நான் ரசித்த மும்பையும் என்னை அழைத்த ஊடறுவும்……. 1,2,3….சுரேகா பரம்
( அனுபவக்குறிப்பு 1)
பெண்களுக்காக உரத்துக்குரல் எழுப்பும் ஊடகமாகப் பலதையும் ஊடறுத்துச்செல்லும் ஊடறுவுடன் முகப்புத்தகத்தில் அறிமுகமாகி அதன் கருத்துநிலைகளோடு ஒன்றித்துப்பயணிக்கும் என்னை ஊடறின் ஊற்றாகச்செயற்பட்டுக்கொண்டேயிருக்கும் ரஞ்சியக்கா மும்பையில் இவ்வருடம் நிகழவிருக்கும் பெண்ணியச்சந்திப்பு மற்றும் பெண் நிலை உரையாடலுக்கு எனக்கு அழைப்பு ஒன்றிைனை விடுத்திருந்தார்.
பார்த்த மாத்திரத்திலேயே என் மனதின் எங்கெங்கோ மூலைகளிலெல்லாம் ஔிந்திருந்த சின்னச்சின்ன கனவுகள் ஆசைகள் மெல்ல எழுந்து தமது ஆரவாரத்தைக்காட்ட ஆரம்பித்தன. முகப்புத்தக எழுத்துக்களின் ஊடாக பெண்ணை நேசிக்கின்ற, சமூகத்தை விரும்புகின்ற , துணிவுமிக்க, பொங்கியெழுகின்ற பல எழுத்துக்கள் ஊடாக அவர்கள் நிஜத்தில் எப்படியிருப்பார்கள் என கற்பனை செய்துகொண்ட நான் அத்தனை பெண் எழுத்தாளர்கள் புரட்சியாளர்கள் களநிலைச்செயற்பாட்டாளர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஒன்று இத்தனை எளிதாகக் கிடைத்திருக்கின்றதே என்பது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
இலங்கைக்கு வெளியே அலுவலக ரீதியான பால்நிலை சமத்துவம் மற்றும் சமூக உள்வாங்கல் என்ற பயிற்சிக்காக கேரளாவிற்குச்சென்ற அனுபவம் ஏற்கனவே இருந்தமை எனக்குள் ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தினாலும் ஒன்றிற்கும் மேற்பட்ட கேள்விக்குறிகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்து என்னைக் கொஞ்சம் பயமுறுத்தின….
1. பயணத்தின் போதான செலவு
2. அலுவலகத்திலிருந்து பெறவேண்டிய வெளிநாட்டு விடுமுறை அனுமதி
3. எனது அப்பா அம்மாவிடமிருந்தான ஆசிர்வாதத்துடனான அனுமதி
முதலில் எதனையும் பொருட்படுத்தாது எனது திணைக்களத்தின் ஆணையாளர் வாகீசன் சேரிடம் சென்று பயத்துடன் விடயத்தைக்கூறினேன். அவர் புன்னகைத்தவாறே எங்களுடைய சபையின் பால்நிலை சமத்துவத்தின் மையத்தொடர்புனராக இருப்பதற்கு இத்தகைய சந்திப்புக்கள் இன்னும் வலுவைத்தரும் நீங்கள் லீவுக்கு விண்ணப்பியுங்கள் என்று ஆர்வமூட்டினார்.
நான் லீவுக்கு விண்ணப்பித்த கையுடன் , எப்பப்ப காசு என்கின்ற ஒன்று தேவைப்படுகின்றதோ அப்பப்பபோ தான் இவளுக்கு நீங்கள் வாழும் திசையே தெரியும் என என்மீதான குற்றச்சாட்டொன்றை எனது அம்மா வெளிநாட்டிலிருக்கும் எனது உறவுகளுக்குச்சொன்னதாலோ நானே புரிந்துகொள்ளமுற்பட்டதாலோ தயக்கத்துடனே அவர்களை அழைத்தேன். நான் கேட்டிருந்த செலவுகளை அவர்கள் வழங்குவதாகவும் அதேநேரம் உன்னுடைய பெற்றோர் விரும்பாத எதற்கும் நாங்களும் சப்போர்ட் பண்ணமாட்டம் ஆதலால் உனது திருமணம் தொடர்பில் நீ மிக விரைவில் முடிவெடுக்கவேண்டும்… என்றும் கூறப்பட்டது….ஆமாம் ஆமாம் என்றேன்.இப்போது இப்படித்தான் தலையாட்டுவாள் என்பது என் பெரியம்மாவின அண்ணாவிற்கு ஒன்றும் புதிதல்ல..
மும்பைக்குப் போகத்தான் வேண்டும் அம்மா. நான் வேற உரையாடலும் இருக்கு. மறுக்கவெல்லாம் முடியாது. என்று சொல்லிக்கொண்டிருந்த நான் இறுதியாகத்தான் அம்மாவிடம் போய் அம்மா எல்லாமே ஓகே… நீங்க தான் அப்பாட்ட சொல்லி…… முதல் ஓகே அலுவலகம்.. இது எப்படி..பொம்பிளப்பிள்ளையடி நீ…..
ஐயோ …பொம்பிளப்பிள்ளை என்பதால் தானே அம்மா…பெண்ணியச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருக்கின்றேன்… பீலிங் பிறவுட்…என்று விட்டு சோகமாக உறங்கிவிட்டேன்…
நாட்கள் கிட்டவர …இவ தானம்மா ரஞ்சியக்கா…என தொலைபேசியை அம்மாவிடம் கொடுத்தேன். இருவரும் பேசினார்கள்.தெளிவுடன் அம்மா மனமகிழ்வுடன் ஆமாம் ….நீ போகலாம்…சரி அப்பாவிடம் கூறு..என்றார்…என்னுடைய அப்பா.. பிடிக்காததெனினும் பிடிவாதத்தால் பிடிக்கவைச்சிடுவாள் என்பதனால் விலகி விலகி நிற்பார். முகமலர்வோடு என் பேச்சைக் கேட்காவிட்டால் என் தேவையே எனினும் நான் பேசவே மாட்டேன்…..அப்பாவுடன் இதுபற்றி பேசவே அப்பா கிட்டவரல..நானும் சொல்லல….மறுக்கவுமில்லை….மௌனமாகவே இருந்துகொண்டார்… வெளிக்கிடப்போகும் அன்று தான் கையசைத்து விடைகொடுத்தார்….
வீட்டிலே எவ்வளவுக்கென்றாலும் முரண்டுபிடித்தேனும் இல்லை அம்மா அப்பா முகத்தைப் பார்க்காது திரும்பி நடந்தேனும் என்னுடைய விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்வது என் இயல்பு.அதனால் அதற்காக நான் அவ்வளவாக வருந்திக்கொள்வதில்லை.
ஒரு பெண்ணாக ஓர் தீர்மானம் எடுப்பதென்பது பகீரதப்பிரயத்தனம். யோசித்துக்கொண்டே திருமணமாகி குழந்தைகள் இருந்தும் அதுவும் வெளிநாடுகளிலிருந்து வந்தும் பெண்ணிய சிந்தனை பெண்விடுதலை பற்றிச்சிந்திக்கும் எம்மையெல்லாம் குறிப்பால் உணர்ந்து எம் சின்னச்சின்னக் கிறுக்கல்களைக் கூட ஊக்குவித்து, இத்தகைய நிகழ்வுகளையெல்லாம் ஒழுங்குபடுத்துகின்றார்களே உண்மையில் இவர்கள் எத்துணை சாதனைப்பெண்களாக இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.
அனுபவக்குறிப்பு – 2
(மும்பையை அடைதல்……..)
எப்போதுமே புதிய ஓர் இடத்திற்குப்போகப்போகின்றேன் என்றால் என்னையறியாமலே அந்த இடம் பற்றிய கற்பனைகளும் அங்கே கழியப்போகும் குதூகலமான பொழுதுகளுமே கண்முழுக்கத்தோன்றும். ஆனால் இந்த முறை ஏனோ தெரியவில்லை நான் மும்பை போகின்றேன் என்பதைத்தாண்டி நான் பார்க்கப்போகின்ற அந்த அக்காமார் எப்படி இருப்பார்கள். அவர்களுடைய எழுத்துக்கள் பெரும்பாலும் சீற்றம் மிகுந்த கம்பீரமான துணிவான விம்பத்தைத்தானே எனக்குள் தந்திருக்கின்றன. அப்போ அவர்களும் அப்படித்தான் இருப்பார்களா? இவர்களை எப்படிக் கடக்கப்போகின்றேன். நினைக்க பெரும் மகிழ்ச்சியாகவும் அதேநேரம் புதியவர்களைக் கண்டவுடன் இலகுவாக அணைந்துகொள்ளுமளவுக்கு என்னிடம் இல்லாத ஈர்ப்புசக்தியை எண்ணி இலேசான வருத்தமாகவும் இருந்தது.
விஜி அக்கா ,எஸ்தர் அக்கா மற்றும் நான் . மூவருமே ஒரே விமானத்தில் ஒரே நேரத்தில் ஒன்றாகப்பயணிக்கத்திட்டமிட்டிருந்ததால் எங்களுடைய விமான நேரம் 5.30 ஐ ஒட்டி இரவு நேரடியாகவே விமானநிலையம் போகத்தீர்மானித்திருந்தோம். என்னுடைய ரைவர் சொல்லியிருந்தார்” சரியாக ஒரு மணிக்கு விமான நிலையத்தையடைந்துவிடலாம் .” என்றார். மூவருடைய ரிக்கெட்டும் என் கையில். அவர்களோ பதினொரு மணிக்கெல்லாம் வந்துவிட்டனர் .உள்ளேயும் போகமுடியாமல் எனக்காகக் காத்திருந்தார்கள். முதல் முதலாகப்பார்க்கப்போகின்றேன். லேற் ஆகுமோ.பேசிடுவார்களோ என என் எண்ணமெல்லாம் அவர்கள் முகமே. அதுவும் அவர்களுடைய பாஸ்போட் கொப்பியிலும் முகப்புத்தகத்திலும் தெரிந்த முகம்.
“அப்பாடா ஒருமாதிரி உள்ளே போயிட்டோம் சுரேகா.” தொலைபேசியில் கூறிய பின் ஓரளவு நிம்மதியாக இருந்தது. ஒருமணி ஆக முதலே வந்துவிட்டேன். அவசர அவசரமாக உள்நுழைந்தேன். பூட்சிற்றிக்கு கிட்டவாக இருந்தார்கள்.
புன்னகை கலந்த முகத்துடன் வரவேற்றனர்.எஸ்தர் அக்கா தந்த நெஸ்கொபியுடன் பயணத்திற்கான முன்னாயத்தங்களைச்செய்து விமானத்திற்காக காத்திருந்தோம். தூக்கம் கலையாத இரவும் விடியலும் தூங்கத்தான் செய்தது. மூன்றாவது ஒலிபெருக்கிச்சத்தம் எஸ்தர் அக்காவின் காதைத்தான் நெருடியது. அவர் எங்களைத் தட்டியெழுப்ப விமானத்தை நோக்கிச்சென்றோம்.. அந்த இடைவெளிக்குள் வந்த பொல்லாத நித்திரையை நினைத்ததுடன். உடல் நடுங்கியது.ஒருவேளை பிளைட் மிஸ் ஆகியிருந்தா… ஐயோ..சிரிப்பு ஒருபுறம். வெட்கம் மறுபுறம்.எஸ்தர் அக்காவிற்காச்சும் கேட்டுதே என்ற சந்தோசம் ..ஒருவேளை அவாவும் தூங்கியிருந்தா….. தூக்கம் கலையாத தள்ளாடிய நடையிலும் எங்கள் மூவரதும் சிரிப்பு கம்பீரமாகத்தான் வெளிவந்தது.சிரித்துக்கொண்டே ஏறினோம்.. இன்பமான பயணம்.. கதைத்துக்கொண்டும் தூங்கிக்கொண்டுமிருந்தோம்.அதற்கிடையில் மும்பை விமானநிலையம் வந்துவிட்டது. அதற்கிடையில் எஸ்தர் அக்கா மும்பை பற்றியும் அங்குள்ள கடைகள் பற்றியும் ஒரு அங்கிளிடம் பேட்டிகண்டுகொண்டிருந்தார்.
பரிசோதனைகளைத் தாண்டி நானும் எஸ்தர் அக்காவும் ஓகே….. விஜி அக்காவைக்காணவில்லை.அவருடைய பாஸ்போட்டை எடுத்துக்கொண்டு ஒரு அறைக்குள் சென்று வெளியே காத்திருக்கச்சொன்னார்கள். ரொம்ப அலுப்பாக இருந்தது. சுற்றும் முற்றும் தமிழ்மொழியோ ஆங்கிலமோ கேட்கவில்லை. வேறு வேறு பாஷைகளில்…… அது வேறு சங்கடமாக இருந்தது..அதற்கிடையில் எஸ்தர் அக்கா ” நீ அடிக்கடி மலேசியா இந்தோனேசியா சிங்கப்பூர் ஜேர்மன் இந்தியா னு திரிஞ்சா.. அவங்களுக்கும் நடுங்கும் தானே…”
ஒரு பென்னம்பெரிய அடுக்குப்புத்தகம் ஒன்றில் என்னென்னமோ எழுதினாங்க.சற்றுப்பயமாகவும் இருந்தது.ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளாமல் சமாளிச்சிட்டிருந்தோம். நேரம் கழிய பாஸ்போட்டை கொடுத்தார்கள்.” உங்க மேல எந்தத்தவறும் இல்லை.கொம்பியூட்டர் மிஸ்ரேக் “என்றவாறு சொன்னாங்க. சரியென விரைவாக இறங்கினோம்.
ரஞ்சியக்கா பயமெல்லாம் இல்லை . துணிவோடு வா..எங்களில் ஒருவர் உங்களுக்கு முதலே விமானநிலையத்தில் காத்திருப்போம் என்று ஆரம்பத்திலேயே கூறியிருந்தார். அதே போல எம்மை அழைத்துப்போக யாழினி அக்காவும் சங்கர் அங்கிளும் வந்திருந்தார்கள்.புதிய மாதவி அம்மாவின் கணவர் சங்கர் அங்கிள் . காருக்குள்ளே ஏறினோம் .கார் வேகமாகச்சென்றுகொண்டிருந்தது. எனக்கோ தூக்கம் விடுவதாக இல்லை. கடந்து போகும் பாதைகளையெல்லாம் இரசிக்கவிடாதவாறு தூக்கம் தன்னகத்தே என்னை இழுத்துக்கொண்டிருந்தது. எஸ்தர் அக்காவின் வார்த்தைகளைக்கேட்டுத்திடுக்கிட்டு திடுக்கிட்டு விழித்திருந்தது மட்டும் நினைவில் இருக்கிறது. நாங்கள் தங்குவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட மாதவி அம்மாவின் பிளற்ஸ் அருகே கார் நின்றது. பதின்மூன்றாம் நம்பர் எமக்கானது. ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் இடத்தை அடைந்துவிட்ட உற்சாகத்துடனுடன் சென்றோம். அங்கே ரஞ்சியக்கா, யோகி அக்கா, ஆழியாள் அக்கா, ஆனந்தி அக்கா ஆசையோடு வரவேற்றனர் . கட்டியணைத்து முத்தமிட்டு அன்பைப்பரிமாறினோம்.ஆங்காங்கே தனித்தனியாக முகப்புத்தகத்திலும் புத்தகங்களிலும் பார்த்த அவர்களையெல்லாம் நேரில் காணக்கிடைத்தமை எனக்குப்பெருமையாக இருந்தது.
என்னதான் இருந்தாலும் விமானநிலையத்தில் இடம்பெற்ற பாஸ்போட் தடங்கலுடன் தொலைபேசியைச் சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி மறைந்ததோ தெரியவில்லை. போனில் வீட்டிற்குக் கூட தகவல் தெரிவிக்கமுடியாதிருந்தது கஸ்டமாக இருந்தது. ரஞ்சியக்காவும் யாழினி அக்காவும் வீட்டை சொல்லிற்றியா..முதல் ல சொல் என்றார்கள்…எப்படிச்சொல்வது போன்…வேலை செய்யல என.. கேரளாவிற்கு வந்த போது வாங்கிய சிம்மை மறந்துவந்தது வேதனையாக இருந்தது. ரஞ்சியக்கா தனது போனைத்தந்து அம்மாவிற்குத் தகவல் சொல்லச்செய்தார்.அதன்பிறகு நாம் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றாக உணவருந்தி ஒன்றாகப்பேசிச்சிரித்து பல விடயங்கள் பற்றி உரையாடினோம். அடிக்கடி நெற்வேக் இல்லாது மும்பையைக் கடக்கப்போகின்றேன் என்பது பேரதிர்வைக்காட்டிப் பயமுறுத்திச்சென்றது. இருந்தாலும் அந்தக்குறையை ரஞ்சியக்காவின் போன் அடிக்கடி தீர்த்துவைத்தது. மாதவி அம்மா வீட்டில் தான் நெற்வேக் வேலை செய்யும். நான் ரஞ்சியக்காவிற்குக் கிட்ட இருப்பேன். அவா புரிந்துகொண்டு போனைத்தருவா….அதெல்லாம் ஒரு ரம்மியமான உணர்வு…எழுத்தில எல்லாம் எளிதில் அடக்கிட முடியாது…
முதல் நாளே மும்பையின் பிரபலமான முளன்ட் மாக்கெட் கொம்பிளக்ஸ் சென்று பிடித்த பொருட்களைக்கொள்வனவு செய்தோம். சாயங்கால மும்பை ரொம்ப மகிழ்வைத்தந்தது. காய்கறிகளும் பூக்கடைகளும் உடுப்புக்களும் பான்சிப்பொருட்களும் கண்ணைக்கவர்ந்தது. ஓரளவு வாங்குவதை வாங்கி விட்டுத் திரும்ப ஆயத்தமானோம்.இன்னும் நாட்கள் இருக்கே என்ற எண்ணம் வீட்டுக்குப்போவதில் தாமத்தை ஏற்படுத்தவில்லை.
அனுபவக்குறிப்பு – 3
பால்நிலை சார்ந்த கலந்துரையாடலும் ஆவணப்படமும்……..
ஊடறுப்பெண்கள் அனைவரும் வந்துசேர்ந்திருந்தார்கள். 25.11.2017. காலை 10.30 மணிக்கு ஊடறுப்பெண்களும் மும்பைப்பெண்களும் ஒன்றுகூடி நிகழ்த்தத்திட்டமிட்டிருந்தபடி நிகழ்வுகள் ஆரம்பமாக இருந்தன. மாதவியம்மா வழிகாட்டி முன் நகர நாம் எல்லோரும் அவரைத்தொடர்ந்தோம். பாண்டூப் மேற்கு பகுதி பிரைட் உயர்நிலைப்பள்ளி
திருவள்ளுவர் அரங்கை அடைந்தோம்.
சிறிது நேரத்தில் அம்பை அம்மா அவர்களின் தலைமையில் முதல் உரையாடல் நிகழ்வு இடம்பெற்றது. பெண்கள் பகிர்ந்துகொள்ளவேண்டிய ஆனால் பொதுவெளிகளில் பேசப் பலரும் சங்கோஷப்படுகின்ற பெண்களின் பருவமடைதல் மெனோபஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் காலங்களில் பெண்கள் அடையும் கஸ்டங்கள், விரக்தி நிலை மற்றும் தாம்பத்திய உறவு அதனைவிட குடும்பத்தில் நிலவும் பாலியல் வன்முறைகள் பலாத்காரங்கள் என பலதரப்பட்ட விடயங்களை கூடியிருந்தவர்களின் அனுபவங்கள் வாயிலாக பகிர்ந்துகொள்ளப்பட்டது. பெண்கள் மாத்திரமே அப்போது அனுமதிக்கப்பட்டிருந்தோம்.
அந்தப்பாடசாலையின் மாணவிகள் உட்பட வயதுவந்த பெண்கள் வரை தத்தம் பருவமெய்திய நாட்களை நினைவுபடுத்தியதுடன் அப்போது எமக்கு மூத்தபெண்களால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் மனதடைந்த பக்குவம் என பகிர்ந்துகொண்டோம்.அதன் முடிவில் ஏதோவொரு வகையில் பெரும்பாலும் பெண்கள் அனைவருமே பருவமடைதலில் தாயாலாே கல்விமுறையாலோ தயார்ப்படுத்தப்படாத நிலையிலேயே இருந்திருக்கிறார்கள் .இப்போது கூட இந்நிலை பரவலாக உள்ளது என பேசப்பட்டது. இதற்காக பெற்றோர்கள் தம்மைத்தயார்ப்படுத்தவேண்டும். பாடசாலையில் இது சார்ந்த கல்விமுறைகள் கட்டாயமாக்கப்படவேண்டும்.இது எல்லோரும் கடக்கவேண்டிய ஒன்று. கடத்தவேண்டியதோ கண்மூடிக்கொள்ளவேண்டியதோ அல்ல என்பதை பொதுவெளியில் பேசமுன்வரவேண்டும். நடைமுறைப்படுத்தவேண்டும் என முடிவில் தெரிவிக்கப்பட்டது.
இனம் மொழி சமூகம் நாடு பால் என வர்க்கவேறுபாடுகளின்றி பல இடங்களிலும் பரவலாகவும் பொதுவான பிரச்சினையாகவும் பாலியல் வன்முறைகள் கொடுமைகள் அரங்கேறிக்கொண்டேதான் இருக்கின்றது. பெரும்பாலும் குடும்ப இரத்த உறவுகளுக்கிடையே கூட இத்தகைய வன்செயல்கள் எவ்வாறு ஊடுருவி ,சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சகிக்கக்கூடிய பொறுத்துக்கொண்டிருக்க வேண்டிய ஒன்றாக ஆக்கப்படுகின்றது. இது குடும்பத்தின் புனிதம் , உறவுகளுக்கிடையேயான அந்நியோன்னியம் , இன்னும் மோசமானதாக குடும்பத்தின் வறுமைக்கு நிவாரணியாக இருக்கக்கூடிய பெரியப்பா சித்தப்பா அண்ணா மாமா போன்றவர்கள், இல்லையெனில் தூரத்து உறவுகள் நெருங்கிய நட்புக்கள் என பல்வேறு நபர்களும் குழந்தைகளைப் பாலியல் ரீதியாகச்சுரண்டுகின்ற நிர்ப்பந்தம் பற்றி விரிவாகவும் அறிந்த தெரிந்த அனுபவித்த அனுபவங்கள் ஊடாகப்பேசப்பட்டது. சிலர் பாலியல் ரீதியாகச்சுரண்டப்படுகின்றோம் என்பது கூட அறியவியலாதவர்களாக குறிப்பாக சிறுவயது ஆண், பெண் இருபாலாரும் இருக்கின்றனர். இனிப்புப்பண்டங்களை பகிர்ந்துகொள்ளல் , அரவணைப்பு போன்றவற்றால் இது மேவப்படுகின்றது. பெண்களுக்கு மாத்திரமின்றி சிறு ஆண்பிள்ளைகள் எவ்வாறு துஸ்பிரயோகங்களுக்கு ஆளாக நேரிடுகின்றது. பாடசாலைகளில் கூட வயதில் குறைந்த ஆண்பிள்ளைகளுடன் வயது கூடிய ஆண்கள் ,சில ஆசியர்கள் எவ்வாறு அணுகுகின்றார்கள் என பகிரப்பட்டது. பெரும்பாலும் இத்தகைய சந்தர்ப்பங்களை ஆராய்ந்துகொள்ளும் தகைமைகள் கொண்ட நிறுவனம்சார்ந்த பெண்கள் பங்குபற்றியிருந்தமையினால் பல விடயங்களை அறியக்கூடியதாகவும் அதேவேளை இவற்றில் இருந்து மீளக்கூடிய அல்லது பாதுகாக்கக்கூடிய அல்லது மறுக்கக்கூடிய வகையில் எவ்வாறு ஓர் சமூகத்தைக்கட்டியெழுப்பவேண்டும்.அதற்கான தேவை எந்தளவு முதன்மையாக இருக்கின்றது எனவும் கலந்துரையாடப்பட்டது.
எனினும் இன்றைய சூழலில் இணையத்தளங்கள் சிமாட்போன்கள் சில திரைப்படங்கள் சில நவீனஇலக்கியப் படைப்புக்கள் கூட இத்தகையதான துர் எண்ணங்களை ஆண் பெண் வயது வேறுபாடின்றி அனைவரிடத்தேயும் தூண்டுகின்றவாறு கையாளப்படுவதை அடையாளப்படுத்தினர் . குறிப்பாக நல்லது கெட்டது எது எனப்பிரித்தறியவியலாத வயதுகளில் சிமாட்போன்களை பெற்றோர் வாங்கிக்கொடுப்பது எவ்வளவு அபாயகரமானது என்பதைத் தெரிவித்திருந்தனர். பெரும்பாலும் ஓர் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இளவயதினரை அணுகியபோது சிமாட் போன் பாவனையே அதிக விடைகளாக இருந்ததாகத்தெரியவந்தது. இதனைவிட மும்பை போன்ற பெருநகரங்களில் குறிப்பாக பெரியவீடுகள் வசதிகள் என்பன இல்லாத இடங்களில் தாய் தந்தையின் தாம்பத்திய அனுபவங்களே அந்தக்குழந்தைகளிடத்தே இத்தகைய சிந்தனைகளை தூண்டியிருந்தது எனக்கூறி பெற்றோர்களும் இதில் தெளிவாக இருக்கவேண்டும் எனப் பேசப்பட்டது.
பொதுவாக இத்தகைய விடயங்கள் பற்றி பெற்றோர்களும் பிள்ளைகளும் கொண்டிருக்கும் பாரிய இடைவெளிகள் ,அறியவேண்டும் என்ற ஆர்வம், அவற்றை மறைத்தல், பாடசாலைகளில் கூட சுகாதாரக்கல்வியில் உடலுறுப்புக்கள் தொழிற்பாடுகள் பருவமடைதலின் போதான உடல் மாற்றங்கள் குறித்து கற்பிக்கப்படுகின்ற போதிருக்கும் அணுகுமுறை ஏனைய அலகுகளுடன் ஒப்பிடும் போது மறைக்கப்படவேண்டிய நாணப்படவைக்கின்ற ஒன்றாகக் கருதப்படுதல். இவையனைத்தும் பாலியல் சார் நடத்தைகளைப்பற்றிய புரிதலைக்கேள்விக்குள்ளாக்குகின்றது என புரியமுடிந்தது. பாலியல் வன்புணர்வுகள் கொடூரங்கள் பலாத்காரங்கள் என்பவற்றுக்கு இதற்கான புரிதல்கள் முற்றுப்புள்ளிவைக்கக்கூடும் என்பது என்பது ஒட்டுமொத்தக்குரலாக இருந்தது.
மதிய உணவு இடைவெளியைத்தொடர்ந்து அம்பை அம்மாவின் நேர்காணல்களுடன் அமைந்திருந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. பால்நிலை சார்ந்து ஆண் பெண் என பாகுபடுத்தப்பட்டு ஆணாதிக்கக்கட்டமைப்புடன் நகரும் நாட்கள் ஒருபுறம் பெண்ணியம் சார் புரிதல்களை நிலைநிறுத்தவேண்டிய கட்டாயம் ஒரு புறம் இருக்க இவற்றைத்தாண்டி மூன்றாம்பாலினம் எனப் புறக்கணிக்கப்பட்டு வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வேதனைகளின் இருப்பாகக்கடக்கின்ற திருநங்கை திருநம்பி என அழைக்கப்படுகின்றவர்களின் நிலைமையைப் பெற்றவர்கள் கூடப் புரிந்துகொள்ளாத பரிதாபநிலை காணப்படுகின்றது. வீதிகளில் நடமாட முடியாத ,பொது இடங்களில் அநாகரிகமாகப்பார்க்கின்ற வாழக்கூடாத உயிரியாக உற்றுநோக்குகின்ற, இவர்களின் இன்னல்களை வாழ்நாட்களை அடையாளப்படுத்தி அவர்களை முன்னுக்குக்கொண்டுவருகின்ற முயற்சிகளையும் பெண்ணிய அமைப்புக்கள் சமர்த்தாகக்கடைப்பிடித்துவருகின்றன. அவர்களும் மனிதர்களே அவர்களுக்கும உணர்வு உண்டு. உயிர் உண்டு .வாழ்க்கை பற்றிய ஆழமான தீராத கனவு உண்டு. ஆசை உண்டு. திறமை நிறையவே உண்டு. என்பதையெல்லாம் இந்த ஆவணப்படம் துல்லியமாகக்காட்டியது. பாதி நேரம் கண்ணீரில் மிதந்துகொள்ளவைக்கும் வலிகள் அவர்களது வாழ்வாக இருந்தது.
பாலியல் தொழிலாளிகளாக அவர்களை வலிந்து இழுக்கின்ற நிலைமை, அவர்களது வாழ்வின் நிமித்தம் மற்றும் ஒதுக்கப்படல் காரணமாக அவர்கள் அத்தகைய நிலைமைக்கு ஆளான நிலைமைகள். எத்தனை வலிகள் கொடுமைகள் கொடூரங்களைக்கண்டும் அவற்றைத் துச்சமெனக்கொண்டுவாழ்வில் முன்னேறியவர்கள், கலைகள் தொழில்நுட்பக்கல்விகளில் தம்மை ஈடுபடுத்தி மற்றவர்களுக்கும் முன்னுதாரணங்களாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் என பலவிதமானவர்களை அதனூடாகக்கண்டுகொள்ள முடிந்தது.
வாழ்வின் சிறு சிறு பிரச்சினைகளுக்கே துவண்டுபோய் அல்லலுற்று ஆற்றாமல் தவிக்கும் பலர் முன்னிலையில் அத்தகைய பெண்களின் பேச்சுக்கள் கருத்துக்கள் காத்திரமானவையாக பலருக்கும் எழுச்சியை உண்டுபண்ணக்கூடியதாக அமைந்திருந்தது. ” சொர்க்கம் தான் வேண்டும் என்பது எமது ஆசைகள் அல்ல. இந்த நரகம் எமக்கு வேண்டாம்”
என அவர்கள் பேச்சு இருந்தது. உடலில் ஆண்மையும் உணர்வில் பெண்மையும்
என்பது ரொம்பக்கொடுமை என அவர்கள் உணர்வு இருந்தது. அதனால் கொடுமையான அறுவைச்சிகிச்சைகள் மேற்கொள்பவர்களே அதிகம். எனினும் மிகத்தைரியமானவர்கள் தம்மை அர்த்தநாரீஸ்வரர் உருவமாக கற்பிதம் செய்து தெய்வீகமாக அதனை உணர்ந்து கலைகளில் குறிப்பாக நாம் படத்தில் பார்த்த பெண் ஆடல்கலையில் தன்னை அர்ப்பணித்து தன் இயல்புடைய இன்னொரு பெண்ணின் ஆறுதலில் ஒருவருக்கொருவர் என அன்பாக துணிவோடு வாழ்கின்றமையைப் பெருமிதத்தோடும் துயரத்தோடும் கடக்கமுடிந்தது. இப்போது தன்னை விரட்டிய வீட்டார் அழைப்பதையும் அன்பு தேவைப்பட்டபோது கிடைக்காத அன்பு தேவைப்படாத நேரத்தில் நிறையக்கிடைப்பினும் அது தேவையற்றதே என திடமாகக் கூறியதுடன் இறந்தால் கூட இப்போது தாம் இருவரும் ஒரே நேரம் தான் இறப்போம் என்பதில் கூட அவரின் நம்பிக்கை தொனித்தது. உண்மையில் சவால்களையும் நெருடல்களையும் கடந்து எத்தனை எத்தனை பேர் உலகில் ஐீவிக்கின்றனர். இவற்றையெல்லாம் இன்னும் விரைவாகத் தூக்கியெறியவும் கடக்கவும் எத்தனை மைல்கள் நாம் பயணிக்கப்போகின்றோமோ ??