கிண்ணியா எஸ்.பாயிஸா அலியின் இரு கவிதைகள்

பெண்மொழி
நிலவில் பூத்த மல்லிகையாய் என்
முதல்பேரன் மண்ணுக்கு  முகங்காட்டிய திருநாள்.
நுரையீரலையே புரட்டிப்போடும் டெற்றோல்நெடி
மருந்துமாத்திரை மணம்….கூடவே
வெள்ளைத்தேவதைகளின் விரட்டல்கள்
எவற்றையுமே பொருட்படுத்தாது சாய்ந்திருக்கிறேன்
கைகளில் வெந்நீர் போத்தலும் கண்களில் கண்ணீருமாய்
அப்பிரசவஅறைக் கதவோரம்.
புனர்ஜென்மம் பெற்றுவந்த பூரணத்தோடு மரு(று)மகள்…..எனினும்
மறுகட்டிலில் அவளகவையொத்த இன்னுமொரு சின்னப்பூ!
பாதிவியர்வை மீதி குருதியிலே குளித்த உடலோடு
போராடிக் கிடக்கிறத
இப்பொல்லாத  பூமியிலே, தன்னைப் படைத்தவன்
இப்பரிதாப வேதனையைத் தனக்காய்க்
கொடுத்தவன் – அந்த நாயனவன் நாமங்கள் மொழிந்தபடி.
முழங்கால் மடக்கி மூச்சுப்பிடிப்பதும் பின்
சோர்ந்து வீழ்ந்து முனகுவதுமாய்….
முக்கால் மணிநேரப் போராட்ட முடிவினிலே
செவிப்பறையை நனைத்து அறையை நிறைக்கிறது
அந்தக் குட்டிக்குரல்.
அல்ஹம்துலில்லாஹ்….!
அத்தனை இதயங்களதும் ஆறுதல் பெருமூச்சுகளினூடே
அவளழகில்….அவள்கலரில்….அழகியதோர்
குட்டிரோஜா கட்டிலில் காலடித்தபடி!
அறைவாசலிலோர் ஆணுருவம் நிழலாட நிமிர்கிறேன்.
கையிலோ சிறுபொதி பார்வையோ உள்ளே பரம்பியபடி.
அவள் பெற்றதன் முதலெழுத்துக்குச்
சொந்தக்காரன் போலும்..
கட்டியவள் கஸ்டம் வேதனை விசும்பல்
எதனையுமே எண்ண மறந்தவனாய்
‘என்னபிள்ளை? என்னபிள்ளை?’ என்கிறான்.
அவன் வாரிசு வளர
தன்னுடலையே நிலமாக்கி, உதிரமதை உரமாக்கியவள்.
தன்தசையிலே இழைதிரித்து கருவறையை தறியாக்கி
அவன்பேருக்குத் தன்
உயிரிலேயே உயிராடை நெய்தவள்….
தன் சாக்கணத்து சாதனையுணர்ந்தே
தலைகோதித் தாங்கிடுவான்….
முகமேந்தியே முறுவலிப்பான்!
ஆறுதலாய் அன்புமழை பொழிவான்
என்றெல்லாம் எண்ணியிருந்தாளோ
என்னவோ….! ‘என்ன பிள்ளை’ யென்ற
விறைப்பான வினாவுக்குள்ளே
விக்கித்துத்தான் போனாள்
பதில் காணாது தங்கத்தோள் போர்த்திருந்த
போர்வை மெல்ல விலக்கியவன்
தேள் கொட்டியவன் போலானான்
விஷமேறித் தானுமே தேளானான்
“ச்சீ…இதுவுமா….?’’
உதடுகள் மொத்த வெறுப்பையுமே காறியுமிழ…
கோபமாய் உதறுகிறான் விரல்களை!
பொதியாகிக் கிடந்த ஆப்பிளும் ஹோர்லிக்ஸ_ம்
நொருங்கிச் சிதறின அந்தக்
கண்மணியின் கண்ணாடி மனசுபோலே…
யுகம்யுகமாய் பெண்மையின் தேசியமொழியாகிப்போன
கண்ணீர் மட்டுமேயவள் குனிந்த கண்களுக்குள்
வாய்திறக்க அவளோ
உறைநிலை மௌனச்சிலையாய்…..!
நானோ கொதித்துப் போகிறேன்
உணர்வுகள் கொப்பளித்தென்
சர்வ நாடிநரம்புகளுமே புடைத்தெழ
 “அட முட்டாளே…!
உனக்குப் பிறக்கப்போவதன் பால்வகைமையை
உனதானதே தீர்மானமிட
பச்சைப்புண்ணில் தீ தெளிக்கிறாயோ?”என
உரக்கக் குரலிடுகிறேன். எனினுமென்
குரல்வளை பிறப்பித்த அந்த ரீங்காரம்
குரல்நாணைக்கூட அதிர்த்தும் ஓர்மமின்றியே
மெல்லத் தணிந்தடங்கிற்றென் தொண்டைக்குழிக்குள்ளயே….!
                               

ஓளி விசிறும் சிறுபூ

என்றைக்குமே விலக விரும்பாத
ஒற்றையடிப் பாதையில்தான் என்தொடர் பயணம்.
தூரத்து வளைவில் புதர் மண்டிய சந்தில்
தன் ஒளிரும் பிரகாசஇதழ்களை
தன்னில் வீழ்ந்த இலையொன்றுக்குள்
ஒளித்துக் கொண்டபடி சிறுபூ.
காலத்தை விஞ்சிய அதன் தனிமையை
என் வழிப்பயணத்தின் கணநேர அண்மையால்
தவிர்த்திட இயலாதுதான்.
எனினும் பயணம் தந்த மெல்லிய அதிர்வில்
அசைந்த பூவின் மேல் கவிழ்ந்திருந்த இலை
சட்டென விலகிற்று.
அது விசிறிய மழலைஒளி
எனை முழுதுமாய் நனைத்திற்று.
பின் வந்த ஒவ்வோர் பயணத்திலும்
மலர் ஒளிரும் புதரை அண்மிக்கும் போதெல்லாம்
உயிரோர் பிச்சைப் பாத்திரமாகிட
ஒளி மீதான உணர்வுகளின் யாசிப்பை
என்றைக்குமே தவி;ர்த்திட முடிந்ததில்லை என்னால்.

1 Comment on “கிண்ணியா எஸ்.பாயிஸா அலியின் இரு கவிதைகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *