கோழிக் குழம்புக்கான குறிப்பு…

– மாலதி மைத்ரி-

அடுக்குமாடி குடியிருப்பில்
சேவல் வளர்ப்பவளுக்கு
ஒரு வளர்ப்பு சேவலை
எங்கு அடைப்பதென்றுத் தெரியவில்லை
முதலில் சுவர்களைத் தாண்டி
அதன் குரல் கசியக்கூடாதென்ற
கவனத் தேள் கொட்ட
முப்பொழுதும் கடுக்கும் நினைவு
அவள் வீட்டிலில்லாத நேரத்திலும்
தொலைக்காட்சி அலறகிறது
நாய் பூனை போல்
சுதந்திரமாக அத்துடன் நடைபயிற்சிக்கோ
பொதுயிடத்துக்கோ போக முடியாது
ஒரு சேவல்
தன்னை வளர்ப்புப் பிராணியென
ஊருக்கு அறிவிக்க விரும்புவதில்லை
பால்கனியில் விடவும் கூடாது
சுற்றமும் சட்டமும் தனது கடமையாற்றும்
கூண்டில் கிளி முயலென
வரவேற்பறையில் காட்சிப்படுத்த முடியாது
சேவலை கூண்டிலிட்டவளென
கல்வெட்டு எழுப்பப்படும்
ஊரே வளர்க்க
அவள் சேவல் வளர்ப்பது
அவ்வளவு ரகசியமில்லை என்றாலும்
வளர்ப்பவர் ரகசியத்தைக் காக்கும்
ஐதீகமிருக்கு

விவரமறியா குஞ்சுயிது
கொத்தாது கீறாது குரல் உயர்த்தாது
ஒரு சேவலை வசப்படுத்துவது
உன் திறமைக்கான சவால்
என்ற அம்மா
வளர்த்த நாங்களெல்லாம்
செத்தா போயிட்டோமென்றாள்
பக்குவமடையாத அதற்கு
குரல் முற்றவில்லை
பயிற்சியில் தப்பும் தவறும்
இயல்பென்னும் ஒப்பந்த காலமிது
இச்சமாதான காலத்தில்
புதிய ஆயுதம் முளைத்ததுதான்
தற்போதைய சிறப்பு செய்தி
ஒற்றை அறை வீட்டில்
படுக்கையறை அதற்கானது
பழகும் போதும்
இரையிடும் போதும்
கழிவெடுக்கும் போதும்
காயப்படுத்திதான் விடுகிறது என்றாலும்
இதை வீர விளையாட்டென
யாரும் சொல்வதில்லை
அவள் ஏன் கோழி
வளர்க்கவில்லையென கேட்கலாம்
கோழி முட்டையிடுவது வரலாறு
வரலாற்று கடமையிலிருந்து
ஒரு கோழியை
தப்ப வைக்க விதியில்லை
கோழிக் குழம்பு வைப்பது
அவ்வளவு கடினமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *