கடந்த செப்டம்பர் மாதம் பேராசிரியர் திரு மௌனகுரு அவர்கள் எனக்கு ஒரு நீண்ட குறிப்பையும் வாழ்த்துக்களையும் எனது இன்பொக்ஸில் தெரிவித்திருந்தார். எமது ஊடறு பெண்ணிய சந்திப்பு மட்டக்களப்பில் நடைபெற்று முடிந்த கையோடு இலங்கை நேரம் 01.48 க்கு அனுப்பிய அவ் குறிப்பை அங்கிருக்கும் போது என்னால் பார்க்க முடியாமல் இருந்தது. யாழ் சென்ற பிறகு பார்த்து யோகி ,கல்பனா,மாலதி, யாழினி,சுரேகா மற்றும் தோழிகளுக்கு வாசித்து காட்டியுமிருந்தேன். தற்போது அவரின் அனுமதியுடன் அதை இங்கு பிரசுரிக்கின்றேன். நன்றி திரு மௌனகுரு அவர்களுக்கு ….சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் பணிகள் தொடர என் அன்பும் வாழ்த்துகளும் ….கீழே அவ்குறிப்பு
இன்றைய பெண்கள் இலக்கியச் சந்திப்பும் பழைய நினைவுகளும்
———————————————–
ஊடறு பெண்கள் இலக்கியச் சந்திப்பு இம்மாதம் 15 ஆம் 16 ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் இடம் பெறுகிறது.
இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னர்
1978 ஆம் ஆண்டு இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னர் பெண்கள் சிலர் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி ஓர் புகைப்படக் கண்காட்சியொன்றினை யாழ் பல்கலைக் கழகத்தில் முதன் முதல் வைத்தமை ஞாபகம் வருகிறது.அதில் சித்திரலேகா, சர்வமங்களம்,காலம் சென்ற சோமேசசுந்தரி, லத்தீபா நுஹ்மான் ஆகியோர் முன்னணியில் நின்றனர்
நுஹ்மான் நான் பேரா சுஜரித கம்லத், தர்மசேன பத்திராஜா ,பேரா கைலாசபதி புத்தகக்கடை மணியம் ஆகியோரும் சில முற்போக்கும் பெண்ணிய ஆதரவாளர்களான ஆண் மாணவர்களும் அவர்களுக்கு உதவியாக இருந்தனர்
வியட்நாமிய போரடும் பெண்கள் படங்களைத் தந்துதவியவர் மணியம் பெண்களுக்கெதிரான வன்முறைகள் முதன் முதலில் ஓவியங்களாக புகைப்படங்களாக துண்டு துணுக்குகளாகக் காட்சிப்படுத்தப் பட்டபோது ஒரு கணம் அனைவரும் ஸ்தம்பித்து விட்டனர் நிரையப்பேர் அதனைபார்வையிட்டனர்
அதன் பின் யாழ்பல்கலைக்க்ழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் ஆய்வு வட்டம் அது பெண்கள் தினத்தைக்கொண்டாடியமை அக்காலத்தில் வந்த சிவரமணியின் பெண்கள் பற்றிய கவிதைகள், பெண்ணியக் கருத்தரங்குகள்
அதில் பங்கு கொண்ட மாணவிகள் பெண்கள் ஆய்வு வட்டத்தினருடன் கலந்துரையாடி நான் போட்ட “சக்தி பிறக்குது” நாடகம் குழந்தை சண்முகலிங்கம் எழுதிய “தியாகத் திருமணம்”, போன்ற பெண் பிரச்சனைகளைப் பேசுகின்ற நாடகங்கள் பாலேந்திராவின் “பெண் பிரச்சனை “கூறும் தழுவலாக்க நாடகங்கள் ராஜினி திரணகம போட்ட “அடுப்படி அரட்டை” எனும் நாடகம் என்பன ஞாபகம் வருகின்றன அன்று உண்டாக்கப்பட்ட “அன்னையர் முன்னணி” அதன் செயற்பாடுகள் ஞாபகம் வருகின்றன
அக்காலப்பகுதியில்தான்
“சொல்லாத சேதிகள் “
என்ற முதல் பெண் கவிதைத் தொகுதி வருகிறது,
சித்திரலேகா அதற்கு ஓர் முன்னுரை எழுதுகிறார்
பெண்ணியம் பற்றிப் பரவலாக யாழ்ப்பாணப் பல்கலைக்ழக மாணவரிடையே உரையாடல்கள் நடை பெறுகின்றன
சிவரமணி,ஔவை,செல்வி, சங்கரி, ஊர்வசி முதலான பெண் கவிஞர்கள் எழுதுகிறார்கள்
பின்னர் “சூரியா பெண்கள் நிலையம்” மட்டக்களப்பில் தோற்றுவிக்கப்படுகிறது.அது பெண்ணிய சிந்தனைகளை மட்டக்களப்பில் முன்னெடுக்கிறது
அங்கும் கவிதை கதை எழுதுவோர் தோன்றுகிறர்கள்
பின்னர் காலம் தோறும் ஈழத்தில் இச்சிந்தனை விரிவடைந்து வந்ததையும் புதிய புதிய முகங்கள் தோன்றுவதையும் அவற்றின் செயற்பாட்டையும் அருகிருந்தும் தூரவிருந்தும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது
அச்சிந்தனைகளுக்குக் கிடைத்த வரவேற்பும் எதிர்ப்பும் ஞாபகத்திற்கு வருகின்றன பர்வையாளாராயும் பங்காளராயும் அவர்களோடு ஓடி வந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. அப்பெண்ணியச் செயற்பாட்டாளர்களிடமிருந்து கற்றுக்கொண்டவை ஞாபகம் வருகின்றன.
இன்று பெண்ணியச் சிந்தனைகள் அகன்று விரிந்து பரந்து செல்கின்றன. நிறையப் பெண்கவிஞர்கள் பெண் எழுத்தாளர்களைக் காணுகின்றேன்
கடந்த 48 வருடங்களையும் திரும்பிப்பார்க்கையில் மனம் வியப்படைகிறது. .இன்று எத்தனை முன்னேற்றம். அன்று இது பற்றி யாரும் கிண்டல் செய்தால் எதிர் வினைகள் குறைவு இன்றோ கிண்டல் பண்ண்ணினால் உடன் பதில்தர நிறையப்பேர்.
இப்பெண் செயற்பாட்டாளர்கள் எழுத்தாளர்களாக கலைஞர்களாக, அரசியல்வாதிகளாக ,பேச்சாளர்களாக, ஜெர்னலிஸ்டுகளாக இன்று முக்கிய இடங்களைப்பிடித்துள்ளனர்
நேற்றும் இன்றும்(15,16 sep 2018) மட்டக்களப்பில் நடைபெறும் பெண்கள் சந்திப்பும் இந்த வரலாற்றோட்டத்தின் ஒரு விளைவே
இங்கு நடைபெறும் இலக்கியக் கருத்தரங்கில் உள் நாட்டிலிருந்தும், தமிழ் நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பெண் எழுத்தாளர்கள் கலந்து கொள்கிறார்கள்
இளம் கவிதாயினிகளும், பெண் எழுத்தாளர்களும், இளம் ஊடகவியாலாளர்களும் ஒருங்கு சேர்வது கண்டு மனம் மகிழ்கிறது. இவர்களால் சமூவிடுதலை சாத்தியமாகட்டும் மகிழ்ச்சியோடு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்