எஸ்தர் -திருகோணமலை
விதவிதமான கலவரம் சுமந்த போர் தேசம் உன் தேகம்
தலைமுறையின் தாடியும் தாகத்தின் கண்களும் உனக்குண்டு
என்னென்ன காட்சிகள் அன்பே
கனவின் சாளரத்தை நான் திறக்கும்போது
பல நூற்றாண்டு கவலைகள் புலன்களை விட்டு எங்கே போகும்??
நிரந்தரமாய் நீ சொல்லும் வார்த்தைதான் என்ன?
யாருமே நம்பிடாத ஆசையெல்லாம் நீ சொல்லு
ஆகாயத்தில் நீ அமர ஒரு மேடை போடுகிறேன்
அதில் நீ அமரு நான் சாமரம் வீசுகிறேன்
உன் இதயத்தில்தான் எத்தனை வார்த்தைகள்
அதில் எழுதவேண்டும் என்னைப்பற்றியக்குறிப்பொன்று
மலையும் ஒரு நாள் என் மேலே சரியலாம் உன் பயணத்தை நான் தாங்கிடக்கூடுமோ
வரிக்குதிரையின் தழும்புகளாய்
அடுக்கு மொழியில் ஆலாபனை வேண்டும்.
மின் கம்பிகளில் துணிந்து அமர்ந்திடும் பறவை நான்
உன் வீட்டு மரங்களில் அமர்ந்திட
கிளைகளில்லை
பலவர்ணங்களில் துரோகம் உன்னை
உரசி இருக்கலாம்
ஒரு பாசாங்குக்கேனும் உன்னை தழுவவிடு? நான் விடைபெற…….