சோம்ஸ்கி உடன் ஓர் நேர் காணல் – ஜோஸே மனுவேல் சந்தன
தமிழில் – லக்ஷ்மி
http://samukanokku.com
நான் சோம்ஸ்கியின் நெருங்கிய நண்பன். அத்துடன் 14 வருடங்களுக்கும் மேலாக நான் அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.சோம்ஸ்கி ஒரு அமெரிக்கர், மொழியியலாளர், தத்துவவியலாளர், புலனுணர் விஞ்ஞானி, வரலாற்றாசிரியர், சமூக விமர்சகர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர். நவீன மொழியியலின் தந்தை என்று அறியப்படுபவர். இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் செல்வாக்குள்ள அறிவுஜீவி. பகுப்பாய்வு தத்துவ அறிஞர்களில் ஒரு முக்கிய புள்ளி. புலனுணர்வு விஞ்ஞான ஆய்வுத் துறையை நிறுவியவர்களில் ஒருவர்.
“கலை, இலக்கிய மற்றும் தத்துவங்கள் குறித்த மேற்கோள்களின் அட்டவணை பட்டியல்” பிரகாரம், 1980ம் ஆண்டிற்கும் 1992ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் மிகவும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட ஒரு அறிவுஜீவி. எல்லா வரலாற்றிலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டவர்களில் எட்டாவது இடத்தில் சோம்ஸ்கி இருக்கிறார். அந்தக்காலத்தில் மேற்கோள் காட்டப்பட்ட முதல் 10 மேதைகள்: கார்ல் மார்க்ஸ், லெனின், ஷேக்ஸ்பியர், அரிஸ்டோட்டில், பைபிள், பிளாட்டோ, சிக்மண்ட் பிராய்ட், சோம்ஸ்கி, ஹெகல் மற்றும் சிசெரோ.
சோம்ஸ்கி மாசஷூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு பேராசிரியர். அரிசோனா பல்கலைக்கழகத்தின் பரிசு பெற்ற பேராசிரியர். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.
ஜோஸே : மனித குலம் எதிர்நோக்குகின்ற சவால்களான பூகோள வெப்பமயமாதல், அணுசக்தி பேரழிவு குறித்த அச்சுறுத்தல்கள், புலம்பெயரிகளினால் ஏற்படுகின்ற நெருக்கடி என்பவற்றுடன் இன்னும் வேறு பலவும் இருக்கின்ற சமயத்தில், நாங்கள், அதாவது உலக மக்கள் அனைவரும், இன்றைக்கு முன்னெப்போதும் சந்தித்திராத அசாதாரண நிகழ்விற்கு முகம் கொடுக்கிறோம்: அதாவது கொரோனா தொற்று. இந்த நெருக்கடி வராமல் தவிர்த்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இதன் மூலங்கள் எவை?
சோம்ஸ்கி:இந்த சுகாதார நெருக்கடி தவிர்க்கப்பட்டிருக்கலாம். 2003ம் ஆண்டில் சார்ஸ் தொற்று ஏற்பட்ட பின்னர், விஞ்ஞானிகளுக்கும் தெரிந்திருந்தது – இன்னொரு கொரோனா வைரஸ் தொற்றுக்கான சாத்தியம் இருக்கின்றது என்றும் அது உலகளவில் பரவுகின்ற தொற்று நோயாக இருக்கக்கூடும் என்றும். அதற்கு எப்படி தயார்படுத்துவது என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இன்னொரு தீவிரமான தொற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் இன்றும் சொல்வதுபோல், அவர்களுக்கு அதனை எப்படி எதிர்கொள்வது என்றும் தெரியும். ஆனால் அறிவு மட்டும் இருந்து ஒன்றும் செய்ய முடியாது. அந்த அறிவைப் பயன்படுத்துவதற்கு யாராவது முன்வர வேண்டும்.
இதில் வரிசையில் முன்னுக்கு நிற்பது, உலகளாவிய மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள். இவர்கள் பாரிய இலாபத்தை சம்பாதிப்பவர்கள். மருந்துகளிற்கான விலை நிர்ணயத்திற்கு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஏகபோக தனியுரிமைக்கு ‘சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள்’ என்று தவறாக பெயரிடப்பட்டு இருக்கின்றது. அவர்களிடம் விஞ்ஞானரீதியான வளங்கள் இருக்கின்றன. ஆனால் அவை முதலாளித்துவ தர்க்க நியாயத்தினால் சமரசம் செய்யப்பட்டுள்ளன. எனவே ஒரு எதிர்கால பேரழிவினையொட்டி தயார்நிலையில் இருப்பது எந்த இலாபத்தையும் கொண்டு வராது.
எனவே அடுத்த மாற்று என்னவென்றால் அது அரசாங்கங்கள். அவற்றிடமும் வளங்கள் இருக்கின்றது. ஆனால் அவைகள் நவதாராளவாத கொள்ளைநோயினால் முடக்கப்படுகின்றன. நவதாராளவாதம் “அரசாங்கம்தான் பிரச்சினை” என்று எண்ணுகின்றது. இதை றொனால்டு ரீகன் 1980களில் மின்னுகிற புன்சிரிப்புடன் தெரிவித்தார். இதன் கருத்து என்னவென்றால், முடிவுகள் எடுப்பது அரசாங்கமாக இருக்காமல் வேறிடத்திற்கு மாற்றப்பட வேண்டும். அரசாங்கம் என்றால், அது எப்படியாவது மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். எவருக்கும் பதில் சொல்லாத தனியார் பெருநிறுவன கொடுங்கோன்மையர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பது. எனவே இப்படியான தொற்றுநோய்களை தடுப்பதற்கான முன்னேற்றம் என்பது, முதலாளித்துவ தர்க்க நியாயத்தாலும் மற்றும் பேரழிவைத் தருகின்ற காட்டுமிராண்டித்தனமான முதலாளித்துவத்தினாலும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டன.
பின்னர் தேர்தல்கள் வந்தன. அரசாங்கங்கள் மாறின. ஒபாமா சில முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவை தனியார் மூலதனங்களினால் தடுக்கப்பட்டன. ட்ரம்ப் விசுவாசமான வேலைக்காரன். ட்ரம்ப் காரியாலயத்தில் இருக்கின்ற காலங்களில், முறைப்படுத்தி திட்டமிட்டு சுகாதாரம் தொடர்பிலான அரசாங்க முக்கிய கூறுகளை இல்லாமல் ஆக்கினார். உடனடி ஆபத்துகளை கண்டறிந்து இருக்கக்கூடிய திட்டங்களை நீக்கினார். இந்த நீக்கப்பட்ட கூறுகள் மக்களுக்கு மட்டுமே சேவை செய்தன. பணக்காரர்களுக்கு அல்லது பெரு நிறுவனங்களுக்கு அல்லது அவர்களின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு சேவை செய்யாதவை. எனவே அவை செலவழிக்க வைப்பன. இதன் விளைவாக அமெரிக்கா விதிவிலக்காக பாதிப்புக்குள்ளாகியாது. தற்போது கொரோனாவை கையாளுவதில் உலகிலேயே மிக மோசமான பதிவைக் கொண்டுள்ளது.
ஜோஸே :இந்த கொரோனாவானது இலாபமீட்டக் கூடிய ஒரு உயிரியல் போர்க்கருவியாக தொழிற்படக் கூடும் என்று நிறைய ஊகங்கள் உலா வருகின்றன. இதற்கு உண்மையில் ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா?
சோம்ஸ்கி:இப்படியான கூற்றுகளின் ஒரேயொரு நம்பத் தகுந்த சாத்தியம் என்னவென்றால், உயிரியல் ஆயுதங்கள் தயாரிக்கும் ஆய்வுகூடத்தில் இருந்து தற்செயலாக (கவனக் குறைவினால்) இந்த கொரோனா வெளியேறி இருக்கலாம் என்பது. ஆனால் இதனை பெரும்பாலான விஞ்ஞானிகள் நிராகரிக்கிறார்கள்.
ஜோஸே :பருவநிலை மாற்றத்தின் விளைவினால் இந்த கொரோனா உருவாகி இருக்கின்றது என்று நீங்கள் கருதுகிறீர்களா?
சோம்ஸ்கி:அதன் நேரடியான விளைவு என்று கருதவில்லை. ஆனால் பூகோள வெப்பமயமாதலும் சுற்றுச் சூழல் அழிப்பும் மனிதர்களுக்கும் விலங்குகளிற்கும் இடையிலான இடைவெளியை குறைத்திருக்கின்றது. அதாவது, பயிர்ச்செய்கையற்ற நிலப்பரப்பில் வாழ்ந்த விலங்குகளின் தன்மை அற்றுப் போகச் செய்யப்படுகிறது. இந்த நிலைமையானது புதிய தொற்றுக் கிருமிகள் மனிதர்களை சென்றடைவதற்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளது. இந்த தொற்றுப் பரவலிலும் இதுதான் நடந்திருக்க வேண்டும்.
ஜோஸே :அமெரிக்காவை விடவும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சுகாதார அமைப்புகள் நன்றாக செயற்படுகின்றன. என்றாலும், இத்தாலி போன்ற நாடுகளில் பொது சுகாதார அமைப்பு நடைமுறையில் ஒரு சரிவை கண்டிருக்கிறது. அங்கு கொரோனாவினால் ஏற்பட்ட இறப்பு வீதம் சீனாவை விடவும் அதிகமாகியது. ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்று ஒரே நாளில் 894 பேர் மரணித்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த குறிப்பிட்ட எண்ணிக்கை அனைத்து உலக நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமைந்தது. இது எப்படி நடந்தது?
சோம்ஸ்கி:இத்தாலியின் வடபகுதியில் பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. கொரோனா தொற்று அங்குதான் மையம் கொண்டிருந்தது. ஒரு புறம் பார்த்தால், அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வயதில் அதிகமானவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் நோய்த்தொற்றுக்கு இலகுவில் ஆட்படக் கூடியவர்களாக இருந்தார்கள். அத்துடன் மிலான் நகரில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியின்போது அங்கு சேர்ந்த கூட்டத்தினால் தொற்று பரவுவதற்கு வாய்ப்பாக இருந்திருக்கிறது.
ஜோஸே : மார்ச் மாதம் 20ம் திகதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சுற்றுச் சூழல் ஆரோக்கிய விஞ்ஞானப் பேராசிரியர் ஜெப்ரி ஷாமனின் மேற்கோள் ஒன்று பின்வருமாறு உள்ளது. “1918ம் ஆண்டிற்குப் பின்னராக நாங்கள் கண்டேயிராத, பேரழிவு விளைவிக்கின்ற தொற்றுநோய் ஒன்றைக் காண்கிறோம் – இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின்னர் இப்படியான ஒரு உயிர்ப்பலியை கோரி நிற்கின்ற கொடியதான ஒன்றை.”
அமெரிக்காவில் இப்படியான ஒன்றை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கவில்லையா?
சோம்ஸ்கி :நாங்கள் தயாராக இருந்திருக்க முடியும். ஆனால் நாங்கள் அதனைச் செய்யவில்லை. நான் ஏற்கனவே சொன்ன காரணங்கள்தான்முதலாளித்துவ தர்க்க நியாயம்
முதலாளித்துவத்தின் காட்டுமிராண்டித்தனமான நவதாராளவாதத்தின் தாக்கம்,
டிரம்ப் நிர்வாகத்தின் குற்றச் செயற்பாடுகள்
வாஷிங்டனை இயக்குகின்ற கும்பலின் காரணமாக, அமெரிக்கா முற்றான ஒரு பேரழிவுக்கு உள்ளாகி இருக்கிறது. தங்களைத் தவிர, உலகில் உள்ள மற்றவர்கள்தான் இந்த பேரழிவிற்கு பொறுப்பானவர்கள் என்று, எல்லோரையும் குறை கூறுவதற்கு அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். இப்போது அமெரிக்காதான் இந்த கொரோனா நெருக்கடியின் மையப்பகுதியாக உள்ளது. இவ்வளவு தூரம் செயலற்று இருக்கிற ஒரே ஒரு நாடு அமெரிக்காதான். இவர்களால் மரணித்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் சரியான எண்ணிக்கையை உலக சுகாதார அமைப்புக்கு தெரிவிக்கக்கூட முடியவில்லை.
பெப்ரவரி மாதமே கொரோனா தொற்றானது உச்சக்கட்டத்தை அடைந்தது. அமெரிக்காவிற்கு வெளியே இருக்கின்ற ஒவ்வொரு நாடும் இதனை அடையாளம் கண்டு கொண்டிருந்தார்கள். பெப்ரவரி மாத நடுப்பகுதியில், டிரம்ப் அடுத்த வருடத்திற்கான புதிய வரவு செலவுத் திட்டத்துடன் வந்தார். இதை மிகவும் உற்றுக் கவனிப்பது பயனுள்ளதாக இருக்கும். நோய்க் கட்டுப்பாட்டு மையம் மற்றும் அரசாங்கத்தின் வேறு சுகாதாரம் தொடர்பிலான பகுதிகளின் நிதி ஒதுக்கீடு வெட்டப்பட்டது. தற்போதைய தொற்றின் நடுவிலும் இன்னும் அவற்றை நீக்குவதற்கான திட்டமாக அது இருக்கின்றது. அதே சமயம் கச்சாய் எண்ணெய் தொழில்துறைக்கான நிதி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கையை இல்லாதொழிப்பதற்காக மேலும் மானியங்கள் வழங்குவதற்கான சமயம் வெகுதூரத்தில் இல்லை. அத்துடன் நிச்சயமாக இராணுவத்துக்கு மேலதிக நிதி, அது எந்தவித கட்டுப்பாடுகளுமற்ற வீங்கிய நிதி ஒதுக்கீடு. இன்னும் டிரம்ப் இன் பிரசித்தம் பெற்ற எல்லைச் சுவருக்கான நிதி ஒதுக்கீடு.
சமூகம் மீதான எதிர்ப்புணர்வு கொண்ட கோமாளிகளின் இயல்பை இது ஒருவிதத்தில் கோடிட்டுக் காட்டுகிறது. இந்தக் கோமாளிகள்தான் அரசாங்கத்தை இயக்குகிறார்கள். அதனால் நாடு துன்பத்திற்குள்ளாகின்றது.
இப்போது பழி சுமத்துவதற்கு யார் அகப்பட்டாலும் சரிதான் என்றளவுக்கு தேடுகிறார்கள். அந்தளவில் சீனாவை குற்றம் சாட்டுகிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தை குற்றம் சாட்டுகிறார்கள். இவர்கள் செய்வது உண்மையில் குற்றச் செயல். உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்தி வைக்கிறார்கள்- இது சொல்ல வருவது என்ன? உலக சுகாதார நிறுவனமானது உலகம் முழுவதும் செயற்படுகின்றது. பெரும்பாலும் வறிய நாடுகளில் உள்ள தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் வேறு இடர்கள் குறித்தும் அக்கறை காட்டுகின்றது.
இவர்கள் சொல்வது என்னவென்றால் : “சரி, இப்போது தெற்கிலுள்ள மக்களை கொத்துக் கொத்தாக கொள்வதற்கு விடுங்கள். ஏனெனில் இது ஒருவேளை தேர்தலில் நான் வெற்றி பெறுவதற்கு சாதகமாக அமையக் கூடும்.
ஜோஸே : கொரோனாவுடன் போராடுகின்ற வறுமையான நாடுகளின் கஷ்டமான நிலைமையை உலகின் செல்வந்த நாடுகளின் அரசாங்கங்கள் புறக்கணிக்கக் கூடாது. கொரோனா நெருக்கடியானது சமத்துவமின்மையை இன்னும் ஆழப்படுத்துகிறது. இந்த சமத்துவமின்மையானது தொற்றின் விளைவு பாரதூரமாவதற்கும் காரணியாகின்றது. இந்த நெருக்கடி நிலைமையில் வறிய நாடுகள் குறித்து செல்வந்த நாடுகளின் பொறுப்பு என்னவாக இருக்கவேண்டும்?
சோம்ஸ்கி :உதவி தேவைப்படுபவர்களிற்கு ஆதரவு கொடுப்பதற்கு ஒரு நேர்மையான சர்வதேசியக் கொள்கை இருக்க வேண்டும். நாங்கள் உண்மையில் எமது கண்முன்னே காண்பது விசித்திரமானதாக இருக்கின்றது. மீண்டும் உதாரணத்திற்கு இத்தாலியை எடுத்துக் கொள்வோம். இத்தாலியின் வடபகுதி மிகவும் பாரிய பிரச்சினையில் இருந்தது. அங்கிருந்து சில கிலோமீற்றர்கள் தூரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (திரும்பவும் சொல்கிறேன், ‘ஒன்றியம்’) செல்வந்த நாடு உள்ளது : ஜெர்மனி. அங்கு தங்களுடைய சொந்தப் பிரச்சினைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான செயற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் துரிதகதியில் மேற்கொண்டார்கள். அவர்கள் வைத்தியர்களையோ அல்லது ஏதாவது மருத்துவ உதவிகளையோ இத்தாலிக்கு அனுப்பினார்களா? அப்படி நடந்திருந்தால் அது இரகசியமாக வைக்கப்பட்டது என்று கருத வேண்டும். ஆனால் அத்திலாந்திக் சமுத்திரத்தின் மறு கரையில் இருக்கின்ற வல்லரசிடம் இருந்து இத்தாலிக்கு உதவி கிடைத்தது. அதுதான் கியூபா. கியூபா மட்டும்தான் நேர்மையான சர்வதேசக் கொள்கைக்கு ஒரேயொரு உதாரணம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றது.
கியூபாவின் வடபகுதிக்கு அண்மையில் உலகின் மாபெரும் வல்லரசு உள்ளது. அது கடந்த 60 வருடங்களாக பயங்கரவாதத்தினாலும் பொருளாதார யுத்தத்தினாலும் கியூபாவை சிதைப்பதற்கான வேலையை செய்து கொண்டு வருகிறது. அமெரிக்கா வறிய நாடுகள் முகம் கொடுக்கின்ற கடும் பிரச்சினைகளிற்கு எதிர்வினையாற்றியுள்ளது, எப்படியென்றால் அவற்றை இன்னும் மோசமாக்குவதற்கு. தேர்தலில் வாய்ப்பு தனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை துண்டித்து அதனை அமெரிக்கர்களுக்கு எதிரான பாதகச் செயல்களுக்கு பயன்படுத்துவது – இதுதான் டிரம்ப் இன் முடிவின் துல்லியமான கருத்து. உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதி வழங்காமல் இருப்பதன்மூலம் வெளிப்படையாகவே அந்த நிறுவனத்தை முற்றாக அழிப்பதற்கான முயற்சியை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார் டிரம்ப். இதன் நேரடி விளைவு என்னவென்றால், யெமென், ஆபிரிக்கா மற்றும் வறிய பிரதேசங்களில் பலவித நோய்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிற எண்ணிலடங்கா மக்களை படுகொலை செய்தல் என்பதுதான். உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ உதவியில் தங்கியுள்ள நாடுகளில் இந்த கொரோனா கால நெருக்கடியில் அதன் சேவை திரும்ப பெறப்பட்டுள்ளது. கொரோனாவினால் வறிய மக்கள் அதிகம் மரணிக்கிறார்கள் என்று சொன்னதற்கு, டிரம்ப் இன் நண்பர் பிரேசிலிய ஜனாதிபதி ஜயிர் பொல்சனாரோ “அதனால் இப்ப என்ன, குடியா முழுகிப் போனது?” என்று திருப்பிக் கேட்டார். இது வெட்கக்கேடானது. இது எங்களுக்கு “சர்வதேசியக் கொள்கை” குறித்த ஒரு படத்தைக் காட்டுகின்றது, இது பல வழிகளில் பரீட்சிக்கப்படலாம்.
ஜோஸே :பல்வேறு பெருநிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளில் சிலர் வெளிப்படையாகவே அநேகமாக ஒரே நேரத்தில் பணிகளை விட்டு விலகினார்கள் – கொரோனா நெருக்கடி தொடங்கிய அதே சமயம். இது குறித்த வதந்தி என்னவென்றால், ஒரு பயங்கர தொற்றுநோய் பரவி வருகிறதென்ற தகவல் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கின்றது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பங்குச்சந்தையில் வெளிப்படையாக இல்லாமல் மறைவில் சந்தைப்படுத்தலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இது உண்மையா அல்லது வெறும் வதந்தியா?
சோம்ஸ்கி :இதில் சில உண்மைகள் இருப்பதாகத்தான் தெரிகிறது. இது குறித்து நான் தீவிரமான விசாரணையில் ஈடுபடவில்லை. ஆனால் வர்த்தக உலகிலும் அரசாங்கத்திலும் ஊழல் என்பது ஒரு நோயாக உள்ளது. டிரம்ப் இன் நிர்வாகத்தில் இது ஒரு சகதியாகவே மாறிவிட்டது.
ஜோஸே :இந்த குறிப்பிட்ட கொரோனா நெருக்கடியினால் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் பொருளாதாரரீதியான தாக்கம் எப்படி இருக்கும்? ஒவ்வொரு தனிநபரும் தங்களுக்கிடையில் குறிப்பிட்ட ‘சரீர இடைவெளியை’ பேணுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த நிலைமை மாதக் கணக்கில் இன்னும் ஒருவேளை வருடக்கணக்கில் கூட தொடரும் என்று பேசிக்கொள்கிறார்கள்?
சோம்ஸ்கி: பொருளாதாரத் தாக்கம் நிச்சயமாக தீவிரமானதாகத்தான் இருக்கும். பாரிய மனச்சோர்வினை அடைவதற்கான சாத்தியம்கூட உண்டு. வேறு விளைவுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தங்களுடைய நாட்டு மக்களின்மீது ஓரளவு கவனத்தைக் கொண்ட அரசாங்கங்கள் நெருக்கடி நிலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு நிர்வகித்துள்ளனர். முக்கியமாக ஆசியாவையும் அவுஸ்திரேலியாவையும் சொல்லலாம். குறிப்பிடக்கூடிய அளவுக்கு என்று ஐரோப்பாவையும் சொல்லலாம். சமூகத்தின்மீது வெறுப்பைக் கொட்டி, தன்னை மட்டுமே பெரியவர் என்று நினைக்கின்றவர்களின் கைகளில் உள்ள நாடுகளான அமெரிக்காவும் பிரேசிலும் தான் மிகவும் மோசமான பிரச்சினையில் சிக்கியுள்ளன. ஒரு முக்கியமான படிப்பினை என்னவென்றால், முதலாளித்துவத்தின் நவதாராளவாத கருத்து மனப்பான்மைக்குக் கிடைத்த மிக மோசமான இன்னொரு தோல்வி என்பது. அளவிடப்பட முடியாத தோல்வி. நாங்கள் இப்போது இதில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாவிடில், அடுத்த தடவை இப்படி ஒரு நிலைமை வரும். அது இதை விடவும் மோசமாக இருக்கும்.
ஜோஸே : டிரம்ப் நிர்வாகமும் குடியரசுக் கட்சியினரும் சேர்ந்து, அவற்றுடன் சில ஊடகங்களும் இந்த நெருக்கடி நிலைமைக்கு சீனாமீது பழியைப் போட முயற்சிக்கின்றன. பழி சுமத்துவதற்கும் அப்பால் அவர்களை கண்டிக்கிறார்கள். இது ஒரு புவிசார் அரசியல் பாத்திரத்தை வகிக்கிறதா? அல்லது கவனத்தை திசை திருப்புவதற்கான ஊடகங்களின் பங்கு மட்டுமா?
சோம்ஸ்கி: ஊடகங்கள் அரசாங்கங்களின் உதாரணத்தை பின்பற்றுகின்றன. குறிப்பாக அரசாங்கங்கள் தங்களுடைய குற்றச்செயல்களை சுமத்துவதற்கு ஒரு பலிக்கடாவைத் தேடுகின்றன. டிரம்ப் இதற்கான உச்சபட்ச உதாரணம். அமெரிக்காவிலும் இன்னும் பல மேற்கத்தைய நாடுகளிலும் உண்மையில் ‘மஞ்சள் அபாயம்’ (மேற்கத்தியரை அச்சுறுத்தும் சீனாவின் அதிகார பலம்) குறித்த வழக்கமான தீவிர அச்சத்தை மீள கட்டமைப்பது இலகுவானது. அடிப்படைக் காரணிகளில் எந்த சந்தேகமும் இல்லை. டிசம்பர் மாதம் 31ம் திகதி, நிமோனியா (கபவாதம்) போன்ற அறிகுறிகளைக் கொண்ட அசாதாரண நோயொன்று எழுச்சி கண்டுள்ளதாக சீனா உலக சுகாதார நிறுவனத்திற்கு அறிவித்தது. தொடர்ந்த 10 நாட்களில் சீன விஞ்ஞானிகள் இந்த வியாதியின் மூலம் கொரோனா வைரஸ் என்று கண்டு பிடித்தனர். மரபணுவை வரிசைப்படுத்தினார்கள். பின்னர் அது குறித்த தகவலை உலகத்திற்கு தெரியப்படுத்தினார்கள்.
இதனை கவனத்தில் கொண்ட அரசாங்கங்கள் உடனடியாக எதிர்வினையாற்றின. நிலைமையை மிகவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. முக்கியமாக ஆசியாவிலும் அவுஸ்திரேலியாவிலும். அமெரிக்காவில் புலனாய்வு நிறுவனங்கள் வெள்ளை மாளிகையின் கதவுகளைத் தட்டி எச்சரிக்க முயன்றார்கள். பலனெதுவும் இல்லை. இறுதியில் மார்ச் மாதம் டிரம்ப் கவனத்தை குவிக்கத் தொடங்கினார். அதற்கு பங்குச் சந்தை சரியத் தொடங்கியது காரணமாக இருக்கவேண்டும். இது அவருடைய தேர்தல் வெற்றிவாய்ப்புக்கு அச்சுறுத்தலை தோற்றுவித்தது. இந்த கவனமின்மை இலட்சக் கணக்கானவர்களின் மரணத்திற்கு காரணமாகிறது. இதனால் தொடர்ந்து கொண்டிருக்கிற சோகத்தைப் பற்றி நான் பேசப் போவதில்லை.
‘மஞ்சள் அபாயம்’, உலக சுகாதார நிறுவனம், புலம்பெயரிகள் மற்றும் இப்படி நினைவில் தோன்றும் எவர்மீதும் பழி சுமத்துவது மிகவும் வசதியானது. இந்த பழி சுமத்தல் பரவலாக பகிரப்பட்டுள்ளது. வாஷிங்டனின் தீங்கு விளைவிக்கும் தன்மையுடன் கூடிய அவதூறு பரப்பல், மற்றும் முக்கிய இலத்தீனமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள டிரம்ப் இன் நகலான ஜாகிர் பால்சோனாரோ, இவற்றை எதனுடனும் ஒப்பிட முடியாது. அமெரிக்காவில் மிகவும் பரந்த பூகோள அரசியல் பிரச்சினைகள் உள்ளன. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் உள்ள உறவு மிகவும் சிக்கலானது. நவதாராளவாத பெருநிறுவன உலகமயமாக்கல் செயல்திட்டம் ஆச்சரியப்படக்கூடியளவு விநியோக மூலங்களை சீனாவில் வைத்துள்ளது, அதிலிருந்து கிடைக்கும் இலாபங்கள் எங்கள் சொந்த நாட்டிலேயே செறிந்தாலும். அரசியல் பொருளாதார நிபுணர் சீன் ஸ்டார்ஸ் அவர்களின் கண்டுபிடிப்பின்படி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு உலகின் பாதி சொத்தைக் கொண்டுள்ளார்கள். அதே சமயம் சீனாவின் வேகமான வளர்ச்சி அமெரிக்கத் தலைவர்களை மிகவும் இடைஞ்சல்படுத்துகிறது. அதனால் வெளிப்படையாகவே அதனை தடுப்பதற்கான வழிகளைத் தேடுகிறார்கள். இவைகள் கடினமானதும் ஆபத்தானதுமான பிரச்சனைகளை தோற்றுவிக்கின்றன.
ஜோஸே :ஒரு புறம் டொமினிக் குடியரசு போன்ற சுற்றுலாத் துறையில் தங்கி இருக்கின்ற, பெரும் துன்பத்தை அனுபவிக்கப் போகின்ற, இலத்தீனமெரிக்க நாட்டு மக்களுக்கு என்ன பரிந்துரை கூறுவீர்கள்? கொரோனா தொற்றினால் துன்பப்படுகின்ற நாட்டு மக்களுக்கும்?
சோம்ஸ்கி: உடனடியான பிரச்சினை என்னவென்றால் கொரோனா தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது. அதற்கு மேல், வெளிநாட்டு வளத்திலும் அதிகாரத்திலும் தங்கி இருக்கின்ற அபிவிருத்தி மாதிரியை மீளவும் பரிசீலிப்பதற்கு இது ஒரு நல்ல தருணம். ஒரு வேளை ஒரு புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கிற்கான UNCTAD (வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு – 1964ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது) இன் திட்டங்களை மீளுயிர்ப்புச் செய்வதற்கான ஒரு தருணமாகலாம்.
ஜோஸே :ஒரு விஞ்ஞானி என்ற அடிப்படையில் கொரோனா குறித்து நோம் சோம்ஸ்கி என்ன சொல்கிறார்? மிகச் சிறிய ஒரு வைரஸ், நுண்ணிய உயிரி, இப்படி உலக நாடுகள் அனைத்தையுமே தன் முன்னால் மண்டியிட வைத்திருக்கிறதா? எங்களுடைய சமநிலை எவ்வளவு பலவீனமாக இருக்கிறதென்பதைக் கண்டு, அதிலிருந்து ஏதாவது கற்றுக் கொள்வதற்கு இருக்கிறதா?
சோம்ஸ்கி:போலியோ என்பது எவ்வளவு பேரச்சம் தருவதாக இருந்தது என்பதை நினைத்துப் பார்க்க முடிகிற ஒரு வயதை கொண்டவனாக நான் இருக்கிறேன். ஜனாதிபதி ரூஸ்வெல்ட் தொடக்கி வைத்த ஒரு திட்டத்தினால் ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதுடன் அது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. ஏனைய பேரச்சங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன; நுண்ணுயிரிகள் குறித்த தீவிரமான அச்சம் நூற்றாண்டுகளாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
வைரஸ் மிகச் சிறியது என்பதல்ல பிரச்சினை. மாறாக அது எங்களுடைய இலாபமீட்டுகிற சமூக பொருளாதார அமைப்புகளில் இருக்கின்றது. இவை மிகவும் பலவீனமான உலகளாவிய அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு பெரும் செல்வந்தர்களினதும் பெருநிறுவன துறைகளினதும் செல்வாக்கினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 40 வருடகால நவதாராளவாதத்தினால் முற்றுகையிடப்படுள்ளது. நவதாராளவாதம் மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக மற்றும் அரசியல் ஒழுங்குகளில் மோசமான சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் உலகின் பெரும்பகுதி மக்கள் தொகைக்கும் பாரிய சேதத்தை விளைவித்துள்ளது.
இதன் சாதகமான பக்கம் என்னவென்றால், அடிப்படையான பிரச்சினைகள் மனிதக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. பொதுஜனம் தன்னை ஒழுங்கமைத்து செயற்படுமாயின் ஒரு பாதை தெரியலாம். எங்களுடைய வாழ்க்கைப் பாதையை பொறுத்தவரையில் அடுத்து நடக்கப்போவது குறித்து கணிப்பதற்கு எந்த வழியும் இல்லை. உலக மக்கள்தொகை இந்த நிலைமைகள் குறித்து எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றது என்பதை பொறுத்துத்தான் அடுத்த கட்டம் பற்றி பேச முடியும். இந்த நிலைமை எங்களை ஒரு அதியுயர் சர்வாதிகார மற்றும் அடக்குமுறை ஆட்சியை நோக்கி அழைத்துச் செல்லக்கூடும். அவை நவதாராளவாதம் என்கிற நச்சு வியாதியை பரவலாக்கும், அதாவது, இதுவரை நடந்தவற்றைவிட அதிகளவிற்கு. உண்மையில் அவர்கள் அதற்காகத்தான் தற்சமயம் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். எப்போதும் நாங்கள் நினைவில் வைத்திருக்கவேண்டியது என்னவென்றால், முதலாளித்துவ வர்க்கம் விளைச்சல் பற்றி அக்கறைகொள்வதில்லை. அவர்களுக்குத் தேவை அளப்பரிய இலாபம் மட்டும்தான். இத்தனை நெருக்கடியான சமயத்தில்கூட அவர்கள் புதைபடிவ எரிபொருளுக்கு அதிகளவு நிதியைக் கோருகிறார்கள். ஒழுங்குமுறைகளை ஒழிப்பது அவர்களுக்கு ஓரளவு பாதுகாப்பை வழங்குகிறது.
அண்மையில் அமெரிக்காவின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம், டிரம்ப் இன் நிர்வாகத்திற்கு கீழ் நிலக்கரி உற்பத்தியாளர்களுக்கு சலுகை அளித்துள்ளது. பாதரச உற்பத்தி மற்றும் தாவரங்களிற்கான மண்ணை மாசுபடுத்தும் உரங்கள் என்பவற்றிற்கு விதித்திருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. அதன் பொருள் என்னவென்றால், “இன்னுமின்னும் அமெரிக்க சிறுவர்களைக் கொல்ல விடுங்கள். சுற்றுச்சூழலை அழிக்க விடுங்கள். ஏனெனில் இந்த வழியில்தான் நாங்கள் நிலக்கரிக் கம்பெனிகளுக்கு அதிக இலாபத்தை ஈட்டித்தர முடியும்.” இது நிச்சயமாக சுற்றுச்சூழலை அழிக்கிறது. நாளும் பொழுதும் இதைத்தான் அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதை அவர்கள் நிறுத்துவதில்லை. அவர்களை எதிர்ப்பதற்கு எந்தவிதமான சமூக சக்திகளும் இல்லாவிடில், உலகம் வீழ்ச்சியைத் தழுவிக் கொள்ளும்.
ஜோஸே :அரசியல், சமூகவியல் அல்லது மானிடவியல் நோக்கிற்கு வெளியே இருந்து ஒரு கேள்வி. இதனை தத்துவவியல்ரீதியான அல்லது ஆன்மீகரீதியிலான கேள்வி என்று ஒருவேளை நீங்கள் விரும்பினால் எடுத்துக் கொள்ளலாம். உங்களுடைய பகுத்தறியும் முறையை விளங்குவதற்கு முயற்சிப்பதற்கான ஒரு கேள்வி. நாங்கள் இயற்கையை பார்க்கும்பொழுது, அதனை அவதானிக்கும்பொழுது நாங்கள் கண்டு கொள்பவை – உயிரினங்கள், விலங்குகள். இந்த அமைப்பில் எத்தனையோ விதமான தொடர்பாடல்களை காணமுடிகிறது. வலிமையற்றவையை வலியன வேட்டையாடி உயிர் வாழுகின்றன. நுண்ணுயிரிகள் சுற்றுச்சூழலுடன் தொடர்பாடுகின்றன. நோய்க்கிருமிகள், மனிதர்கள், பூச்சிகள், தாவரங்கள், உயிருள்ள ஜந்துக்கள் என்பவற்றைக் கொல்கின்றன. பில்லியன் வருடங்களாக இந்த அமைப்பில் உள்ள ஒவ்வொன்றும் இவ்வாறாக வெளிப்படுத்தப்பட்டு வந்தன. இவைகள் எல்லாவற்றையும் சேர்த்துத்தான் நாங்கள் இயற்கை என்று அழைக்கிறோம். “வாழ்க்கை என்பது ஆச்சரியமும் அழகும் நிறைந்த அற்புதமானது” என்று நாங்கள் சொல்ல முடியும். ஆனால் நோம் சோம்ஸ்கி இவை பற்றியெல்லாம் சிந்திக்கும்போது, விஞ்ஞானரீதியிலும் பகுப்பாய்வுரீதியிலும் இதை எப்படிக் காண்கிறீர்கள்? இது உங்களுக்கு எதைச் சொல்கிறது?
சோம்ஸ்கி:அது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே காண்பதற்கு முயற்சிக்கிறேன். அதேபோல், யாராவது ஒருவர் மக்கள் தொகையுடன் பார்க்கும்பொழுது அதிகளவில் உடல்கள் மடிகின்றன அல்லது சிங்கங்கள் காட்டுமான்களை கொல்கின்றன – இவை குறித்து நான் என்ன கருதுகிறேன் என்று என்னிடம் கேட்டால், கேள்வி குறித்த மேலதிக விளக்கத்திற்காக காத்திருப்பேன்.
ஜோஸே :ஓகே. இன்னும் கொஞ்சம் விபரமாக விளக்குகிறேன், நான் எதை நோக்கிப் போக விரும்புகிறேன் என்று. எனவே நான் உங்களிடம் இப்படிக் கேட்கிறேன்; இந்த முழு வடிவத்தினதும் அர்த்தம் என்ன? அதாவது நாங்கள் இயற்கை என்று அழைக்கின்ற வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நாங்கள் பிறந்து வளர்ந்து இனம் பெருக்கிச் சாவதற்கு மட்டுமா உண்மையில் வாழ்கிறோம்?
சோம்ஸ்கி:வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் உங்கள் வாழ்க்கையுடன் என்ன செய்கிறீர்கள் என்பதுதான். இந்தக் கேள்வி, எனது காலடியில் அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கிற இரண்டு நாய்களுக்கும் எழாது. நான் சிறிது அசைந்தால், அவை உற்சாகமாக திடீரென்று விழித்துக் கொள்ளும். ஒருவேளை தங்களை வெளியில் உலாத்துவதற்கு நான் கூட்டிக்கொண்டு போகப்போவதாக நினைக்கக் கூடும்.
ஜோஸே :அப்ப, நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றால், நாங்கள் மட்டும்தான் மனித உயிரிகளாக, எங்களுடைய சொந்த அனுபவம் குறித்து சிந்திக்கக் கூடிய தன்மை கொண்டவர்களாக இருக்கிறோம். அனுபவம் (இருத்தல் = வாழ்க்கை). இதனால்தான் எங்களுக்கு இயற்கையிலேயே வாழ்க்கையின் அர்த்தத்திற்கான ஒரு உந்துதல் இருக்கின்றது. பிறகு “நாங்கள் மீண்டும் புழுதியில் இருந்து புழுதிக்கு”
சோம்ஸ்கி:இது சர்ச்சைக்குரிய ஒன்று என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஜோஸே :இல்லை. இது சர்ச்சைக்குரியதல்ல. ஆனால் இது எங்களை நம்பிக்கை குறித்து சிந்திக்கத் தூண்டுகிறது. ஒவ்வொரு நாளும் நாங்கள் மனிதத்துவத்தின் நன்மைக்காக போராடுவதற்கு உற்சாகப்படுத்துகின்ற ஒரு உள்ளார்ந்த அர்த்தம் வாழ்க்கையில் இல்லை என்றால், ஒவ்வொரு நாளின் இறுதியிலும் திரும்பவும் அதே நிலைக்கு வருவதுதான் யதார்த்தமாக இருக்கும். இது முற்றிலும் தனிப்பட்ட ஒரு தீர்மானமாகும். ஒரு தனிநபர் முடிவு. எமது சுதந்திரத்திற்கான மதிப்பை அறிந்து கொள்ளவும் , அநீதிக்கும் சமத்துவமின்மைக்கும் எதிராக போராடுவதற்கும் தேவையான உந்துதலை எங்கிருந்து பெறுவது?
சோம்ஸ்கி :எங்களுடைய பெறுமதிகளின் மூலத்தைக் குறித்து எதையுமே எவரும் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அவை இருக்கின்றன. இறுக்கமாக வேரூன்றியுள்ளன. வானியற்பியல் வல்லுனர்கள்கூட கண்டு பிடிக்க முடியாதபடி 95% பிரபஞ்சம் இருப்பதுபோல். எங்களுடைய வாழ்க்கையை நாங்கள் என்ன செய்கிறோம் என்று எடுக்கின்ற முடிவு தனிப்பட்டது. இது வரையறை. ஆனால் எங்களுடைய தனிப்பட்ட முடிவானது, பலவிதமான குழுக்களுடன் பங்குபற்றுவதனாலும் அவர்களுடைய இலக்குகளை முன்னோக்கிச் செல்வதற்கு பங்களிக்கவும் உதவக் கூடும்.
ஜோஸே :எனக்கு ஞாபகமிருக்கிறது, நீங்கள் ஒரு முறை எர்ணஸ்ட் மாயிர், கார்ல் சாகன் உடனான விவாதத்தின்போது “மனித அறிவுக்கூர்மை ஒரு அபாயகரமான பிறழ்வு” என்று சொன்னதாக. நீங்கள் ஒரு யூதக் குடும்பத்தில் இருந்து வருகிறீர்கள். நீங்கள் எந்த மதத்துடனும் உங்களை இணைத்துக் கொள்வதில்லை என்பது எனக்குத் தெரிந்த போதிலும், நீங்கள் ஒரு யூதக் கலாச்சாரப் பின்னணியில் இருந்து வருபவர். யூத, முஸ்லிம், கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உலகம் அழிந்து போகப் போவதாக தீர்க்கதரிசனம் கூறுகிறார்கள்.
மறுபுறம், பருவநிலை மாற்றம் என்பது பின்நோக்கிச் செல்ல முடியாது என்பது யதார்த்தம். அணுஆயுத அழிவிற்கான சாத்தியப்பாடுகள் மிகவும் யதார்த்தமானது. இவற்றோடு இப்போது இந்த கொரோனா தொற்று. முதற் பார்வையில் மதமும் விஞ்ஞானமும் எங்களை ஒரே மாதிரியான கணிப்பீட்டை நோக்கி நகர்த்துகிறது. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
சோம்ஸ்கி:அது நான் குறிப்பிட்டது மாயிரின் பேச்சின் சாரம். அது எதைக் குறிக்கக் கூடும் என்பது குறித்து சிந்திக்கிறேன். எனக்கு தெரிந்தவரையில் மதங்கள் முடிவற்ற தன்மை (நித்தியம்) குறித்து ஏதோ ஒரு வடிவத்தில் கொண்டு வந்து இணைக்கின்றன. ஆனால் அவற்றின் கணிப்புகள் ஆதாரங்களின் அடிப்படையினாலானவையல்ல. உரத்த நியாயப்படுத்தல்கள் தவிர்த்து எந்த விதமான விஞ்ஞானரீதியான தர்க்கமும் அற்றவை. மனித மனம் குறித்த தகவல்களை உங்களுக்குத் தருகின்றன என்பதனைத் தவிர. அத்துடன் அதனுடைய பகுத்தறிவு புரிதலுக்கு மேலே போகும்பொழுது எவ்வாறு அது விடயங்களை பற்றிப்பிடிக்கிறது என்பது.
ஜோஸே : கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பின்னால் ஒரு சூழ்ச்சி இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
சோம்ஸ்கி:அதற்கான ஒரு சிறு துளியளவு அத்தாட்சியும் இல்லை.
ஜோஸே :14 வருடங்களிற்கு முன்னர் நீங்கள் டொமினிக் குடியரசுக்கு பயணம் செய்திருந்தீர்கள். அது குறித்த உங்களுடைய மறக்க முடியாத நினைவு என்ன?
சோம்ஸ்கி:அது எத்தனையோ வருடங்களிற்கு முன்பு? அது குறித்து உண்மையிலேயே இப்போது குறிப்பிட்டுச் சொல்வதற்கு முடியவில்லை. அந்த விபரங்களை நினைவுபடுத்துவதற்கு நான் கொஞ்ச நேரம் மினைக்கெட வேண்டும். அந்தக் காலங்களில் பயணங்கள் மிகவும் முனைப்பானதாக இருக்கும். தொடர்ந்து முக்கியமான பேச்சுக்கள் விவாதங்கள் என்று. இது ஒரு குழப்பமான தன்மையுள்ள சூழலாக அமைந்து விடும். தவிரவும் விதிவிலக்கான/மறக்க முடியாத மனிதர்களின் வரவேற்பு அவர்களில் மக்களின் சிநேகபூர்வமான தன்மை. சில நாட்கள்தான். ஆனால் மிகவும் நிதானமான நாட்களாக அவை அமைந்தன. அந்த கடற்கரை உணவு சூரியன் இவற்றின் அழகு. இது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது மிகவும் அசாதாரணமாக இருந்தது. இரண்டு நண்பர்களைக் குறிப்பிட மறக்கக் கூடாது. அவர்கள் எங்களை சமன மாநிலத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் மிகவும் சிநேகமான தோழர்களானார்கள். இதனால்தான் நான் பேச்சுக்களும் விவாதங்களும் என்று குறிப்பிட்டேன்.
நான் உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் ஒரு தடவை மிச்சிக்கன் பல்கலைக்கழகத்திற்கு வியட்நாம் யுத்தத்தைப்பற்றி பேசுவதற்கு விமானத்தில் சென்றேன். என்னை விமான நிலையத்தில் பலர் சந்தித்தபோது, சிலரை கலங்கலான ஞாபகத்தில் உள்ளவர்கள்போல் தெரிந்தார்கள். அது ஒரு வித்தியாசமானதாக இருந்தது. நான் அங்கு அதற்கு முன்னர் போயிருந்தேன் என்பதுகூட எனக்கு நினைவில் இல்லை. அதற்கு முன்னரான இரண்டு வருடங்களில் 4 தடவைகள் சென்றிருக்கிறேன். அந்தப் பயணங்கள் எவ்வளவு அமுக்கமாக இருந்தன என்பதற்கான ஒரு தோற்றத்தை தர முடியும்.