நாடாளுமன்றத்திலே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெரும்பான்மை ஆதரவினை கொண்டிருக்காத ஒரு சூழலிலே அவரை ஆட்சியமைக்கும்படி கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அழைத்த காரணத்தினால் ஏற்பட்டிருக்கும் அண்மைக்கால அரசியல் குழப்பங்கள் குறித்து நாம் ஏமாற்றமும், அச்சமும் அடைந்திருக்கிறோம். பெண்கள் அமைப்புக்களும், ஜனநாயகத்தையும் நீதியையையும் ஆதரிப்பவர்களும், பொது அமைப்புக்களும் இணைந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் நாமும் கலந்து கொண்டோம்.2015ஆம் ஆண்டு நல்லாட்சி மற்றும் அரசியல் மாற்றம் ஆகியவற்றினை வலியுறுத்தி நாட்டு மக்களில் பெரும்பான்மையோர் கௌரவ ஜனாதிபதி சிறிசேனவுக்கு வாக்களித்திருந்தனர். அதனை அடுத்து இடம்பெற்ற பொதுத் தேர்தலிலே முன்னால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டணிக்கும் பெரும்பான்மையான மக்கள் வாக்களித்தனர். கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றவில்லை.பிளவுகளை உருவாக்கும் வகையிலான அரசியல் விசுவாசத்தினை வெளிப்படுத்தும் முயற்சிகளும் சுயநல நோக்கிலான சந்தர்ப்பவாதமும் கடந்த மூன்று வருடங்களாக நாட்டிலே மேலோங்கியது. தற்போது உருவாகியுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு இந்தப் போக்குகளும் ஒரு காரணமாகும். மக்கள் செயற்பாட்டிற்கான வழிகளும் கருத்துச் சுதந்திரத்திற்கான வெளிகளும் விரிவு பெற்றமை, தகவல் அறியும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டமை, இராணுவத்தின் பிடியிலிருந்து சில நிலங்கள் திருப்பியளிக்கப்பட்டமை போன்ற சில சாதமாகமான மாற்றங்கள் இடம்பெற்றிருந்தாலும், முன்னைய அரசாங்கத்தின் பிரச்சினைக்குரிய திட்டங்களை மேலும் முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில் ‘நல்லாட்சி’ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நவதாராளவாதக் கொள்கைகள் மற்றும் நிறைவேற்றப்படவிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (Counter Terrorism Act) போன்றவை மக்களுக்கு எந்த மீட்சியினையும் வழங்கப்போவதில்லை. உலகப் பொருளாதார நெருக்கடி ஒன்று எம்மைச் சூழவுள்ளது என எதிர்பார்க்கப்படும் நிலையில் நாடு பல்வேறு பக்கங்களிலிருந்தும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினை ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைத்தமையும், பின்னர் நாடாளுமன்றத்தினை முடக்கியமையும் தற்போதைய நிலையில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாடாளுமன்றத்திலே பெரும்பான்மை பலமற்றவராக இருப்பதையே சுட்டிக்காட்டுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகளுக்கும், கௌவரமான வாழ்வுக்கும் எதிரான வன்முறைகள், மனிதப் படுகொலைகள், வெள்ளை வான் கடத்தல்கள், கருத்துச் சுதந்திரத்திற்கு இருந்த நெருக்கடிகள் அவரை அச்சுறுத்தல் மிக்க தலைவராக அடையாளப்படுத்தி மக்களை விட்டும் தூரப்படுத்தியுள்ளன
.இத்தகைய பின்னணிகளின் அடிப்படையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தினை முடக்கிய செயற்பாடானது, நெருக்கடியான சூழ்நிலையினைப் பயன்படுத்தி அரசியல் குதிரைப் பேரம் இடம்பெறவும், மக்களினது வாக்குரிமையை பேரம்பேசிக் கட்சி தாவுவதற்கும் வழிவகுத்த காரணங்களாகவும், அரசியலமைப்பையும் நாட்டின் இறைமையினையும் கேள்விக்குபடுத்தியதாகவுமே நோக்குகின்றோம். அத்துடன், இதனை முன்கூட்டிய திட்டமிடப்பட்ட ஒரு செயலாகவும் கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரப் போக்கிற்குள் ஆட்சியமைக்கும் செயன்முறையாகவுமே நாம் பார்க்கின்றோம். இது ஏற்கனவே நலிவுற்றுப் போயிருக்கும் நாட்டின் ஜனநாயகத் தளத்தினை மேலும் நலிவுறச் செய்கின்ற ஒரு செயலாகவும் எதிர்ப்பு போராட்டங்களுக்கும், மக்களுடைய கூட்டுப் போராட்டங்களுக்கும் அபாய மணியினை அடிக்கும் ஒரு செயலாக அமைகின்றது.இத்தகைய சூழ்ச்சிகள் நிரம்பிய சூழலினைப் புரிந்துகொண்டு தகுந்த தீர்மானங்கள் இயற்றிச் செயற்பட்ட சிறுபான்மை அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டையும், பணத்திற்கும் பதவிகளுக்கும் சோரம் போகாத உறுதியையும் நாம் பாராட்டுகின்றோம். மேலும் உச்ச நீதிமன்றம், ஜனாதிபதியின் எதேச்சாதிகாரத்தினால் முடக்கிவைத்திருந்த பாராளுமன்றத்தினை உடனே கூட்டும்படியான நிலையை ஏற்படுத்தியது, இந்த நாட்டின் இறைமையிலும் நீதித்துறையிலும் எமக்கிருக்கும் நம்பிக்கையினை உறுதி செய்வதாக அமைந்ததையும் சுட்டிக்காட்டுகின்றோம்.ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது தனி அரசியல் அமைப்புடன் சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல.
அது பொருளாதார சமூக தனிநபர் மேம்பாட்டுடனும், எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கான உரிமையுடனும், பன்மைத்துவம் குறித்த எமது பற்றுறுதியுடனும் தொடர்புபட்ட ஒரு விடயமாகும். ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயலின் அரசியலமைப்புக்கு எதிரான தன்மையினை நாம் சுட்டிக்காட்டியே ஒவ்வொரு நாளும் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சதுக்கத்தில் எதிர்ப்பினைப் பதிவு செய்யும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோம்.ண்ட இழுபறிகளுக்குப் பின்பு கூட்டப்பட்ட நாடாளுமன்றத்தைச் சண்டைக் களமாக மாற்றிச் சபாநாயகரைப் பேச அனுமதியாதபடி ஏதேச்சாதிகாரத்தோடு செயற்பட்டதனை ஜனநாயத்திற்கு எதிரான செயற்பாடு என்பதனை வலியுறுத்திக் கூறுகின்றோம். ஜனநாயகபூர்வமான செயற்பாடுகள் எப்போதும் முன்நிறுத்தப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டும் என்பதனை நாம் வலியுறுத்துகின்றோம். குறைவான தீய சக்திக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கும் அரசியல் உபாயத்தினைவிட நாட்டின் மக்கள் என்ற வகையில் அனைத்து தரப்புகளையும் ஒன்றுதிரட்டி எமது கூட்டு எதிர்ப்புகளுக்கான நம்பிக்கையினை நாம் கட்டியெழுப்புவோம்.ஜனநாயகபூர்வமான செயன்முறைகளுக்கு ஆதரவு வழங்கும்படியும், பொறுப்புணர்வுடன் செயற்படும்படியும் அதிகாரத்தில் இருக்கும் அனைவரையும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரச அதிகாரிகள் எல்லோருக்கும் நாம் அழைப்பு விடுகின்றோம். ஜனநாயகச் செயற்பாடுகளுக்கான எமது முழுமையான ஆதரவினையும் நாம் வெளிப்படுத்தும் அதேவேளை சமூக நீதியினை வலியுறுத்தும் பெண்கள் குழுக்களுக்களும் சிவில் அமைப்புக்களும் இணைந்துஇணைந்து எதேச்சாதிகார சக்திகளுக்கும், செயன்முறைகளுக்கும் எதிரான கண்டனங்களைப் பதிவு செய்கின்றோம்.
கையெழுத்திட்டுள்ள பெண்கள் குழுக்களும் சிவில் அமைப்புக்களும்
1) சுமூக அபிவிருத்தி நிலையம் – கண்டி
2) மனித உரிமைகளுக்கான நிலையம் மற்றும் பெண்கள் அபிருத்திக்கான செயற்பாட்டு வலையமைப்பு
3) நீதிக்கும் மாற்றத்திற்குமான நிலையம் – திருகோணமலை
4) மன்னார் பெண்கள் அபிவிருத்தி மையம்
5) Women’s Front for Transitional Justice
6) மாற்றுத்திறனாளி மாதர்களின் நலனோம்பு அமைப்பு – கிளிநொச்சி
7) முல்லைத்தீவு சங்கம் பெண்கள் ஒன்றியம்
8) முல்லைத்தீவு நிசா அபிவிருத்தி நிலையம்
9) கிராமிய அபிவிருத்தி அமைப்பு – வவுனியா
10) வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் – யாழ்ப்பாணம்
11) முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிதியம் – புத்தளம்
12) Child Vision Srilanka – Puttalam
13) வடக்கு முஸ்லிம் போரம் (NMF) புத்தளம்
14) Voice Area Federation
15) மாற்றம் மனிதாபிமான நிறுவனம் – புத்தளம்
16) மாற்றுத்திறனாளி சிறார்களின் பெற்றோர் அமைப்பு –புத்தளம்
17) மாவட்ட மத நல்லிணக்க கமிட்டி – பாலாவி
18) Voice Area Federation – பாலாவி
19) சுந்திர அபிவிருத்திகான பெண்கள் செயலகம் – WOMANAID – மட்டக்களப்பு
20) கிழக்கு சமூக அபிவிருத்திக்கு அமைப்பு – நுளுனுகு
21) ஆனர்த்த முகாமைத்துவத்திற்கான பெண்கள் ஒன்றியம்
22) புணிபுரியும் பெண்கள் அபிவிருத்தி போரம்
23) பெண்கள் வள நிலையம்
24) திருப்பெருந்துறை சமூக அபிவிருத்தி நிலையம்
25) மட்டக்களப்பு இடம்பெயர் வலையமைப்பு
26) மக்கள் நலன்புரி வலையமைப்பு
27) கிராமிய மக்கள் அபிவிருத்தி அமைப்பு
28) களம் – அம்பாறை
29) மறுமலர்ச்சி – அம்பாறை
30) மகாசக்தி
31) கிறிஸ்தவ இளைஞர் அமைப்பு
32) பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பு
33) பெண்கள் அபிவிருத்தி நிலையம் – அம்பாறை
34) பெண்கள் அபிவிருத்தி அமைப்பு – அம்பாறை
35) சமூக நலன்புரி அமைப்பு – அம்பாறை
36) மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சங்கம் – அம்பாறை
37) மனித மேம்பாட்டு நிறுவனம் – அட்டாளைச் சேனை
38) பாதிக்கப்பட்ட குடும்பங்ளுக்கான அமைப்பு – மன்னார்
39) சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் -மட்டக்களப்பு
40) இணையம் மட்டக்களப்பு
41) மந்த்ரா லைஃப்
42) சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் – மட்டக்களப்பு