”என் பொண்ணை நெனைச்சு ரொம்ப பெருமையா இருக்கு. அதேசமயம் அரசாங்கத்தை நெனைச்சு அவமானமா இருக்கு. தினம்தோறும் எவ்வளவோ கொலை, கொள்ளைங்க இந்த நாட்டுல நடக்குது. பச்சைக் குழந்தைகளையே பலாத்காரம் பண்றாங்க. ரவுடிகளும் போக்கிரிகளும் நாட்டை நாசம் பண்றாங்க. அவங்களையெல்லாம் எதுவும் செய்ய முடியாத போலீஸ்தான், என் மகளைக் கைது பண்ணி குண்டாஸ்ல அடைச்சிருக்கு. என் பிள்ளை சிறையில் என்ன பாடுபடுமோனு நினைக்கிறப்போ மனசு கெடந்து அடிச்சுக்குது. மூலையில் உட்கார்ந்து ஓ….னு அழணும்போல இருக்கு. ஆனால், வளர்மதி அம்மாவா யோசிச்சுப் பார்த்தா இதெல்லாம் தூசிக்குச் சமம். குண்டாஸ் மட்டுமில்லே, வேற எந்தச் சட்டம் போட்டு ஒடுக்கினாலும் நியாயத்துக்கான என் மகளின் போராட்டம் ஓயாது” எனத் தெளிவாகப் பேசுகிறார் கமலா. அரசுக்கு எதிராகக் கலகம் செய்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, குண்டாஸில் அடைக்கப்பட்டிருக்கும் வளர்மதியின் தாயார் கமலா.