ஆண்பால் புரட்சிக்கு பெண்பால் புகட்டும் கள்ளிப்பால்

மாலதி மைத்ரி

 march 8 16உலகில் பெண்களுக்கு மிக எளிதாகக் கிடைக்கும் விசயம் பாலியல் இன்பம். படித்த பெண், படிக்காத பெண், வேலை பார்க்கும் பெண், வேலை பார்க்காத பெண், குடும்பப் பெண், தற்குறிப் பெண், போக்கிரிப் பெண் என்ற பாகுபாடின்றி. இந்த ஆட்டத்தை நீங்கள் வெளிப்படையாக ஆட முடியாது, ஆனால் ஆடலாம். வெளிப்படையா பேச முடியாது, ஆனால் பேசலாம்.எந்த விதமான அடிப்படைவாத சமூகத்துக்குள்ளும் இவை சாத்தியம்.

ஒரு பெண் தான் விரும்பியவருடன் காமத்தைத் தீர்க்க முடிவெடுத்து கொஞ்சம் சாதுரியத்துடன் ஒரு பாதுகாப்பான வட்டத்தை உருவாக்கி அதன் வழியே பயணிக்கலாம். இதை எந்த பெண்களும் போராடி பெறவில்லை. இந்தச் சமூகமே அதற்கான வழிமுறைகளை, பொறிமுறைகளை உருவாக்கித்தந்திருக்கிறது.  ஆண்களுக்குச் சாதகமானபலனிக்கும் ஒன்றை இந்த அமைப்பு அழிந்து போக அனுமதிக்குமா என்ன?  உங்களைப் பயன்படுத்தும் வரை பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்துவிடும்.சில புத்திசாலிகள்காரியவாதமாக தாக்குப்பிடித்து ஆணாதிக்க நிறுவனங்களை பயன்படுத்தி வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது.  சில வெற்றி மாதிரிகளைக் கண்டு சிறு அளவிலான அறிவுசார் பெண்கள் அதை நோக்கி நகர்வதும் நடக்கும். இவை தந்தைவழி நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ- கார்ப்ரேட் கலாச்சார அரசியல் வடிவத்தின் பிரச்சனை. அதற்குள் பெண்கள் உள்ளிழுக்கப்படுவதை தடுக்க முடியாது. 

 ஆனால்வரலாற்றில் பெரும்பான்மையான பெண்கள்வாழ்வுரிமைக்காக, வாழ்வாதாரத்துக்காக,பாலின சமத்துவத்துக்காக, சமகூலிக்காக, கல்வி உரிமைக்காக, முடிவெடுக்கும் உரிமைக்காக,எட்டுமணிநேர வேலைக்காக,  பணி மற்றும் பணியிட பாதுகாப்புக்காக, சொத்துரிமைக்காக, இணைத் தேர்வு உரிமைக்காக, கருத்துரிமைக்காக, அரசியல் உரிமைக்காக, அனைத்து நிறுவனத் தளங்களிலும்தமக்கான அதிகாரத்துக்காக, தங்கள் உடல் மீதான சுதந்திரத்திற்காக, தீண்டாமைக்கெதிராக, சாதியொழிப்புக்காக, ஆணாதிக்கத்துக்கெதிராகக் களத்தில்உயிரைக் கொடுத்துப் போராடினார்கள். இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.இதையெல்லாம் கணக்கிலெடுக்காமல் மிக முக்கியமான பெண் மைய கருத்தியல் அரசியலைப் பற்றிய பேச்சுக்களே எழவிடாமல் பெண்ணியம் என்றாலே அடையாள அரசியல் என்ற நாட்டாமைத்தனம் மேலெழுகிறது ஆண்களிடம்.மேலும் பெண்ணியம், பெண்ணுரிமை பேசுபவர்கள் ஆண்களுக்காக அலைபவர்களென பொதுப்புத்தி மதவாத சாணியடிப்பும். சங்கரமட மூளைகளால் “பெண்ஈயம்” மென விளித்து தன்குறி சுவைக்கும் ஸ்டேன்டப் காமெடிகள் பெருக்குமிவர்கள் பெண்ணியம் பேசுபவர்களையெல்லாம் “மேட்டிமைவாதிகள்” “ப்யூட்டி பார்லர் பெண்களென” சேறடித்து சிவப்பு பதாகைக்குள் தங்கள் காவிக் கோமணத்தை கஷ்டப்பட்டு மறைத்துக் கொள்கிறார்கள்.பெண்கள் பற்றிய பார்வையில் பல முற்போக்குவாதிகள் அடிப்படைவாதிகளின் அச்சில் தங்கள் நாயக பிம்பத்தை வார்த்துக் கொள்ளும் “மென்ஸ் கிளப்” மெய் ஞான அரசியலையும் இத்துடன் இணைத்துப் பார்க்கலாம்.


பெண்ணியத்தை ஒற்றையடையாளப்படுத்திப் புறம்தள்ளும் அரசியல் வழி பெண்ணிய உரையாடலை, அரசியல் கருத்தியலை பொது அரசியல் களத்திலிருந்து அழித்துவிட கனவுகாணும் ப்யூடல் சிந்தனைவாத ஜந்துக்கள் இவர்கள்.முதலாளித்துவ ஜனநாயகம் நெகிழ்வளித்திருக்கும் கலாச்சார மாற்றத்தையே இவர்களால் சகிக்க முடியவில்லை. மது, புகை, உடை, முடி, தோற்றம் முதலியவற்றில் தான் விரும்பும் பழக்க வழக்கங்களைக் கொண்ட பெண்களை, கார்ப்ரேட்டு முதலாளிகள் மக்கள் விரோத அரசியல்வாதிகள்-அதிகார வர்க்கங்கள் சாதி மத அடிப்படைவாத சக்திகளை விட ஆபத்தானவர்களாகவும், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நாசத்தை விளைவிக்கும் அழிவு சக்திகளாகவும் காட்டி பீதியூட்டும் அரசியலை புரட்சிகர கலாச்சார நடவடிக்கையாக முன்னிறுத்தும் கப் பஞ்சாய்த்து அரசியல் தமிழர்கள் மத்தியில் குறைவில்லை.

 க்ராப் வெட்டுவது பெண்ணியமா? பேண்டு போடுவது பெண்ணியமா? பைக் ஓட்டுவது பெண்ணியமா? ஆண் அடையாளத்தை எடுத்துக் கொள்வது பெண்ணியமா? (இன்னும் மேல் பொசிசனிலிருந்து உடலுறவு கொள்வது பெண்ணியமா என்று மட்டும்தான் கேட்கவில்லை) இப்படியான அறிவார்த்தமான கேள்விகளைக் கேட்டு பெண்ணியவாதிகளை மடக்கிவிட்டதாக உள்ளுக்குள் சிலிர்த்துப் போகிறார்கள். எந்தவொரு மனித கண்டுப்பிடிப்பும் மனிதர்களாக பிறந்த அனைத்து பாலருக்கும் பொதுவானது. உடையோ தோற்றமோ அவரவர் வசதி ரசனை அழகியல் உணர்வு சம்பந்தப்பட்டது. இதுதான் பெண்கள் அடையாளம், இது ஆண்கள் அடையாளமென வரையறுப்பதே ஒடுக்குமுறைதான். ஒரு கண்டுப்பிடிப்பை ஆண்கள் பெரும்பான்மையாக முதலில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால் அது ஆண்களுக்கு கிடைத்த முழு உரிமையாக, சொத்துரிமையாக மாற்றிக் கொள்ளும் அரசியலே உடமைவாத ஆதிக்க அரசியல். தீண்டாமையும் ஒடுக்குமுறையும் இதே கருதுகோளின் அடிப்படையிலேயே கடைப்பிடிக்கப்படுகின்றன. பெண்கள்தான் விவசாயத்தை, மருத்துவத்தை கண்டுப்பிடித்ததாக வரலாறு சொல்கிறது. மேலும் உணவை சமைப்பதும் பெண்கள்தான் எனவே ஆண்கள் யாரும் சாப்பிடாதீர்கள், நோய்க்குச் சிகிச்சை எடுத்துக் கொள்ளாதீர்கள். இவையனைத்தும் பெண்களுக்குத்தான் சொந்தமென்று காப்பிரைட் வழக்குப் போட்டால் பூமியை கொடுத்துவிட்டு செவ்வாய் கிரகத்தில்தான் ஆண்கள் குடியேற வேண்டியிருக்கும்.

 பெண்ணுரிமை, பெண்ணியம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பெரும்பான்மையாக எல்லாத் தரப்பு ஆண்களும் படித்த பெண்களும் கூட ஒருவித பதற்றத்துக்குள்ளாகிறார்கள். முற்காலத்தில் அறிவார்த்த பெண்களையெல்லாம் சூன்யகாரிகளென கொளுத்தியது போல் இப்போது இத்தீய சக்திகளை அழிக்க இயலவில்லையே எனும் உளக்குமுறல் வன்மம் நெருப்பாறாய் பாய்கிறது. ஆணாதிக்க உலகம் அதன் நிறுவனங்கள் அவை அளிக்கும் அடையாளங்கள் புகழ் வெளிச்சங்கள் தங்களை நிராகரித்துவிடுமோ என்ற அடிமை உளவியல் அச்சம் பெண்களை பெண்களுக்கு எதிராக நிறுத்துகின்றன. ஒரு குழுவை அடிமைப்படுத்தி அடிமைச் சமூகத்துக்குள்ளேயே மாஸ்டர் ஸ்லேவ் உருவாக்குவதுதானே அடிமைப்படுத்தும்  தத்துவத்தின் விதி. அதன் வழி அடிமைத்தன கொடுங்கோன்மை தன்னிச்சையான சுழற்சியால் இயங்கிவிடும். கிளர்ச்சிகள் மாஸ்டர் ஸ்லேவைக் கொண்டே ஒடுக்கப்படுவது வரலாறு. இந்த வரலாற்றுப் பாடத்தைப் பெண்கள் புரிந்துக்கொள்ளாதவரை. பெண்களுக்கு எதிராகப் பெண்களை நிறுத்தி மோதவிட்டுவிட்டு ஆணாதிக்கம் தனது வெறியாட்டத்தைத் தொடர்ந்துக் கொண்டிருக்கும்.

 சமத்துவத்தை யார் வெறுப்பார்கள் பெண்ணாதிக்கத்தைத்தான் வேண்டாம் என்கிறோம் என்பவர்களுமிருக்கிறார்கள். பாலின சமவுரிமைக்கும் பெண்ணாதிக்கத்துக்கும் என்ன சம்பந்தமென விளக்குவதேயில்லை. பெண்ணினத்துக்கு ஆணினம் இழைத்த கொடுமைகளுக்கு பெண்களுக்கு அதிகாரம் கிடைத்தால் ஆண்களை பழித்தீர்த்துவிடுவார்களோ என்ற அச்ச உளவியல் ஆட்டிப் படைக்கிறது. ஒவ்வொரு பெண்ணையும் ஜெயலலிதாவாக்கும் கற்பனை பேதி நாற்றம் தாள முடியவில்லை. இவர்கள் ரத்தத்தில் சுழலும் அல்லி ராணி கதைகள் மூளை நரம்புகளை அரித்து முழு மனநோயாளிகளாகவும் சைக்கோகளாகவும் மாற்றிவிடுகிறது. இச்சமூகம் பெண் இருப்புக்கெதிராக கட்டமைக்கும் பெருக்கும் சொல் வழக்கும் பிரதி வழக்கும் திரை வழக்கும் மின்னணு வழக்கும் மலிந்த உலகில் வேறென்ன நடக்கும்.

 உலகை மாற்றப் போராடப் பெரும்பான்மையாக ஆண்கள்தானே களத்தில் நிற்கிறார்கள். ஆண்கள் மேல் முரணான குற்றச்சாட்டுகளை பெண்கள் முன்வைப்பதாக மேலெழுத்தவாரியாக அணுகும்போது தோன்றலாம். சமத்துவ சமுதாயத்துக்கெதிரான தடைகற்களாய் அடைத்துக்கிடக்க ஆண்களுக்கென்ன அவ்வளவு பெரிய இலாபமென கேட்கலாம்.குடும்பம், சமூகம்,கட்சி, இயக்கம், அமைப்பு, நிறுவனம் என்று எதன் பெயரில் ஆண்கள் கூட்டாக இயங்கினாலும் இவர்கள் தனி மனிதர்களென்னும் தன்னிலைகளே. இவர்களின் கூட்டு ஆழ்மனம் ஒன்றேபோல் சிந்தித்து செயல்பாடாகக் களத்தில் விரிகிறது. தன்வீட்டிலிருக்கும் பெண்பாலின சமத்துவம், சமவுரிமை பேசத் தொடங்கினால் அவர்களிடமிருந்து இலவச உடலுழைப்பால்அனுபவிக்கும் சுகங்களை இழந்துவிடுவோம். சார்பற்று சுயாதீனமாக வாழயியலாதாழ்வுணர்வு அச்சம்தான் பிரதான காரணம்.இரண்டாவது அச்சம் சாஸ்வதமாகத் தொடரும் ஆணின் அதிகாரம் கைநழுவிடாமல் தடுக்கும்ப்யூடல் உடமை உளவியலின் எச்சரிக்கை உணர்வு.

 இவர்கள் செம்படைப் புரட்சி நடத்திபொன்னுலகம் உருவாக்கம் குறித்த, அனைவருக்கும் அதிகாரமளிக்கும் கனவு குறித்த,வரலாற்றுச் சிறப்பு மிக்க படைப்புகளை, மேடைகளைத்தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலக தருணங்களில் அவர்களின் வீட்டுப் பெண்கள் வீட்டில் எச்சில் தட்டுக் கழுவி, பீ மூத்திரம் வாரி  புரட்சியின் முகத்தில் ஊற்றி மூர்ச்சையாக்குகிறார்கள். ஒரே கூரையின் கீழ் மண்டிக்கிடக்கும் ஆணாதிக்கமென்னும் கள்ளிக் காட்டிலிருந்து பாலிறக்கி புரட்சிக்குப் புகட்டுகிறார்கள்.

 பொதுவுடமைப் புரட்சிமட்டுமல்ல, சமூகமாற்றத்துக்கும்பெண்விடுதலைதான்அடிப்படை. அதை சமூகபடிநிலையின்கீழாகதீண்டாமையால்ஒடுக்கப்பட்டபெண்ணின்விடுதலையின்முதல்படியிலிருந்துதொடங்கவேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *