Muralitharan Mayuran Mauran
https://mauran.blogspot.com/2018/10/metoo.html
இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது.
இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
ஒருவர் மட்டும் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தார். அவர் ஒரு கட்சியைச் சேர்ந்தவர். அக்கட்சியின் வலைத்தளத்தின் (WSWS) ஊடகவியலாளராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். .
அவரது கருத்து MeToo தொடர்பான அவர்களது கட்சியினரின் பொதுவான கருத்தையே பிரதிபலித்தது.
பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் MeToo போன்ற, நீதித்துறை முறைமைகளுக்கு வெளியேயான செயற்பாட்டினை கையிலெடுக்கக்கூடாது, நாட்டின் சட்டதிட்டத்திற்கு அமைவான பொறிமுறைகளூடாகவே முறைப்பாட்டினைச் செய்யவேண்டும் என்பது தான் அவர் மறுபடி மறுபடி கூறிக்கொண்டிருந்த கருத்தாகும். இதுவே அக்கட்சியினரின் கருத்துமாகும். நீதி என்றால் என்ன, நீதி எவர் கையில் இருக்கிறது, ஆண்களின் நீதித்துறை/சட்ட நடைமுறையாக்க முறைமை எப்படி பெண்களுக்கெதிராகச் செயற்படுகிறது, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஒரு பெண் நீதித்துறைய நாடுவது என்றால் என்ன என்பதையெல்லாம் அவர்கள் அறியாமலிருப்பது ஒன்றும் வியப்பல்ல.
எனக்கு வியப்பை ஏற்படுத்தியது நீதித்துறை மீது அக்கட்சியினர் காட்டும் அக்கறையும் நம்பிக்கையுமே.
சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி படுகொலைகளுக்கு எதிராக நாம் இந்திய தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தபோது, அங்கே வழக்கம்போல் ஆர்ப்பாட்டத்தோடு ஒட்டாமல் ஊடகவியலாளர்கள் போல வந்து படம்பிடித்துக்கொண்டிருந்த அக்கட்சியினர் தமது வலைத்தளத்தில் என்ன எழுதினார்கள்?
கொல்லப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு “நீதி வழங்கு” என்று நாம் பதாகை ஏந்தியிருக்கிறோம், நாம் முதலாளித்துவ நீதித்துறையினை நம்புகிறோம், நாம் குட்டிமுதலாளி நடுத்தரவர்க்கம் (அவர்களது வழக்கமான வசவு அடைமொழிகள் அத்தனையையும் இங்கே எழுத வேண்டியதில்லை) அது இது என்று வசைபாடியிருந்தார்கள். நீதித்துறை என்றால் என்ன என்று வகுப்பெடுத்தார்கள். இவ்வளவு அலப்பறையும் அந்தப் பதாகையில் இருந்த “நீதி” என்ற சொல்லை அரைகுறையாக அவர்கள் புரிந்துகொண்டதால் வந்தது.
முதலாளித்துவ நீதித்துறை பற்றிய அவர்களது விளக்கமெல்லாம் பெண்கள் என்று வரும்போது ஏன் புனித ஆற்றில் நீராடி முத்தி பெற்று சாம்பிராணிப்புகையுடனும் பூக்களுடனும் தெய்வீகத்தன்மை பெற்றுவிடுகிறது?
தொழிலாளி வர்க்கத்துக்கு நீதி கொடுக்காத நீதித்துறையை பெண்கள் மட்டும் ஏன் நம்பி நாட வேண்டும்?
ஏன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் தொழிலாள வர்க்கம்போல தமது எதிரிகளுக்கு எதிராக நீதித்துறைக்கு வெளியேயான போராட்ட வடிவங்களைக் கையிலெடுக்கக்கூடாது?
ஏன்?
அதுதான் ஆண்மையவாதம்! போலி இடதுசாரிகளின் இயல்பான ஆண் மையவாதம்!
MeToo அசைவியக்கம் உழைக்கும்வர்க்கப் பெண்களுக்கு எட்டக்கூடிய ஒன்றல்ல. அது வெளிப்படையானதே.
ஆனால், அவ்வசைவியக்கம் நிறையப்பேரை அம்பலப்படுத்துகிறது. அவ்வசைவியக்கம் ஏற்படுத்திய பதட்டத்தில் தமது வாயால் தாமே பலர் அம்பலப்பட்டுப்போகிறார்கள்.
அந்தவகையில் அவ்வசைவியக்கம் வெற்றிபெற்றுள்ளது.
—
ஏற்கனவே குறித்த குழுவைச்சேர்ந்தவர்களுடனான உரையாடலில் MeToo இற்கு எதிராக அவர்கள் முன்வைத்த சில கருத்துக்களுக்கு நான் அளித்த பதில்கள் :
பாலியல் தொந்தரவு தொடக்கம் தீவிரமான பாலியல் வன்முறை வரைக்கும் அதிகார ஏற்றதாழ்வு தொடர்புறுகிறது.
பால்நிலைகளுக்கிடையிலான அதிகார ஏற்றதாழ்வு எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.பாதிக்கப்படுவோரின் மௌனம் அதிகாரத்தில் இருக்கும் குற்றவாளிகளுக்கு மேலும் மேலும் அதிகாரத்தை வழங்குகிறது.
மௌனம் உடைக்கப்படும்போது அதிகாரத்தின் ஒரு பகுதி அச்சுறுத்தலுக்குள்ளாகிறது.
பாலியல் தொந்தரவு/வன்முறை செய்பவரை பெண்கள் பெயர் சொல்லி காட்டிக்கொடுப்பார்கள் என்ற நிலை ஏற்படும்போது எல்லா இடங்களிலும் அச்சம் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது. அது இந்த அதிகார ஏற்றதாழ்வில் சிறிதளவேனும் மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்புடையது.
சிலர் பொய்க்குற்றம் சாட்டலாம், சிலர் பழிவாங்கலாம். பரவாயில்லை. அதுவும் நல்லதே…
ஒரு பெண்ணிடம் அத்துமீற முன் அச்சம் ஏற்படவேண்டும்.
தப்ப முடியாது எனும் எண்ணம் வேண்டும்.
MeToo அசைவியக்கத்தின் வர்க்கத் தன்மை ஒருபுறமிருக்கட்டும். இந்த அசைவியக்கம் எந்த வகையிலும் பிற்போக்கானதல்ல. எந்த வகையிலும் வர்க்க அரசியலுக்கு எதிரானதல்ல.
நான் இவ்வசைவியக்கத்தை ஆதரிக்கிறேன்.
(ரொமான்சுக்கும் பாலியல் வன்முறைக்கும் அக்குழுவினருக்கு வேறுபாடு தெரியாமல் உளறிக்கொண்டிருந்தார்கள்)
Romance இற்கும் இதற்கும் தொடர்பில்லை.
அதிகார ஏற்றதாழ்வில் romance பண்ண முடியாது. காதலும் பண்ண முடியாது.
அதிகாரதில் சமமற்றவரிடையே காதல் என்பது ஒரு சுரண்டல் வடிவமே.
அதிகாரத்தில் சமமற்றவரிடையேயான திருமணமும் சுரண்டல் வடிவமே.அதனால் தான் ஆண்களின் ரொமான்சும் காதலும் பெரும்பாலும் குற்றமாகவே இருக்கிறது.
திருமணத்தின் பின் எனது துணைவன் எனது அனுமதியின்றி காலில் விழுந்து பாதத்தில் முத்தமிட்டான் என்று எங்கேனும் ஒரு துணைவி சொல்வதற்கும் எனது முதலாளி எனது உடல் அழகாயிருக்கிறது என்று சொன்னார் என ஒரு தொழிலாளி சொல்வதற்குமிடையே பாரிய வேறுபாடு இருக்கிறது. முதலாளி செய்தது எந்த ஐயமுமின்றி பாலியல் சுரண்டல் குற்றமாகிறது.