- நேர் கண்டவர் யாழினி யோகேஸ்வரன்
இளம் ஒவியை சர்மலா சந்திரதாசனுடனான நேர்காணல் …ஊடறுவுக்காக நேர் கண்டவர் யாழினி யோகேஸ்வரன்
2019 புதுவருடமான இன்று அவரின் நேர்காணலையும் ஓவியங்களையும் பிரசுரிப்பதில் ஊடறு மகிழ்வுகிறது
?. ஊடறு வாசகர்களுக்காக உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை தர முடியுமா
எனது பெயர் செல்வி சர்மலா சந்திரதாசன். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் 1990ம் ஆண்டு இடப்பெயர்வினால் வலிகாமத்தின் பல பகுதிகளிலும், இறுதியாக வடலியடைப்பிலும் வசித்து தற்போது மீள்குடியேற்றத்தினால் மீண்டும் எனது சொந்த இடமான மாவிட்டபுரத்தில் வசித்து வருகின்றேன். எனது பாடசாலைக் கல்வியை யாஃதாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலையிலும் யாஃபண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையிலும் கற்றேன். மேலும் எனது பட்டப்படிப்பினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சித்திரமும் வடிவமைப்பும் துறையில்; கற்று அங்கு அதே துறையில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றியதோடு 2013ம் ஆண்டிலிருந்து இன்றுவரை வருகை விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றேன். அத்துடன் தெல்லிப்பளைப் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் (பட்டதாரிப் பயிலுனர்) கடமையாற்றுகின்றேன். விட மேலதிகமாக, பாடசாலை மாணவர்களுக்கு மாலை நேரத்தில் ஓவிய வகுப்புக்களை எடுத்தல், வாடிக்கையாளர்களது விருப்பிற்கேற்றவாறு ஓவியம், சிற்பம், கடதாசிகளாலான கலைப் பொருட்களை செய்து கொடுத்தல் போன்றவற்றை பொருளாதார ஈட்டல் என்பதற்கு அப்பால் எனது பொழுதுபோக்கிற்;காகவும் மனமகிழ்விற்காகவும் செய்து வருகின்றேன்.
?.உங்களுக்கு இந்த ஓவியக்கலை எவ்வாறு கையகப்பட்டது
நான் சிறு வயதினளாக இருக்கும் போது எனது சகோதரன் தனது பாடசாலைக் காலங்களில் ஓவியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் திறமையானவராகவும் காணப்பட்டார். அவருடைய ஓவியத்திறமை எனக்குள்ளும் ஓர் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அது மட்டுமன்றி எனது பாடசாலை ஆசிரியர்களான துசியந்தன், தீபன் போன்றோருடைய ஊக்கப்படுத்தலும் அதனூடாக அவர்கள் என்னைப் போட்டிகளில் பங்குபற்ற வைத்ததுவும் காரணமாக இருந்தது. மேலும் எந்த ஓவியப்போட்டிகளில் பங்கு கொண்டாலும் வெற்றி பெற்றே திரும்புவது எனக்கு மகிழ்வைத் தந்தது. இது போன்ற வழிகாட்டல்கள் எனது ஓவியத் திறமையை வளர்த்துக் கொள்ள காரணமாய் அமைந்ததெனலாம்.அது மட்டுமன்றி எனது ஓவியத் திறமைக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக பல்கலைக்கழக கற்கை அமைந்திருந்தது. இங்கு எனக்கு ஓவிய ஆளுமைகளான ஆசை.இராசையா, ரமணி, சனாதனன் மற்றும் ஏனைய விரிவுரையாளர்கள் போன்றவர்களுடைய அறிமுகங்களும் ஜனனிகுரே, கமலாவாசுகி போன்ற பெண் ஓவியர்களின் கண்காட்சிகள், ஆற்றுகைக் கலைகள் அதனூடாக அவர்களுடன் ஏற்பட்ட கலந்துரையாடல்கள், சந்திப்புக்கள் போன்றனவும் ஓவியம் மீதான எனது ஈடுபாட்டை மேலும்; கூட்டியது.
?. பாடசாலைகளில் ஓவியக் கற்கையை மாணவர்கள் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்காலத்தில் பெற்றுக் கொள்ளக் கூடிய பயன்தரு விளைவுகள் எவை என கூறமுடியுமா
ஆம், நிச்சயமாக, பாடசாலைக் காலங்களில் ஓவியத் துறையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் எதிர்காலங்களில் தமக்கு ஏற்படக் கூடிய வாழ்வு தொடர்பான சிக்கல்கள், சமூக மாற்றங்கள் என்பவற்றை இலகுவாக எதிர்கொள்ளவும் தன்னம்பிக்கை, பொறுமை என நுட்பமான முறையில் வாழ்வை கொண்டாடவும் இத்துறை மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.அது மட்டுமன்றி மாணவர்கள் தரம் – 06 ற்குள் நுழைகின்ற போதே ஓவியத்தை ஒரு பாடமாகக் கொள்வார்களெனின் சாதாரண, உயர்தர வகுப்புக்களில் கணித விஞ்ஞான பாடங்களைக் கற்றல், வரைபடங்களை வரைதல் போன்ற கற்கைகளுக்கு பயன் மிக்கதாக இருக்கும். உண்மையில் வைத்தியர், பொறியியலாளர், வரைபடக்கலைஞர் போன்ற ஓவ்வொரு தொழில்சார் மனிதருக்குள்ளும் ஒரு ஓவியனோ ஓவியையோ மறைந்தே இருக்கிறார்கள். இந்த அடிப்படையானது பாடசாலைக்கால ஓவியம் சார் கற்கை நெறிகளிலிருந்தே உருவாகி இருக்கின்றது என்பது எனது கருத்து.
?.போர்ப்பட்ட எமது வாழ்வியலில் உங்களது ஓவிய மொழியை எவ்வாறு பயன்படுத்தியுள்ளீர்கள்
போரினால் பாதிக்கப்பட்ட பெண்களது மனநிலைகளை ஓவியங்களாக படைப்பதில் எனக்கு தனி ஆர்வம் இருந்துள்ளது. உண்மையில் வன்னி யுத்தத்தில் பலதரப்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக பெண்களும் குழந்தைகளும் அறியப்படுகின்றனர். நான் வன்னி யுத்தத்திற்குள் அகப்படாவிட்டலும் அங்கு நடைபெற்ற போர் அவலங்களை கண்டதும் கேட்டதுமாக அவர்களது அவல உணர்வை எனக்குள் ஏற்றுக் கொண்டேன். அதன் காரணமாக என்னுள் தோன்றிய எண்ணங்களுக்கு தூரிகையால் வடிவம் கொடுத்தேன். அத்தோடு போரின் பின்னர் கணவன், குழந்தைகள், சகோதரன் என உறவுகளைக் காணாது அவர்களது புகைப்படங்களைக் கையிலேந்தி போராட்டங்களில் பங்கு கொள்ளும் பெண்களது முகங்கள் என்க்குள்ளே பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை அடிப்படையாக கொண்டே எனது பெண்சார்ந்த ஓவியங்கள் படைக்கப்பட்டன. உதாரணமாக போர் வாழ்வியலில் பெண்கள,; காணாமலாக்கப்பட்ட உறவுகளின்றி பெண்கள் எதிர்கொள்ளும் அவலங்கள், சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்ந்த ஓவியங்கள் என்பன தொடரிலக்கம் இடப்பட்டு எனது கண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றுள் எனது சுனாமி ஓவியமானது ஆசிய ஓவியர்களுக்காக ஊயஅடin எனும் இந்திய நிறுவனம் Camlin நடாத்திய ஓவியப் போட்டியில் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டு பணப்பரிசிலினையும் பெற்றுக் கொண்டது. பின்னாளில் இவ் ஓவியம் “கலைமுகம் சஞ்சிகையின் அட்டைப் படமாகவும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
?. நீங்கள் கண்காட்சி ஒன்றை ஒழுங்குபடுத்தியிருந்ததாக தற்போது கூறியிருந்தீர்கள் அது பற்றி ஊடறு வாசகர்களுக்காக கூற முடியுமா
ஆம், 2013ம் ஆண்டு திருமறைக்கலாமன்றத்தின் ஓவியக் கூடத்தில் யுசவ புயடடநசல எனது கண்காட்சி இடம் பெற்றது. அக் கண்காட்சியில் Pநnஉடை யுசவஇ Pயiவெiபௌஇ செப்புப் புடைப்புச் சிற்பம் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டன. இக் கண்காட்சியை பாடசாலை மாணவர்கள், ஓவிய சிற்ப ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து பார்வையிட்டு சென்றனர். இதன் போது போரினைக் கூறி நிற்கும் பெண் குறியீட்டு ஓவியம் ஒன்றை பெண்மணி ஒருவர் தனது சகோதரனின் பிறந்தநாள் அன்பளிப்புக்காக ரூபா50000.00 கொடுத்து என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார். அவருக்கு அந்த ஓவியத்தில் நான் பயன்படுத்திய கலப்பு ஊடகம் ; (Mixed Medium ) மிகவும் பிடித்துப் போயிருந்ததாகவும் போர் அவலம் மிகத் தத்துரூபமாக காட்டப்பட்டிருப்பதாகவும் கூறி என்னை வாழ்த்தினர்.அது மட்டுமன்றி காட்சிப்படுத்திய ஓவியங்களில் ஒன்று ஆளுமைக் கவிஞரான சோ.பத்மநாதன் அவர்களது ஆங்கிலக் கவிதை நூலுக்கான அட்டைப்படமாகவும் வெளிவந்துள்ளது. அவர் தனது நூல் வெளியீட்டின் போது என்னையும் அழைத்து வாழ்த்திப் பாராட்டியமை எனக்கு மிகப் பெரிய மகிழ்வையும் உற்சாகத்தையும் தந்தது என்றே கூற வேண்டும்.
?. சர்மலா நீங்கள்; ஒரு ஓவியர் மட்டுமல்ல, ஓவியத்தோடு தொடர்புபட்ட வடிவமைப்புக்கலைகள் அனைத்திலும் ஆளுமையுடையவராக திகழ்கிறீர்கள் என உங்கள் உரையாடலிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. இது தொடர்பாக தற்போது நீங்கள் என்னென்ன துறைகளில் ஈடுபட்டு வருகிறீர்கள் என கூறமுடியுமா
எனது கற்கை நெறியும் அது சார்ந்த பட்டப்படிப்பும் சித்திரமும் வடிவமைப்பும் துறையைக் கொண்டதாயினும் தற்போது நான் செப்புப் புடைப்புச் சிற்பங்கள், ;> Crafts Works (Based paper works , முகமூடிகள், களிமண்ணிலான சிற்பங்கள், ரெஜிபோம், Cuttings ஆடைவடிவமைப்பு, மரச்சிற்ப புனரமைப்புக்கள் போன்ற துறைகளில் ஈடுபட்டு வருகின்றேன். குறிப்பாக , வருடாவருடம் சிறுகைத்தொழில் அமைச்சினால் பிரதேச செயலகங்களினூடாக நடாத்தப்பட்டு வருகின்ற கைத்தொழில் கண்காட்சிகளில் கடதாசிகளிலான கைவினைப் பொருட்கள், செப்புப்புடைப்புச்சிற்பங்களை காட்சிப்படுத்தி அங்கு நடாத்தப்படுகின்ற போட்டிகளில் பங்குபற்றி தேசியமட்டம் வரை சென்று பரிசில்களையும் பெற்று வருகின்றேன். 2013ம் ஆண்டிலிருந்து என்னை இனங்கண்டு இச் செயற்பாட்டில் ஈடுபடுத்தி அறிமுகப்படுத்திய தெல்லிப்பளைப் பிரதேச செயலக கைத்தொழில் துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் கலைவாணி அக்காவை இந் நேரத்தில் நினைத்துப் பார்க்கின்றேன். இச் சகோதரியின் உதவியினூடாக எனது கைவினைப் பொருட்களை பெறுவதற்கு பலர் முன்வந்துள்ளனர் விரும்பியவர்கள் தமக்கேற்றவாறு ஓடர் செய்தும் என்னிடமிருந்து பெற்றுக் கொள்கின்றனர். என்னைப் பொறுத்தவரை இவ் அனைத்துக் கலைகளும் ஒன்றோடொன்று தொடர்புபட்டவையே பொறுமையும், நேரமும் உண்டானால் இது தொடர்பில் மேலும்; முன்னேறலாம்.
?. ஓவியக் கற்கைகளில் ஈடுபடுகின்ற இளையவர்கள, குறிப்பாக பெண்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன
நான் அறிந்த வகையில் , ஒரு சில இளைய பெண் படைப்பாளிகள் மாத்திரமே ஓவியம் சிற்பம் சார்ந்து புதிய அணுகுமுறையினூடாக சமூக முன்னெடுப்புக்களில் ஈடுபட்டு வருகின்றனர். என்னுடைய பல்கலைக்கழக அணியில் என்னுடன் சேர்ந்து 5தோழிகள் சித்திரமும் வடிவமைப்பும் கற்கைநெறியைப் பூர்த்தி செய்தார்கள் ஆனாலும் இன்று இத்துறை சார்ந்து தொழிற்பட்டுக் கொண்டிருப்பது நான் மட்டுமாகத்தான் இருக்க முடியும்; என்று நினைக்கின்றேன். அவர்கள் தத்தமது விருப்பம், ஈடுபாடு சார்ந்து வெவ்வேறு துறைகளில் (மணப்பெண் அலங்காரம், ஒப்பனை) கவனத்தை திருப்பி வருகின்றார்கள். இது அவர்களது தவறு என்றும் கூறமுடியாது. ஏனெனில் எமது தமிழ் சமூக கட்டமைப்பு பெண்களுக்குரிய தொழில்கள் எவை? எதனை அவர்கள் செய்ய வேண்டும்?; திருமணம,; குடும்பம் பின்னரான வாழ்க்கையை அவர்கள் எப்படி வாழ வேண்டும்?; என்கின்ற வரையறைகளையும் விதிமுறைகளையும் எழுதப்படாத சட்டங்களாக்கி வைத்திருக்கின்றது. இதனடிப்படையில் ஓவியம் சார்ந்த கற்கை நெறிகளை மேற்கொள்ளும் எனது தோழிகள் பெரும்பாலும் வகுப்பறை ஓவியர்களாகவும் ஒப்பனை வல்;லுனர்களாகவுமே வலம் வருகின்றதை காண முடிகின்றது. இவ்விடயமானது அவர்களுக்கு மட்டுமேயானதொரு சவால் அல்ல. எனக்கானதும் தான.; எனது வருங்காலக் கணவர் எனது ஓவியச் செயற்பாடுகளுக்கு இதுவரை நிறைந்த பங்களிப்பு செய்தே வருகின்றார். ஆயினும் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ள சிறு உடல் நலக் குறைவினால் நான் இத்துறையில் அதிக நேரம் செலவளிப்பதை அவர் பெரிதாக விரும்புவதில்லை. இதனை என் மீதான அக்கறையாகவே நான் காண்கின்றேன். இருந்தும் குடும்ப வாழ்க்கையின் பின்னர் மாறிப் போகின்ற பெண்களின் ஒட்டு மொத்தமான மனநிலைக்கு நானும் தள்ளப்பட்டு விடுவேனோ என்கின்ற சிறுபயம் எனக்குள்ளும் இருந்து கொண்டிருப்பது மறுக்க முடியாததே. இதற்கு தமிழ்ச்சூழல் குறிப்பாக எமது யாழ்ப்பாண சமூகத்தின் கட்டமைப்பே காரணமாக உள்ளது. எனினும், இது தொடர்பில் மாற்றங்களையும் முன்னெடுப்புக்களையும் மேற்கொள்வதன் மூலம் பெண்கள் சுதந்திரமாக இயங்குவதற்கான வெளிகளை உருவாக்க முடியும் என்பதையும் இந்நேரத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
?. உங்களது தற்போதைய படைப்புக்கள் அதிகமாக செப்புப் புடைப்புச் சிற்பம் சார்ந்ததாகக் காணப்படுகிறது. இந்த வார்ப்புக் கலையினை எங்கிருந்து அல்லது எவ்வாறு கற்றுக் கொண்டீர்கள்
செப்புச் சிற்பங்களை வார்க்கும் ஆர்வம் எனக்கு சிறுவயதிலிருந்தே ஆரம்பித்திருக்க வேண்டும். அதற்கு பலமான ஒரு காரணமும் உண்டு. என்னுடைய தந்தையார் தனது வாழ்வாதார தொழிலாக வார்ப்புக் கலையையே செய்து வந்தார். ஈயம், அலுமினியம், செப்பு வார்ப்பு என தனது தொழிலில் திறமையானவராக இருந்தார். அவரது தொழிலுக்கு பக்க பலமாகவும் பேருதவியாகவும் எனது தாயார் கூடவே பயணித்தார். இவர்கள் இருவரது தொழில் திறமையும் ஆற்றலும் எனக்குள் செப்பு புடைப்புச் சிற்பங்களைச் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தை உண்டாக்கியதெனலாம். அதுமட்டுமன்றி செப்புப் புடைப்புச் சிற்பத்தினை ஒரு கற்கை நெறியாக முறைப்படி கற்கவும் அதன் நுட்பங்களை அறியவும் யாழ்ப்பாணத்திலிருக்கும் இரட்ணகோபால் ஆசிரியரிடம் சில மாத கால பயிற்சி நெறியை மேற்கொண்டிருந்தேன். சிற்பம் சார்ந்து அவர் நடாத்திய கண்காட்சியின் போது அவரது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அக் கண்காட்சியினை நான் பார்க்கச் சென்றிருந்த போது, அவர் அதற்கு பயன்படுத்தியிருந்த ஊடகம் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. குறிப்பாக, எனது அப்பா தனது தொழிலுக்காக பயன்படுத்துகின்ற உபகரணங்கள், மூலப் பொருட்கள் என்பவற்றைப் பார்த்ததும் அவரிடம் இதனைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. எனவே அவரிடம் செப்புப் புடைப்புச் சிற்பம் எவ்வாறு செய்வது என்பது தொடர்பிலான செய்முறையைக் கற்றுக் கொண்டு அவற்றினூடாக சில புதிய முயற்சிகளில் இறங்கினேன். உதாரணமாக முகவுருவப்படங்கள், பெண்கள் வன்முறை, அவர்களது உளச்சிக்கல் எதிர்பார்ப்பு, குடும்பச் சூழல், வன்முறைக் கெதிராக போராடுதல், நீதிகோரல் என பல்வேறு வகைப்பட்ட சிற்பங்களை செப்பினை ஊடகமாக கொண்டு படைக்கத் தொடங்கினேன். அதில் வெற்றியும் கண்டேன். தொடர்ந்தும் ஆர்வத்தோடு இன்று வரை செய்தும் வருகின்றேன்.
?.உங்கள் ஓவியங்களிலும் சரி, செப்புப் புடைப்புச் சிற்பங்கள், காகித வேலைப்பாடு கைவினைப் கலைகளிலும் சரி பெரும்பாலனவைகளில் எறும்பு ஊர்ந்து செல்வதனைப் போன்ற குறியீடு காணப்படுகின்றதே? அதற்கு தனிப்பட்ட காரணங்கள் அல்லது சிறப்புக்கள் உண்டா
ஆம், நான் எனது பல்கலைக்கழக காலத்திலிருந்தே எனது அனேகமான ஓவியங்களில் எறும்பைக் குறியீடாகப் பயன்படுத்தி வருகின்றேன். எறும்பு என்பது மிகச்சிறிய பிராணி. ஆனால் அது கடித்தால் மிக வலியாக இருக்கும். எனவே எனது ஓவியங்களின் கருப் பொருளைக் வெளிப்படுத்துவதற்கு குறியீடாக எறும்பினைப் பயன்படுத்துகிறேன். சந்தர்ப்பங்களிற்கேற்ப எறும்பின் மூலம் உணர்த்தப்படுகின்ற வெளிப்பாடுகள் வேறுபடுகின்றன. உதாரணமாக நானும் எனது குடும்பமும் 90களில் இடம்பெயர்ந்து பின்னர் மீண்டும் எமது சொந்த நிலத்திலேயே குடியிருப்புக்களை அமைத்து வாழ்வதனை வெளிப்படுத்த கூட்டங்களாக ஊர்ந்து வருகின்ற எறும்புகளை பயன்படுத்தியிருக்கின்றேன். பெண்கள் வன்முறை தொடர்பிலான ஓவியத்திற்கு போராடும் குணமுடைய எறும்பை குறியீடாகக் காட்டியிருக்கின்றேன் .
அதுமட்டுமன்றி செப்புப் புடைப்புச் சிற்பங்களிலும் எறும்பை பயன்படுத்தி வருகின்றேன். 2015ம் ஆண்டு காலப்பகுதியில் எமது பல்கலைக்கழக விரிவுரையாளர் சனாதனன் அவர்களின் வழிகாட்டலில் தேனுவர அவர்களிடம் ஓவியம், சிற்பப் பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டதோடு அவற்றினடியாக கிடைக்கப் பெற்ற, அங்கு நாம் கற்றுக் கொண்ட விடயங்களை லயனல் வென்ற், து.னு.யு.Pநசநசய ஓவியக் கூடங்களிலும், truth to truth கண்காட்சியினையும் செய்திருந்தோம். அங்கு எனது ஓவியங்கள், செப்புப் புடைப்புச் சிற்பம் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக, அக் கண்காட்சியில் செப்புப் புடைப்புச் சிற்பத்தினை ஊடகமாகக் கொண்ட எமது வாழ்க்;கைப் பருவங்களை குறியீட்டு எறும்பின் மூலம் பெண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தி இராசிச் சக்கர வடிவில் சுழலக் கூடிய புடைப்புச் சிற்பத்தினை காட்சிப்படுத்தி பலரது பாராட்டுக்களையும் பெற்றேன். சகோதர மொழி பேசும் இனத்தவரோடு இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட அந்தக் காலங்கள் ஓவியம் தொடர்பிலும் நட்பு ரீதியிலும் எனக்குப் புதுமையான அனுபவத்தினையும் நிறைந்த புரிதலையும் ஏற்படுத்தித் தந்ததென்றே கூறலாம்.
?. இறுதியாக ஊடறு பற்றிய உங்கள் கருத்து
பெண்களுக்கான வெளியினையும் குறிப்பாக இளைய படைப்பாளிகளுக்கான களத்தினையும் அமைத்துக் கொடுக்கின்ற ஊடறுவின் பணி அளப்பரியதே. கமலாவாசுகி மிஸ் அவர்களினூடாக ஊடறுவையும் றஞ்சி அவர்களையும் நான் அறிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. மேலும் நானிலத்தில் வெளிவந்த எனது ஓவியங்களையும், நேர்காணலினையும் ஊடறுவும் பிரசுரித்திருந்தமையை பார்த்து மகிழ்வடைந்தேன். இதனடிப்படையில்; இந்த நேர்காணலை எடுப்பதற்காய் என்னை இனங்கண்டு ஆர்வத்தோடு அணுகிய ஊடறு றஞ்சி அவர்களுக்கும் இவ் நேர்காணலைக் மேற்கொண்ட எனது பாடசாலை நண்பியும் சகோதரியுமாகிய யாழினி யோகேஸ்வரன் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
——————————————————————————————————
ஊடறுவில் வெளிவந்த சர்மலாவின் ஓவியங்களும் நேர்காணலும்
http://www.oodaru.com/?p=8376
http://www.oodaru.com/?p=10138
http://www.oodaru.com/?p=11749
http://www.oodaru.com/?p=10773