகளில் இருந்து பெண்களைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.  என் தன்னார்வப் பணிகளினூடே பல பெண்ணிய கருத்தரங்கங்களில் பங்குபெற்றி இருக்கிறேனெனிலும் முற்றிலும் தமிழில் அதுவும் முற்றிலும் தம்தம் துறைகளில் ஆளிமையான தமிழ் பெண்களால் நடத்தப்படும் ஒரு மாநாட்டில் பங்கு பற்றியது இதுவே முதல் தடவை. சிங்கப்பூரில் இப்பெண்களுடன் களித்த இரண்டு நாட்களின் ஒவ்வொரு நிமிடங்களும் மிக மிக மகிழ்வான தருணங்கள். இரண்டு நாட்கள் போதாதென்றே சொல்ல வேண்டும்.

உலகில் குறிப்பாகத் தமிழ்ச் சமுகத்தில் பெண்கள் சந்திக்கும் பல்வேறு விதமான பிரச்சனைகள், அதைத் தீர்க்கும்  வழிகள், பொது வெளியில் விவாதத்திற்கே வராத பிரச்சனைகள், வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண் மொழி, தலித் பெண்ணியம் என எத்தனையோ விடயங்களைப் பற்றிப் பெண்கள் பேசினார்கள், விவாதித்தார்கள். It was truly amazing to watch.

இவற்றில் என்னில் தாக்கத்தை ஏற்படுத்திய சில பேச்சுகளைப் பர்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

தொழிற்சங்க செயற்பாட்டில் பெண்கள் – சிவரஞ்சனி மாணிக்கம்

இங்கு நியுசிலாந்த்தில் இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் சிலருடன் தொடர்புண்டு. இது நியுசிலாந்தில் இருக்கும் ஆறு பெரிய நிறுவனக்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை பிரதிநித்துவப்படுத்தும் சங்கம். அவர்களுடன் பல கருத்தரங்குகளிலும் கலந்துள்ளேன். அதோடு இவர்களின் living wage campaign க்கும் இயலுமானளவு ஆதரவு கொடுப்பது வழக்கம். தமிழில் இந்தத் தொழிலாளர் சங்கங்களில் இணைவது, அதன் முக்கியத்துவம் பற்றிக் விழிப்புணர்வேட்படுத்தும் ஒருவரைப் பார்ப்பது இதுவே முதற்தடவை. “பல தொழிலாளர்களுக்குத் தொழிற் சங்கம் என்றால் என்னவென்றே தெரியாமல் உள்ளது. ஆனால் என்னுடைய அரசியல் வாழ்க்கையே தொழிலாளர் போராட்டத்தில தான் ஆரம்பித்தது” என்று தனது பேச்சைத் தொடங்கி தொழிலாளர்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளை யாரும் பேச முன்வருவதில்லை என்பதையும் அதை முன்னெடுத்துச் சென்று அவற்றிற்கான தீர்வுகளைக் கண்டடையும் தமது லட்சியத்தைப் பற்றியும் மிக உணர்ச்சிவசமாகப் பேசினார். தற்போது மலேசியாவில் இருக்கும் தொழிற்சங்கங்களில் பெண்களின் பங்களிப்பு என்ன என்பதையும் பற்றிய புள்ளி விபரங்கள் அதிர்ச்சி அளிக்கக் கூடாதெனினும் அப்படியே திரையுல் பார்க்கும் போது அவர் பேசுவதைக் கேட்கும் போது அதிர்ச்சி அளித்தது உண்மையே. மற்றைய எல்லா இடங்களிலும் மாதிரியே தொழிற்சங்கங்களில் பெண்களின் அங்கத்துவமும் குறைவு, அங்கத்துவம் வகிக்கும் பெண்களுக்குக் கூட சங்கங்களில் முடிவெடுக்கும் ஆளுமையுடைய பதவிகள் அளிக்கப்படுவதில்லை. அநேகமான தொழிற்சங்கங்கள் ஆணாதிக்கக் கொள்கைகளுடனும் அதிகார வர்க்கத்தைக் கேள்வி கேட்காமல் அவர்களுடன் இணைந்து செயற்படும் யூனியன்களாகவே இருக்கின்றன என்பதை வலியுறுத்தினார்.

இந்த முதலாளித்துவக் கட்டமைப்பு தொழிலாளர்களை வேறு எதைப்பற்றியும் சிந்திக்க விடாமல் முழுநேரமும் வேலை, பொருளாதாரம் பற்றி மட்டுமே சிந்திக்கவைத்து இரண்டு, மூன்று சேலை பின் குடும்பம் என்று ஒட்டிக்கொண்டே இருக்க மட்டுமே அனுமதிக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டினார். அதற்கும் மேலாக ஆணாதிக்க சமூகத்தால் ஆண்களும் பெண்களும் கூடப் பெண்கள் சங்கங்களில் இணைவதற்கு ஆதரவு கொடுப்பதில்லை என்பதையும் சொன்னார். இப்பிரச்சனைகளைத் தாண்டி எப்படிப் பெண்களை இணைத்து கூட்டு நடவடிக்கைகளை எடுப்பதென மிக அழகாகப் பேசினார்.

கருக்கு முதல் மனுசி வரை  – பாமா

தமிழின் முதல் தலித் இலக்கியத் தன்வரலாற்று நாவலான கருக்கை எழுதியவர். 

கருக்கு நாவல் வெளிவந்ததும் தன்னோட மக்களே (புத்தகத்தை வாசிக்காமலே அவர்களுக்கு எதிராக இருக்கும் என நினைத்து) ஊருக்குள்ள தன்னை நுழைவிடாமல் தடுத்ததும் அதன் பின் அவர்களே காலப்போக்கில் அந்நாவலை ஏற்றுக்கொண்டாடிய போதும் தனது உணர்ச்சிகளை அழகாக எடுத்துரைத்தார்.

மனிசி இவரின் கடைசிப்புத்தகம். கருக்கிலிருந்து மனிசிவரை ஒரு தலித் பெண்ணாக சாதியத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் எதிரான அவரது பயணத்தைப் பற்றிய இவரது பேச்சு பலருக்கும் உத்வேகத்தைக் கொடுத்திருக்கும்.இவருடன் எல்லாம் நாட்கணக்கில் இருந்து கதைக்க வேண்டும் போலிருந்தது.  எதிர்காலத்தில் அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைய வேண்டும்.

காணடிக்கப்பட்ட பாடினிகள் – ச விஜயலட்சுமி

வரலாறு என்பது எல்லா விதத்திலும் ஆண்களின் பங்களிப்பு, ஆண்களுக்கானதாக, ஒற்றைத்தன்மையுடனேயே பதிவு செய்யப்பட்டு வருகிறது. வரலாறு பெண்களின் பங்களிப்புகள் பலவற்றை மறைத்து/மறுத்து எழுதப்பட்ட ஆண்களின் வரலாறே எனப் பல இடங்களில் சொல்லியுள்ளேன். அறிவியல் சார்ந்து மறைக்கப்பட்ட சில பெண்களின் பங்களிப்பை எழுதியுமுள்ளேன். ஆனால் தமிழர் வரலாறு, சங்க, இடைக்கால‌ இலக்கியங்களில் இது பற்றி எதுவும் தெரியாது. இக்காலகட்டத்திலிருந்து ஓளவையையும் ஆண்டாளையும் மட்டும் தான் பெண்கவிஞர்கள் என நாம் நினைத்திருக்கிறோம்.

ஒளவையார் எழுதிய பலவே சில ஓலைச்சுவடிகளாகவே இருக்கிறது. அதை யாரும் இன்னும் தொகுக்கவே இல்லை. இவ்வளவு பிரபலமான ஒளவையாருக்கு இந்தக் கதியென்றால் சாதாரணப் பெண்கள் எழுதியது எமக்குக் கிடைக்க சந்தர்ப்பமே இல்லை. இன்னும் வாசிக்கப்படாமலே எவ்வளவோ ஓலைச்சுவடிகள் உண்டு. அவ்வாறு இவர்களின் தேடலில் கண்டுபிடித்த பெண்களைப் பற்றிச் சொன்னார். இவர்கள் சாதியத்தின் எதிர்க்குரல் தம் உரிமைகளைப் பேசுபவர்களாக, தாம் இருந்த சமூகத்தைப் பிரதிபலிப்பவர்களாக, அதிகாரத்தின் எதிர்க்குரல்களாக இருந்த்திருக்கிறார்கள். இவ்வெழுத்துகளை சமூகத்திற்குக் கொண்டு வருவதன் அவசியத்தைப் பற்றி மிக அழகாக எடுத்துரைத்தார்.

பெண்ணின் எழுதப்படாத நினைவுகள் – விஜி சேகர்

ஈழத்தில் தமிழ்ப்பெண்களின் அனுபவங்களை இவர் கதைக்கும் போது கேட்டுக்கொண்டிருந்த பலரின் கண்களில் கண்ணீர். இவர் பேசும் போது போர் முடிந்த உடன் இங்கு அகதியாக வந்த ஒரு அக்கா சொன்னது நினைவில் வந்தது ‘இந்த புலம் பெயர்ந்த தமிழாக்கள் வன்னிக்குப் போனால் அடிச்சே கொன்று போடுவினம்’. என்றார். இங்கு பெண் சார்ந்த தமிழ்க் கூட்டங்கள் நடப்பதில்லை. அத்தி பூத்தாற்போல் ஒரு முறை நடக்குது வா என்று சிலர் கூப்பிட‌ போக அங்கும் ஆண்களே  தமிழர்களில் எத்தனை ஜான்சி ராணிகள் இருந்தார்கள் தெரியுமா? நீங்கள் தான் இப்போ எதுவும் செயவதில்லை என்ற ரேஞ்சுக்குப் பேசினார்கள். இவர்கள் நிகழ்காலத்தில் இருந்து, என்ன கதைக்கிறார்கள் என உணர்ந்தா கதைக்கிறார்கள் என கோபமும் ஆச்சரியமும் தான் மிஞ்சின. இதெல்லாம் விஜி இலங்கையில் பல பெண்களின் நிகழ்கால அனுபவங்களை விபரிக்கும் போது வந்தன. இயலாமையால் கோபமும் அழுகையுமே வந்தது.

இரண்டாம் நாளின் முதல் அமர்வு பேசப்படாத, கேட்கப்படாத பெண்குரல்கள் என்ற தலைப்பில் பேசப்பட்ட மூன்று பேச்சுகளும் என் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும். இவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் நாம் படிக்க நிறைய உண்டு. இவர்களுடன் நீண்ட நேரம் செலவழிக்க முடியவில்லையே என்ற ஒரே குரை தான்.

சமூக நல்லிணக்க மேம்பாட்டில் பெண்களின் பங்கு – நஸ்ஹத் ஃபஹீமா

Hash Peace இயக்கத்தின் நிறுவனர். பல்லின சமூகத்தில் அவரவரது வேற்றுமைகளைத் தாண்டி ஒற்றுமையைப் பேண‌ வேண்டியத்தின் அவசியத்தைப் பற்றிப் பேசினார். தனது இயக்கதினூடு ஒன்றிணைந்த சமுதாயங்காள் இருவாக, ஒவ்வொருவரும் தீவிரவாத, மதவாதக் கோட்பாடுகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டுமென வலியுருத்துகிறார்.

ஒரு முறை தானும் தங்கையும் டாக்சியில் போகும் போது அந்த வாகன ஓட்டுனர் இவர்களைப் பார்த்து ‘உங்களுக்கு குண்டு செய்யத் தெரியுமா?’ என்று கேட்ட போது தனக்குத் தோன்றிய கோபம் தன் தங்கைக்கு ஏன் வரவில்லை எனப் பல சம்யம் யோசித்திருப்பதாகச் சொன்னார். அதே எண்ணம் எனக்கும் பல தடவைகள் வந்துள்ளன என்று அந்நேரம் அவரிடம் சொன்னேன். தான் ஒரு சிங்கப்புரிய, தமிழ், முஸ்லிம் எனத் தன்னை அடையாளப்படுத்துவதாயும் இவ்வேறுபட்ட அடையாளங்கள் பல்லின மக்களிடையே சமாதானத்தை வலுப்படுத்த தான் செய்யும் முயற்சிகளுக்கு உதவுகின்றன என்றும் சொன்னார். இலங்கை ஏப்பிரல் கூண்டு வெடிப்புகளுக்குப் பின் இலங்கையில் இருந்து கூட இவரைத் தொடர்பு கொண்டு பலர் அறிவுரை கேட்டுள்ளனர்.

பெருந்திணையாகும் ஜந்திணை – புதிய மாதவி

பண்பாடு என்றால் என்ன?

நான் புடவை கட்டிக் கொண்டு வந்திருக்கிறேன். இது என் பண்பாடா? பொட்டு?

எந்தப் புற அடையாளங்களும் பண்பாட்டின் அடையாளங்கள் அல்ல. அப்படியாயின், எது பண்பாடு? ஏன் பண்பாடு பெண்ணுக்குரியதாகவும் பெண் உடலுக்கானதாகவும் இருக்கிறது? என ஆரம்பித்து, சமகால/பெண்ணிய நோக்கில்  தமிழ்ப் பண்பாட்டை மறுவாசிப்பிற்கு உட்படுத்திய பேச்சு.

பேச்சு. பெண்கள் எங்கெல்லாம் நீங்கள் கற்பித்திருக்கும் ஒழுக்கவியல்களை மீறுகின்றார்களோ, அங்கெல்லாம் அவர்கள் விதிவிலக்காகிறார்கள் என்று அழகாக சிந்தனையைத் தூண்டும் வகையில் பேசினார்.

கடைசி இரண்டு அவர்வுகளின் பேச்சுக்களைக் கேட்க இயலவில்லை. இக்கருத்தரங்கில் எவ்வளவோ புதிதாக‌ அறிந்திருக்கிறேன். எத்தனை அற்புதமான வெவ்வேறு விதங்களில் அதிகாரங்களிற்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகக் குரல் கொடுக்கும் தமிழ்ப்பெண்களைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது உண்மையில் மிகவும் உத்வேகத்தையும் மகிழ்சியையும் அளித்தது.

மறக்கவியலா இணைய இதழ்! -ஊடறு …. அன்பாதவன்  – (இந்தியா

This image has an empty alt attribute; its file name is anbathavan-sivam.jpg

கவிஞர் புதியமாதவி வழியாக அறிமுகமான  ஊடறு உலகமெங்கும் தமிழ் கூறும் நல்லுலகின் பெண் படைப்பாளிகள் யாவருக்கும் வாய்ப்பளிக்கும் சங்கப்பலகை.நான் எழுதிய நூல் விமர்சனங்கள் சில ஊடறு வில் வெளிவந்தது பெருமிதக் கர்வம்.முகநூல் வழியாகவும் ஊடறு இதழை தொடர்ப ஏற்பாடு செய்வது அதன் திசைகளை விசாலமாக்கும். ஊடறு வாழ்க…வளர்க!

பெண்களின்  சுய   வெளிப்பாடுகளுக்கான தளம் ஊடறு  வவுனியா சுதா – இலங்கை

நாளுக்கொரு இடமாற்றம் நாளுக்கொரு பாடசாலை என இடம் மாறி கல்வி பயின்ற நாம் இலங்கையில்  போரினால் பல சொல்லொணா துன்பங்களை அனுபவித்து இன்னும் அந்த இழப்பில் இருந்து உணர்வுரீதியாக  மீள முடியாத நிலையில்  இருக்கும் நாம்  அதிலிருந்து ஓரளவு  விடுபட்டாலும்   வாழ்வில் சில  பெண்கள் எமக்கு தோள்  கொடுத்தனர். அவர்களின் உதவியுடன் சில பெண்கள் உரிமை செயற்பாட்டாளர்களினதும் பெண்ணிலை வாதிகளினதும் நட்பு  எனக்கு கிடைக்கப்பெற்றது. அதன் மூலமே பெண்கள் சமூக குழுக்களிற்கிடையில் சமூகத்திலும் ஆணாதிக்க சிந்தனை மூலம் ஒடுக்கப்படுகின்ற   பெண் தலைமை குடும்பத்திலுள்ள எனது செயற்பாடுகள் ஆரம்பித்தன.

அதனூடாக 2018 இல் மட்டக்களப்பில் நடைபெற்ற  ஊடறு பெண்கள் சந்திப்பில்   பங்குகொள்ளும் வாய்ப்புக் எனக்கு கிடைத்தது. அதையடுத்து ஊடறு சந்திப்பின் சிறந்ததொரு களப்பயணமாக சிங்கப்பூர் சந்திப்பு எனக்கு  அமைந்தது எனலாம்.அந்தவகையில்  ஊடறு சந்திப்பின் தோழிகளின் அரவணைப்பும் ஆதரவும்  கருத்துப் பகிர்வும் எனக்கு  கிடைத்ததை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.

முதலில் ஊடறு ரஞ்சி  எனது சிந்தனைகளையும் தவிப்புக்களையும் பிள்ளையின் ஏக்கங்களை அறிந்து ஓடிவரும் ஒரு தாயுமானவள். அவள் எனது ரஞ்சியம்மா. அவரை 2018இல் ஊடறு மட்டக்களப்பு சந்திப்பின் போது தான் சந்தித்தேன்  . ஏனோ தெரியவில்லை பூர்வஜென்மத்தில் பழகியது  போல ஒரு உணர்வு  ஏற்பட்டது. அதிலிருந்து  எனது செயற்பாடுகளை ஆதரித்துக் கொண்டிருப்பவர்.. அந்தவகையில்  2- 3 நவம்பர் திகதிகளில் சிங்கப்பூரில்  இடம்பெற்ற ஊடறு சந்திப்பின்  பற்றிய எனது பகிர்வு மிகவும் அவசியமான ஒன்று. ஊடறு தளமானது பொதுவாக பெண்களின்  சுய   வெளிப்பாடுகளை  கருத்துக்களை அவர்களின் பங்களிப்பை  அவர்கள் சென்று கொண்டிருக்கும்  தளங்களில் இருந்து சுதந்திரமாக    பகிர்ந்தளிக்க சந்தர்ப்பம் அளிக்கும் ஒரு சந்திப்பாகும்   அந்தவகையில் இலங்கையிலிருந்து நான் பங்கு பற்றியதையிட்டு  மிகவும் சந்தோசமடைகின்றேன். .  ரஞ்சியம்மா மிகவும் அருமையான சுபாவம் கொண்டவர். சமமாகப் பழகும் நபர்   எனது செயற்பாடுகளின் முன்னெடுப்புக்களிற்கு மிகவும் ஆத்மார்த்தமாக மற்றும் பௌதிக ரீதியாக கடந்துவரவேண்டிய பாதைகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் என ஊடறு ரஞ்சியம்மாவின் கருத்துப்பகிர்வு  எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

அத்துடன் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினரில் ஒருவரான ரமா சிறுகதை எழுத்தாளர்.  நான் சிங்கையில் இருந்த காலப்பகுதியில் நான் அறிந்த அளவில் மனிதம் மதிக்கப்படுகின்ற ஒரு தேசமாக உணர்கிறேன். ஒரு மாற்றுத்திறனாளி ஒருவரை ஓட்டுனர் இறங்கி வாகனத்தில்  ஏற்றுவதை வாழ்நாளில்  நான் கண்டதேயில்லை. உண்மையில் எனது மனதைக் கவரச்செய்தது அந் நிகழ்வு..  மறக்க முடியாத நினைவலைகள். மற்றும் புதியமாதவி அம்மாவின்   பெண்ணியமும் பெண்நிலைவாதமும் பற்றிய  கருத்துக்கள்  ஆணாதிக்க சிந்தனையின் வடிவங்களைக் கேள்வி கேட்கும் துணிவும்  செயற்பாடுகளில்  பெண்களின் வகிபங்கு  எவ்வளவு முக்கியம் என்பதையும் கண்டு  தெளிவுற்றேன்.

 கருக்கு “பாமா அம்மாவின்   பெண்கள் என்ற உணர்வுகளில் பேசப்படாத மற்றும் அறிய முடியாத ஏற்றுக்கொள்ள முடியாத பெண்களின் குரல்களைப் பற்றிய கருத்தியல் ரீதியான பகிர்வு மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. சாதிய ஒடுக்கு முறைகள்  இனம்  மொழி கலாசாரம் கடந்து உள்ளதை பற்றி அறிய முடிந்தது    இத் தோழிகள் அனைவரினது கருத்துப்பகிர்வுகள்   எனது இப்போதைய செயற்பாடுகளுக்கு உந்து கோலாக இருந்தததையும் எதிர்காலத்தில்   எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் உணர்ந்து கொண்டேன். உண்மையில் கலந்துரையாடல்கள் மட்டுமல்லாமல் அனுபவப்பகிர்வு பெண் அரசியல் பங்கெடுப்புக்கள் மற்றும மேடை நாடகங்கள் கலை இலக்கியத்தில் பெண்களின் வகிபங்குகள் என்பன பற்றிய கருத்துக்களை கேட்கும் வாய்ப்பும்  பல ஆளுமையுள்ள பெண்களன்  இலக்கியப் படைப்புக்கள் என சொல்லிலடங்காதவைகள் இச்சந்திப்பு  நானும் இச்சந்திப்பில் கலந்துயுள்ளதையெண்ணி மகிழ்வுறுகிறேன்..

.ஊடறு…. அன்பின் குரலாய் மெல்லென ஓடும் நீரூற்று… சுலைஹா பேகம் கெகிறாவ  (இலங்கை)

This image has an empty alt attribute; its file name is DSC01408-s.jpg

அநீதம் அனுபவித்தோர்க்காய்  தயங்காமல் பேசிற்று ஊடறு எப்போதும்… பேச நிறைய இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *