- கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன் பாரிய ஆர்ப்பாட்டம்,திருகோணமலை மூதூர் பெருவெளிப் பகுதியில் கடந்த 28 ஆம் திகதி மூன்று பாடசாலைச் சிறுமிகள் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (12) பாரிய மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்று கிழக்கு பல்கலைகழகம் வந்தாறுமூலை பிரதான வாயில் முன்பாக இடம்பெற்றது.கிழக்கு பல்கலைகழகத்தின் கலை கலாசார பீட மாணவர்கள் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள், இளைஞர்கள், கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தில் கற்கும் தமிழ் மாணவர்கள் என அதிகளவானோர் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் மல்லிகைத்தீவுப் பகுதியில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட மூன்று பாடசாலை சிறுமிகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும், உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையின் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு எதிராக இலங்கைச் சட்டத்தில் மாற்றம் கொண்வருவதற்கு நல்லாட்சி முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
குற்றம் இழைத்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் ( மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படுகின்றதான தண்டனைகள், கல்லெறிதல், தலை கொய்தல், தூக்கிலிடுதல், ஆயுள் தண்டனைகள்) போன்றவற்றை வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி, நியாயம், பாதுகாப்பு என்பவற்றை நீதித்துறை பெற்றுக்கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ஆதரவாக தமிழ் அரசியல் தலைமைகள் மௌனம் காத்துக்கொண்டிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.
அரசியல் நாடகத்திற்காக இவ்வாறான விடயங்களை அரசியலாக்கி அதில் பிரச்சாரம் செய்கின்றார்களே தவிர எந்த ஒரு தமிழ் அரசியல்வாதிகளும் குரல்கொடுப்பதாக இல்லை.
தமிழ் அரசியல் தலைமைகள் இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என இதன்போது குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.worldtamilswin.com