– சமீலா யூசப் அலி (மாவனல்ல இலங்கை)
இந்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்’திற்காய் நாம் கொடுத்த விலை மிக மிக அதிகமானது.பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காவு கொண்ட இரத்த ஆற்றின் மீதில் தான் இந்த வெற்றியின் ஓடம் மிதக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. |
கடுங்கோடை கழிந்து மழை வர்ஷிக்கத் தொடங்கியிருக்கிறது.
இலங்கையில் எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி ஆரவாரம்.
மே 18 2009 விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து இலங்கையை மீட்டு எடுத்து விட்டதாகவும் இவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்று விட்டதாகவும் இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
பட்டாசு வெடிகளில் இலங்கையின் வீதிகள் அதிர்ந்தன.
‘கிரிபத்’எனும் பாற்சோறு சமைத்து இலங்கை பெரும்பான்மை மக்கள், நாட்டை காத்த ஜனாதிபதி பற்றி பெருமிதப்பட்டனர்.
வீடுகள் வாகனங்களில் தேசியக்கொடி பறந்தது. ஆட்டமும் பாட்டமும் அதிகரிக்க புத்தரின் ஐந்து சீலங்களையும் பெளத்தர்கள் மறந்து விட்டதைத் தெளிவாகவே காண முடிந்தது.
இந்த ஆரவாரத்துக்குள் எமது சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பலரும் பங்கெடுத்தது பயத்திலா அல்லது அறியாமையிலா என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.எது எவ்வாறாயினும் எமது சுயகெளரவத்தையும் கொள்கையையும் இசமூக நல்லிணக்கம் என்ற போர்வை போர்த்திய அடக்கியாள்கைக்காய் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை என்பது புரிதலுக்குரியது.
இந்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்’திற்காய் நாம் கொடுத்த விலை மிக மிக அதிகமானது.பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காவு கொண்ட இரத்த ஆற்றின் மீதில் தான் இந்த வெற்றியின் ஓடம் மிதக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
விடுதலைப்புலிகளின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளின் எதிரொலிகளால் நாம் பாதிக்கப்பட்டதை நாம் இன்னும் மறந்து விடவில்லை.
எனினும் இந்தப்போரில் இலங்கை அரசின் குறி சமாதானமா இனச்சுத்தீகரிப்பா என்ற மாபெரும் கேள்வி மறுக்க முடியாமல் எழுகிறது.சர்வதேசத்தின் அழுத்தங்களையும்,போரியல் விதிகளையும் மீறி பொதுமக்கள் அகதிகளாய் தஞ்சம் புகுந்திருந்த முகாம்களைக்கூட வெஞ்சம் கொண்டு தாக்கியழித்திருக்கிறது இலங்கை இராணுவம்.வன்னியின் நீண்டு நெடித்துப் போன தெருக்களிலே மனிதம் மரித்துக் கிடக்கிறது.பக்கம் சராத ஊடகவியலாளர்களுக்குக் கூட போர்ப்பிரதேசத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.
சொல்லப்படும் இந்த சமாதானம் எவ்வளவு யதார்த்தமானது என்பதை வருங்காலம் தீர்மானிக்கும்.சிறுபான்மை மக்களின் உரிமைகளை அரசு எவ்வாறு மதித்து நடக்கப்போகிறது என்பதை நாம் அவதானத்துடன் நோக்கியவண்ணம் இருக்கிறோம்.ஏனெனில் யுத்தத்தில் எவரும் வெற்றியடைவதில்லை…அது வடுக்களையும் வலிகளையும் மட்டுமே விட்டுச்செல்கிறது.கடந்த காலங்கள் நம்பிக்கை தருவதாக இல்லாத பட்சத்திலும் சிறுபான்மையினரின் கெளரவமும் இருப்பும் உறுதிப்படுத்தப்படும் வகையிலான திருப்திகரமான ஒரு தீர்வு யோசனை முன்வைக்கப்படுமாயின் அது வரவேற்புக்குரியது.
முற்கம்பி வேலிகளுக்குள் சிறைப்பட்டிருக்கும் எம் சகோதர தமிழர்களுக்காய் அனுதாபப்பெருமூச்சுக்களுக்கு மேலதிகமாக நாம் எதைச் செய்யப்போகிறோம்? சிந்திக்க வேண்டிய வினா இது!!!
சென்ற வருடம் எழுதிய இக்குறிப்பு மீண்டும் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.