அவர்களிடம் ஒன்றை மட்டும்
கேட்டு விடுங்கள்
மன்றாட்டமே தீர்வென்பதால் மன்றாடியேனும்
கேட்டுவிடுங்கள்
முன்னொருநாளில் முடிந்துபோன கதை பலதின்
உபகதைகள் இங்குண்டு
அறிவீரோ நீரென்று?
அவர்களிடம் கேளுங்கள்
கருத்துக்கள் பல சொல்லி
காணிக்கைகள் தெளித்ததெல்லாம்
கண்ணீரில் கரைந்ததென்று
இனியேனும் சொல்லுங்கள்
கருவில்இஉயிரில் சுமந்ததென்
மகவு மிக மகிழ்வோடு நடைபயில
நானிருந்து அகம் களிக்க
சொன்ன மொழிமழலை
நெஞ்சம் நிறைந்திருக்க
உண்ண அழைத்திருந்தும்
உயிராய் காணாது
எட்டி நடை வையாது
மழலை மொழி பேசாது
கண்முன்னே காணாமல்
ஆக்கித் தான் போனீரோ?
இது என் கதையொன்றின்
உபகதை தான் ஏசாதீர்
இன்னும் ஓர் ஆயிரம்
கதை உண்டு
உண்ணாமல் கதை சொல்வேன்
உறங்காமல் நீர் கேளும்
உயிர் போன பின்னாலும் – என்
உயிர் போன பின்னாலும்
உறவென்ற ஓர் உயிரை
உயிரோடு தந்திடுவீர்
சாவிலும் நான் வாழ்வேன்