சிங்கப்பூர் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடு என்பது தான். ஊடறு அனைத்துலக பெண்கள் மாநாடு 2019 நவம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் சிங்கப்பூரில் நடப்பதாகவும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் ரஞ்சி அழைத்தபொழுது புதிய நிலப்பகுதிக்குப் போகப்போகிறோம் என்கிற உணர்வு ஏற்படவில்லை. மனதுக்கு நெருக்கமான உணர்வைப் பெற்றேன். அந்த உணர்வு எத்தனை உண்மையானது என்பதை அங்கு சென்றபின் ஒவ்வொரு கணமும் உணர்ந்தேன். எம் தொப்புள் கொடி உறவுகள் இருக்கும் இடமல்லவா?
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையில் இருந்து கிளம்பிய நள்ளிரவு விமானம் சிங்கையை அடைந்தபொழுது லேசாக விடியக் காத்திருந்தது. ஒளிவெள்ளத்தின் நடுவே தரை இறங்கினேன். இலங்கையில் பச்சைப்பசேல் என்ற தீவைப் பார்த்துக் கொண்டே தரை இறங்கியதுபோல இங்கு தரையிரங்குகையில் ஒளிவெள்ளம் மிக்க நகரைக் கண்டேன். சன்னலோர இருக்கை இல்லாததால் அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொண்டேன்.
கம்பராமாயணத்தில் கம்பன் இலங்கையை வருணிக்குக்கும் போது மாடமாளிகைகளும் கோபுரங்களும் கண்ணைப்பரிக்கும்படியாக ஒளிர்ந்ததாக எழுதுவான். இவ்வருணனை சிங்கைக்குப் பொறுத்தமாகத் தோன்றியது. கண்ணைப் பறிக்கும் ஒளிரும் விளக்குகளும் வானுயர்ந்த கட்டிடங்களுமாக ஈர்த்தது. காலை நேரத்து மக்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தனர். அவர்களின் நடை ஓட்டம் செயல்களில் பார்த்த ஒழுங்குமுறை எறும்புகளின் ஓட்டத்தை நினைவுபடுத்தியது. அவ்வளவு வேகம்.
இமிகிரேஷனில் தாமதத்தைக் குறைப்பதற்காக அதிகாரிகள் ஆலோசனை அளித்து வேகமாக நகர்த்தியபோது அவர்கள் காட்டிய அவசரம் திருப்பதி கோவிலில் ஜருகண்டி ஜருகண்டி என சொல்லிக் கொண்டே வேகமாக வெளியே அனுப்புவதைப்போல இருந்தது. எழுத்தாளர்கள் கூடவே இருப்பது சோம்பல் என்பதை நம்பும் எனக்கு இதெல்லாம் புதிதாகத் தோன்றியது. வேற்றுக்கிரக வாசிகளைப்போலவும் சிலநேரம் ரோபோடிக் போலவும் கூட தோன்றினர்.
விமானநிலையத்திற்கு தோழி ரமாவின் கணவர் அழைக்க வந்திருந்தார். மிக எளிமையான மனிதர். என்னோடு பாமா, த,ஜீவலட்சுமி, சு.ப.பாரதி வந்திருந்தனர், மகிழுந்தில் நாங்கள் கடந்து சென்ற சாலையை ஒட்டி இருந்தவற்றைக் காட்டி நகரின் அமைப்பு முறை பற்றி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்தார். வண்டி நின்ற இடத்தில் எங்களைப் புன்னகையோடு வரவேற்றார் கடலூரான்(ஹாஜா).
முதல்நாள் முழுவதும் தோழிகள் தரை இறங்கி வந்து சேரவும் சந்திக்கவுமாக களைகட்டியது. ரமாசுரேஷ் நாங்கள் சென்ற சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தார். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு குடும்பத்தைக் கவனித்துக் கொண்டே ஊடறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக புன்னகையோடு வலம்வந்தார் சென்னையில் நான் ரமாவை சந்தித்திருக்கிறேன். குழந்தைத்தனத்தோடு விளையாட்டும் குறும்பும் கொண்டவராக மனதில் ஓவியம் தீட்டியவர் அந்த ஓவியத்தை மீண்டும் மெருகேற்றி சிங்கப்பூரில் கூடுதலாக சில வண்ணங்களைத் தீட்டினார்.
