15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா

-புதிய மாதவி-

15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின் குறும்படங்கள் என்ற தொகுப்பில் இலங்கையை களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த குறும்படங்கள் 01 பிப் 2018 மாலை 6 முதல் 8.30 மணிநேரத்தில் ரஷ்ய கலாச்சார அரங்கில் திரையிடப்பட்டன. இத்திரைப்படங்களை அவர்கள் VIOLENCE என்ற தலைப்பில் வகைப்படுத்தி இருந்தது ஏன் என்ற கேள்வி இத்திரைப்படங்களைப் பார்த்தப் பிறகும் புதிராக இருந்தது.

கத்தி, துப்பாக்கி, குண்டு வெடிப்பு, கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி என்று சகலவிதமான வன்முறைகளையும் திரைப்படங்களில் காட்டி அதையும் காதல் கதை என்று வகைப்படுத்தும் முத்திரைகளுக்கு பழக்கப்பட்டு விட்டதால் இங்கேயும் வன்முறை – வயலன்ஸ் ரொம்பவும் மவுனமாக வாசிப்பவருக்கு கடந்து போயிருக்கும்.

mumbai-international-film-festival

5 படங்கள் திரையிடப்பட்டன. ஒரு படம் தவிர பிற 4 படங்களும் குறும்படங்கள்.

ரிடர்ன் – 11 நிமிடம் (தமிழ்)

வத்தீஸ் வருணனின் 11 நிமிடப்படம்.

மனிதனின் ஆழமனம் விழித்துக்கொண்டு மீண்டும் அதே இடத்திற்கு திரும்பும் பயணமே இக்கதை. விழித்துக்கொள்ளும் புதைமணலில் இருந்து அவனை தலை தெறிக்க ஓட வைக்கிறது குண்டுமழை. திரும்பி பார்க்காமல் ஓடுகிறான். தமிழ்ச்சிறுமி ஒருத்தி அவன் பாதையில் குறுக்கிடுகிறாள். பெற்ற தாய் தகப்பனை இழந்தேன், என் அண்ணனையும் காணவில்லை.. எங்கே ? என்ற அவள் கேள்வி காற்றில் மிதக்கிறது. அவன் ஓடுகிறான்.

தன் பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய் தன் கணவனுடன் அவர்களைக் கேட்டு தெருவில் சண்டை போடுகிறாள். இவனிடம் கேட்கிறாள். சிங்கள மொழியில். தமிழ்க்குரலும் சிங்களக்குரலும் ஒரே கேள்வியை அவரவர் மொழியில் வைக்கின்றன என்ற காட்சி அமைப்பு இக்கதையின் இன்னொரு மையப்புள்ளி. எங்கிருந்தோ வரும் ராஜதர்பார் ஓடுகிறவனை நிறுத்தி வெள்ளை அதிகார உடையை அவனிடம் போர்த்துகின்றன, மேலாடை இன்றி ஓடியவன் இப்போது பளபளக்கும் ஆடையுடன் திரும்புகிறான். அவனிடம் கேள்வி கேட்ட தமிழ்ச்சிறுமி அவனின் இக்கோலம் கண்டு அஞ்சி ஓடி மறைகிறாள். சிங்களத்தாய் அவனைக் கண்டு அஞ்சி கை எடுத்து கும்பிடுகிறாள். மாற்றங்கள் எப்படி வருகின்றன? எந்த ரூபத்தில் வருகின்றன? இப்படியான போலி அடையாளங்களையும் பினாமி அதிகாரங்களையும் கொடுப்பவர்கள் யார்? இவர்களால் பாதிக்கப்பட்ட அந்த இரு இன மக்களுக்கும் என்ன பயன்? சிவப்பு உடை அதிகாரத்தின் பக்கம் என்றால் அந்த அதிகாரம் கொடுக்கும் வெள்ளை உடை – நீதியின் அடையாளம் என்னவாக இருக்கும்?

இப்படி பல்வேறு கேள்விகளை பார்ப்பவரிடம் அலை அலையாக எழுப்பி… நிறைய சிந்திக்க வைக்கிறது. இக்காட்சிகளில் வைத்தீஸ்வர வருணன் நுண் அரசியலை மிக நுட்பமாக முன்வைத்து அதில் வெற்றி பெற்றிருக்கிறார். எனக்கு என்னவோ… ஆழமனம் விழித்துக்கொள்கிறது என்று கதையை எல்லோரும் சொல்வதைப் போல சொல்ல முடியவில்லை. இயக்குநரே அப்படியான ஒரு பார்வையுடன் ஒத்து வருவதாக தெரிகிறது. ஆனால் கதையின் ஆரம்பத்தில் புதைமணலில் இருந்து புறப்படுவது புதைக்கப்பட்ட மனிதன் என்ற காட்சிப் படிமமாகவே இருந்தது. அவன் எழுந்து ஒடி மீண்டும் புதைமணலுக்குள்.. என்று காட்சிகள் விரிந்து இன்னொரு தளத்திற்கும் கதையை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

டிக்கெட் ப்ளீஸ் (10 நிமிடம்) (தமிழ் &சிங்களம்)

அனந்தராமணின் குறும்படம். தமிழ்ப் பிரதேசத்திலிருக்கும் இளைஞன் ஒருவன் சிங்களமொழி புழங்கும் கொழும்பு நகருக்கு வரும் கதை. மொழிப்பிரச்சனையை மேலோட்டமாகக் காட்டி அதற்குள் இருக்கும் அதிகார அரசியலை அம்பலப்படுத்துகிறது. அவன் புறப்படுவதும் சந்திக்கும் மனிதர்களும் அவர்களின் இயல்பும் என்று காட்சி அமைப்பின் ஊடாக நகரும் காமிரா அவன் பயணிக்கும் பேருந்தில் இந்தியன் வந்தவுடன் சூழல் எப்படி மாறுகிறது என்பதை போகிற போக்கில் காட்டிச் செல்கிறது. இக்காட்சிதான் இக்கதையின் மிக முக்கியமான அரசியல்.

இந்தியாவின் தொன்மையான மொழியாகவும் இலங்கையின் தொன்மையான மொழியாகவும் இரு நாட்டின் மக்களின் வழக்கு மொழியாகவும் வாழும் குடிமக்களின் தாய்மொழியாகவும் இருக்கும் ஒரு மொழி , ஒரே மொழி தமிழ் மொழி. ஆனால் இருநாட்டவருக்கும் பொதுவாக இருக்கும் மொழியும் இலங்கையின் தொன்மையான மொழியும் தமிழ்மொழி என்ற அடையாளமும் உண்மை வரலாறும் துடைத்து எடுக்கப்பட்டு இந்தியா என்றால் இந்திமொழி என்ற ஒற்றை அடையாளத்தை இலங்கையின் சிங்கள ஆட்சி அதிகாரமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி ஊடகங்களின் பங்கும் கணிசமானது. என்றாலும் இந்தியா என்றால் இந்திமொழி என்ற அடையாளத்தை இந்திய பேரரசு அதிகாரமும் முன் நிறுத்துகிறது.

பிறகென்ன…!!?? கொழும்பில் ஓடும் பஸ்ஸில் இந்தியன் ஏறி டிக்கெட் கேட்டவுடன் இந்தி திரைப்படப்பாடல் ஒலி ஒளி காட்சி ஓடுகிறது. தமிழன் இலங்கையின் குடிமகன் அந்நியனைப் போல பயணித்துக் கொண்டிருக்கிறான்..! ஆனந்த ரமணின் இந்த அரசியல் அவதானிப்பு டிக்கெட் ப்ளீஸ் காட்சிகளில் திரைமறைவு அரசியல்.

டையிங்க் ட்ரீஸ் (18 நிமிடம்) சிங்களம்.

போரில் கணவனை இழந்த கைம்பெண் , தன் பள்ளிப்பருவத்து புதல்வனுக்கு பள்ளிக்கூட நாடகத்தில் போர்வீரனாக நடிப்பதற்கு எப்படி எல்லாம் பயிற்சி கொடுக்கிறாள் என்று ஆரம்பிக்கிறது கதை. அக்காட்சிகளின் ஊடாக அவள் கணவன், சமூகத்தில் இராணுவத்தில் இருப்பதால் மதிப்பும் மரியாதையும் கொண்ட பின்புலத்தில். அதை எல்லாம் துறந்துவிட்டு இராணுவத்திலிருந்து ஓடிவந்து விடுகிறேன் என்று தன் மனைவியிடம் கதறுகிறான். சமூக அந்தஸ்து அவன் விருப்பத்தை தடை செய்கிறது. போர்ச்சூழலில் அதிகாரத்தின் பக்கமிருந்து போரிடுபவர்கள் அனைவருமே அதிகாரத்தின் கைகளாக இருப்பதில்லை.. அவர்களின் சுயவிருப்பங்களும் மனிதாபிமானமும் ஆட்சி அதிகாரத்தினால் கொலை செய்யப்படுகின்றன.

dying dreams

மிகவும் துணிச்சலாகவும் சரியான புள்ளியில் எவ்வித விமர்சனத்திற்கும் இடமின்றி கனமான இக்கருத்தைக் காட்சிப்படுத்தியதில் இயக்குநர் நிமிர்ந்து நிற்கிறார். அவன் அவளிடமிருந்து விடைபெற்று வெளியேறும் காட்சியில் அவன் முதுகில் குண்டு பாய்ந்து அவன் சரிகிறான். அவள் கனவிலிருந்து விழித்துக்கொள்கிறாள்.. நாமும் தான்.

காட் மஸ்ட் பி டெஃப் – 8 நிமிடம் அனிமேஷன்

கவுசல்ய பதிரனாவின் அனிமேஷன் குறும்படம் பெருகிவரும் மதவாத தீவிரத்தை கேலியும் கிண்டலுமாக காட்சிப் படுத்துகிறது. இசுலாமியர்களின் வாங்க்கு சப்தம் தூக்கத்தைக் கெடுத்ததால் வெகுண்டு எழுந்தவர்கள் மசூதியின் சத்தத்தையும் விட அதிக சத்தத்தில் ஒலிக் குழாய்களை உயரத்தில் கட்டுகிறார்கள் சப்தங்களின் போர்.. உயர உயர உயர.. ஒருவர் மாற்றி ஒருவர்.. கடவுளுக்கு காது செவிடாகி இருக்கும்! இக்கதை இன்றைய சூழலில் இன்னொரு பிரச்சனையை முன்வைத்திருக்கிறது.

போருக்கு முன் இனவாதம் பேசி மக்களைப் பிரித்தவர்கள் தற்போது மதவாதம் பேசி மக்களைப் பிரிப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். போருக்குப் பின் இம்மாதிரியான ஒரு சூழல் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்படுகிறதா..? என்ற கேள்வியை பார்வையாளனுக்கு முன்வைத்து யோசிக்க வைக்கிறது.

இறுதியாக

‘டெமான்ஸ் இன் பாரடைஸ்’ 94 நிமிட ஆவணப்படம் தமிழில் ஜூட் ரத்னம் அவர்கள் தன் 10 ஆண்டுகால உழைப்பில் தயாரித்தப் படம் என்று சொல்கிறார். இலங்கை தலைநகர் கொழும்பில் 1983 ஜூலை மாதம் தமிழர்களுக்கு எதிராக கலவரம். மூண்டபோது 5 வயது சிறுவனாக இருந்த தன் கதையிலிருந்து ஆரம்பிக்கிறார். அவரே சொல்வது போல இது ஒரு இயக்க வரலாற்றின் “சுயபரிசோதனை”

இப்பரிசோதனைக் குழாயில் புலிகளின் இயக்கமே விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களை நிறையவே யோசிக்க வைக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் வீரர் வாசுதேவன் அந்த அமைப்பைப் பற்றி குறை கூறுகிறார். இப்போது பிரிட்டனில் வசித்து வரும் அவர் கூறும்போது, “நாங்கள் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டோம். போராட்டம் என்ற பெயரில் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக தமிழர் உரிமைக்காக போராடிய போட்டி அமைப்பான டெலோவைச் சேர்ந்த 900 வீரர்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்” என்கிறார்.

ஈழப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராளிகள் பல்வேறு அமைப்புகளின் தலைமையை ஏற்று ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது புலிகளின் ஆயுதப்படையினர் பிற இயக்கத்தின் போராளிகளை சகோதரர்களைக் கொன்றபோது தமிழ்ச்சமுகம் அக்காட்சியை ஏற்றுக்கொண்ட உளவியலைப் பேசுகிறார். தமிழ்ச் சமூகத்தின் பொதுஜனப்புத்தி, இக்கொலைகளை ஏற்றுக்கொண்ட உளவியல்.. பார்வையாளர்களை மிரட்டுகிறது. இது வெறும் அச்சம் சார்ந்ததா? உயிருடன் வாழவேண்டிய இருத்தல் நிமித்தம் மட்டுமே இக்காட்சிகள் முணுமுணுப்பின்றி சமூகத்தில் அரங்கேறியதை இச்சமூகம் ஏற்றுக்கொண்டதா..?

ஆவணப்படத்தில் இம்மாதிரியான சுயபரிசோதனைகளை செய்யத்துணியும் இயக்குநர் ஆவணப்படத்தை ஒரு கவிதையின் புனைவியல் சாயலில் முடித்திருப்பதும் மவுனத்தைக் களைக்கிறது. சொர்க்கம் இப்போதும் அரக்கர்களைத் தேடிக்கொண்டிருக்கிறது. இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த ஆவணப்படங்களில் இப்படம் முக்கியமானதாக இருந்தாலும் இக்காட்சிகளும் காட்சிகளின் யதார்த்தமும் உண்மைக்கு நெருக்கமானவை என்றாலும் இதையும் தாண்டிய பக்கங்கள் எண்ணிலடங்காதவை.. காமிராக்கண்கள் அறியாதவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *