தேயிலைப் பெண்கள் இரட்டை சுமையைச் சுமக்கின்றனர். ஸ்ரெலா விக்டர் (மலையகம்) இலங்கை

தேயிலைத் தோட்ட தொழிலாளர் படையில் 70- 80 வீதமானோர் பெண்களாவர் இப்பெண்களில் அதிகமானோர் கொழுந்து பறிக்கும் வேலையிலும் ஒரு பகுதியினர் தேயிலை தொழிற்சாலையில் திறன்சாரா உழைப்பிலும் ஈடுபடுகின்றனர். கொழுந்து பறிக்கும் தொழிலும் ஒரு திறன்சாரா உழைப்பாகவே கருதப்படுகிறது.

This image has an empty alt attribute; its file name is koottu-2-1024x768.jpg

http://udaruold.blogdrives.com/archive/cm-04_cy-2008_m-04_d-30_y-2008_o-40.html 2008 ஊடறுவில் வெளியான இக்கட்டுரை தேவையும் அவசியமும் கருதி மறுபிரசுரமாகிறது.

கொழுந்து பறிக்கும் பெண்ணை தமிழில் கொழுந்தாள் (கொழுந்து பறிக்கும் ஆளு) எனவும் ஆங்கிலத்தில் Plucker எனவும் அழைப்பர் தேயிலை உற்பத்தியின் முதுகெலும்பாக திகழும் பெண்களின் சமூக முக்கியத்துவம் இன்று இத்துறையிலுள்ள பல்வேறு பங்காளர்களாலும் உணரப்படுகிறது. கொழுந்தாள் எனும் அடையாளப்பெயர் மாற்றப்பட வேண்டும் என பெருந்தோட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் பலரும் விரும்புகின்றனர். எனவே கொழுந்தாள் எனும் அடையாளப் பெயருக்குப் பதிலாக தேயிலைப்பெண்கள் (Tea Women) எனும் அடையாளப் பெயரை பயன்படுத்துவது பொருத்தமாயிருக்கும்

உற்பத்தித் தளத்திலும் மறு உற்பத்தி தளத்திலும் நடைபெறும் போராட்டமாகவே தேயிலைப் பெண்களின் வாழ்வு அமைந்துள்ளது. தேயிலை உற்பத்திக்காக தமது அன்றாட வாழ்வில் சாராசரியாக எட்டு மணித்தியாலங்களை செலவிடும் இப்பெண்கள் பணப் பெறுமதியற்ற குடும்ப உழைப்புக்காக 6-7மணித்தியாலங்களை அன்றாடம் செலவிடுகின்றனர். தேயிலைப் பெண்கள் ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு 18- 20 கிலோ நிறையுடைய கொழுந்தைப் பறிப்பார்பார்கள் ஒரு கிலோ கொழுந்து (ஈரிலையும் குருத்தும் – Tea Leaves and a bud) பறிக்க ஒரு பெண் 1100 – 1200 தடவைகள் தனது விரல்களை இயக்க வேண்டும். கொழுந்து மலையின் தன்மை, நாற்:றுப் பருவம், வெயில்காலம,; புதுப்பயிர் இதைத் தீர்மானிக்கும் சராசரியாக ஒரு தேயிலைச் செடியில் 0.020 கிராம் நிறையுடைய கொழுந்து பறிக்கப்படும். எனவே 20 கிலோ கொழுந்தைச் சேகரிக்க ஒரு நாளில் 1000 – 1050 தேயிலைச் செடிகளில் கொழுந்து பறிக்க வேண்டும் இதற்காக ஒருவர் நாளொன்றுக்கு 3-4 கிலோ மீற்றர்கள் தேயிலைச் செடிகளுக்கிடையே நடக்க வேண்டும்.

இதைத் தவிர  மலையிலிருந்து கொழுந்து நிறுக்கும் மடுவத்துக்கு ((Muster shed)நடந்து செல்வதநற்கு 3-6 கிலோ மீற்றர்கள் மேலதிகமாக நடப்பர் இவ்வாறு பார்க்கையில் தேயிலைப்பெண்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஒரு நாளைக்கு 6-10 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது. தலையில் சுமையுடன் கரடுமுரடான மலைகளில் பல கிலோமீற்றர்கள் நடப்பது இவர்களின் தொழிலின் அங்கமாகும் ஒவ்வொரு தேயிலைச் செடியுடனும் அறிமுகமானவர்கள் இப்பெண்கள் தான்.

எனினும் இவர்களது வேலைத்தள சூழல் இன்னும் ஜனநாயகத் தன்மையை பெறவில்லை ஆண் ஆதிக்கப்படி நிலையாக்கத்துக்கு உட்பட்ட தேயிலைத் தோட்ட உற்பத்திமுறையில் அடிநிலையில் இருப்பவர்கள் பெண்களே. அதனால் வேலைத்தள வன்முறைக்கு இலகுவில் இலக்காகிறவர்களாயும் பெண்கள் உள்ளனர். ஒவ்வொரு பெண் தொழிலாளியும் அன்றாடம் ஏதோ ஒரு வகையில் வன்முறையின் ஒரு வடிவத்தை வேலைத்தளத்தில் எதிர்கொள்ளும் நிலைமை காணப்படுகிறது. பொதுவாக தேயிலைப் பெண்களை வா-போ என்றே கங்காணிமாரால் அழைக்கப்டுவர் இது அவர்களது சுயகௌரவத்தை அடிப்படையில் பாதிக்கும் விடயமாகும். இதைவிட பல்வேறு விதமான பாரபட்சங்கள் பாலியல் இம்சைகள் நிர்ப்பந்தங்கள் துன்புறுத்தல்களுக்கும் மேலளாளர்களால் உள்ளாக்கபடுகின்றனர். இதற்கு எதிரான குரல் இவர்கள் மத்தியில் இன்னும் குறைவாகவேயுள்ளது.

இலங்கையின் கிராமங்களில் வாழும் பெண்களைப் போன்றே தேயிலைப் பெண்களும் குடும்பச்சுமையை சுமப்பவர்களாயும் உள்ளனர். பெருந்தோட்ட ஆண்கள் பலரும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். ஒரு ஆண் தனது மாதச்சம்பளத்தில் அரைவாசிக்கும் அதிகமான தொகையைச் செலவிடுகிறார் குடும்பத்தலைவன் என அடையாளப்படுத்தப்படும் ஆணும் பிள்ளைகளும் பெண்களின் உழைப்பிலேயே அதிகம் தங்கி வாழ்கின்றனர். அவ்வகையில் பெருந்தோட்ட சமூகத்தில் குடும்பத்தை உண்மையில் போஷிப்பவராக பெண்ணே இருக்கிறார். இவ்வடிப்படையில் பார்த்தால் தேயிலைப்பெண்கள் இரட்டைச் சுமையைச் சுமப்பவர்களாயுள்ளனர்.

http://udaruold.blogdrives.com/archive/cm-04_cy-2008_m-04_d-30_y-2008_o-40.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *