அனுதர்ஷி லிங்கநாதன்
(http://www.vaaramanjari.lk/)
போருக்குப் பின்னரான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இலங்கைப் பெண்கள் நான்கு தசாப்தங்களுக்கு மேற்பட்ட முரண்பாட்டுச் சூழல் மற்றும் யுத்தசூழல் என்பவற்றை எதிர்கொண்டவர்கள். அதனால் ஏற்பட்ட அவலங்களைச் சுமந்து கொண்டு பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த வண்ணம் வாழ்ந்து வருகின்றனர். எங்களுடைய பெண்களின் பேசப்படாத பிரச்சினைகளுக்கான ,ஊடறுவும் மட்டக்களப்புப் பெண்களும் இணைந்து நாடாத்திய பெண் நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் களமாகவும் அமைந்ததெனலாம்.
உலகளாவிய ரீதியில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பொதுவானவையாகவே இருக்கின்றன.பால்நிலைச் சமத்துவம் என்பதுஎங்கும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இது போன்ற பல்வேறு பிரச்சினைகளை பல்வேறு நாடுகளிலிருந்தும் கலந்துகொள்ளும் பெண்கள் தமது அனுபவங்களிலிருந்து உரையாற்றினர். பெண்களின் பிரச்சினைகள் சர்வதேச ரீதியில் பேசப்பட வேண்டும்.
ஊடறு கடந்த பல வருடங்களாக தமது பெண்நிலைச் சந்திப்பையும் பெண்ணிய உரையாடலையும் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் மாத்திரமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒழுங்கமைத்து நடாத்தி வருகிறது. அந்த வகையில்,ஊடறுவும் மட்டக்களப்புப் பெண்களும் இணைந்து நாடாத்திய பெண் நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் 16 ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இந்தியா, சுவிஸ், கனடா,மலேசியா எனப் பல்வேறு நாடுகளிலிருந்தும் இலங்கையின் மலையகம், யாழ்ப்பாணம், தி ரகோணமலை, வவுனியா எனப் பல பிரதேசங்களில் இருந்தும் பலர் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு சூரியா பெண்கள் அமைப்பினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர். சுவிஸ் ரஞ்சி இந் நிகழ்வின் ஆதார சுருதியாகச் செயற்பட்டதுடன், அவருக்கு ஆதரவாக மட்டக்களப்பு விஜி, யாழினி, புரௌப்பி எனப் பல பெண்கள் இவ் விழாவின் வெற்றிக்கு கை கோர்த்திருந்தனர்.
இந்நிகழ்வின் முதல் நாள் கொட்டகலை ஆசிரியர் கலாசாலை மாணவர்களின் தப்பிசையுடன் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் அரசியலில் பெண்களின் பங்கேற்புப் பற்றி கல்பனா, அரசியலும் பெண்களும் என்ற தலைப்பில் கலைவாணி மாற்றுத் திறனாளிகளும் பிரச்சினைகளும் என்ற தலைப்பில் சரோஜா சிவச்சந்திரன்,பெண் போராளிகள் பற்றி வெற்றிச் செல்வி, போருக்குப் பின் பெண்களின் நிலை பற்றி நளினி, தனித்துவாழும் பெண்கள் பற்றி எம். விஜயகுமாரி, சிறுவர் துஷ்பிரயோகமும் குடும்ப அமைப்பு முறையும் என்ற தலைப்பில் மதுஷா மாதங்கி போன்றோர்கள் உரையாற்றினர்.
வன்முறையின் முகங்கள் என்ற கருப் பொருளின் கீழ் சட்டமும் நடைமுறையும் என்ற தலைப்பில் சிநேகா, விளம்பரங்களூடான வன்முறைகள் தொடர்பில் கோகிலா, ஊடகக்கல்வியிலும் ஊடகத் தொழிற்துறையிலும் பால் நிலைச் சமத்துவம் பேணப்படாமை தொடர்பில் அனுதர்ஷி லிங்கநாதன் ஆகியோர் உரையாற்றினர். முதலாம் நாள் உரையாடல்களுக்கு கமலா வாசுகி, ஒளவை, சந்திரலேகா ஆகியோர் தலைமை தாங்கினர்.