தலைப்பிலி கவிதை – யாழினி கேஸ்வரன்

திறந்து போனதாய்ச் சொன்ன
கதவுகளெல்லாம்
ஒரே நடையில்
அடைத்துப் போயின.
அறையெங்கும்
புனிதம் பேசிய
குருதியின் நாற்றம்
பெருக்கெடுத்து அலைகிறது.
மூடிய அறைகள்
மனித இரத்தங்களையும்
சதைப் பிண்டங்களையும்
எலும்புக்கூடுகளையும்
ஒரு சேர கடை பரப்பியுள்ளன.
உள்ளே வாழ முடியாததாயும்
வெளியே சாக முடியாததாயும்
திணறிப் போகிறது

மனம்.
கழுவித் துடைத்துவிட
இவை ஒன்றும்
கறை படிந்த சட்டை அல்லவே!
துயரக்கிடங்கின் முதுகு மேலேறி
தலை மெல்ல எட்டி நீட்ட…
மேலும் துயர்
மேனியெங்கும் துயர்
விரைந்தோடி வருகிறதுஇ
ஒரு குண்டடி பட்டவளின்
குருதியைப் போல.
குருதி திண்மப்பட
உயிரும் உறைந்துவிடலாம் – மேலும்
உலகும் ஆழ்ந்து விடும்இ
உறக்கத்தின் பொருட்டு.
இனியொரு போதும்
துன்பமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *