ச. விஜயலட்சுமி (https://peruvelipenn.wordpress.com/)
இலங்கை மட்டக்களப்பில் ஊடறு பெண்கள் சந்திப்பில் எனக்கு அறிமுகமானவர் நிலாந்தி சசிகுமார் . 19 வயதில் இருந்தே இவர் கவிதை எழுதியதாக இவரது கவிதைத் தொகுப்பின் பதிப்புரையில் அறிய முடிகிறது . முற்றுப்பெறாத கவிதைகள் என்கிற தன் முதல் கவிதைத்தொகுப்பை எனக்குக் கொடுத்தார். துடிப்பான பெண்ணாக இரண்டு நாள் பெண்கள் சந்திப்பிலும் எம்மோடு இருந்தவர். கவிதை எழுதிய இவரது கரங்கள் ,நூலாக்கும் முயற்சியில் 14 ஆண்டுகள் காத்திருந்தன என்பது சற்று வியப்புக்கு உரியது. இலக்கியம் கலை சார்ந்த துறைகளில் பெண்கள் பங்கெடுப்பதை குடும்ப நிறுவனம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை மிகப் புரிதலோடு இதனை ஊக்கப்படுத்துகின்ற குடும்ப உறவுகள் சிலருக்கே வாய்க்கும்.
நிலாந்தியின் தொகுப்புக்கு பேராசிரியர் செ. யோகராசா அணிந்துரை அளித்திருக்கிறார் . தமிழ்ப் பெண்மன உணர்வுகளின் 2000 ஆண்டு தொடர்ச்சியை முன்வைத்து பெண் கவிஞர்களின் மௌனம் கலைந்த சமகால நவீன கவிதை தளத்தை சுட்டிக்காட்டி, இவருடைய அணிந்துரை விமர்சனத்தோடு இடம்பெற்றுள்ளது. மகுடம் பதிப்பகத்தின் வெளியீடாக கவிதை நூல் வெளிவந்திருப்பதாக பதிப்பாசிரியர் வி. மைக்கேல்கொலின் தெரிவிக்கிறார்.
தன்னை தனக்குள் தேடும் கவிதை தேடலில் தன் உணர்வுகளை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு மொழி ரீதியான ஊடகமாக நிலாவின் கவிதைகள் இருப்பதாக இவர் கூறுகிறார . இந்த நூலுக்கு தன் கவிதை குறித்த என் அஞ்ஞான வாரத்தின் இறுதி நாள் என்று தன் கவிதைகளின் முயற்சி குறித்து கவிதை வடிவில் சுவையாக வலியுடன்அளித்துள்ளார்
1]கல் வைரக்கல்லாக என்னைத் தூக்கி உன் கையில் வைத்தேன் கூழாங்கல் என்று என்னை நீ தூக்கி எறிந்தாய் வைரக்கல்லா? கூழாங்கல்லா?
என் மனற்கேணி கலங்கியது
2]எங்கே என் வீடு
என் வீட்டிற்குச் செல்ல வழி சொல்லுங்கள் எங்கே என் மௌனங்களுக்கு விடை கிடைக்கின்றதோ எங்கே என் கண்கள் கண்ணீரைக் குடிக்கிறதோ எங்கே என் புன்னகை ஒளியைப் பரப்புகிறதோ எங்கே எனக்கு நானே கட்டளை இடுகின்றேனோ எங்கே என் மனம் ஓய்வெடுக்கிறதோ அங்கே என் வீடு
3]ஊருக்குத் தெரியாது கோயிலோ கல்லறையோ பூக்க மறப்பதில்லை பூக்கள்
கல்லறையில் பூத்த பூவென்று மறுப்பதில்லை வண்டுகள்
இவரது கவிதையில் நுட்பமான உரிமைகளும் சமூகம் சார்ந்த உணர்வுகளும் ஒரு சேர வெளிப்படுகின்றன. இவரின் வாக்குப் பெட்டி என்னும் கவிதை
கர்ப்பம் தரித்து விட்டேன் என்
வயிறு திறந்து கொண்டு வாருங்கள்
புதிய முகத்தை
என்று சொல்கிற அழகியல். மற்றொரு கவிதையான தலையணையில்
அந்தரங்கத் தோழியே என் சந்தோஷத்துக்கு தந்தையே
கண்ணீரில் நீ தான் என் ரகசியங்களுக்கு செவ்வாய் என ஒரு சோகமெட்டில் வெளிப்படுத்துகிறார். இன்னும் அடுத்தடுத்த கவிதைத் தொகுப்பில் சிறப்பாக வருவாரென்னும் நம்பிக்கையைத் தருகிறார்.
முற்றுப்பெறாத கவிதைகள்
நிலாந்தி சசிகுமார்
மகுடம்
இல 90 பார் வீதி மட்டகளப்பு 30000
இலங்கை