பேராசிரியை அ.மங்கையினுடனான செவ்விக்கு பின் எழுந்த சில சிந்தனைகளும்; கருத்துக்களும்

தேவா – Karlsuhe/Germany

amankai

பெண்ணியசிந்தனைகளை நவீனநாடகக்கலை மூலம் பார்வையாளரிடம் கொண்டுசேர்த்த புகழ் இவருக்குண்டு. பார்வையாளருக்கு நேரடியாக-உடல்மொழி வழியாக-உணர்வோடு, சம்பவங்களை வெளிப்படுத்தும் நாடகக்கலை பற்றிய அ.மங்கையின் விளக்கம் பிரமாதம். சினிமா தரும் அழுத்தத்தை விட  நாடகத்தினுடைய வீச்சு ஓங்கியது என்ற அவருடைய கருத்து சிறப்பானது.அது மேடைநாடகங்களாக மட்டும் உலவாமல்,வீதிநாடகங்களாக-கூத்து-இசைவடிவமாக முழுதாக மக்களை சென்றடையவேண்டும்.பெண்ணுக்கு மேலான வன்முறைகள் இணையவழியாக செய்திகளாக பரப்பப்பட்டு, அத்தோடு-அனுதாபம், ஆத்திரம் பெறுகின்றது.அந்த இடத்திலே அவை நின்று பின்னர் வந்தவழியிலேயே மறைந்து போகின்றன. அது மனிதமூளைக்குள் புகுந்து வேலை செய்தால் அது உலகின் எல்லா சமூகத்திலும் சக உயிரியை மதிக்கும்-வாழவிடும் பெண்ணிய சிந்தனை எல்லாருக்கும் தேவையானது. அதை பெண்கள் மட்டுமே பேச- சிந்திக்க-போராடவேண்டும் என்பது பேதமைத்தனம்.

அ.மங்கையிடமிருந்து-அவரின்செயற்பாடுகள்பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருந்தபோது ஓரு மேதாவித்தனமான கேள்வி புறப்பட்டது:

ஈழ-விடுதலைப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுபோல ஏன் ஒரு பெண்ணியபோராட்டம் முன்னெடுக்க முடியாமல் போனது?.
பெண் காலம்காலமாய் சமூகத்திலேயும்-குடும்பத்துக்குள்ளும் கல்விக்காக-உரிமைக்காக-உணவுக்காக போராடவேண்டிய நிலையில் இருந்தாள்-இன்னும் இருக்கிறாள்.இந்த போராட்டம் ஒவ்வொரு மனிதமூளைக்குள்ளும் துளைக்கப்படவேண்டிய போராட்டம். இது தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.இதுவும் ஒரு அரசியல்போராட்டம்தான். ஆயதம் ஏந்தி ஒருஇனவாத அரசியலுக்கு எதிராக போராடிய யுத்தத்தை,சகமனிதரோடு-உறவுகளோடு ஊறிப்போயிருக்கும் மனிதத்துக்கே எதிரான உள-உடல்ரீதியான வன்முறைகளுக்கெதிரான போராட்டத்தை ஒப்பிடுவது எப்படி சாத்தியம்?

கேள்வியிலே இருந்த கொக்கி; நீங்கள்,பெண்களே ஏன் போராட்டம் செய்யவில்லை என்ற பார்வையை வைத்தது.அதாவது பெண்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக பெண்கள்தான் போராட்டம் செய்யணும்.ஆணுக்கு,பெண்ணியசிந்தனை தேவையற்றதா?பிரச்சினையே ஆண்வயப்பட்ட சமூகத்தால் உருவாக்கப்பட்டதுதானே. ஆக அது முழுக்க முழுக்கஆணாதிக்கப்பிரச்சினை. ஆணால்தானே பெண்ணுக்குமேல் வன்முறை நடாத்தப்படுகிறது. ஆகவே ஆணும்தான் சிந்திக்கவேண்டும். சகமனிதரின் சமச்சீரற்ற நிலைமைக்கெதிராக செயல்படவேண்டும். சொந்த வாழ்விலே ஏதொ ஒரு வகையில் பாதிக்கப்பட்டோரே பெண்ணியசிந்தனை கொண்டோர்,, என்ற பார்வை, அ.மங்கையுடனான செவ்வியில் வெளிப்பட்டது. தனிப்பட்டபாதிப்பே பெண்ணை பொதுவாழ்வில் ஈடுபடவைக்கிறதென்ற பொதுகருத்தை கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் முன்வைக்கிறது.

தலித்துக்களே தலித்தியம் பேசலாம் என்கிறதும், பெண்களே பெண்ணியம் பேசலாம் என்கிற வாதங்கள் கூறுவது ஒடுக்கப்படுவோர் மட்டுமே ஒடுக்கப்படுதலுக்காக எதிராக பேசவேண்டும்.போராடவேண்டும். இது நியாயம் என்றால் மற்றவர்கள் அநீதிகளுக்கு ஆதரவானவர்களா என்ற கேள்வி எழும்புகிறது.சமூகஒடுக்குமுறைக்கு எதிர்நிலைப்பாட்டில் இயங்குவோர் யாவரும் மனிதவிடுதலைக்கான போராட்டம் செய்வோகளே.

வியாபாரயுக்தியோடு பிரபலத்தோடு ம்  ஈழப்போராட்டத்தை,, படம்காட்டிய திரைப்படங்களுக்கு மத்தியில், சமூகஅநீதிகளுக்கு,அரசியல்உரிமைகளுக்கு எதிராக ,அரிதாக குரல் எழுப்பும் சில படைப்புகள் வெளிவருகின்றன. அதன் சுதந்திரத்தை மறுக்கிற தொனியில் ஈழத்தமிழருக்கே அவர்தம் பிரச்சினை தெரியும்,, ஆகவே ஈழமக்களே அதற்கு தகுதியானவர் என்ற கூற்றும் அல்லது பெண்கள் மட்டுமே ,,பெண்ணியசிந்தனை, ஆக்கங்கள் படைக்கவேண்டுமென்ற கருத்தும் ஒடுக்குமுறையின் இன்னொரு வடிவமே-

அ.மங்கையிடமிருந்து அவரின் ஆக்கங்கள்,தமிழ்தேசியம் தொடர்பான உரையாடல்கள் மற்றும் அவர்தொடர்ந்த, தொடரவிருக்கும் பணிகள் பற்றிய எதிர்பார்ப்புகளுக்காக காத்திருந்தபோது, பெரும் நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *