Read more and Thanks :-http://maatram.org/?p=6360
தங்களின் விருப்பத்திற்கேற்ப அரசியலமைப்பு மற்றும் வேறு சட்டங்களைக் கொண்டுவரவும் கொண்டுவருவதைத் தடுக்கவும் முடியும் என மூன்று நிக்காயக்களும் நினைத்துக் கொண்டிருக்கின்றன. கத்தோலிக்க சபையினால் சட்டங்களை இயற்றமுடியும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித்தும் எண்ணிக்கொண்டிருக்கிறார். இந்த வணக்கத்துக்குரியவர்களால் சட்டங்களை இயற்றவும், இயற்றப்பட்ட சட்டங்களை நீக்கவும் முடியும் என்றால் நாட்டின் இறையாண்மைக்கு உரித்தான மக்கள் இங்கு இருக்கவேண்டிய அவசியமில்லை.
கருக்கலைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று மீண்டும் வைத்திய நிபுணர்களே கூறியிருந்தார்கள். குறைந்தபட்சம் இரண்டு காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரியிருந்தார்கள். முதலாவது, கடுமையான ஊனக்குறைபாடுடைய கருவை தாய் சுமக்கும்போது. இரண்டாவது, பாலியல் வன்புணர்வு காரணமாக ஒரு பெண் கருத்தரித்துள்ளபோது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் கருக்கலைப்பு செய்வதாக இருந்தால் இரண்டு விசேட வைத்திய நிபுணர்களின் அனுமதியைப் பெறுவது அவசியமாகும், இருந்தபோதிலும் கருக்கலைப்பு செய்துகொள்வதா இல்லையா என்பது குறித்த இறுதி முடிவை எடுக்கும் உரிமையை கருவை சுமக்கும் தாய்க்கு வழங்கவேண்டும் என்ற இரண்டு விடயங்களும் புதிய சீர்த்திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. பொதுவாக மனித உரிமைகள் பற்றி, குறிப்பாக பெண்களின் இனப்பெருக்க உரிமைகள் பற்றி பார்க்கும்போது இந்த இரு சந்தர்ப்பங்களிலாவது கருக்கலைப்புக்கு அனுமதியளிக்காவிட்டால் அல்லது அதற்கு எதிராகச் செயற்படுவார்களேயானால் இந்த நாட்டை நாகரீகமடைந்த நாடென்று கருத முடியுமா?
இலங்கையில் கருக்கலைப்பு தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்டம் மிகவும் பலமானது. கருவினால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே கருக்கலைப்புச் செய்யலாம் என குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 303 பிரிவு கூறுகிறது. ஆனால், இலங்கையில் தினமும் 750 – 1,000 கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இவையனைத்தும் கருவினால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் இடம்பெறும் கருக்கலைப்புகள் அல்ல என்பதை நான் கூறித் தெரியவேண்டியதில்லை.