பெண்ணிய மறு வாசிப்பில் காரைக்காலம்மையார்

எம்.ஏ.சுசீலா

march 8 2

சமூகத்தின் எல்லாச் செயல்பாட்டுத் தளங்களிலும் விரவி, வேரூன்றிப் போயிருப்பது. பாலின சமத்துவமின்மை.. பெண் சிசுக்கள் கருவிலேயே பலியாவதும், பாலியற் சீண்டல்களாலும், வன்முறைகளாலும் இளம் குருத்துக்கள் கசக்கி எறியப்படுவதும்,. அரசியல், பொருளியல், சட்டம், சமயம் என அனைத்துத் துறைகளிலும் நிலவும் பாலின வேறுபாடுகளும், அதனால் விளையும் அசமத்துவ நிலைப்பாடுகளும் பெண்ணுக்கு இன்னும் முழுமைபெற்ற மனிதநிலை வழங்கப்படவில்லை என்பதையும், அவள் இரண்டாந்தரப் பிரஜையாகவே நடத்தப்பட்டு வருகிறாளென்பதையும் உறுதிசெய்கின்றன. இந்நிலையில், தமிழிலக்கியத்தின் இடைக்காலம் என்று எண்ணப்படும் ஒரு காலகட்டத்தில் எழுந்த காப்பியங்களில் பெண்களின் நிலை, பாலின வேறுபாடுகளின் மிகக்கடுமையான தாக்கத்தை சித்திரிப்பதாக அமைந்திருப்பதில் வியப்பில்லை.

இறைப்பற்றை முன்னிறுத்திப் ‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட’ச் சேக்கிழார் படைத்த பெரியபுராணத்தில் காட்டப்படும் பெண்களின் வாழ்வு, அன்றைய நடப்பியல் சமூகத்தில் – சமயத் தளத்தில் நிலவிய பால்வேறுபாட்டு அளவுகோல்களை வெளிச்சமிட்டுக் காட்டும் அப்பட்டமான படப்பிடிப்பு என்றே கூறலாம். அச்சூழலில் சமயமும் கடவுள் பக்தியும் ஆணுக்கு முதன்மைப்பட்டவையாக – (“வினையே ஆடவர்க்கு உயிரே” என) இருக்கப் பெண்ணுக்கோ, ஆணே முதன்மையானவனாக விளங்கியிருக்கிறான். (“மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே”) ஆடவர்கள், தங்கள் சொத்துக்களையும் சொந்தப் பிள்ளைகளையும் (சிறுத்தொண்டர்)  சில வேளைகளில் மனைவிகளையும் (இயற்பகை நாயனார்) கூடப் பக்தியின் உருக்கத்தில் பலியாக்க முனைகையில், அவற்றை மறுக்கவும், எதிர்க்கவும், மறுபேச்சுப் பேசவும் துணியாதவர்களாகவே பெண்கள் இருந்திருக்கின்றனர். கணவனது ஆன்மீகத் தேடலுக்குத் துணை நிற்பது மட்டுமே மனைவியின் வேலை என்றே அவளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்கு நேர்மாறாக ஒரு பெண், சமயத் துறையில் முத்திரைகளைப் பதித்துவிட்டால் அவள், குடும்ப வாழ்விற்குத் தகுதியற்றவள் என்று ஒதுக்கப்பட்டாள். நேரடியாக அவளை ஒதுக்கும் துணிவற்ற இச்சமூகம், அவளை வழிபடுவதற்குரிய ஒரு தெய்வமாக்கித் தள்ளி வைத்தது. தன்னைவிடவும் உயர்நிலைக்குச் சென்றுவிட்ட மனைவியைக் கண்டு மிரட்சியுற்ற கணவன், அவளைத் தன் குலதெய்வமாக்கிப் பூசைசெய்ய ஆரம்பித்தான். பாலின வேறுபாடு காரணமாக, இயல்பான மனித வாழ்வின் இயற்கையான இயக்கமே பாதிக்கப்பட்ட புனிதவதி என்ற பெண்ணின் கதையை மறுவாசிப்பு செய்யும்போது அவள் காரைக்கால் பேயாகப் பரிணாமம் கொண்ட வரலாறு, மறைபொருளாகத் தெளிவுறுத்தும் பெண்ணியச் செய்திகள் மிகப்பல.

‘பெருவணிகர் குடி’யில், தனதத்தனின் ஒரே மகளாய் வாய்த்துச் சீரோடும், செல்வச் சிறப்போடும் வளர்ந்தவர் புனிதவதி. பிறந்த நாள் தொட்டு, அவர் வளர்ந்த சூழல், சிவன் மீதான அன்பிலும், சைவத்தொண்டிலும், அவரை ஆழ்த்துவதாகவே அமைந்தது.

“பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்

சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்”

என்று அற்புதத் திருவந்தாதியில், அவர் குறிப்பிடுவது போல ‘அசையும்  நடைப் பருவத்’திலும், ‘அழகின் கொழுந்தென’ வளர்ச்சியுற்ற பருவத்திலும் சிவனின் திருநாமத்தை மட்டுமே பயின்று, அதனையே தமது மொழியாக்கிக் கொண்டவராகவும், சிவனடியார்களைப் போற்றித் தொழுவதைத் தமது வாழ்நெறியாக்கிக் கொண்டவராகவுமே சேக்கிழாரால் அவர் சித்திரிக்கப்படுகிறார்..

மேற்குறித்த சூழலில் வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணுக்குத் திருமணத்தை முடிவு செய்கையில், செல்வப் பொருத்தம் என்ற ஒன்று மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டு, மணமகனாகப் பரமதத்தன் உறுதி செய்யப்படுகிறான். தங்கள் புதல்வியைச் சிவநெறிச் செல்வியாக வளர்த்த பெற்றோர், அதுபோன்ற ஒத்த மனப்போக்குடைய ஓர் ஆடவனை அவளுக்கு மணவாளனாக்குவது பற்றிச் சற்றும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

திருமணத்திற்கு முன் ஒரு பெண் கடைப்பிடித்துவந்த வாழ்நெறி எதுவாயினும், திருமணத்திற்குப் பிறகு, கணவனது போக்கை அவளும் ஏற்று ஒழுகுதலே சிறந்த அறமென ஏற்கப்பட்ட சமூகக் கட்டமைப்பில், புனிதவதியின் ‘சிவக்காதல்’ சற்றும் குறையாவிட்டாலும்கூட, அதனால் மனையறத்திற்கு எந்தப் பாதிப்பும் நேர்ந்து விடாதபடி, இரண்டையும் சமனப்படுத்தி நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்படுகிறார். பொது வாழ்க்கையும் அதுசார்ந்த குறிக்கோள்களும் ஆணின் உரிமையாகவும் – அவனையும், வீட்டையும் பேணுவது மட்டுமே பெண்ணின் கடமையாகவும் மாறுபட எண்ணப்படும் நடப்பியற் சூழலில், இதே தளத்தில் ஓர் ஆண் செயல்படுகையில் இவ்வாறான நிர்ப்பந்தங்கள், அவனுக்கு நேருவதில்லை. ஆன்மீகக் கடலில் அழுந்தி , அவன் அனைத்தையும் மறந்தாலும் ‘பக்தியின் உன்னதம்’என அது பாராட்டப்படுகிறதேயன்றி வீட்டுப் பொறுப்புக்களை, மனைவிக்குச் செய்வதற்குரிய கடமைகளை அவன் புறக்கணித்தான் எனப் பழிக்கப்படுவதில்லை. இந்நிலையில், புனிதவதி, தமது உள்ள விருப்பத்திற்காகச் சைவப் பணியும் உலகியற்போக்கை ஒட்டி இல்லறப் பணியும் ஆற்றியபடி, தமது மனவாழ்வும், மண வாழ்வும் ஒன்றினால் மற்றொன்று பாதிப்புறாதவகையில் செயல்பட்டு வந்ததைப் பெரியபுராணம் சொல்லிக்கொண்டு போகிறது.

புனிதவதியின் கணவனான பரமதத்தன், சைவத்திற்கோ அது சார்ந்த தொண்டிற்கோ எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக சேக்கிழார் குறிப்பிடவில்லை என்றாலும் அவனது சமய ஈடுபாட்டை எங்குமே அவர் தொட்டுக் காட்டாததும், தொடர்ந்து வரும் சரிதத்தின் நிகழ்வுகளும், அவனது சார்பின்மையையே உறுதிப்படுத்துகின்றன. வணிகனான அவனுக்கு ‘மனைவளம் பெருக்கி மிகப்புரியும் கொள்கை’யே உகப்பானதாகவும் இன்றியமையாததாகவும் இருந்திருக்கிறது. குடும்பச் சூழ்நிலை இவ்வாறு அமைந்துவிட்ட நிலையில், புனிதவதி, கவனமுடன் செயல்பட வேண்டியது மேலும் தேவையாகிறது. ‘விருந்து புறந்தருதலும் இழந்த என்னை’ என்று கணவனின் உடனிருப்பு இன்றி, விருந்தினரை உபசரிக்க இயலாமல் தவித்த கண்ணகியைப் போலன்றிக் கணவன் உடனிருந்தும் மறைவாகத் தனியாக விருந்து பேணும் நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார். இந்தக்கட்டத்திலேதான், வீட்டிற்கு வந்த சிவனடியாருக்குக் கறியமுது எதுவும் ஆயத்தமாகியிராத நிலையில் கணவன் கொடுத்தனுப்பிய இரு கனிகளுள் ஒன்றை அளிக்கிறார் அவர். இரண்டினுள் ஒன்றைத் தன் பங்காகக் கருதி, அதனைத் தன் விருப்பப்படி வழங்குவதற்கான நியாயத்தை அவர் கற்பித்துக் கொண்டிருக்கக்கூடும். அந்த இரண்டாவது கனியை அவன் கேட்கக் கூடுமென்றும் அவர் எதிர்பார்த்திருக்க இயலாது. அவரது எதிர்பார்ப்பு, பொய்த்துப் போய்விட, மதியம் உணவுண்ண வந்த கணவன், ஒரு பழத்தை உண்டு சுவைத்துவிட்டு மற்றதையும் கேட்கிறான்.

குடும்ப வாழ்வில், தானறியாத வண்ணம் புனிதவதி செய்யும் தான, தருமங்களை ஓரளவு அறிந்தவனாய் – அதுகுறித்துச் சோதித்து அறியும் பரமதத்தனது முயற்சியாகக்கூட இச்செயல் இருந்திருக்கலாம். பெரியபுராணப் பிரதி இதனை வெளிப்படையாகக் காட்டாதபோதும், கணவனது விருப்பம், காதில் விழுந்த மாத்திரத்தில் புனிதவதி நடந்து கொள்ளும் வினோதமான முறை, மேற்குறித்த ஐயத்திற்கு வலுச்சேர்க்கிறது.

கணவன், இரண்டாவது கனியைக் கேட்டதும், மறுப்போ, மறுபேச்சோ இல்லாமல் வைத்த பழத்தை எடுக்கச் செல்பவர் போல அகன்று போகிறார் அவர். புனிதவதி வாழ்வில் நிகழும் இக்காட்சி, குடும்பத் தளத்திலான பாலின வேறுபாட்டின் பல பரிமாணங்களை நம்முன் வைக்கிறது.

ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் இயல்பான வாழ்வில், எந்த ஒரு மனைவியும், அங்கே நடந்ததை மிக இயல்பாக… மிக எளிதாகக் கூறிப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்திருக்க முடியும். அவ்வாறு செய்யாமல் கடவுளைச் சரண் புகுந்து, அற்புதத்தால் கனி பெறுவது, புனிதவதியை ‘அதி மானுடப் பெண்’ணாகக் காட்டலாமே தவிர மனித உரிமைகளைச் சுதந்திரமாக அனுபவிக்கும் வாய்ப்புப் பெற்ற சராசரி மனித உயிராகக் காட்டவில்லை. கணவனிடம் உண்மையைக் கூறுவதில் அவர் காட்டும் தயக்கம், பல ஐயங்களை எழுப்புகிறது. கணவனது ஒப்புதலின்றி, ஒரு கனியைக் கூடப் பிறருக்குத் தர இயலாத நிலை ஒருபுறமிருக்கக் கணவனது விருப்பத்திற்கு மாறான செயலைச் செய்துவிட்ட குற்ற உணர்வின் அச்சமும் அவரை மௌனியாக்கியிருத்தல் கூடும்.

கணவனை அணுகுவதை விடவும் கடவுளிடம் அடைக்கலம் புகுவது எளிதென எண்ணிவிட்ட புனிதவதியின் கரங்களில் சிவனருளால் வந்ததாகக் காட்டப்படும் கனியை அவர் கணவனுக்கு அளிக்கிறார். அதைச் சுவைத்துப் பார்த்த அவனோ, அது முன்பு உண்ட கனியன்று என்பதைப் புரிந்து கொண்டவனாய், அது வந்த ‘மூலம்’ எது என வினவுகிறான். இறையருளால் பெற்ற கனி என்று கூறவும் அச்சம், கணவனது கேள்விக்கு விடை கூறாமல் விடுப்பதற்கும் தயக்கம் என்று ஊடாடிய புனிதவதி, இறுதியில் ‘செய்தபடி சொல்லுவதே கடன்’ எனத் துணிந்தவராய், இறைவனைத் துதித்தபடி நடந்ததை நடந்தவாறு மொழிகிறார்.

தனது ஆளுகைக்கு உட்பட்ட – தனக்கு ஒருபடி கீழான நிலையிலுள்ள ஓர் உயிர் என இத்துணை காலமும் எண்ணியிருந்த தன் மனைவி, இப்படி ஓர் ஆற்றலைப் பெற்றிருப்பதை நம்ப முடியாத அவன் ‘அது தெளியான்’ ஆகி, அவ்வுண்மையை மெய்ப்பிக்க மற்றுமொரு கனியை வரவழைக்கக் கோருகிறான். அவளும் இரண்டாவது முறையாகக் கடவுளை வேண்டி மீண்டும் ஒரு தடவை அதே அற்புதத்தை நிகழ்த்திக் காட்டப் பரமதத்தன் கையில் வந்த கனி, அடுத்த கணத்திலேயே மறைகிறது.

சேக்கிழாரின் இச்சித்திரிப்பு, இயற்கை மீறியதோ,  புனிதவதியின் அளப்பரிய ஆத்ம சாதகத்தால் விளைந்த சித்து விளையாட்டோ – எதுவெனினும் பரமதத்தனின் உள்ளத்தில் விவரிக்க இயலாத அச்ச உணர்வு அதனால் தோற்றுவிக்கப்பட்டு விடுகிறது. புனிதவதி, பேய் வடிவு கொண்டது, புராணத்தின் பிற்பகுதியில்தானெனினும், அற்புதம் நிகழ்ந்த அந்தக் கணம் முதல் அவரை அச்சுறுத்தும் ‘அணங்’கென எண்ணி ஒதுங்கியிருக்கத் திட்டமிட்டு விடுகிறான் பரமதத்தன். தெய்வத்தை ‘அணங்’கெனக் குறிப்பிடும் மொழிச் சூழலில், மனைவியின் தெய்விக ஆற்றல், அவனுள் அச்சத்தைக் கிளர்த்தியதாக நம்பப்பட்ட போதும், உண்மையில் அவனிடம் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையே அவளிடமிருந்து விலகிப் போகுமாறு அவனைத் தூண்டுகிறது.. தான் அறிந்திராத, ஈடுபட்டிராத துறை, சமயத்துறை என்றபோதும் அதில் தன் மனைவி உயர்நிலை பெற்றுவிட்டது உணர்வான பின்பு, அவளிடம் கணவனென்ற உயர்நிலையில் தான் இனி ஆதிக்கம் செலுத்த முடியாதென்ற உண்மையை அவன் விளங்கிக் கொள்கிறான். தொடர்ந்து, அவனது அதிகார எல்லைக்குள் இயங்குவதற்குப் புனிதவதி ஆயத்தமாக இருந்தபோதும், அவர் நிகழ்த்திய அற்புதங்களும் அந்த நோக்கில் அமைந்தவையே என்றபோதும் அவனுக்குள் ஒரு மனத்தடை ஏற்பட்டு விடுகிறது.  தனது மனமாற்றத்தை வெளியே புலப்படுத்திக் கொள்ளாமல், மறைத்து வைத்தபடி, ஒரே வீட்டினுள் இருந்துகொண்டே மனைவியுடன் தொடர்பின்றி வாழத் தொடங்குகிறான் அவன். தொடர்ந்து, புனிதவதியை நிரந்தரமாய்ப் பிரிந்து செல்லவும் திட்டமிட்டு, மரக்கலங்களை ஏற்பாடு செய்து வெளிநாட்டு வணிகத்திற்காகச் செல்பவன் போலக் கிளம்பிப் போய்விடுகிறான்.

புனிதவதியின் தெய்விக ஆற்றல் குறித்த தனது அச்சம் தோய்ந்த அனுபவத்தைப் பரமதத்தன் சுற்றத்தாரிடம் இந்தக் கட்டத்திலேயே – வெளிப்படுத்தியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அதை அப்போதைக்கு நெஞ்சுக்குள் அழுத்தி விட்டுப் பின்னாளில் தவிர்க்க முடியாத நெருக்கடி நேரும்போதுதான் அவன் அதை வெளிப்படுத்துகிறான். இதுவும் பல கேள்விகளை எழுப்புகிறது. புனிதவதியுடன் வாழ்வதில் விருப்பமின்றி, இவ்வாறான ஒரு புனைகதையை அவன் உருவாக்கியிருப்பதாக அவர்கள் எண்ணக் கூடுமென்ற தயக்கம், அவனுக்குள் தடைகளை ஏற்படுத்தியிருக்கலாம்.அல்லது இப்படி ஒரு சக்தி அவளுக்குள் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவளுடன் வாழுமாறு அவர்கள் தன்னை வற்புறுத்த முற்படலாம் என்ற அச்சமும் அவனுள் விளைந்திருக்க வாய்ப்புண்டு. ‘அவரை நீக்குதல் இயலாமையின் தான் நீங்கத் துணிந்தான்’ எனக் குறிப்பிடுகிறார், பெரிய புராணத்திற்கு உரை எழுதிய சி.கே. சுப்பிரமணிய முதலியார். எவ்வாறேனும் தனக்கு நேரிட்ட அதிர்ச்சியிலிருந்து தப்பித்து ஓடிவிடவே அவனது மனம் முனைகிறது.

“விடுவதே எண்ணமாக மேவிய முயற்சி” செய்யும் அவன், வெவ்வேறு இடங்களில் வணிகம் செய்து பொருளீட்டிய பின் பாண்டிய நாட்டில் நிலையாகத் தங்கித் தனது முதல் திருமணத்தை மறைத்துவிட்டு, அங்கு வேறொரு பெண்ணை மணந்து கொள்கிறான். புனிதவதியோடு வாழ்ந்த காலகட்டத்தில் அந்த மணவாழ்வின் மகிழ்ச்சி பற்றி எதுவும் குறிப்பிடாத சேக்கிழார், இந்த இரண்டாவது மணத்திற்குப் பிறகு ‘‘முறைமையின் வழாமை வைகி முகமலர்ந்து” அவன் களித்திருந்ததாகக் குறிப்பிடுகிறார். மனைவியின் தனித்துவம் கண்டு அஞ்சத் தேவையில்லாத நிலை, பரமதத்தனின் இம்மகிழ்வுக்குக் காரணமாயிருக்கலாம்.

கணவன் பிரிந்து சென்றபின், தனியே வாழ நேர்ந்த கால இடைவெளியில், புனிதவதிக்குத் தனிமனித நிலையிலும், சமூக நிலையிலும் பல சோதனைகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. தனி வாழ்வில் விளையும் மனப் போராட்டங்கள், இளம் வயதிலுள்ள அழகிய பெண்ணுக்குப் பாலியல் அடிப்படையில் சமூகம் தரும் துன்பங்கள், ‘வாழாவெட்டி’ எனப் பெயரிடும் குத்தல்கள், தூற்றல் மொழிகள் எனப் பல வகையான சிக்கல்களை அவர் எதிர்கொண்டிருக்கக் கூடும். எனினும் இவற்றை வெளிப்படையாகச் சித்திரிக்காமல் மௌனம் காக்கும் பெரிய புராணப் பிரதி “மன்னிய கற்பினோடு மனையறம் புரிந்து வைகினார்’’என்று பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையை மட்டும் தவறாமல்  குறிப்பிடுகிறது.

பரமதத்தனுக்குப் பெண் குழந்தை பிறந்து விட முதல் மனைவிக்குச் செய்த துரோகத்திலிருந்து பிராயச்சித்தம் தேடிக் கொள்ளும் முயற்சியாகப் ‘புனிதவதி’ என்று அதற்குப் பெயர் சூட்டுகிறான் அவன். மனைவியை ஒதுக்கி வைத்த முதற்கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்குச் செல்லும் அவன், அவளைக் குல தெய்வமாக்குவதன் வழி, தனக்கு நேரக்கூடிய பாதிப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் , குற்ற உணர்விலிருந்து விடுபடவும் முனைகிறான்.

“…………………தான் முன்பு

உடனுறைவு அஞ்சி நீத்த ஒரு பொரு மனைவியாரைத்

தொடர்வற நினைந்து தெய்வத் தொழுகுலம் ஒன்றே கொண்டு

கடன் அமைத்து அவர் தந் நாமம் காதல் செய் மகவை இட்டான்”

புனிதவதியின் கணவன், பாண்டிய நாட்டில் வாழும் செய்தி, அவளது சுற்றத்தை எட்ட, அவனோடு அவளை இணைத்து வைக்கும் முயற்சியில் அவர்கள் முனைகின்றனர். கணவனைப் பிரிந்து தனித்து வாழும் இளம்பெண்ணுக்கு நேரும் பழி, அவளைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆகியவற்றுக்குத் தீர்வு, இருவரின் இணைப்பினாலேயே சாத்தியமாகும் என்பது அவர்களின் எண்ணமாக இருக்கலாம். உறவினர் புனிதவதியுடன் தன்னை நாடி வரும் செய்தி தெரிந்த அளவில் “சிந்தையில் அச்சம் எய்திய” பரமதத்தன், முன்னெச்சரிக்கை உணர்வோடு செயல்படத் தொடங்குகிறான். சட்டபூர்வமான முதல் மனைவியாக அவளது உரிமையை நிலைநாட்டச் சுற்றத்தார் முற்படும் முன், தன் இரண்டாவது மனைவியோடும், பெண்ணோடும் புனிதவதியின் கால்களில் விழுந்து அவளைத் தான் தெய்வமாக்கி உயர்த்தி  எட்ட இயலாத தொலைவுக்கு விலக்கி வைத்துவிட்டதை அனைவருக்கும் விளங்குமாறு புலப்படுத்துகிறான். அவளிடம் பொதிந்துள்ள தெய்விக ஆற்றலைக் கூறி, வைத்துவாழ்வதற்குஉரியவளாக அல்லாமல், ‘வணங்குவதற்கு உரியவளாக’ அவளைத் தான் வரித்துக் கொண்டு விட்டதைத் தெளிவுபடுத்துகிறான்.

“…………….மானுடம் இவர்தாமல்லர்

நற்பெருந் தெய்வமாதல் நானறிந்தகன்ற பின்பு

பெற்ற இம்மகவு தன்னைப் பேரிட்டேன் ஆதலாலே

பொற்பதம் பணிந்தேன்….”

என்ற பரமதத்தனின் வாய்மொழி கேட்டுச் சுற்றம் திகைத்து நிற்கப் புனிதவதிக்கோ புதிர் விடுபட்ட மனநிலை சம்பவிக்கிறது. அப்பொழுது அவரிடம் நேரும் எதிர்வினையும், கணவனது சொற்கள் அவரிடம் ஏற்படுத்திய எதிர்வினையும் மிக இயல்பானதாகவும், தன்னிச்சையாகவும் அமைந்து விடுகின்றன.

கணவனோடு இணைந்து உடன் வாழ்ந்த காலத்திலும் இருவரும் மனம் பொருந்தி ஒரு நெறியினராய்க் கலந்ததில்லை. வெறும் கடமைக்கான வாழ்வாகவே அது இருந்தது.. ஊர், உலகத்தாரின் எதிர்பார்ப்புக்காக வாழ்ந்த அவ்வாழ்வு, இடையில் சற்று விலகிப்போய், இப்பொழுது ஒரேயடியாகக் கைவிட்டுப் போகும் நிலையில், புனிதவதியின் மனம் ‘நனவிலி’ நிலையில் ஒரு விடுதலை உணர்வையே நுகர்ந்ததாகக் கூற வேண்டும். பரமதத்தனின் கூற்றுக்கும், செயலுக்கும் எதிர்வினையாக அமையும் அவரது வார்த்தைகள் இதுகாறும் மன ஆழத்தில் புதையுண்டு கிடந்து, வெளிவர இயலாமல் தத்தளித்துக் கொண்டிருந்த எண்ண ஓட்டங்களின் வடிகாலாக அமைந்திருப்பதே இதனை உறுதிப்படுத்துகிறது.

“ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்காகத்

தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்திங்கு உன்பால்

ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய்வடிவு அடியேனுக்குப்

பாங்குற வேண்டு”மென்று பரமர்தாள் பரவி நின்றார்.

என்ற பாடல், இவ்வரலாற்றில் ஆழ்ந்த கவனத்திற்கும், பரிசீலனைக்கும் உரிய ஒன்றாகும்.

கணவன், தனக்கென ஒரு நிலைப்பாட்டைத் தேர்ந்து கொண்டு தன்னை ஒதுக்கிய பின், அது குறித்து அழவோ, அவனைக் கெஞ்சவோ செய்யாமல், பிஞ்சுப் பருவம் முதல், தனக்கே உரியதாகத் தான் கொண்டிருந்த சமயக் கோட்பாட்டில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள எண்ணமிடுகிறார் புனிதவதி. மனைவாழ்வின் பல கட்டுப்பாடுகளுக்குள் சிக்குண்டு, சிறையிருந்த தன் விருப்பங்களை, கொள்கைகளை இனிமேல், மனம் போலச் செயல்படுத்தக் கிடைத்த வாய்ப்பாக அதனை எடுத்துக் கொண்டு, அடுத்துத் தான் எடுக்கப் போகிற நிலைப்பாட்டை ஒரு விடுதலைப் பிரகடனம் போலவே மேற்குறித்த பாடலில் அவர் வெளியிடுகிறார்.

பெற்றோருக்காகச் செய்து கொண்ட திருமணம்,கணவனுக்காக மறைவாய்ச் செய்த சமயத் தொண்டு எனப் பிறரை ஒட்டியதாகவே அமைந்துவிட்ட வாழ்வின் போக்கை இனி, தனக்கே உரியதென நிர்ணயிக்கத் தொடங்குகிறார் அவர். கணவன் திரும்பி வருவானென்ற எண்ணத்தில், பெற்றோரைச் சார்ந்து வாழ்ந்ததைப் போல இப்பொழுதும் வாழ்வைத் தொடர அவருக்கு உடன்பாடில்லை. கணவன் – பெற்றோர் என்ற சார்பு எதுவுமின்றித் தனித்த இயக்கத்துடன், சமயக் களத்தில் செயல்பட வேண்டுமென்பதே அவரது விழைவாகிறது. தனது சுதந்திரத்தைப் பாதிக்கும் பழைய கட்டுக்கள் அனைத்திலிருந்தும் விட்டு விடுதலை பெறவே அவர் மனம் அவாவுகிறது.

தன்னைத் தளைப்படுத்தியிருந்த அனைத்திலிருந்தும் கட்டவிழ்த்துக் கொண்டுவிட்ட புனிதவதியின் முழுமையான விடுதலைக்கான ஒரே சமூகத் தடையாக இப்பொழுது அவர்முன் இருப்பது, அவரது பெண்ணுடல். அந்த உடலும், அதன் அழகும் கணவனால் நுகர்பொருளாக்கப்பட்டவை. உடல்சார் இன்பம் அவருக்கும் உண்டெனினும், கணவனது பிரிவுக்குப் பின் அவற்றால் அவர் பெற்ற துன்பங்களும், சமூகச் சீண்டல்களுமே மிகுதியாக இருந்திருத்தல் வேண்டும். “இவனுக்காகத் தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து”ப் பேய் வடிவு வேண்டுமென அவர் விடுக்கும் கோரிக்கை, உடல் சார்ந்தவையாய் அவருக்கு அனுபவமான மனக் காயங்களின் ஆவேசமான வடிகால் என்றே கொள்ளலாம்.

“சதையோடு இணைந்த உடலை ஒதுக்கிய அவரது செயல், உடலிலும் பாலியலிலும் காட்டிய வெறுப்பின் குறியீடு” என்று இதனை மதிப்பிடுகிறார், ஈழத் திறனாய்வாளர் செல்வி திருச்சந்திரன்.

இறைவனை வேண்டிய அளவில் பேய் வடிவம் அவருக்குச் சாத்தியமாகும் அற்புதத்தை சேக்கிழார் காட்டியபோதும், பாலியல் ரீதியாகத் தன் உடலும், சமூகமும் தரும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்காகவே வலிந்து தன் உடலை வருத்தி, நோன்பு செய்து, ஒப்பனைகள், நல்ல ஆடை அணிமணிகள் பூணாமல், தலைமுடியைப் பேணாமல் பேய்த் தோற்றத்தை அவர் வரவழைத்துக் கொண்டார்   என்று கொள்ளவும் இடமிருக்கிறது.

மேற்குறித்த பாடலில் கணவனை ‘இவன்’ என இரு இடங்களில் திரும்பத் திரும்ப அழுத்தமான ஒருமையில் அவர் குறிப்பிடுவதாகச் சேக்கிழார் அமைத்திருப்பது (பெரியபுராணத்தில் காரைக்காலம்மையார் புராணத்தில் புனிதவதி பற்றிக் குறிப்பிடும் இடங்கள் மரியாதைப் பன்மையிலும், பரமதத்தனைப் பற்றிய இடங்கள் ஒருமையிலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.) சமய உயர்நிலையாக்கமாக இருப்பினும் மற்றோர் உண்மையினையும் வெளிப்படுத்துகிறது. இத்துணை ஆண்டுகளும் உள்மன அடுக்குகளில் தள்ளப்பட்டிருந்த அவன் மீதான கோபம், ஒருமையாய் வெடித்து, அதன் வழி அவனே தனக்களித்த தெய்வநிலைப் பாட்டை மேலும் உறுதிப்படுத்திக் கொள்கிறது என்றும் இதனைக் கொள்ளலாம்.

தன் வாழ்வின் இறுதிக்கட்டமாகத் தன்னை ஒதுக்கிய கணவனையும், தன் துன்பத்தை நீக்க முன்வராத சமூகத்தையும் தான் ஒதுக்கியவராய்த் தன்னை அந்நியமாக்கிய அனைவரையும் தான் அந்நியமாக்கியவராய், உலகோர் அஞ்சும் சுடுகாட்டைத் தனது வாழ்விடமாக்கிக் கொண்டு சமயம், பக்தி இவற்றினூடே மறை பொருளாகத் தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்கிறார் அவர். பெண் சார்ந்த மரபுகளையும், வரையறைகளையும் அவர் கேள்விக்கு உட்படுத்தவில்லையெனினும், தன்னை மிரட்டிய சமூக அமைப்பைத் தான் மிரட்ட வேண்டுமென அவரது அகமனம் ஆசைப்பட்டிருக்க வேண்டும்.

தான் கொண்ட பேய்க் கோலத்தின் வழியாகப் ‘பெண்’ என்ற பாலடையாளத்தால் விளைந்த தடைகள் அனைத்தும் விலகி விட்டதாகக் குதூகலிக்கிறார் காரைக்காலம்மையாய்ப் பரிணாமம் பெற்றுவிட்ட புனிதவதி.

“பேயாய் நற்கணத்தில் ஒன்றாய நாம்”

என அற்புதத் திருவந்தாதியிலும்,

 “கொங்கை திரங்கி நரம்பெழுந்து

     குண்டு கண் வெண்பாற் குழிவயிற்றுப்

பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பாடுயர்

     நீள்கணைக் காலொர் பெண்பேய்”

என ஆலங்காட்டு மூத்த திருப்பதிகத்திலும், தம் பேய்த் தோற்றத்தில் பெருமிதம் கொள்வதுபோல அவர் செய்துள்ள பதிவுகள், நனவிலி நிலையில் அவர் கைக்கொண்ட எதிர்க் கலாச்சாரத்தின் விளைவாக நிகழ்ந்திருப்பவையே எனத் துணியலாம்.

முதுமை என்ற குறியீட்டால் விளைந்த தகுதி அடிப்படையில், ஔவை உயர்நிலை பெற்றதைப் போலப் பிறரை அச்சுறுத்தும் பேய் மகள் என்ற முறையில் தன்னை முன்னிறுத்தியபடி சமயம் சார்ந்த, தனிப்பட்ட தனது இயக்கம் பாதிப்புறாத வகையில் அவர் தம்மைப் பாதுகாத்துக் கொண்டாரெனக் கூறலாம்.

புனிதவதி புராணத்தின் பெண்ணிய மறுவாசிப்பு, ஒடுக்கப்பட்ட மனித உயிர் ஒன்றின் எதிர்ப்புணர்வைப் புலப்படுத்துவதோடு மட்டுமன்றி, மாற்றுக் கலாச்சாரத்தை நாடிச் செல்லும் புரட்சிகரமான வித்து அந்த உயிருக்குள் பொதிந்து கிடந்த உண்மையினையும் நமக்குப் புரிய வைக்கிறது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *