கணவனையிழந்த பெண்கள் (விதவைகள் )எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் காழி நீதிமன்றுகளை முன்னிறுத்தி

– ஷாமிலா முஸ்டீன் –

IMG_8943விதவை என்ற சொல்லோடு எமக்கு உடன்பாடு இல்லை ஆனாலும் கட்டுரையாளர் அந்த சொல்லையே பயன்படுத்துவதால் அவரின் அனுமதியோடு விதவை என்ற சொல்லை மாற்ற முயற்சிக்கின்றோம்.ஊடறு

https://yourlisten.com/oodaru/shamila

இன்றைய நவீன காலத்தில் அனைத்தும் அபரிமதமான வளர்ச்சிப் போக்கினை நோக்கி நடைபோடுவதை நாம் அனைவரும் கண்கூடாகக் காண்கின்றோம். நாடுகளுக்கிடையிலும் தேசங்களுக்கிடையிலும் இருந்த ஆயுதப்போர் கலாசாரங்களுக்கிடையேயான போராக வடிவம் பெற்று உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய பொழுதில், பெண், என்ற உலகின் மாபெரும் பங்காளி, தனக்கான வகிபாத்திரத்தைத் தக்கவைத்திருத்தலிலும் நிலைநிறுத்திக் கொள்வதிலும்இ உறுதிப்படுத்திக் கொள்வதிலும் பல்வேறு சங்கடங்களையும் சவால்களையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற எழுதப்படாத விதி மிகச் சர்வசாதாரணமாக அமுலில் இருக்கின்றது. அதை யார் வரைந்தார்கள் எப்படி வரைந்தார்கள் அது எப்படி மிக இலகுவாக சமூகத் களத்தில் வேறூன்றிப் போனது, என்பது குறித்தெல்லாம் தேடி அடையாளப்படுத்திக் கொள்ளும் போது பெண் என்ற மிகப்பெரிய சக்தி பல்வேறு தடைகளையும் தகர்த்து மிக இலகுவாக சுதந்திரமானதொரு தளத்தில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முடியும்.

உலகில் 25 வீதமான மக்களால் அதாவது 1700 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களால் பின்பற்றப்படும் இஸ்லாமிய மார்க்கம் உலகின் தவிர்க்க முடியாத ஒரு பெரும் பரப்பு. பெண்ணுக்கென்று அளித்துள்ள மதிப்பும் பெறுமதியும் உரிமைகளும், இந்தப் பரப்பின் அசல் வடிவத்தில் சிறப்பாக இருந்தாலும் காலாகாலமாக பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுவந்த பெண்ணுரிமை ஏதோவோர் விதத்தில் அறிவற்ற தெளிவற்ற உலகின் போக்குகளுக்கு ஏற்ப தம்மை விருத்தி செய்து கொள்ளாத மறைகரம் கொண்டு மறுக்கப்படும் சூழ்நிலையில்தான் இந்தத் தலைப்பு குறித்து இங்கு பேச வேண்டியுள்ளது.

இலங்கை முஸ்லிம்களுக்கென்றுள்ள தனியார் சட்டம் தொடர்பான முழுமயான வாதத்தினை வேண்டி நிற்கும் இந்தத் தலைப்பு தரப்பட்டிருக்கும் குறுகிய நேரத்தினுள் பூரணமாக அலசமுடியாது என்பதால் குறிப்புக்களாக மட்டும் சில விடயங்களை இஸ்லாமிய அசல் வடிவத்தோடு ஒப்பிட்டு பிற்போக்குத்தனமான அதிகார வரம்பு பெண்களின்பால் திணிக்கப்பட்டுள்ள விதத்தினை ஓரளவாவது விளங்கிக் கொள்ளும் வண்ணம் சமர்ப்பிக்க முனைகின்றேன்.
01. திருமணம்
02. மணமுறிவு அல்லது விவாகரத்து – அரபியில் சொல்வதானால் தலாக்

இந்த இரண்டு விடயங்களையும் மையப்படுத்தி எனது தலைப்பை அனுகலாம் என்று நினைக்கின்றேன். அதற்கு முதல் சில அடிப்படைக் குறிப்புக்களைப் பார்த்துவிடுவோம்.

திருமணம் பள்ளிவாயலை மையப்படுத்தியே பெரும்பாலும் இடம்பெறுகின்றது. விவாகப் பதிவாளரும் உரிய நேரத்தில் பள்ளிவாயலுக்கு வந்துவிடுவார். திருமணம் பள்ளிவாயலில் பதிவு செய்யப்படுவதோடு பொதுச் சட்டத்தின் பிரகாரமும் பதிவாளரினால் பதிவு செய்யப்படும். பெருநகர்ப் புரங்களில் மாத்திரம் திருமண மண்டபத்திற்கே அனைவரும் அழைக்கப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்படும்.

இரண்டு விதத்தில் விதவைகள் உருவாகின்றார்கள். ஒருத்தியின் கணவன் மரணிக்கின்ற போது அவள் விதவையாகின்றாள். அடுத்தது கணவன் தலாக் சொன்னால் அல்லது மனைவி கணவனை விவாக பந்தத்தில் இருந்து விலக்கிவிட்டால் அவள் விதவையாகின்றாள்.
முதல் வகை விதவைகள் காழி நீதிமன்றுகளை நோக்கிப் படையெடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை ஆனால் இரண்டாம் வகையினர் முழுமையாக காழி நீதி மன்றுகளையே நம்பியிருக்க வேண்டியிருக்கின்றது.

இலங்கையில் இருக்கின்ற 64 காழி நீதிமன்றுகளின் ஊடாகவே முஸ்லிம் தனியார் சட்டத்தின் பிரகாரம் விவாகரத்து தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அது தவிர பள்ளிவாயலும் திருமணப் பிரச்சினைகள் குறித்து முறைப்பாடுகள் கிடைக்குமிடத்து சமரச முயற்சிகளில் ஈடுபடும். அது கைகூடாத போது சட்ட நடவடிக்கைக்காக காழி நீதி மன்றுகளுக்கே முன்னனுப்பி வைக்கும்.

ஒரு விவாக ரத்துப் பிரச்சினை வந்துவிட்டால் பெண் எந்தக் காழி நீதிமன்றின் அதிகார எல்லைக்குள் இருக்கின்றாளோ அங்குதான் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள முடியும். அதாவது பெண்ணின் வசதி மட்டும்தான் இங்கு கருத்திற் கொள்ளப்படும். ஆணோ பெண்ணோ விவாகரத்து கோரி விண்ணப்பித்தல் என்பது மிகவும் இலகுவான செயல் முறையைக் கொண்டுள்ளது. கடித மூலமோ அல்லது நேரிலோ சென்று உரிய ஆவனங்களைக் காழியாரிடம் சமர்ப்பித்து விவாக ரத்துக் கோர முடியும் இது குறித்த வழிமுறைகளைப் பின்னர் பார்ப்போம்.

முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகள் குறித்து ஒரு கள ஆய்வுக்காக பல்வேறு பிரதேசங்களுக்கும் அலைந்து திரிந்து பல நூறு பெண்களை நேர்கண்டதற்கினங்க கிடைக்கப்பெற்ற அனுபவத்தையும் அதனூடாக அடையாளப்படுத்திய பிரச்சினை களையும் தங்களோடு பகிர்ந்து கொள்ள நாடுகின்றேன். காழி நீதிமன்றுகளின் சில குறைபாடுகள் என்று அடையாளப் படுத்தப்படும்போது
1. தகுதியான திறமைமிக்க சட்டத் தெளிவுள்ள காழி நீதிபதிகளின் பற்றாக்குறை
2. காழி நீதி மன்றுகள் வெளிப்படையான சரியானதும் நேர்த்தியானதுமான கட்டமைப்பில் இருந்து விலகியிருக்கின்றமை.
3. காழி நீதிமன்றுகளை அரசு சரியாக கண்டுகொள்ளாமை
4. காழி நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் செல்வாக்கு தாக்கம் செலுத்துகின்றமை
5. காழி நிதிபதிகளுக்கும் அங்கு செயற்படும் ஜூரிகளுக்குமான வழிகாட்டுதல்களும் மேம்படுத்தல்களும் சரியாகச் செயற்படுத்தப்படாமை.

இந்தப் பிரச்சினைகளில் வழி நின்று பார்க்கின்ற போது சில இடங்களில் காழியாரின் வீடுகளே காழி நீதிமன்றுகளாகச் செயற்படுகின்ற துரதிஸ்டமும் இல்லாமலில்லை. அதனால் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் தோன்றுகின்றன.

காழி நீதி மன்றுகளுக்கான தனித்தன்மையும் ஒழுங்கும் வழக்குதாரர்களைக் கையாளும் விதமும் இன்னுமின்னும் மேம்படுத்தப்படுவதோடு அது சரியான முறையில் வழிப்படுத்தப்படுதலும் மிக அத்தியவசியமான விடயங்களாகும். இப்போதுள்ள நடைமுறைகளின் பாற்பட்ட ஆய்வின் பிரகாரம் கிடைக்கப் பெற்ற முடிவுகளின் படி பெரும்பாலான காழி நீதி மன்றுகள் பெண்களுக்குப் பாரதூரமான விளைவுகளைத் தருகின்றதாகவும்இ நீதி மறுக்கப்படும் இடங்களாகவும்இ பெண்ணுக்குப் பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்தும் இடங்களாகவும்இ பெண்ணுக்கு மன உலைச்சலை ஏற்படுத்தும் தளங்களாகவும் மாறியிருப்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். விதி விலக்காக சில காழி நீதிமன்றுகள் நமது எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் விதத்தில் செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சில காழி – நீதிபதிகள் நீதிக்கு இலக்கணமாகவும் விதவைகளுக்குச் சரியான பாதுகாப்புத் தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றமையையும் பாராட்டியேயாக வேண்டும்.

ஒரு பெண் காழி நீதிமன்றுகளில் தன்மானத்தை இழந்து நீதிக்காக அலைக்கழியும் துக்ககரமான சம்பவங்கள் ஏராளமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தலாக் சொல்லப்படும் காலத்தில் கிடைக்கும் தாபரிப்புத் தொகைக்காக ஒரு பிச்சைக்காரியைவிடக் கேவலமாக நடாத்தப்படும் துரதிஸ்டமும் பல காழி நீதி மன்றுகளில் இன்றும் தொடரத்தான் செய்கின்றது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆணின் பக்கம் சார்ந்தே அளிக்கப்படும் அநீதமான தீர்ப்புகள் பெண்ணைப் பொருட்படுத்தியதே கிடையாது.

பல காழி நீதிபதிகள் கௌரவமான சொற்களைப் பிரயோகிக்கவே தெரியாதவர்களாக இருப்பதும் அவதானிக்க வேண்டிய விடயமாகும். இப்படிப்பட்டவர்கள் தரங்கெட்டு நடப்பதும் பெண்களைக் கௌரவமாக நடாத்தத் தவறுவதும் சாதாரனம். அத்துடன் உலகின் முழு அதிகாரங்களும் தனக்கே வசப்பட்டு இருப்பது போலவும்இ உலகின் அனைத்தும் அறிந்த அதிமேதாவி தான் மட்டுமே என்ற தோரணையிலும் ஒரு சர்வதிகாரியாகச் செயற்படும் சில காழியார்களின் செயற்பாடுகள் காழிக்கோடுகளுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச நற்பெயரையும் சில செக்கன்களில் தவிடுபொடியாக்கித் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பமும் விட்டுவிடும்.

வாழ்வாதாரத் தேவைக்காக மாதாந்தம் வழங்கப்படும் சிறுதொகைப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அதைவிடப் பெருந்தொகையைச் செலவுசெய்து இனிமேற்பட்டு இந்தத் தாபரிப்புத் தொகையே வேண்டாம் என்று அதைக் கைவிட்டு ஓதுங்கிங்கொண்ட விதவைகளின் கண்ணீர்க்கதைகள் நமது நிம்மதியைப் பறிக்கவல்லது. இப்படியான சந்தர்ப்பங்களில் ஆண்கள் நடந்துகொள்ளும்விதம் மிகவும் வேதனைக்குரியது. அத்தோடு விவாகரத்தான பெண்கள்தான் பெரும்பாலும் தமது பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்வார்கள். அப்பிள்ளைகளுக்கான செலவுகளை ஆண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டம். அதிகமான ஆண்கள் தமது முன்னாள் மனைவிகளைப் பழிவாங்கவும் அலைக்கழிக்கவும் ஆயுதமாகப் பயன்படுத்தும் போக்கினைக் கைக்கொண்டு வருவதைப் பெரும்பாலான காழியார்கள் கண்டு கொள்வதே இல்லை.

ஆண் பிள்ளையென்றால் 18 வயது வரையும் பெண்பிள்ளையென்றால் திருமணம் முடிக்கும் வரையும், விஷேட தேவையுள்ள அல்லது மாற்றுத்திறனாளியான பிள்ளையாக இருந்தால் மரணிக்கும் வரையும் மாதாந்தக் கொடுப்பனவை வழங்க வேண்டும். அவர்கள் தனது இரத்தம் என்பதைப் பெரும்பாலான ஆண்கள் மறந்துவிடுகின்றர். இதனால் விதவைகள் எதிர்கொள்ளும் துன்பம் கொஞ்சமல்ல.

மாதாந்தக் கொடுப்பனவுகள் சமகால வாழ்க்கைச் செலவுகளைக் கருத்திற்கொண்டு கணிக்கப்படாத சந்தர்ப்பங்களில்இ தமது பிள்ளைகளுக்கும் சேர்த்து விதவைதள் அனுபவிக்கும் துன்பங்கள் பட்டியற்படுத்தப்பட்டால் நிச்சயம் உடனடியாகக் களத்தில் இறங்கி ஏதாவது மாற்றம் ஏற்படும் வண்ணம் போராடத் தோன்றும். இந்தவிடயங்களில் குறைந்தபட்சம் மனிதத் தன்மையாக நடந்துகொள்வதற்கும் காழிகள் தயாரில்லையென்றால் வேரொரு சிஷ்டத்தை நோக்கி முஸ்லிம் பெண்கள் நகரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடும்.

திருமணம் என்ற பகுதி சரியாக அமுல்படுத்தப்பட்டாலே விதவைகள் என்ற ஒரு தரப்பு பிரச்சினைகளில் இருந்து மிக இலகுவாக விடுபட்டுவிடுவர். பின்னர் எதிர்கொள்வதற்கென்றுள்ள சவால்கள் நிச்சயம் வாழ்வாதாரம் சார்ந்ததாக இருக்காது.

01. திருமணம்
நான் ஏற்கனவே குறிப்பிட்டபிரகாரம் இஸ்லாமிய மார்க்கத்தின் அசல் வடிவத்தில் எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. உலக மக்களுக்கான வாழ்க்கை வழிகாட்டியான திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் போதனைகள் ஆகிய இரண்டு முக்கிய மூலாதாரங்களில் இருந்து இந்த விடயத்தை விளக்க முனைகின்றேன்.

 ஒரு திருமணம் நிறைவேறுவதற்கு தேவையான நான்குவிடயங்கள்

01. பெண்ணின் பொறுப்புதாரி (மணப்பெண்ணின் தந்தை அல்லது அவரின் சொந்தச் சகோதரர்கள் அல்லது தாய்மாமா அல்லது மணப்பெண்ணின் இரத்த உறவுச் சகோதர்கள் போன்ற திருமணம் செய்யத் தடைசெய்யப்பட்ட உறவுக்காரர்கள்)
02. ஒப்புக்கொடுத்தல்
03. ஒப்பெடுத்தல்
04.இரண்டு சாட்சிகள்

ஒரு தந்தை தனது மகளைத் திருமணம் செய்துகொடுக்கின்றார் என்று உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம் அவரின் நேரடிப் பங்குபற்றுதலுடன் இரண்டு சாட்சிகளுக்கு முந்நிலையில் மணமகனுக்கு அவர் மகளின் பெயரைச் சொல்லி இப்படி ஒப்புக் கொடுப்பார்

“………..என்ற எனது மகளை இவ்வளவு ரூபாய் மஹர் தொகைக்கு இன்னாரின் மகனான இன்னாருக்கு இன்று முதல் அனுமதிப்பக்கட்ட மனைவியாக ஒப்புக் கொடுக்கின்றேன்.” என்பார் அதை அடுத்து மனமகன் “இன்னாரின் மகளான இன்னாரை நான் இவ்வளவு மகர் தொகைக்கு இன்று முதல் அனுமதிக்கப்பட்ட மனைவியாக ஒப்பேற்றுக் கொள்கின்றேன்” என்று வழி மொழிவார். இத்தோடு ஒரு திருமணம் நிறைவேறி விடுகின்றது.

இங்கு இஸ்லாம் பெண்ணுக்கு அளித்துள்ள பாதுகாப்பு வேலி மட்டுமல்ல, மாபெரும் உரிமை மஹர் என்பதாகும். நமது பரிபாசையில் சீதனம்இ வரதட்சனை என்று சொல்லலாம். நடைமுறையில் இருப்பது போன்று பெண் ஆணுக்குக் கொடுக்கும் வழிமுறையல்ல. மாறாக மணமகள் தீர்மானிக்கும் தொகையை மஹராகக் கொடுத்துத்தான் ஒரு ஆண் திருமணம் செய்துகொள்ள முடியும். அத்தொகையைத் தீர்மானிக்கும் முழு உரிமையையும் இஸ்லாம் பெண்ணுக்கே அளித்துள்ளது. அதில் யாரும் தலையீடு செய்யவோ அதிகாரத்தைப் பிரயோகிக்கவோ கட்டளையிடவோ முடியாது அது குறிப்பிட்ட பெண்ணின் உரிமை.

மஹர் தொகையைக் கூட்டுவது குறைப்பது அல்லது பெற்றுக்கொள்ளாது விட்டுக்கொடுப்பது என்று எல்லா உரிமையும் பெண்ணுக்கே உண்டு. மணப்பெண்ணால் மஹர் தொகை தீர்மானிக்கப்;ட்ட பின்னர்தான் மேற்கொண்டு அனைத்து விடயங்களும் பேச்சுவார்த்தைக்கு வரும். ஆனால் இந்த உரிமை இன்று எந்தளவுக்கு நடைமுறையில் இருக்கின்றது என்ற கேள்விக்கு, வெறுமனே பெயரளவில்தான் என்று பதில் சொல்ல முடியும்.

02. தலாக்
இன்று மிகவும் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டவிடயம்தான் இந்த தலாக். தலாக் என்ற அரபுப் பதத்தின் அர்த்தம் விடுவித்தல் என்பதாகும். குடும்பப் பிரச்சினையின் இறுதித் தீர்வாக இனிச் சேர்ந்து வாழவே முடியாது என்று தீர்மானிக்கப்பட்டபின்னர் மூன்று கட்டங்களில் இது அமுல்படுத்தப்படும்.
கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை எழுகின்றபோது அதைத் தீர்த்துக் கொள்வதற்கு இஸ்லாமிய சட்டப்படியான வழிமுறை

• முதலாவது பிரச்சினை குறித்து அறிவுறுத்த வேண்டும் அதன் பாரதூரங்கள் குறித்தும் விளைவுகள் குறித்தும் கணவன் மனைவி தமக்கிடையே உரையாடல் வேண்டும்.
• அது பலனளிக்காத போது இருவரும் படுக்கையிலிருந்து விலகி இருக்க வேண்டும். வெறுமனே உடலியல் ரீதியான பிரிவல்ல இது. உளவியல் ரீதியாக இந்தப் பிரிவு இருவருக்கும் தம்மைத் தனித்தனியாக எடைபோடுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
• அதன் பின்னரும் மனைவி கட்டுக்கடங்காவிட்டால் காயமேதும் ஏற்படாமல் தண்டிப்பதற்கான அனுமதியை கணவனுக்கு வழங்கப் பட்டிருக்கின்றது.
• அதன்பின்னரும் பிரச்சினை தீரவில்லையென்றால் மனைவிதரப்பில் இருந்து ஒருவரும் கணவன் தரப்பிலிருந்து ஒருவரும் மத்தியஸ்தர்களாக இருக்க பிரச்சனைக்குத் தீர்வுகாணப் பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும்.
• அதன்பின்னரும் தீர்வு இல்லை இனிப் பிரிவு ஒன்றுதான் வழியென்றால் மூன்று தடைவ தலாக் சொல்ல கணவனுக்கு அனுமதி இருக்கின்றது.

 முதலாவது முறை தலாக் சொல்லி விட்டால் முன்று மாதவிடாய்க் காலப்பிரிவு மனைவி கணவனின் பராமரிப்பிலேயே இருக்க வேண்டும். அவளுக்குத் தேவையான அனைத்தையும் கணவனே அளிக்க வேண்டும். இந்தக் காலப்பிரிவில் இருவரும் இணைந்து வாழ விரும்பினால் மீண்டும் சேர்ந்து வாழ முடியும்.
 திரும்பவும் பிரச்சினையென்றால் இரண்டாவது முறை தலாக் சொல்ல முடியும் அதுவும் மூன்று மாதவிடாய்க் காலப் பிரிவை கால எல்லையாகக் கொண்டிருக்கும் அப்போதும் கணவனே அவளது அனைத்துத் தேவைகளுக்கும் பொறுப்புதாரியாவான். இக்காலப்பிரிவில் இருவரும் இணைந்து வாழ விரும்பினால் மீண்டும் இணைந்துவாழ முடியும் ஆனாலும் திருமண ஒப்பந்த்ததைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
 இல்லாவிட்டால் இறுதி தலாக் அதன்பின்னர் அவர்கள் நேரடியாகத் தொடர்பற்றவர்களாக மாறுகின்றார்கள்.

இங்கு மனைவி பிரச்சினைக்குரியவள் என்றால் மேற்சொன்ன மூன்று படிமுறைகளில்தான் இருவரும் பிரிய முடியும் அது போல கணவன் பிரச்சினைக்குரியவன் என்றால் மணைவிக்குள்ள உரிமை ஒரே தடவையில் கணவனிடமிருந்து விலகிக் கொள்வதாகச் சொல்ல முடியும். கணவனை மனைவி விவாகரத்துச் செய்வதற்கு அரபியில் குல்ஊ என்று சொல்வார்கள். தலாக் என்பது ஆணுக்களிக்கப்பட்டுள்ள உரிமை குல்ஊ என்பது பெண்ணுக்களிக்ப்பட்டுள்ள சூப்பர் பவர் ஆகும். ஒற்றைச் சொல்தான் அத்தோடு திருமண ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிடும். ஒரு ஆணுக்கு எடுத்தோம் கவுத்தோம் என்ற அடிப்படையில் செயற்பட முடியாதுஇ அதற்கு இஸ்லாத்தின் சட்டதிட்டங்களில் இடமில்லை. தலாக் நீண்ட பொறிமுறையைக் கொண்ட செயற்றிட்டம் ஒரு பெண்ணை ஆண் அவ்வளவு எளிதில் கழற்றிவிட முடியாது. ஆனால் பெண்ணுக்கு அப்படியல்ல குல்ஊ மிகவும் எளிய செயன்முறையைக் கொண்டது. இஸ்லாம் பெண்ணின் பாதுகாப்பை சரியாகத்தான் உறுதிப்படுத்தியிருக்கின்றது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துபவர்கள்தான் சிக்கலாக்கிவிடுகின்றார்கள்.

தலாக் சொல்லுகின்றபோது ஒரு மலையளவு செல்வத்தைத்தான் மனைவிக்குக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று ஆணுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது இஸ்லாம். அது போல குல்ஊ செய்கின்ற போது பெண் கணவனின் சொத்துசெல்வங்களில் இருந்து எதனையும் கோர முடியாது.

இந்த அடிப்படைத் தெளிவுகள் இல்லாமல் இஸ்லாம் என்ற பெயரிலும் முஸ்லிம் தனியார் சட்டம் என்ற பெயரிலும் பொறுப்பற்ற இஸ்லாமல்லாத வேறு எதையோ அமுல் படுத்திக் கொண்டிருப்பதால்தான் பெண் என்பவள் அதிகம் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாள்.

விதவைகளுடன் தொடர்புட்ட அடுத்த பிரச்சினை இத்தா என்பதாகும். இது இந்தத் தலைப்புக்குள் உள்ளடங்காதாயினும் அவசியம் எனக் கருதுவதால் அதையும் சுருக்கமாகச் சொல்ல வேண்டியிருக்கின்றது. கணவன் மரணித்தால் ஒரு பெண் 04 மாதங்களும் 10 நாட்களும் இத்தா இருக்க வேண்டும். அதுபோல தலாக் சொல்லப்பட்டால் மூன்று மாதவிடாய்க் காலங்கள் இத்தா இருக்க வேண்டும். அத்துடன் இதில் கவனிக்க வேண்டிய மற்றுமொருவிடயம் மாதவிடாய்க் காலத்தில் ஒரு பெண்ணைத் தலாக் சொல்ல ஆணுக்கு அனுமதி கிடையாது. அதிலிருந்து அவள் விடுபட்டு சுத்தமானதன் பின்னர்தான் தலாக் சொல்ல முடியும்.
இத்தா என்பது நாட்களை எண்ணுதல் கணித்தல் என்று பொருட்படும். இந்த இத்தாக் காலப்பிரிவில் விதவைகளை வெள்ளையுடுத்தி ஓரிடத்தில் தனிமைப்படுத்தும் செயற்றிட்டமே இப்போது நம் நாடுகளில் அமுலில் இருக்கின்றது. ஆனால் அது இஸ்லாமல்ல. ஒருத்தி விதவையானால் அவளை அடைத்து வைக்கும்படியோ அல்லது தனிமைப்படுத்தி வைக்கும்படியோ ஒரு பிற்போக்குத்தனமான கருத்தை அடிமைப்படுத்தும் கீழ்தரமான விடயத்தை இஸ்லாம் கட்டளையிடவில்லை ஆனால் சில பிற்போக்குவாதிகள் விதவைக்கு என்று இந்து சமயத்தில் இருந்து சில விடயங்களைக் கடன்வாங்கி நடைமுறையில் இஸ்லாமாக்கி விட்டார்கள்.

கணவனையிழந்த பெண்கள் அபசகுனமாகப் பார்க்கப்படும் நிலை இஸ்லாத்தில் இல்லை. எனவே இஸ்லாத்தின் பெயரால் விதவைகளை அடைத்து வைக்க முயற்சிக்கும் போக்கிற்கு எதிரான சரியான கருத்தியலை இந்தச் சமுகத்தின் மன்றில் ஓங்கி ஒலிக்கச் செய்யும்கடப்பாடு காழி நீதி மன்றுகளுக்கும் இருக்கவே செய்கின்றது. இத்தா இருக்கும் காலப்பிரிவில் ஒரு பெண்ணுக்கு திருமனப் பேசுவதற்குக் கூட அல்குர்ஆன் அனுமதித்து இருக்கின்றது. மறுமணத்தை ஊக்குவிக்கின்றது.

அது போல இத்தா இருக்கும் காலப்பிரிவில் துணைக்கு யாருமே இல்லையென்றால் தொழில் செய்யவும்இ தனதுதேவைகளுக்காக வெளியே செல்லவும் அனுமதி இருக்கின்றது. இரவானதும் கணவனின் வீட்டுக்கு இத்தா இருக்கும் பெண் வந்துவிட வேண்டும் என்பது எமக்குச் சொல்லும் செய்தி இத்தா இருக்கும் காலத்தில் கணவன் தரப்புதான் அவளைப் பராமரிக்க வேண்டும் என்பதையே ஆனால் நடைமுறையில் இதையெல்லாம் விதவைகளுக்குப் பாகமாக மாற்றிவிட்;டார்கள்.

இப்படி இன்னும் பல்வேறு விடயங்களை ஆய்வு ரீதியில் நாம் விவாதத்திற்குட்படுத்த முடியும். அல்குர்ஆனினதும் நபிகள் முஹம்மதுவின் வாழ்க்கை வழிகாட்டல்களின் பின்புலத்திலும் நாம் முன்வைக்கும் எந்தக் கருத்துக்கு எதிராகவும் பிற்போக்குத்தனமான எதிர்ப்புகளுடன் எந்த மௌலவிமாரும் வந்துவிடவேண்டாம் என்று தயவாய்க் கேட்டு இன்று விதவைகள் எதிர் கொள்ளும் இத்தனை கஸ்டங்களுக்கும் மார்க்க உபன்யாசிகளான நீங்கள் அறைகுறை அறிவோடு போதனை என்ற பெயரில் எடுத்துத் தள்ளும் வாந்திதான் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றது என்று கூறி வடைபெறுகின்றேன்.

இன்னும் நீண்ட உரையாடலை வேண்டி நிற்கும் இந்தப் பகுதிஇ பெண்கள் தரப்பால் அனைத்துக் காழி – நீதிபதிகளும் மௌலவிமார்களும் அழைக்கப்பட்டு இந்த விடயங்கள் பொதுவில் கலந்துரையாடப் படவேண்டும்இ சரியான சட்;டத்திருத்தத்தைத் மேற்கொண்டு அதையே அமுல்படுத்தும்படியான அழுத்தத்தையும் இதன் மூலம் வழங்க சாத்தியப்படலாம். அப்போது ஒரு சுபீட்சத்தை விதவைகளின் வாழ்வில் ஏற்படுத்திட எம்மாலும் முடியுமாக இருக்கும்.
நன்றி
வணக்கம் – வஸ்ஸலாம்.

2015 இல் மலையகத்தில் நடைபெற்ற ஊடறு மலையக பெண்கள் சந்திப்பில் சமர்ப்பித்த கட்டுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *