எப்போதும் போல தலையில் மாட்டியிருந்த தனது சிவப்பு நிற ஹெட் போனை கழுத்திற்கு இறக்கிவிட்டவள், அதில் ஒலித்துக்கொண்டிருந்த அரபு மொழிப் பாடலையும் நிறுத்திவிட்டு “தாமதத்திற்கு மன்னித்துக்கொள்..” என்றாள். “அது இருக்கட்டும், சொல்..என்ன நடந்தது?” என்ற என்னை வெறித்து பார்த்தபடி இருந்தவளிடமிருந்து மௌனம் மட்டும்தான் பதிலாக கிடைத்தது. “ஜிலான்.. எதற்காக நேற்று நள்ளிரவு என்னை தொலைபேசியில் அழைத்து என்னுடன் பேச வேண்டும் என்றாய்.. இப்போது ஏன் இப்படி எதுவும் சொல்லாமல்..?” என் கேள்வியை எதிர்கொள்ளாமல் எதிர்மூலையை பார்த்து வெறித்தவளின் விழிமுனைகளில் நீர் கசிவது தெரிய, அவளருகில் நகர்ந்து அவளது கரங்களை பற்றிய என்னை ஒரு விசும்பலுடன் எதிர்கொண்டவள் “நான் எந்த வகையிலும் பொறுப்பாகாத ஒன்றுக்காக, ஏன் என் வாழ்க்கை இப்படி சீரழிய வேண்டும்..?” என்றாள். “என்ன நடந்தது என்று விளக்கமாக சொல் ஜிலான்..” என்ற எனக்கு, அவளை நான் முதன் முதலில் சந்தித்த அந்த நாள் நினைவுக்கு வந்தது. தொடர்ந்து 3 வருடங்களுக்கு மேலாக அகதிகளுக்கான பல தரப்பட்ட செயற்திட்டங்களிலும், நேரடியாக முகாம்களுக்கு சென்று அவர்களை பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்த எனக்கு, ஒவ்வொரு பணிக்காலத்தின் முடிவிலும் ஏற்பட்டிருந்த மனவுளைச்சலை எதிர்கொள்வது சவாலாக மட்டுமில்லாது உடல்நிலையை பாதிக்கவும் ஆரம்பிக்க, ஒரு குறுகிய காலத்திற்காகவாவது இந்த துறையிலிருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்ற மருத்துவரின் ஆலோசனையை கருத்திற்கொண்டு இப்போதைக்கு இந்த பணியில் இருந்து ஓய்வெடுப்பது என்ற தீர்மானத்தை மனது கனக்க எடுத்திருந்த தருணமொன்று.
இனி இந்த துறைக்கு மீண்டும் வர முடியுமா என்ற கவலையில் ஆழ்ந்திருந்த போது தான், நான் எப்போதாவது இணைந்து பணிபுரிய வேண்டுமென ஆசைப்பட்ட இளவயது மற்றும் அகதிச்சிறார்களுக்கான செயற்றிட்டமொன்றில் பணி புரிவதற்கான அழைப்பு வந்தது. அங்கு பணிபுரிய மிகுந்த ஆசை என்றபோதும் உடல்நிலையை கருத்திற்கொண்டு எடுத்த தீர்மானத்தைப் பற்றி அவர்களிடம் கூறிய போது, முடியுமானால் ஒரு 6 மாதங்களுக்கு பணிபுரிகிறீர்களா? என்ற அவர்களது கோரிக்கையை தட்டிக்கழிக்க முடியவில்லை என்னால். இந்த துறையில் இருந்து ஓய்வெடுப்பதற்கு இது ஒரு நிறைவான பணியாக இருக்கும் என்று தோன்றவும், உடனே சம்மதித்தும் விட்டேன். நான் வசிக்கும் நகரில் இருந்து ஒன்றரை மணி நேர புகையிரத பயண தூரத்தில் மலைப்பகுதியில் அமர்ந்திருந்த அந்த முகாமில், வாரத்தில் 3 நாட்கள் சென்று அங்கிருக்கும் சிறார்கள் மற்றும் இளைஞர்களை பராமரிக்கும் social educational worker ஆக நியமிக்கப்பட்டிருந்தேன். ஏற்கனவே இந்த துறையில் இருந்த அனுபவமும், ஈடுபாடும் எனக்கு விரும்பிய வகையில் எனது பணியை திட்டமிடும் சுதந்திரத்தை அங்கு வழங்கியிருந்தது. நவம்பர் மாதத்து முதற் திங்களொன்றில் வேலை ஆரம்பம்.
அப்போதுதான் ஆரம்பித்திருந்த குளிர்காலத்தின் பனிப்பொழியும் அதிகாலைப் பொழுதொன்றில் தூக்கம் கலைந்ததும் கலையாததுமாக கையில் காப்புச்சினோவுடன், நான் வசிக்கும் நகரில் இருந்து முகாம் அமைந்திருக்கக்கூடிய மலைப்பிரதேசத்தை நோக்கிய புகையிரதத்தில் ஏறியபோது மனதில் உண்டான பரவசம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. ஒன்றரை மணிநேர பயணத்திற்கு பிறகு முகாமை சென்றடைந்த போது, கண்களுக்கு தெரிந்ததெல்லாம் சுற்றிவர மலைகளும் அவற்றை போர்த்தியிருந்த பனிப்புகார் மட்டுமே. என் வருகையை அறிந்திருந்த முகாம் மேலதிகாரி என்னை வரவேற்று அழைத்துச்சென்று அலுவலகத்தையும் பணிபுரியும் சக ஊழியர்களையும் அறிமுகம் செய்துவிட்டு, முகாமின் இளைஞர்களுக்கான தங்குமிடத்திற்கு அழைத்துப்போனார். பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் என்பதால் நேரில் எதிர்கொண்ட சிறார்கள் அவசர அவசரமாக எங்கள் இருவருக்கும் காலை வணக்கம் கூறிவிட்டு விரைய, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கவலைப்படுவதற்கு தயாரில்லை என்பதைப்போல தலையில் மாட்டிய சிவப்பு நிற ஹெட்போனுடன் வாயில் ஒரு பாடலை முணுமுணுத்த படி எதிரே வந்தவள் தான் இந்த ஜிலான். சிவப்பு நிற ஹெட்போன், முழங்கால் வெட்டில் கிழிக்கப்பட்ட ஜீன்ஸ், I am the Boss here என்று எழுத்துப் பதித்த டீசேர்ட் சகிதம் எதிரே வந்த அவள் என்னை கவராதிருந்திருந்தால் தான் அதிசயமே! அதுவரை எங்களை கடந்து சென்ற இளைஞர்களெல்லாம் அவர்களாக எங்களுக்கு காலை வணக்கம் கூறிச்சென்றிருக்க, இவளுக்கு நாங்கள் காலைவணக்கம் கூறி கவனத்தை பெற வேண்டியிருந்தது. பதிலுக்கு என்னை ஒருமுறை ஏற இறங்க பார்த்துவிட்டு வணக்கம் கூறியவள், முகாம் பொறுப்பாளரை பார்த்து “புதிதாக வந்த பெண்ணா..?” என்றபோது வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு (அவள் நினைத்தது, நானும் அங்கு அவர்களைப்போல தங்குவதற்காய் வந்திருக்கும் இளம்பெண்ணென்று) “இல்லை, இங்கு புதிதாக வேலைக்கு இணைந்திருக்கிறேன்..” என என்னை அறிமுகம் செய்துகொண்டபோது , இரண்டு கண்களும் அகல என்னை பார்த்தவளை ஏனென்று தெரியாமலேயே எனக்கு மிகவும் பிடித்து போயிருந்தது.
ஜிலான், சிரியாவில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பெற்றோர், உறவினர்களின் ஆதரவின்றி இறுதியில் ஐரோப்பாவில் அகதி தஞ்சம் கோரி வந்ததடைந்திருந்தாள். பதின்மங்களின் இறுதியில் இருப்பதாலும், ஒரு வருடத்திற்கு அதிகமாக முகாமில்வசிப்பதாலும் கொஞ்சம் தன்போக்கானவள் என அவளைப்பற்றி சக ஊழியர்கள் சொல்ல பின்னர் அறிந்துகொண்டேன். இருந்தாலும் அவளை இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தபடி தான் இருந்தது. எதிர்பார்த்ததைப் போலவே பராமரிப்பதற்கென எனக்கு வழங்கப்பட்டிருந்த இளைஞர்களின் பெயர் பட்டியலில் அவள் பெயரும் இடம்பெற்றிருந்தது. கிட்டத்தட்ட 10 பேரைக்கொண்டிருந்த அந்த குழுவில் பெரும்பாலான இளைஞர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்தும், மற்றவர்கள் எரித்திரியாவை சேர்ந்தவர்களாகவும் (கிழக்காப்பிரிக்க நாடு) ஜிலான் மட்டும் அரபு மொழியை தாய்மொழியாக கொண்டவளாக இருந்தாள். ஒரு வருடமாகத் தான் முகாமில் வசித்தாலும் சரளமாக ஜேர்மன் பேசும் அவளது மொழியாற்றல் என்னை கவர்ந்து இருந்ததுடன் அவளுடன் உரையாடுவதற்கும் அவளைப் பற்றி இன்னும் அறிந்துகொள்வதற்கும் நிறையவே உதவி செய்தது.
ஆரம்பத்தில் அவளது பிடிவாதபோக்கையும், தனக்கு எல்லாம் தெரியும் என்பது போன்ற மனநிலையையும் புரிந்துகொள்வதற்கு சற்று கடினமாக இருந்தாலும் நாளடைவில் அந்த பிடிவாதத்திற்குப் பின்னால் ஒளிந்திருந்த அன்புக்காக ஏங்கக்கூடிய ஒரு குழந்தையின் ஏக்கத்தை புரிந்துகொள்ள எனக்கு அதிக காலம் தேவைப்படவில்லை. நாட்கள் கழிய தன்னுடைய குடும்பம் பற்றியும்,யுத்தம் காரணமாக தாங்கள் இழந்தவை பற்றியும், இடம்பெயர்ந்து வரும் வழியில் பெற்றோரைப் பிரிந்தது பற்றியுமென தன்னை பற்றி எல்லாவற்றையும் என்னிடம் பகிரத் தொடங்கியிருந்தாள். அங்கு பணிபுரியும் மற்றவர்களிடம் எதற்கெடுத்தாலும் முரண்படும் அவள், என்னுடைய வேலை நாட்களில் காத்திருந்து என்னைக் கண்டதும் வந்து கட்டிக்கொள்ளும் அளவிற்கு என்னுடன் நெருக்கமாக இருந்தது சக ஊழியர்களை ஆச்சரியப்படுத்தியுமிருந்தது. யுத்தத்தை கடந்து வந்து ஒரு பாதுகாப்பான இயல்பு வாழ்க்கைக்குள் நுழைந்திருந்த போதும் அது பற்றிய அனுபவங்கள் அவளை மிகவும் பாதித்தே இருந்தது என்பதை பின்னர் அவளது உளவியல் ஆலோசகர் மூலம் அறிந்துகொண்ட போது மனம் மிகவும் கனத்தது. அவளுக்கு தேவையானதெல்லாம் பரிவும், கரிசனையுமே என்பதை தெரிந்து கொண்டு முடியுமான போதெல்லாம் அவளுக்காக நேரம் செலவிடுவதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தேன். நன்கு சிரித்து பேசிக்கொண்டிருப்பவள் சில நேரங்களில் திடீரென அழ ஆரம்பித்துவிடுவாள். தனக்கு வீட்டு நினைவு வருகிறதென்பாள், மீண்டும் அங்கே போக வேண்டும் என்பாள். அவள் கைகளை பற்றிய படி காது கொடுத்து கேட்டுக்கொண்டிருப்பேன். உன் நிலைமையை புரிந்துகொள்ள முடிகிறது என கூறுவதைத் தவிர வேறு எந்த ஆறுதலையும் என்னால் அவளுக்கு கொடுக்க முடிந்ததில்லை. இப்படியே எனது பணிக்காலமும் அங்கு நிறைவுக்கு வந்திருந்தது. அதை அவளிடம் எப்படி சொல்வதென யோசித்து நிதானமாக கூறி முடித்தபோது பொழுதொன்றில் எனை வெறித்துப் பார்த்தவள் “இப்படித்தான் வருபவர்கள் எல்லோரும் மீண்டும் போய்விடுகிறார்கள்..” என்றபோது திரண்டு வந்த கண்ணீரை கட்டுப்படுத்திக்கொள்ள நான் மிகவும் போராட வேண்டியிருந்தது. “நான் இங்கிருந்து போனாலும் உன்னை எப்போதும் நினைத்துக்கொள்வேன், என்னுடன் பேச வேண்டும் எனத்தோன்றும் போது தொலைபேசியில் அழைப்பு விடு..” எனக்கூறி எனது தொடர்பையும் கொடுத்துவிட்டு பெருகிய கண்ணீருடன் விடைபெற்றுக்கொண்டேன். சரியாக ஒரு வாரம் கழித்து நேற்று நள்ளிரவு அழைத்திருந்தாள், “உன்னுடன் பேச முடியுமா, எனக்கு மனது சரியில்லை..” என்றபடி. “இப்போது நள்ளிரவு, நேரமாகிவிட்டது நாளை பேசலாமா?..”என்று ஏற்படுத்தியது தான் இன்றைய சந்திப்பு இந்த கபேயில். ” ஜிலான்.. என்னவானது உனக்கு, ஏன் இப்படி வெறித்த படியிருக்கிறாய்?..” என்ற என்னுடைய கேள்விக்கு விம்ம தொடங்கியவள் “நடந்து கொண்டிருக்கும் இந்த யுத்தத்திற்கும் அவலங்களுக்கும் எந்த வகையிலும் நான் காரணமில்லையே..பிறகெதற்கு நான் என் குடும்பத்தை விட்டும் என் நாட்டை விட்டும் போக வேண்டியதாயிற்று..ஏன் இப்படி முன்பின் தெரியா நாடொன்றில் ஆதரவற்று, அனாதை போல இருக்க வேண்டும்..” என கேள்விகளை அடுக்கிக்கொண்டு போக, பெருகி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு அவள் கைகளை வருடிய படி அமர்ந்திருந்த எனக்கு இன்றைக்கும் வழமைப்போலவே ” உன்னை எனக்கு நன்கு புரிந்துகொள்ள முடிகிறது..” என்று சொல்வதைத் தவிர புதிதாய் சொல்வதற்கு வேறொன்றும் இருக்கவில்லை..!