அஸ்வினியை முதல்முறையாக நேரில் பார்க்கிறேன். கருமமே கண்ணாயினார் என்கிற வரிகளுக்கு ஏற்ப அடுத்தது என்ன? என்ற ஆர்வத்தோடு சலிப்படையாமல் வேகமாக காத்துக் கிடந்த பணிகளைக் கட்டி இழுத்துக் கொண்டு ஓடினார். இவர்கள் ஊடறு ஏற்பாட்டுக் குழுவிற்குக் கிடைத்த சிறந்த பரிசாகத் தெரிகின்றனர். ரஞ்சி ஊடறுவை தொடர்ந்து நடத்தி வருகிறார். ஆண்டுதோறும் விடாமுயற்சியோடு ஒவ்வொரு நாட்டிலும் நிகழ்ச்சியை நடத்துவது என்பது கடினம். பெண்கள் சாதிக்க வேண்டும். ஏதாவது பெண்களுக்காக செய்யவேண்டும் என்கிற அலை அவர் உள்ளத்தில் எப்போதும் இருக்கும்.
ஊடறுவுக்காக சென்னையில் அடையாள அட்டைகள் நினைவுப்பரிசுகள் எல்லாம் தயாராவதாக ரமா சொல்லியிருந்தார் ரஞ்சி சங்கமி நூல் காவ்யாவில் தயாராகிறது அதில் கொஞ்சம் கொண்டுவர முடியுமா? எனக் கேட்டிருந்தார். என்னோடு கொண்டு சென்ற அந்த பார்சலைப் பிரிப்பதும் அடுத்த நாள் ஏற்பாடுகளைக் கவனிப்பதுமாக ஒருபக்கம். மற்றொரு பக்கம் எல்லோரும் ஒரே இடத்தில் தங்குவதால் சமைத்து சாப்பிட தேவையானவற்றை வாங்க வேண்டும் என இரண்டையும் கவனத்தில் வைத்துக் கிளம்பினர் ரமா, அஸ்வினி, கடலூரான் குழுவினர். இவர்களோடு நானும் சேர்ந்துகொண்டேன்.
லிட்டில் இந்தியா பகுதிக்குச் சென்றோம். வானுயற கட்டடங்கள் சூழ்ந்த நாட்டின் கடைகளில் முதல்தரமான காய்கறிகளை அங்கு பார்த்தேன். தமிழர்கள் பயன்படுத்தும் அத்தனைப் பொருளும் அங்கு கிடைத்தது. அந்த வீதிகளின் அமைப்பு வீடுகள் அந்தப் பகுதி உருவான விதம் இப்போது இருப்பதற்கும் முன்பு இருந்ததற்குமான வேறுபாடுகள் என மூவரும் சொல்லிக்கொண்டே வந்தனர். பெரிய சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அந்தக் காலத்தில் அங்கு துணி சலவை செய்த தொழிலாளர்கள், சாப்பாட்டுக்கடை நடத்தியவர்கள் என தமிழர்களைப் பற்றிய ஓவியங்கள் ஈர்த்தது. ஆனால் அந்த பகுதியை லிட்டில் இந்தியா என அழைப்பதைக் காட்டிலும் குட்டித் தமிழ்நாடு என்றே அழைக்கலாம். அத்தனையும் தமிழ்த்தடயங்கள்.
நவம்பர் இரண்டாம் நாள் காலை ஊடறு பெண்கள் சந்திப்பு சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் பாசிபிலிட்டி அரங்கில் தொடங்கியது. மாநாட்டிற்கு இந்தியா, இலங்கை, மலேசியா நியூசிலாந்து,சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் சிங்கப்பூரைச் சேர்ந்த மிக முக்கியமான பெண் ஆளுமைகளும் என
ஏறக்குறைய முப்பது பேர் பங்கேற்ற மாநாடு என்கிற அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நூலக வாயிலில் சிங்கப்பூர் பெண்களும் ஊடறு அமைப்பும் இணைந்து நடத்தும் இரண்டுநாள் மாநாடு என்கிற வரிகளோடு வரவேற்பு பதாகை அழைத்தது.
எத்தனை பிரமாண்டமான கட்டிடம் . முன்னதாக யோகி சந்ருவின் புகைப்படக் கண்காட்சி தொடங்கியது. அறிமுக உரையாக ஊடறு கடந்து வந்த பாதை என்கிற தலைப்பில் ரஞ்சி உரையாற்றினார். புலம்பெயர்ந்த நிலையில் ஐரோப்பிய கண்டத்தில் ஊடறுவை 2005 இல் தொடங்கி பலநாடுகளிலும் ஆண்டுதோறும் ஒரு கூட்டம் என நடத்தி வருவதையும் முழுக்க முழுக்க பெண்களுக்கான தளமாகத் தொடங்கப்பட்டதையும் சிங்கப்பூரில் அரசு நூலகத்தில் இப்படி ஒரு நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டதன் பின்னணியையும் பகிர்ந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக ஜாய்ஸ் கிங்ஸ்லியும் வாழ்த்துரைக்க பப்புவா நியூகினியா தீவில் இருந்து சுபா அபர்ணாவும் வந்திருந்து உரையாற்றினர்.
பொருளியல் வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் தொழில் முனைப்பு என்னும் தலைப்பிலான முதல் அமர்வில் தொழிற்சங்க செயல்பாட்டில் பெண்கள் நிலைகுறித்த மலேசிய நடைமுறையைப் பகிர்ந்து கொண்டார் சிவரஞ்சனி. தொழில் முனைப்பில் பெண்கள்
குறித்து விஜி ஜெகதீஷ் பேசுகையில் சிங்கப்பூரில் தொழில் முனைவோருக்கான இடம் குறித்தும் தமிழகத்தில் இருந்து சிங்கையில் குடியேறியபின் தொழில் முனைவோருக்கான ஆர்வம் ஏற்பட்டது குறித்தும் விளக்கினார். தமிழ்ப் பெண்களிடம் இதற்கான திறன் அதிகம் இருப்பதால் தொழில்முனைப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
உலகளாவிய நிலையில் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பும் எதிர்நோக்கும் தடைகளும் குறித்து பாரதியின் உரை அமைந்தது. குடும்பம்,சமூகம், சட்டம் என்ற பொருண்மையிலான இரண்டாம் அமர்வில் சமூகக் கூட்டமைப்பில் சட்டத்தின் கடமை குறித்து கஸ்தூரிபாய் மாணிக்கம் உரையாடினார். சிங்கப்பூர் தமிழ்ப்பெண்களின் வாழ்வியல் என்கிற தலைப்பிற்குள் இந்நவீன காலத்தில் நடுத்தர வயது பெண்கள் எதிர்கொள்ளும் நுட்பமான சிக்கலைப்பற்றி சூர்யரத்னா பேசினார். இவர் சிங்கப்பூரின் முதல்
பெண் நாவலாசிரியர் என்ற சிறப்பைப் பெற்றவர்.
குடும்பவன்முறையும் பெண்களும் என்கிற தலைப்பில் அன்னா பொன்னம்பலம் இலங்கைப் பெண்களும் புலம்பெயர்ந்த பெண்களும் சந்திக்கும் குடும்ப வன்முறையைக் குறித்து பல அடுக்குகளில் விவரித்தார்.இந்த அமர்விற்கு நான் தலைமை ஏற்றேன். கஸ்தூரிபாய் மாணிக்கம் பேசியதற்கும் அன்னா பேசியதற்கும் இடையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கைக்கும் இலங்கை நியூசிலாந்துக்குமான பெண்களின் நிலை என்கிற அளவில் அத்தனை வேறுபாடுகள் இருந்தன. குடும்ப வன்முறை என்கிற தெற்காசிய நாடுகளின் பிரச்சனை சிங்கப்பூரில் இல்லை என்கிற அளவில் சட்டங்களின் பாதுகாப்பு இருப்பதைப் பற்றி தெரிந்து கொள்ள உதவியது இவ்வமர்வு.
மொத்தத்தில் பெண்களுக்கான வன்முறைகளைத் தடுக்க சட்டங்களைக் கொண்டுவந்தாலும் பெண்கள் உணர்வுத் தாக்குதலில் சட்டங்களைப் பொருட்படுத்தாமல் வன்முறைகளோடு சமரசம் ஏற்படுத்திக் கொள்ளும் நிலையில் இருப்பதை வெளிப்படையாக கலந்துரையாடும் சாத்தியத்தை ஏற்படுத்தியது.
இரண்டாம் நாள் அமர்வில் இந்த இரண்டுநாளுக்காக அறுபதுநாள்கள் செயல்பட்ட ஊடறு ஏற்பாட்டாளர்கள் தன்முனைப்போடு செயல்பட்ட விதம் குறித்து ரமா விளக்கினார். சிங்கப்பூரில் சாத்தியமான இவர்களின் அணுகுமுறை அருகில் உள்ள பிறநாடுகளில் நடைமுறைப்படுத்துவது அரிது என்பதை உய்த்துணர முடிந்தது. பேசப்படாத கேட்கப்படாத பெண்குரல்கள் என்ற அன்றைய அமர்விற்கு யோகி தலைமை ஏற்றார். கருக்கு முதல் மனுசிவரையிலுமான காலகட்டத்தில் தான் சந்தித்த அனுபவங்களையும் கருக்கை விமர்சித்தவர்களே பின்னர் கருக்கு பாமா என கொண்டாடியதை பாமாவும் விஜிசேகர் இலங்கையின் அரசியல், மதம் இவற்றின் சமனற்ற நிலையில் மனிதம் பெறும் அவலங்களையும் அதற்குள்ளாக முகாம்களில் தங்கும் சூழலிலும் கூட குடும்ப வன்முறை நிலவுவதையும் சுட்டிக்காட்டினார்.
காணடிக்கப்பட்ட பாடினிகள் என்னும் தலைப்பில் என்னுடைய உரை அமைந்தது. பலநூற்றாண்டுகளாக பெண்கள் எழுதவில்லை என்கிற கருத்தை இலக்கியப் பொதுவெளியில் வைக்கிறார்கள். ஆனால் எழுதவில்லை என்கிற முடிவும் அதை முன்வைத்த பேச்சுகளும் ஏற்கக்கூடியது அல்ல. பலநூற்றாண்டுகளாக பெண்கள் எழுதி வருகிறார்கள். இருபாலினருக்குமான வேறுபாடு எல்லா நிலைகளிலும் இருக்கிறது. இலக்கியம் அதற்கு விதிவிலக்கு அல்ல. பெண்களின் எழுத்துகள் ஒட்டுமொத்த சமூகத்திற்கான குரலாகவும் அக்காலத்தை அறிந்துகொள்வதற்கான தரவுகளாகவும் சமத்துவத்திற்கான குரலாக ஏற்றத்தாழ்வுகளுக்கான எதிர்க்குரலாகவும் இருப்பதை மையமாகக் கொண்டது என் உரை.
அடுத்தடுத்த அமர்வுகளில் பேசிய பெருந்திணையாகும் ஐந்திணை என்னும் தலைப்பில் புதியமாதவியும் த.ஜீவலட்சுமி சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் தலித்பெண்கள் மீதான சுரண்டலையும் சமூகத்தில் பெண்கள் நிலையை உயர்த்துவதற்கு பெரியாரின் பங்களிப்பு முக்கியமாக இருந்தது குறித்து அஸ்வினியும் காத்திரமாக பேசினர் .
தேவகௌரி ஊடகத்துறையில் பெண்கள் எதிர்கொள்வதை பலகோணங்களில் , ஆர்த்தி பணிப்பெண் பெண்களின் நிலை அவர்களின் பாதுகாப்பற்ற தன்மை குறித்தும் பகிர்ந்து கொண்டனர். சிங்கப்பூரின் பெண்சிங்கம் என்று அழைக்கப்படுகிற கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கையில் இந்தியப் பெண்கள் குறித்து உரையாற்றினார். சிங்கப்பூரில் ஒருசில பெண்களின் பங்கு பற்றிதான் தெரியவருகிறது. சிங்கப்பூர் வளர்ச்சியில் தமிழ்ப்பெண்களின் பங்கு குறித்து சரிவர பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இரண்டு நாள் நிகழ்ச்சியை அகிலா, வீர விஜயபாரதி இருவரும் திறம்படத் தொகுத்தனர். கவிஞர் சுபா, செந்தில்,பொன் கோகிலம், கமலாதேவி, தங்கமீன் பதிப்பகம் பாலு, பிச்சினிக்காடு இளங்கோ உள்ளிட்ட பலரையும் சந்திக்க முடிந்தது. நல்ல தமிழ் பேசும் சீனப் பெண்களைப் பார்க்க முடிந்தது. நம் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசக் காரணமான வரலாற்றின் காலக்கோட்டில் பின்னோக்கி பயணித்து தகவல்களைப் பெற்றுக் கொண்டேன்.
அடுத்தநாள் செண்டோசா கடற்கரைக்குச் சென்றோம். மிகக்குறைந்த தரைப்பரப்பு கொண்ட சிங்கப்பூர் அதை விரிவு படுத்த முயற்சி எடுப்பதாக படித்திருக்கிறேன். அப்படியான பரவலாக்கத்தையும் செயற்கைக் கடற்கரையையும் பார்க்க முடிந்தது. சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க சிங்கை அரசு மேற்கொண்டிருக்கும் பலவற்றையும் பார்த்தபோது இப்படி செயற்கையாக உருவாக்கும் தேவையே இல்லாமல் உள்ளதைப்
பாதுகாக்க முடியாமல் பராமரிப்பு இன்றி வைத்திருக்கும் நாடுகளைப் பரிதாபமாக நினைக்கத் தோன்றியது. நாட்டில் பேருந்து, மெட்ரோ இரயில் என வசதிகளும் சாலைகள் தூய்மையாக இருப்பது போக்குவரத்து நெறிமுறைகளைக் கடைபிடிப்பதை கராராக கவனிப்பது என்பதில் சிங்கை தனித்துவம் வாய்ந்தது.
சென்னைவாசியான எனக்கு அங்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்பதில் குஷி. எந்தக் குழாயில் இருந்தும் தண்ணீர் பிடித்து குடிக்க முடியும். அப்படி தண்ணீர் மேலாண்மை அமைப்போடு இருக்கிறது. மிக முக்கியமாக உடைக்கட்டுப்பாடு என்பதை திணிக்காத நாடாக உள்ளது. பெண்கள் நள்ளிரவிலும் நடந்து செல்வதைப் பார்த்தேன். சீனர்கள் பகுதியில் அதிகம் புத்தர் சிலைகளைக் கொண்ட புத்தர் கோவிலை ஹேமா ( வாழை மர நோட்டு நூலாசிரியர்) சுற்றிக்காட்டினார். புத்தரின் பல் ஒன்று கோவிலுக்குள் தங்கப் பிடிமானத்தோடு பெரிதாக வைக்கப்பட்டிருந்தது. தம்மம் படைத்த புத்தனின் நிலையை நினைத்துக் கொண்டேன். பெரும்பாலும் தமிழக உணவுகள் பசியாறக்கிடைத்தன.
இறுதி நாளில் மீண்டும் லிட்டில் இந்தியா சென்றோம். கோடாரி தைலத்தை வாங்க கடைக்குச் சென்று கொண்டிருந்தோம் . கடலூரான் உங்களை ஒருவர் பார்க்கனும் என்றார் என சொல்லிக்கொண்டே ஒரு கடையின் முன் கூட்டிச் சென்றார். அங்கு சங்கம் டெக்ஸ்டைல்ஸ் இலியாஸ் அவர்களை அறிமுகப்படுத்தினார்.சென்னையிலிருந்து நீங்கள் வந்திருப்பதாக உங்கள் புகைப்படம் வாட்ஸப்பில் வந்தது. உங்களைப்போல தெரியவே அழைத்தேன் என்றார். அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு கடிகாரம் நேரநெருக்கடியைக் காட்டவே வேகமாக கிளம்ப ஆயத்தமானோம்.
ஒரு கூட்டுப் பறவையாக எங்களை கவனித்துக் கொண்ட ஹாஜா அவர்களின் தாய்மையோடான கவனிப்பும் ரஞ்சியின் அன்பின் பிணைப்புமாக விடைபெற்றோம். பன்மைக் கலாச்சாரக் கூறுகளைக் கொண்ட நாடும் அதன் கல்வி முறையில் ஆண்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்படுவதுமான பலவற்றையும் நினைவுக்குள் அசைபோட்டேன். இரவு விமானம் வண்ணக்கோலத்துடன் நகரை அடையாளம் காட்டியது . சிங்கையில் இன்னும் பார்க்க வேண்டிய பகுதிகளும் சுற்றங்களும் கொஞ்சம் ஏக்கத்தைக் கொடுத்தன