சட்டத்தரணியும்பெண்ணிய செயற்பாட்டாளருமான “ஹஸனாஹ்”வின் நேர்காணல்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை செய்யும் விடயத்தில் முஸ்லிம் பெண்களின் கோரிக்கைகளும் உள்வாங்கப்பட்டு அதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று ஹஸனாஹ் சேகு இஸ்ஸடீன் தெரிவித்தார்.
சட்டத்தரணியும் பெண்ணிய செயற்பாட்டாளருமான ஹஸனாஹ்வின் கருத்துக்கள் நேர்காணலாக இங்கு பதிவாகின்றது.

.

நேர் கண்டவர் :- பிரியதர்ஷினி சிவராஜா

முஸ்லிம் பெண்களின் 30 வருட கால கோரிக்கையான முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதில் தற்போது ஓர் உடன்பாடு ஏற்பட்டுள்ளமை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி தானே?

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் முஸ்லிம் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் நீண்ட காலப் பாதிப்பினை ஏற்படுத்தும் எத்தனையோ பிரிவுகள் உள்ளன. அதில் திருத்தம் செய்யப்படல் வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து முஸ்லிம் பெண்கள் கடந்த 30 ஆண்டுகாலமாக போராடி வருகின்றனர். ஆனால் ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு இந்த சட்டத்தினை உடனடியாக திருத்த வேண்டும் என்று கூடுதலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட நிலையில் முன்னெடுக்கப்படும் இந்த மாற்றத்தை நாங்கள் மகிழ்வுடன் கொண்டாடுவதா அல்லது இந்த நேரம் இப்படி நடக்கின்றதே என்று கவலை கொள்வதா என்ற குழப்பம் உள்ளது. இவ்வளவு காலம் இழுத்தடிப்பு செய்து விட்டு இப்பொழுது திடீரென ஒரு பௌத்த பேரினவாதமோ அல்லது ஏதோ ஒரு அச்சுறுத்தல் காரணமாகவோ நாட்டின் ஸ்திரத்தன்மையில் ஒரு குழப்பம் வரும் என்ற காரணத்திற்காகவோ இந்த திருத்தங்களை செய்ய வேண்டும் என்று முயற்சிக்கப்படுகின்றது. யார் இந்த சட்ட திருத்தங்களை எந்த அடிப்படையில் கோரினார்களோ அதற்காக தான் அந்த சட்டம் மாற்றப்பட வேண்டுமே தவிர மாறாக இப்படி ஒரு பேரினவாத அழுத்தத்தினால் அதனை மாற்ற வேண்டும் என்று சொல்வது நியாயமற்றது.

முஸ்லிம் பெண்களின் கோரிக்கைகள் இவ்விடயத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதா?

முஸ்லிம் பெண்கள் தரப்பில் விடுக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் கவனத்தில் எடுக்கப்படவில்லை. அதனால் நிச்சயமாக பாதிப்பு தான் வரப்போகின்றது. எந்தவொரு ஆலோசனையையும் முஸ்லிம் பெண்களிடமிருந்தோ, பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்தோ, செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளிடமிருந்தோ பெறப்படவில்லை. திருத்தங்களை செய்கின்றோம் என்ற இணக்கப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும் அச்சட்டத்தில் எத்தனையோ விடயங்கள் முஸ்லிம் பெண்களைப் பாதிக்கின்றது என மீள மீள வலியுறுத்தப்படும் நிலையில் அச்சட்டத்தில் உள்ள ஓரிரண்டு பிரிவுகளை மட்டும் தெரிவு செய்து மாற்றங்கள் செய்ய முயற்சிக்கப்படுகின்றது.
2009ம் ஆண்டு நியமிக்கப்பட்ட சலீம் மர்சூக்கின் குழுவானது தனது அறிக்கையை 2018 ஜனவரியில் சமர்ப்பித்தது முதல் இன்று வரைக்கும் சட்டத்தில் மாற்றம் செய்ய நீதி அமைச்சு முன்வரவில்லை. ஏனெனில் அதில் உள்ள சில விடயங்கள் தொடர்பில் உலமா சபையினராலும் இதர முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளினாலும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியாதிருந்தது.

உதாரணமாக ஆகக் குறைந்த திருமண வயது எல்லையை 18 ஆக மாற்றுவதில் கூட இழுபறி காணப்பட்டது. ஆனால் பயங்கரவாதி சஹ்ரானின் மனைவியிலிருந்து எத்தனையோ பயங்கரவாதிகளின் மனைவிமார் 18 வயதுக்கு கீழ் இருந்தார்கள் என்ற காரணத்திற்காக உடனடியாக சட்டத்தினை மாற்ற முன்வருவது ஏன்? இதற்காக தானே முஸ்லிம் பெண்கள் இவ்வளவு காலமும் போராடிக் கொண்டிருந்தார்கள். அதனை அவர்கள் செவிமடுக்காமல் ஒரு குண்டுவெடித்து பேரழிவு நிகழ்ந்த பின் தான் இந்த சட்டத்தை மாற்ற வேண்டுமா? ஏன் அவர்களின் அக்கறைகள் பெண்கள் சிறுமிகள் நோக்கியதாக இருக்கவில்லை?ஊடகங்களில் இந்த சட்டத்திருத்தங்கள் பற்றி விரிவாக செய்திகள் வெளியானதன் காரணமாக அமைச்சர்கள் அங்கீகரித்து விட்டார்கள் என்று சொன்னதுக்கு பிறகும் மீண்டும் இவ்விவகாரம் தொடர்பில் சந்திப்புகள் நடந்து வருகின்றன. அதில் முஸ்லிம் பெண்கள் முற்றாகப் புறக்கணிப்புக்குள்ளாகியுள்ளனர்.

முஸ்லிம் தனியார் சட்டத்தினை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு இனங்களுக்கும் தனிச் சட்டங்கள் தேவையில்லை என்று இனவாதச் சக்திகள் முன்வைக்கும் கருத்து பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

என்னைப் பொறுத்தவரையில் இலங்கையில் பல்லின மக்கள் சமூகம் வேறுபாடுகளுடன் வாழ்வதும் இந்த பன்மைத்துவத்தைக் கொண்டாடுவதும் தான் அழகு. ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒருவருடைய கலாசாரமோ சமயமோ இன்னொரு நபருடைய உரிமையில் தலையீடு செய்யாமல் எந்த விதமான பாரபட்சமும் இன்றி அவரவர்களுக்கு ஏற்ற வகையில் அனுபவிப்பது தான் சிறந்தது. இலங்கையின் திருமண பொதுக்கட்டளைச் சட்டத்தில் இல்லாத சில நல்ல விடயங்கள் முஸ்லிம் தனியார் சட்டத்தில் இருக்கின்றது. குறிப்பாக குடும்ப பிணக்;குகளை தீர்க்கும் விவகாரத்தில் பகையாளி என்ற மனநிலை இன்றி ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான பேசித் தீர்த்தல் முறையாக காதி நீதிமன்றம் இருக்கின்றது. ஆனால் நியமிக்கப்படுகின்றவர்களின் தகுதிகளில் ஏற்படுகின்ற குறைபாடுகளினால் காதி நீதிமன்ற முறை சரியான முறையில் இயங்குவதில்லை.


முஸ்லிம் பெண்களின் ஆடைகள் பெண்ணடிமைத்தன்மையை வலியுறுத்துகின்றன என்ற குற்றச்சாட்டு பற்றிய உங்கள் கருத்து என்ன?

ஒரு பெண்ணின் ஆளுமையோ விடுதலையோ பெண்ணின் ஆடையில் இல்லை. எவ்வாறான ஆடைகளை அணிய வேண்டும் என்பதனை பெண்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அது நிர்ப்பந்திக்கப்பட்ட முறையில் இருக்கக் கூடாது. முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமன்றி பொதுவாகவே உலகம் முழுவதுமே பெண்களுடைய ஆடை என்பது பாரியதொரு அரசியல் விவகாரமாக இருக்கின்றது. ஒரு முஸ்லிம் பெண் அபாயா உடுத்தி போனால் ஐயோ பாவம் அவள் பாரிய ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றாள் என்று கருதப்படுகின்ற அதேவேளை சல்வார் உடுத்தி செல்கின்ற தமிழ் பெண்ணையோ சேலை உடுத்தி செல்கின்ற ஒரு சிங்களப் பெண்ணையோ ஏன் நாங்கள் அவ்வாறு யோசிப்பதில்லை? பர்தா அணியும் விடயமாக இருந்தாலும் கூட எல்லோருமே விரும்பி அதனை அணிகின்றார்கள் என்றோ அல்லது எல்லோருமே ஒடுக்குமுறைக்குள்ளாகி தான் அணிகின்றார்கள் என்றோ கூறவும் முடியாது. முகம் மூடி செல்ல முடியாத காரணத்தினால் எத்தனையோ பல்கலைக்கழக மாணவிகள் கல்வி நடவடிக்கைகளை நிறுத்தி விட்டனர். என்னைப் பொறுத்தவரையில் முகம் மூடுவது என்பது மார்க்கத்தில் கட்டாயம் அல்ல. ஆனால் கட்டாயம் என்ற சிந்தனை அவர்களுக்குள் விதிக்கப்பட்டு அல்லது அது ஒரு தெரிவாக அவர்கள் அதை எடுக்கும் போது அதில் தலையிட முடியாது. ஆனால் அரசாங்கமோ அல்லது வெளியாட்களோ ஆடைக் கட்டுப்பாட்டைக் கொண்டு வரும் போது அது பெண்களை முடக்கி அவர்கள் வெளியில் நடமாடும் சுதந்திரத்தையும் தடுக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *